உடனடிச்செய்திகள்

Tuesday, July 24, 2012

முல்லைப்பெரியாறு உச்சநீதிமன்ற ஆணையை எதிர்த்து மேல்முறையீடு தமிழக அரசுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோரிக்கை

முல்லைப்பெரியாறு உச்சநீதிமன்ற ஆணையை எதிர்த்து மேல்முறையீடு
தமிழக அரசுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோரிக்கை

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு குறித்து உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்துள்ள ஆணை தமிழகத்திற்கு எதிரானது; ஒப்பந்தப்படி நடப்பில் உள்ள தமிழக அரசின் அணை பராமரிப்பு உரிமையை பறிக்கக்கூடியது. இதனை எதிர்த்து தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து அணைப் பாதுகாப்பு உரிமையை நிலைநாட்ட வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தங்களின்படி அவ்வணையின் பராமரிப்பு அதிகாரம் தமிழக அரசின் பொதுப்பணித்துறையைச் சார்ந்ததாகும். ஆனால் அணைப் பராமரிப்பு தொடர்பான அன்றாட பணிகள் உள்ளிட்ட எந்தப் பணியையும் செய்யவிடாமல் தமிழகப் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கேரள அரசு சட்டவிரோதமாகத் தடுத்து வருகிறது. முல்லைப் பெரியாறு சிற்றணையில் வழக்கமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு பணிகள் செய்யச் சென்ற தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்களையும், பணியாளர்களையும் கேரள காவல் துறையினர் மிரட்டி வெளியேற்றிவிட்டனர்.

நீதிபதி ஆனந்த் குழுவினர் அணையின் வலுகுறித்து ஆய்வு செய்வதற்காக தோண்டிய துளைகளை முழுமையாக அடைப்பதற்கு கூட விடாமல் கேரள அரசு தடுத்து விட்டது. அப்பணி அரை குறையாகவே நிறைவேறியுள்ளது.

அணைப் பாதுகாப்பு குறித்து கேரள அரசுக்கு உண்மையிலேயே அச்சம் இருக்குமானால் துளையை அடைக்கும் பணிகளையும், அணைப் பராமரிப்பு பணிகளையும் தடைச் செய்யாமல் அனுமதித்திருக்க வேண்டும். இப்பணிகளை கேரள அரசு அடாவடியாக தடுப்பதில் இருந்தே அணையின் வலுகுறித்து கேரளா தெரிவித்து வரும் அச்சம் இட்டுகட்டப்பட்டது, உள்நோக்கம் கொண்டது என்பது தெளிவாகும்.

இந்நிலையில் தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு பணிகளை நடுவண் காவல் சேமப் படை (சி.ஆர்.பி.எப்) மூலம் மேற்கொள்ள இந்திய அரசை வலியுறுத்தி செயல்படுத்த வைத்திருக்க வேண்டும். மாறாக தேவையின்றி உச்சநீதிமன்றத்தில் மனு செய்தது. இதன்மீது 23.07.2012 அன்று ஆணைப் பிறப்பித்த நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையிலான அரசமைப்புச் சட்ட ஆயம் முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அரசு பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள அனுமதித்தது. ஆனால் இப்பணிகளை கேரள அரசின் கண்காணிப்பு பொறியாளர், நடுவண் அரசின் நீர்வளத்துறை பொறியாளர் ஒருவர், தமிழக அரசின் பொதுப்பணித்துறை மேற்பார்வை பொறியாளர் ஆகிய மூவர் கொண்ட குழுவின் மேற்பார்வையில் நிறைவேற்ற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணை அணையின் பராமரிப்பு பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள முடியாமல் தடுத்துவிடும். கேரள மேற்பார்வை பொறியாளர் ஒத்துழைக்கவில்லை என்றால் எந்தப்  பராமரிப்பு பணியையும் செய்ய முடியாது. இந்த வகையில் கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணையானது அணைப் பராமரிப்பு பணிகள் தொடர்பில் ரத்து அதிகாரத்தை வழங்குகிறது. நிரந்தரமாக கேரள அரசின் தயவில் இப்பணிகள் விடப்படுகின்றன என்று பொருள்.
முல்லைப் பெரியாறு ஒப்பந்தத்தில் அணையின் பராமரிப்பு உரிமை தமிழக பொதுப்பணித்துறைக்கு வழங்கப்பட்டிருந்தது. உச்சநீதிமன்ற ஐவர் ஆயத்தின் இந்த ஆணை தமிழகத்தின் இந்த உரிமையைத் தட்டி பறிக்கிறது. கேரளாவின் ரத்து அதிகாரத்திற்கு உட்பட்டதாக இந்த உரிமையைத் தாழ்த்திவிட்டது.

முல்லைப் பெரியாறு அணையை இடிக்கத்துடிக்கும் கேரளத்தின் அடாவடிக்கே உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணை உதவியாக அமையும்.

எனவே தமிழக அரசு முல்லைப்பெரியாறு அணையின் பராமரிப்பு அதிகாரத்தை தற்காத்து கொள்ள கீழ்வரும் சட்ட நடவடிக்கைகளையும், அரசியல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டுள்ள தமிழகத்தின் உரிமையை இந்த ஐந்து நீதிபதிகள் ஆயத்தின் ஆணை பறிப்பதோடு மட்டுமின்றி முல்லைப்பெரியாறு ஒப்பந்தத்தின் அடிப்படையையே மாற்றியமைத்துவிட்டது. இது இந்த ஐவர் ஆயத்தின் விசாரணை வரம்புக்கு அப்பாற்பட்டதாகும். எனவே ஐவர் ஆயத்தின் இந்த ஆணையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். 7நீதிபதிகள் அல்லது அதற்கு மேலும் எண்ணிக்கையில் நீதிபதிகள் கொண்ட இன்னும் விரிவான உச்சநீதிமன்ற ஆயம் (பெரிய பெஞ்ச்) இம்மேல்முறையீட்டை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக் அரசு முன்வைக்க வேண்டும்.

வல்லக்கடவு முதல் முல்லைப் பெரியாறு அணை வரை உள்ள பழையச் சாலையை புதுப்பிக்கலாம் என தமிழக அரசுக்கு ஐவர் ஆயத்தின் இவ்வாணை அனுமதி அளித்திருந்தாலும் நடைமுறையில் அதனை கேரள காவல்துறை அனுமதிக்காது என்பது தெளிவு. அன்றாடம் பல்வேறு சாக்குபோக்குகளை சொல்லி அது நிறைவேறாமல் பார்த்துகொள்ளும்.

இப்பணிகளை தடையின்றி நிறைவேற்ற வேண்டுமானால் முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் பாதுகாப்பு பணியிலிருந்து கேரள காவல் துறை நீக்கப்பட்டு அப்பணிகள் நடுவண் சேமப்படையிடம் (மத்திய ரிசர்வ் போலிஸ்) ஒப்படைக்கப்பட வேண்டும். எனவே அங்கு மத்திய ரிசர்வ் படையை நிறுத்துமாறு இந்திய அரசை தமிழக அரசு அழுத்தமாக வலியுறுத்த வேண்டும்.

வல்லக்கடவு – முல்லைப்பெரியாறு அணை சாலை பழைய சாலையாகும். அதில் மண்டியுள்ள புதர்களையும், மரங்களையும் அப்புறப்படுத்தி சாலையை புதுப்பித்து கொள்வதற்கு நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை தமிழகம் பெற வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் இவ்வாணை நிபந்தனை போடுகிறது. மரங்களை அப்புறப்படுத்த கேரள வனத்துறை எதிர்ப்பு கிளப்பினால் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் விசாரணை என்ற பெயரில் இழுத்தடிக்கப்படும். சாலைப் புதுப்பிக்கும் பணி நடைமுறையில் நிறைவேறாது. இந்த நிபந்தனையை எதிர்த்தும் தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்.

மேற்கண்ட சட்டவகை, அரசியல்வழி நடவடிக்கைகளை மேற்கொண்டு முல்லைப் பெரியாறு அணை உரிமையை பாதுகாக்க விரைந்து செயல்படுமாறு தமிழக அரசைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

 (கி.வெங்கட்ராமன்)
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
இடம் : சிதம்பரம்

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT