“அணுஉலையைத் திறப்பதில் மன்மோகன் சிங்கும் செயலலிதாவும்
கூட்டுக் களவாணிகள்” பெ.மணியரசன் பேச்சு!
“கூடங்குளம் அணுஉலையைத் திறப்பதில் மன்மோகன் சிங்கும், செயலலிதாவும் கூட்டுக்
களவாணிகளாக செயல்படுகின்றனர்” என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித்
தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசினார்.
இந்திய அரசால் கூடங்குளத்தில்
நிறுவப்பட்டு வரும் அணுஉலையை கைவிட வலியுறுத்தி, தொடர் உண்ணாப் போராட்டத்தின்
321ஆம் நாளான, 01.07.2012 ஞாயிறு அன்று, கூடங்குளம் இடிந்தகரையில் பல்வேறு அரசியல்
கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள்
பங்கேற்ற மாபெரும் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது.
மாநாட்டிற்கு, உலகத் தமிழர்
பேரமைப்புத் தலைவர் திரு. பழ.நெடுமாறன் தலைமையேற்றார். அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க
ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு.ப.உதயக்குமார் வரவேற்றார்.
மாநாட்டிற்கு முன்னிலை வகித்து,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசியதாவது:
அணுஉலைகள் நிறுவும் போது கடைபிடிக்க வேண்டிய கட்டாய
விதிமுறைகள் உலக அளவில் வகுக்கப்பட்டுள்ளன. அதில், நில ஆய்வு அறிக்கை(Site evaluation report) என்பது மிக முக்கியமானது.
கூடங்குளத்தில் அப்படியொரு ஆய்வு நடத்தப்பட்டதா என்றும், அவ்வறிக்கையை வழங்குங்கள்
என்றும் போராட்டக் குழுவினரும், அறிவியலாளர்களும் கேட்டதற்கு தர மறுக்கிறார்கள்.
இதிலிருந்தே, ஏதோ ஒரு அபாயத்தை அரசு மறைக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது.
அதே போல், பாதுகாப்பு அறிக்கை(Safety analysis report)யும் மிக முக்கியமானது. பேரிடர் ஏற்பட்டால்
எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அணுஉலையை சுற்றி வாழ்கின்ற மக்களுக்க பயிற்சி
அளிப்பது கட்டாய விதிமுறை. அதை முறையாக செய்யாமல் நக்கனேரி என்ற கிராமத்தில்
மட்டும், அதிகாரிகள் காலை 9.30 மணிக்கு வந்து 11 மணிக்குள் பயிற்சி என்ற பெயரில்
நாடகம் நடத்திவிட்டு சென்றுவிட்டனர். இது ஓரு போலித்தனமான பயற்சியாகும். இந்த போலி
பயிற்சி நாடகத்தை நடத்தியவர்கள் முதல்வர் செயலலதாவின் கீழ் பணியாற்றும் மாவட்ட ஆட்சியரும், காவல்துறை
அதிகாரிகளும். இதிலிருந்து, முதலமைச்சர்
செயலலிதா இந்திய அரசின் மோசடி வேலைகளுக்கு ஒத்துழைக்கிறார் எகத் தெரியவருகிறது.
மனிதப் பேரழிவை உண்டாக்கக் கூடிய அணுஉலையை கூடங்குளத்தில்
நிறுவுவதில் மன்மோகன் சிங்கும், செயலலிதாவும் கூட்டுக் களவாணிகளாக செயல்படுகிறர்ர்கள்
என்பது இதன் மூலம் தெரிகிறது.
குறைந்தபட்சம் உலக நாடுகள் ஏற்கிற, பாதுகாப்பு நிபந்தனைகளை
கடைபிடிக்கும்படி கூட தில்லி அரசை செயலலிதா வலியுறுத்த விரும்பவில்லை. மராட்டியத்தில்,
செய்தாப்பூரில் அணுமின் நிலையம் கட்டுவதை எதிர்த்துப் பெரும் போராட்டம் நடந்தது. அங்கு
நடந்த மக்கள் போராட்டத்தின் உணர்வுகளை மதித்து, மராட்டியத்தில் நடைபெறும்
காங்கிரசு ஆட்சி மறைமுகமாக இந்திய அரசை வலியுறுத்தி, செய்தாப்பூர் அணுமின்
திட்டத்தை நிறுத்தச் செய்து விட்டது. மேற்கு வங்கத்தில், அரிப்பூரில் தொடங்க இருந்த அணுமின்
திட்டத்தை அம்மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி தடுத்த நிறுத்திவிட்டார்.
மராட்டியத்தன் காங்கிரசு முதலமைச்சரைப் போலவோ, மேற்கு வங்க
திரிணாமூல் முதலமைச்சர் போலவோ, தமிழக முதலமைச்சர் செயலலிதா அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தில் மக்கள் பக்கம் இருக்கவில்லை. இந்திய
அரசின் பக்கம் தான் இருக்கிறார்.
ஆனால், இந்திய அரசை எதிர்ப்பது போல் அவ்வப்போது வேறு
பிரச்சினைகளில் காட்டிக் கொள்கிறார். ஒரு கோட்பாட்டு வழிப்பட்ட இந்திய அரசின்
அதிகாரக் குவியலையும், எதேச்சதிகாரத்தையும் எதிர்க்கும் கொள்கை செயலலிதாவிடம்
இல்லை. அப்படியொரு கோட்பாட்டு அடிப்படையிலான கொள்கை இருந்தால், தமிழ்நாட்டில்
நிலவும் மின்வெட்டை நீக்க நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டிற்கு
வழங்கும்படி வலியுறுத்தியிருப்பார். அதைக் கேட்காமல் பொத்தாம் பொதுவில், மத்தியத்
தொகுப்பிலிருந்து 1000 மெகா வாட் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
மனிதப் பேரழிவை உண்டாக்கும் கூடங்குளம் அணுமின் திட்டத்தை
கைவிட வலியுறுத்துவதற்கு மாறாக, கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டிற்கு
வழங்கக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
செயலலிதாவின் கோரிக்கையை பார்த்து, கேரள முதலமைச்சர் உம்மன்
சாண்டி கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 500 மெகா வாட் மின்சாரம் கேரளத்திற்கு
வேண்டும் என்கிறார். விபத்தில் செத்துக் கிடக்கும் மனிதனின், கழுத்திலும்
காதிலும், கையிலும் நகைகளை பறிக்கப் போட்டிப் போடும் திருடர்களைப் போல தமிழக –
கேரள முதல்வர்கள் கூடங்குளம் அணு மின்சாரத்தைக் கேட்கிறார்கள்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடும் நமது போராட்டத்திற்கு
ஓய்வில்லை. இந்த அணுஉலைகளை மூடும் வரை தொடர்ந்து போராடுவோம். இயற்கையிலும், சமூகத்திலும்,
புதிய முரண்பாடுகள் தோன்றும் போது, புதிய சிக்கல்கள் எழும் போது இப்பொழுது சீராக
நடந்து கொண்டிருக்கும் இடிந்தகரைப் போராட்டம் ஒரு சூறாவளி என புதியப் பாய்ச்சல்
பெறும். அப்போது அந்தச் சூறாவளி கூடங்குளம் அணுமின் திட்டத்தை நிரந்தரமாகத்
தகர்த்தெறியும். அவ்வெற்றிக் கிடைக்கும் வரை நாம் போராடுவோம் என்று தமிழ்த் தேசப்
பொதுவுடைமைக் கட்சி சார்பிலர் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடன் தோளோடு தோள்
நிற்போம் என உறுதியேற்கிறோம்” என்று பேசினார்.
மாநாட்டில், ம.தி.மு.க. துணைப்
பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு.
வேல்முருகன், ஆதித்தமிழர் பேரவைத் தலைவர் தோழா இரா.அதியமான், மே பதினேழு இயக்க
ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, மருத்துவர் வீ.புகழேந்தி, இயக்குநர்
புகழேந்தி தங்கராசு, திரு. சுந்தர்ராசன்(பூவுலகின் நண்பர்கள்), தோழர் தியாகு
உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும் உணர்வாளர்களும் கலந்து கொண்டு
உரையாற்றினர்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தலைமைச்
செயற்குழு உறுப்பினர்கள் தோழர் அ.ஆனந்தன், தோழர் கோ.மாரிமுத்து, தஞ்சை மாவட்டச்
செயலாளர் தோழர் குழ.பால்ராசு, மதுரை கிளைச் செயலாளர் தோழர் ரெ.இராசு, திருச்சி
செயலாளர் தோழர் கவித்துவன், குறும்பூர் செயலாளர் தோழர் தமிழ்மணி, திருச்செந்தூர்
செயலாளர் தோழர் தமிழ்த்தேசியன், தோழர் ம.இலட்சுமி(மகளிர் ஆயம்) உள்ளிட்ட தோழர்கள்
இதில் கலந்து கொண்டனர்.
கூடங்குளம் அணு
உலைகளைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள் எதையும் அறியத் தராது, மக்களுக்கு உயிர்காக்கும் பேரிடர் பயிற்சி
தராது, கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை மீறி, பற்ற வைப்பு உள்ள அணு உலை அழுத்தக் கலனைப் பொருத்தி, தமிழ் மக்களின் உயிரை துச்சமென நினைத்து
செயலாற்றும் இந்திய அரசைக் கண்டித்தும், அணுசக்தித் துறையை, இந்த விதி மீறல்கள் குறித்து மௌனம்
காக்கும் தமிழக அரசைக் கண்டித்தும், தமிழகத்தின் சமூக, அரசியல் இயக்கங்கள், கூடங்குளம், கல்பாக்கம் பிரச்சனைகளை முன்னிறுத்தி, தமிழ் மக்கள் நலன் காத்திட தங்கள் இயக்கங்கள் சார்பாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்
போகிறோம் என்பதை விவாதித்து அறிவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தும் தீர்மானங்கள்
மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
நிறைவில், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தோழா புஷ்பராயன் நன்றி கூறினார்.
Post a Comment