உடனடிச்செய்திகள்

Friday, July 13, 2012

ஆட்சியர் வளாகமாக மாறும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு


ஆட்சியர் வளாகமாக மாறும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
  
தமிழ்நாட்டில் தமிழுக்காக இருக்கும் ஒரே பல்கலைக் கழகமான தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தைப் புறக்கணித்து, நலிவடையச் செய்து, அதன் நிலத்தை கூறு போட்டு விற்கும் வேலையில் தமிழக அரசு முனைப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பொழுது தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முதலியவற்றைக் கட்ட பல்கலைக் கழகத்தின் முதன்மை வாயிலுக்கு அருகில், முதன்மை நிர்வாகக் கட்டங்களுக்கு அடுத்தாற்போல் 62 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி வழங்கியுள்ளது. இதற்காக கடந்த 9.3.2012 அன்று தமிழக வருவாய்த் துறை அரசாணைப் பிறப்பித்தது  (அரசாணை எண்: GO-(MS) No 85)

இதனை எதிர்த்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தை பாதுகாக்கும் நோக்கோடு பல்வேறு கட்சி களையும் தமிழ் அமைப்புகளையும் கொண்ட தமிழ்ப் பல்கலைக் கழகப் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.

தமிழக அரசின் இந்த நிலப்பறிப்பு முயற்சியை முறியடிக்கத் தொடர் போராட்டங்களுக்கு இவ்வியக்கம் திட்டமிட்டு வருகிறது. அதன் தொடக்க நிகழ்ச்சியாக கடந்த 15.6.2012 அன்று தஞ்சையில் மாபெரும் வேண்டுகோள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்ப் பல்கலைக் கழக பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தோழர் பெ.மணியரசன் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு பொது நல வழக்குத் தொடுத்தார்.( WP No : 17452 / 2012)

பல்கலைக் கழக நிலத்தை கையகப்படுத்தும் மேற்கண்ட  சட்ட விரோத அரசாணையை நீக்க வேண்டும் என்பதே வழக்கின் கோரிக்கை. இவ்வரசாணைக்கு உடனடி இடைக்காலத் தடை கோரப்பட்டது.

இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை ஆயத்தில் 10.7.2012 அன்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி  ஒய். இக்பால் நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்னால் விசாரணை நடந்தது. பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் வழக்குரைஞர் இரா. இராஜாராம் முன்னிலை ஆனார். மூத்த வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன் வாதிட்டார்.

நம் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களில் முக்கியமானவை வருமாறு:

தமிழ்மொழி, தமிழர்களின் கலை, இசை, நாடகம், ஓவியம், சிற்பம், கட்டிடக் கலை, தமிழ் இலக்கியம்இலக்கணம், மொழியியல், வரலாறு, புவியியல், மெய்யியல், கடலியல், சித்த மருத்துவம், கைவினைக் கலை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழை மேம்படுத்த, தமிழர்களின் மரபுப் பெருமையைப் பரப்ப, 1981 இல் அன்று முதலமைச்சராகயிருந்த திரு.எம்.ஜி. இராமச்சந்திரன் முன் முயற்சியில்  தமிழக அரசால் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது.

· முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் 13.6.1981 இல் நடைபெற்ற இதற்கான ஆய்வுக் கூட்டத்தில் இப்பல்கலைக்கழகத்தின் உடனடித் தேவைக்கும், எதிர்கால விரிவாக்கத்திற்கும் 1000 ஏக்கர் நிலம் தேவை என முடிவு செய்யப்பட்டது.

·  “தமிழ்ப் பல்கலைக் கழக அவசரச் சட்டம் 1981” தமிழக ஆளுநர் மூலம் 1981 ஆகஸ்ட் 1 ஆம் நாள் பிறப்பிக்கப்பட்டு தமிழ்ப் பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது. இதனைத் தொடர்ந்து இப்பல்கலைக் கழகத்திற்குத் தேவையான 1000 ஏக்கர் நிலம் தஞ்சை நகரத்திற்கு அருகில் கையகப்படுத்தப் பட்டது.

· மேற்சொன்ன அவசரச்சட்டத்திற்கு மாற்றீடாக தமிழ்ப் பல்கலைக் கழகச் சட்டம் 1982 தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 8.3.1982 ஆளுநரின் கையொப்பம் பெற்று செயலுக்கு வந்தது.

· இச்சட்டத்தின் படி தமிழ்ப் பல்கலைக் கழகம் தனித்த அதிகாரமுடைய நிறுவனம் (body corporate )  ஆகும்.

· பல்கலைக் கழகத்தின் ஆளவை மன்றத்திற்கு (சிண்டிகேட்) தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் சொத்துகள் மற்றும் நிதியை வைத்துக்கொள்ளவும், நிர்வாகம் செய்யவும் அதிகாரம் உண்டு என இச்சட்டத்தின் விதி 44 கூறுகிறது.

· இப்பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டதன் குறிப்பான நோக்கத்திற்கு இசைய அதன் நிதியையும் நிலத்தையும் ஆளவை மன்றம் நிர்வாகம் செய்ய வேண்டும் என விதி 45 வரையறுக்கிறது.

· பல்கலைக் கழக பணிகளுக்காக நிலங்களையோ, கட்டிடங்களையோ கருவிகளையோ வாங்க விதி 51 ஆளவை மன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.

· ஆனால் தமிழ்ப் பல்கலைக் கழகச் சட்டத்தின் எந்த ஒரு விதியும்  பல்கலைக் கழகத்தின் நிலத்தை விற்கவோ, கைமாற்றிக் கொடுக்கவோ  பிறருக்கு வழங்கவோ ஆளவை மன்றத்திற்கு அதிகாரம் அளிக்கவில்லை.

· ஆண்டு வரவு செலவு அறிக்கையை அணியப்படுத்தி  தமிழக அரசுக்கு அளிக்குமாறு ஆளவையை இச்சட்டத்தின் விதி 24  பணிக்கிறது. அவ்வறிக்கையை தமிழக அரசு சட்டமன்றத்தில் முன்வைக்க வேண்டும். அதாவது தமிழகச் சட்ட மன்றத்தின் இறுதி அதிகாரத்தின் கீழ் பல்கலைக் கழகத்தின் வரவு செலவுகள் வைக்கப்படுகின்றன.

· இந்நிலையில் 9.3.2012 நாளிட்ட வருவாய்த் துறை அரசாணையின் மூலம்  மாவட்ட ஆட்சியர் வளாகம் கட்டுவதற்குப் பல்கலைக் கழகத்திற்குச் சொந்தமான 61.42 ஏக்கர் நிலத்தைக் கையகப் படுத்தியது சட்ட விரோதமானது. ஏனெனில் சட்ட மன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட ஒரு தனித்த நிறுவனமான தமிழ்ப் பல்கலைக் கழகத்தை வெறும் அரசாணை கட்டுப்படுத்தாது.

· இவ்வரசாணையில் வருவாய் வாரிய நிலையாணை 24-ன் படி இந்நிலம் கையகப்படுத்தப் படுவதாகக் கூறப்படுகிறது. 1982 தமிழ்ப் பல்கலைக் கழகச் சட்டத்தின் கீழ் கையகப்படுத்தி பல்கலைக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலத்தை எடுக்க நிலையாணை 24ன் கீழ் எந்த அதிகாரமும் வருவாய்த் துறைக்கு வழங்கப்படவில்லை.

· சென்னையில் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் 3.9.2011 அன்று பல்கலைக் கழக ஆளவை மன்றம் நிலத்தை கையளிக்கக் கூடியதாக வருவாய்த்துறை கூறுகிறது. ஆனால் இக்கூட்டத்தில் பல்கலைக் கழகத் துணை வேந்தர் கலந்து கொள்ள வில்லை. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் தமிழ்ப் பல்கலைக் கழக சட்டம் 1982ன் படி இக்கூட்டத்தில் பங்கேற்க தகுதியுடையவர் அல்லர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட 3 பேராசிரியர்களும் ஆளவை மன்றத்தின் நியமன உறுப்பினர் கூட அல்லர். இவ்வாறானக் கூட்டத்தில் தான் பல்கலைக் கழக நிலத்தை வருவாய்த் துறையிடம் ஒப்படைக்க தீர்மானிக் கப்பட்டதாக அரசு கூறுகிறது.  இது சட்டத்திற்குப் புறம்பானது.

· ஏற்கெனவே தென்னகப் பண்பாட்டு மையத்திற்கும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கும் நிலம் அளிக்கப்பட்டதை இப்போதைய செயலுக்கு முன்னுதாரணமாகக் காட்ட முடியாது. ஏனெனில் ஏற்கெனவே கொடுக்கப்பட்டதே சட்ட விரோதமானது. ஒரு சட்ட விரோதச் செயலுக்கு இன்னொரு சட்ட விரோதச் செயலை முன்னுதாரணமாகக் காட்டி ஞாயப்படுத்தி விட முடியாது.

· தொல்பொருள் துறையின் அகழ்வாய்வில் தமிழ்ப் பல்கலைக் கழக பகுதியில் பண்டைகால குடியிருப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த அப்பகுதியில் நிலத்தை எடுப்பது வருவாய் வாரிய நிலையாணை எண்: 24(6)க்கு எதிரானது.

· அரசாணையில் கூறியிருப்பது போல் நிலக் கையகப்படுத்தல் தொடர்பாக எந்த முதன்மை நாளேட்டிலும் முன்னறிவிப்பு வெளியாக வில்லை. மக்கள் கருத்தும் கேட்கப்பட வில்லை. எனவே மக்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் எழவில்லை என அரசாணையில் குறிபிட்டிருப்பது தவறானது, பொய்யானது.

· எனவே எந்த வகையில் பார்த்தாலும் 9.3.2012 நாளிட்ட அரசாணை எண் 85 சட்ட விரோதமானது.

· இச்சட்ட விரோத ஆணைக்கிணங்க மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் கட்டுவதற்கு எல்லா ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. ஒரு வேளை இச்சட்ட விரோத ஆணைப்படி மாவட்ட ஆட்சியர் வளாகம் நிறுவப்பட்டுவிடுமானால் பிறகு அதை இடிப்பது கடினமாகி விடும்

· எனவே மாண்பமை நீதிமன்றம் மேற்கண்ட சட்ட விரோத அரசாணைக்கு இடைக்காலத் தடை பிறப்பிக்க வேண்டும்.

மேற்கண்டவாறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

தமிழக அரசின் வருவாய்த் துறை முதன்மைச் செயலாளருக்கும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக பதிவாளருக்கும்  இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக் குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர். அவர்கள் பதில் அளித்த பிறகு இரு தரப்பு வாதங்கள் தொடரும¢. இடைக்காலத் தடைபற்றி அதன் பிறகு நீதிமன்றம் முடிவு அறிவிக்கும்.

 (செய்தி : த.தே.பொ.க செய்திப் பிரிவு)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT