உடனடிச்செய்திகள்

Monday, July 9, 2012

“இந்தியம் தமிழினத்தின் பகை என்பதை உணராதவரை தமிழீழம் சாத்தியமில்லை” – நா.வைகறை பேச்சு!


“இந்தியம் தமிழினத்தின் பகை என்பதை உணராதவரை தமிழீழம் சாத்தியமில்லை” - தோழர் நா.வைகறை பேச்சு

“இந்தியம் தமிழினத்தின் பகை என்பதை உணராதவரை தமிழீழம் சாத்தியமில்லை” என தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை பேசினார். 

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழீழ மக்களைக் கொன்றொழித்த சிங்கள இனவெறி அரசுக்கு, முட்டுக் கொடுத்துப் போரை வழிநடத்திய இந்தியாவின் பங்கு குறித்து பேசும் முனைவர் த.செயராமன் அவர்கள் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு பன்மைவெளி வெளியீட்டகத்தால் ‘ஈழம்: இந்தியமும் இனப்படுகொலையும்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. ஈழப்போரில் இந்திய அரசு முனைப்புடன் ஈடுபடுவதற்கான காரணங்கள், சிங்கள அரசின் 13ஆவது சட்டத்திருத்தம் தமிழீழ மக்களுக்கு எவ்வகையில் உரிமைகளை மறுக்கிறது, தேசியத் தன்னுரிமை குறித்த அனைத்துலகச் சட்ட விளங்கங்கள், தமிழக மீனவர் சிக்கலுக்கானத் தீர்வு என பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. இந்நூலுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அணிந்துரை எழுதியுள்ளார்.

இந்நூலின் வெளியீட்டு விழா, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில் கடந்த 07.07.2012 அன்று மாலை சென்னை திருவல்லிக்கேணி நீலி வீராசாமி தெரு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியக் கட்டிடம் இரண்டாம் மாடியில் நடைபெற்றது. 

தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை விழாவிற்குத் தலைமையேற்றார். த.க.இ.பே. செயலாளர் கவிஞர் கவிபாஸ்கர் வரவேற்புரையாற்றினார். உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன் நூலை வெளியிட, எழுத்தாளர் அமரந்தா, புலவர் இரத்தினவேலவர், திரு இராமச்சந்திரன்(அனு ஃபைன் ஆர்ட்ஸ்), ஆகியோர் நூற்படி பெற்றனர். எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், இயக்குநர் புகழேந்தி தங்கராசு, இயக்குநர் வ.கௌதமன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். 

அப்போது, தனது தலைமையுரையில் தோழர் நா.வைகறை பேசியதாவது:

"முள்ளிவாய்க்கால் சோகம் தமிழினத்தின் தீராத காயம். தமிழீழ மக்களை அழித்தொழிக்க உதவிய இந்திய அரசு நம் இனத்தின் பகை அரசு. எனவே, இந்தியத்தை நாம் புரிந்து கொள்ளாத வரை தமிழீழ விடுதலையைப் பெற முடியாது. இத்தனை நடந்த பின்னரும் இந்தியாவை நாம் ஏன் நம்பவேண்டும்? இந்தியம் தமிழினத்தின் பகை என்பதை உணராதவரை தமிழீழம் சாத்தியமில்லை.தமிழீழ விடுதலைக்கு முன்பே, தமிழ்நாட்டு விடுதலையை நாம் அடைந்து விடுவோம் என்று எண்ணுகிற அளவிற்கு இந்திய அரசு தன் செயல்பாடுகளைத் தொடர்ந்து கொண்டுள்ளது. காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, சிறுவாணி என தொடர்ந்து தமிழகத்திற்கு ஆற்று நீர் உரிமை மறுக்கப்படுவது, நெய்வேலி மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்காமை என தொடர்ந்து இந்திய அரசின் கோர முகம் தமிழகத்தில் அம்பலப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, உலகத் தமிழர்கள் தமிழர்களுக்கு ஒரு நாடு என்றல்ல, தமிழீழம் - தனித்தமிழ்நாடு ஆகிய இரண்டு நாடுகளும் வேண்டும் என அணிதிரள வேண்டும்" என்று தோழர் நா.வைகறை பேசினார். 

எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் பேசிய போது, இந்திய அரசு தமிழீழத்தை அழிக்க என்னென்ன வகையில் உதவியிருக்கிறது என்பதை பட்டியலிடும் இந்நூலின் பக்கங்களைச் சுட்டிக் காட்டினார். இயக்குநர் புகழேந்தி தங்கராசு, இயக்குநர் வ.கவுதமன் ஆகியோர் நூலின் சிறப்புகளை விளக்கிப் பேசினர். உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், இந்நூல் தமிழீழ விடுதலையை முன்னெடுத்துச் செல்லும் படைக்கருவியாக விளங்குவதாகவும், நூலாசிரியர் பேரா. த.செயராமன் இது போன்ற பல படைக்கருவிகளை தமிழீழ விடுதலைக்கு உருவாக்கித் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

நூலாசிரியர் முனைவர் த.செயராமன் ஏற்புரை வழங்ய போது, ஈழத் தமிழர் இனப்படுகொலையில் சிங்களப் பேரினவாதிகள் மட்டும் குற்றவாளிகள் அல்ல; அப்படுகொலைக்குத் துணை நின்ற, நிற்கின்ற இந்திய தேசியவாதிகளும் குற்றவாளிகள்தாம். தமிழீழப் போராட்டத்தை ஆதரிக்கும் எவரும் அறிந்து கொள்ள வேண்டியது ‘இந்தியம்’ என்பது தமிழக்கும், தமிழருக்கும் எதிர்க்கருத்தியல், அது தமிழ் தேசிய இனத்துக்கும் பகைசக்தி. இந்தியத்தை எதிர்க்காமல் ஈழத்தைப் பெறமுடியாது. என பேசினார். 

கவிஞர் முழுநிலவன நன்றி நவின்றார்.

இக்கூட்டத்தில், திரளானோர் கலந்து கொண்டு இந்நூலை வாங்கிச் சென்றனர். 



         

 

(செய்தி - த.தே.பொ.க செய்திப் பிரிவு, படங்கள் - கோபிநாத்)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT