புதுக்கோட்டை கீரனூரில் த.தே.பொ.க. தோழர் ஆரோக்கியசாமி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய தி.மு.க.வினரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோயில் ஒன்றியச் செயலாளரும், கட்சியின் தலைமைப் பொதுக்குழு உறுப்பினருமான தோழர் சி.ஆரோக்கியசாமி மீது அப்பகுதி தி.மு.க. பிரமுகரான செல்ப்பாண்டியன் என்பவர் தனது அடியாட்களைக் கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளார். தி.மு.க.வினரின் கொடுஞ்செயலைக் கண்டித்து, 31.07.2012 அன்று கீரனூரில் த.தே.பொ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கீரனூர் பகுதி தி.மு.க பிரமுகரான செல்லப்பாண்டியன், பினாமி பெயர்களில் ஒப்பந்தம் எடுத்து தார்ச்சாலை போட்டு வந்ததில், சரிவர சரளைக் கற்களை (கறுங்கல் ஜல்லி) போடாமல் தரமற்ற தார்ச் சாலைகள் போட்டு வந்தார். இத்தரமற்ற சாலைகள் தொடர் வாகனப் போக்குவரத்திற்கோ, ஒரு மழைக்கோ கூட தாங்கக்கூடியதாக இல்லை. மக்களின் வரிப்பணம் இவ்வாறு வீணாவதை சுட்டிக்காட்டி தி.மு.க பிரமுகர் செல்லப்பாண்டியனின் மேற்கண்ட ஊழல் நடவடிக்கையை அவ்வட்ட வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், பொதுக்குழு உறுப்பினர் தோழர் சி.ஆரோக்கியசாமி புகார் மனுக்களை அளித்தார்.
அதேபோல் மேற்படி செல்லப்பாண்டியன் அரசின் அனுமதியின்றி பாசன ஏரியிலிருந்து செம்மண் சரளைகளை (Gravel) லாரி லாரியாக அள்ளிச்சென்றிருக்கிறார். இதுகுறித்தும் புதுக்கோட்டை மாவட்ட அரசு அதிகாரிகளுக்கு தோழர் சி.ஆரோக்கியசாமி புகார் மனு அளித்திருக்கிறார்.
இதனால் ஆத்திரமுற்ற தி.மு.க பிரமுகரான க.செல்லப்பாண்டியன் கடந்த 23.07.2012 திங்களன்று காலை கீரனூரில் அவரது வீட்டிலிருந்த தோழர் சி.ஆரோக்கியசாமியை ஏதோ பேச அழைப்பது போல் வெளியில் அழைத்து வந்து, அடியாட்களை கொண்டு கொலைவெறித்தனத்தொடு தாக்கினார். இந்நிகழ்வைத் தொடர்ந்து, 23.07.2012 அன்று மாலையே கீரனூர் காவல் நிலையத்தில் தோழர் ஆரோக்கியசாமி தான் தாக்கப்பட்டது குறித்த புகார் மனு அளித்தார்.
இப்புகார் மனு குறித்து விசாரிப்பதற்காக காவல்நிலைய துணை ஆய்வாளர், செல்லப்பாண்டியனை காவல்நிலையத்திற்கு வருமாறு அழைத்த போது, வரும் போதே 30க்கும் மேற்பட்ட ஆட்களுடன் கூச்சல்களோடு காவல்நிலையத்திற்குள் நுழைந்து அங்கிருந்த காவல் துணை ஆய்வாளரையே மிரட்டும் வகையில், “எப்.ஐ.ஆர். போட்டால் போட்டுக் கொள்ளுங்கள். நான் மேலே பார்த்து கொள்கிறேன்” என அதிகாரத்தமிருடன் பேசினார்.
இதற்கு பிறகு பின் யோசனையாக செல்லப்பாண்டியன் தனது ஆள் ஒருவர் மூலம் இட்டுக்கட்டிய பொய் புகார் ஒன்றை தோழர் சி.ஆரோக்கியசாமியின் மீதே காவல்நிலையத்தில் அளித்தார்.
இந்நிலையில் 25.07.2012 அன்று, தோழர் சி.ஆரோக்கியசாமி தலைமையில் த.தே.பொ.க. தோழர்கள் காவல்துறை துணை கண்காணிப்பாளரைச் சந்தித்து மேல்முறையீடு செய்துவிட்டு வந்தபிறகு, கீரனூர் கடைத் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த தோழர் ஆரோக்கியசாமி அவர்களை ஒரு மகிழுந்தில் வந்த கும்பல் வலுவந்தமாக இழுத்துக் காரில் கடத்த முயன்றனர். காரில் வந்த தி.மு.க. செல்லப்பாண்டியனின் ஆட்கள் முருகேசன், ரமேஷ் ஆகிய இருவரும் ஆரோக்கியசாமியை பிடித்து இழுத்து காருக்குள் தள்ள முயன்றனர். அவர்களிடமிருந்து தப்பித்த ஆரோக்கியசாமி பக்கத்தில் இருந்த ஒரு மெடிக்கல் கடையில் தஞ்சமடைந்தார். அங்கிருந்தபடியே, காவல் நிலையத்திற்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். கொலை வெறியோடு கடைத் தெருவிலேயே காத்திருந்த மேற்படி கும்பல் காவல்துறையினர் வந்ததைப் பார்த்து காரில் விரைந்து வெளியேறினர்.
கொலை மிரட்டல் தொடர்பாக புகார் அளித்த பிறகும் அதுவும் காவல் நிலையத்திற்குள் துணை ஆய்வாளர் முன்னிலையிலேயே மிரட்டல் விடுத்து அராஜகம் செய்த பின்னும் இரண்டு நாட்களாக தி.மு.க பிரமுகர் செல்லப்பாண்டியன் மற்றும் அவர்கள் ஆட்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாததால் தான் மேற்படி செல்லப்பாண்டியன் ஆட்கள் துணிச்சல்பெற்று பட்டப்பகலிலேயே கீரனூர் கடைத்தெருவில் தோழர் ஆரோக்கியசாமியை காரில் கடத்தி கொலை செய்ய முயன்றுள்ளனர்.
தி.மு.க.வினரின் வன்முறைச் செயல்களைக் கண்டித்து 31.07.2012 அன்று கீரனூர் தேரடி திடலில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. குன்றாண்டார் ஒன்றிய அமைப்பாளர் தோழர் பெ.லெட்சுமணன் தலைமையேற்றார். மக்கள் உரிமை பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி, த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், த.தே.பொ.க. தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ.கருணாநீதி, பூதலூர் ஒன்றிய தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் அ.தேவதாசு உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். தோழர் லெ.திருப்பதி நன்றி நவின்றார்.
இக் கண்டன ஆர்ப்பட்டத்தில், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை, த.தே.பொ.க. தஞ்சை நகரச் செயலாளர் தோழர் இராசு.முணியாண்டி, துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், திருச்சி த.தே.பொ.க. செயலாளர் கவித்துவன், வழக்கறிஞர் கரிகாலன், த.இ.மு. முன்னணித் தோழர்கள் செந்தில்குமார், ந.கருப்புசாமி, ச.காமராசு, ரமேசு, தச்சனாமூர்த்தி, செபஸ்டின், உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
(செய்தி – த.தே.பொ.க செய்திப் பிரிவு, படங்கள் – ஸ்டாலின்)
Post a Comment