உடனடிச்செய்திகள்

Monday, August 20, 2012

இப்படிக்கு தோழர் செங்கொடி ஆவணப்படம் வெளியீட்டு விழா தொகுப்பு.


காஞ்சிபுரம் மக்கள் மன்றம் அமைப்பைச் சேர்ந்த 21 வயதான செங்கொடி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட பேரறிவாளன்,முருகன்,சாந்தன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டபடி அவர் இறந்து போனார்.

செங்கொடியின் இறுதி ஊர்வலத்தில் எழுந்த எழுச்சியைக் கண்டு அஞ்சிய தமிழக அரசு, பேரறிவாளன்,முருகன்,சாந்தன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. அதே நாளில் (2011, ஆக.,30) சென்னை உயர்நீதிமன்றம் பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று பேரின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது.

செங்கொடியின் மரணத்தைத் தொடர்ந்து நடந்த இந்த நிகழ்வுகளை பின்புலமாகக் கொண்டு மரண தண்டனைக்கு எதிரான ஆவணப்படமாக வே.வெற்றிவேல் சந்திரசேகர் ‘இப்படிக்கு தோழர் செங்கொடி’யை உருவாக்கி உள்ளார்.

இந்த ஆவணப்படத்தின் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 19ம் தேதி ஞாயிற்றுக் கிழமை சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் உள்ள டான் போஸ்கோ அரங்கில் நடந்தது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைவர் பெ.மணியரசன் தலைமை வகிக்க, நடிகர் சத்யராஜ், இயக்குநர் ம.செந்தமிழன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படத்தின் குறுந்தகட்டை நடிகர் சத்யராஜ் வெளியிட, அற்புதம்மாள் பெற்றுக் கொண்டார். அதன்பின்பு, ‘இப்படிக்கு தோழர் செங்கொடி’ ஆவணப்படம் திரையிடப்பட்டது. சுமார் 57 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்தப் படத்தை நூற்றுக்கணக்கான பார்வையாளர்களுடன் அமர்ந்து சிறப்பு விருந்தினர்களும் பார்த்தனர். 

இறுதி நிகழ்வாக, ஆவணப்படத்தைப் பற்றி பேசுகையில். 

பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், “ராஜிவ் காந்தி மரணத்தால் யார் பலனடைந்தார்கள் என்பதை கவனிக்க வேண்டும். பல உண்மைகளை மூடி மறைக்கவே பேரறிவாளன் உள்ளிட்ட அப்பாவிகளை இந்திய அரசு கைது செய்திருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்படிக்கு தோழர் செங்கொடி ஆவணப்படம்  மூலம் செங்கொடி பற்றிய அரிய தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. இனி யாரும் எதற்காகவும் தற்கொலை முயற்சியை மேற்கொள்ளக் கூடாது என்பதை இந்தப் படத்தில் அழுத்தமாக சொல்லி இருக்கிறார்கள்” என்று முடித்துக் கொண்டார்.

திருமுருகன் காந்தி, “தமிழர்களுக்கான ஊடகங்கள் இங்கே இல்லாத நிலையில் இதுபோன்ற தரமான ஆவணப்படங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது அவசர, அவசியம்” என்றார்.

இயக்குநர். ம.செந்தமிழன், “இதுபோன்ற ஆவணப்பட முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும். வெறுமே பார்த்து விட்டு செல்லாமல், முடிந்தவரை இந்த ஆவணப்பட குறுந்தகடுகளை வாங்கி விழாக்களில், நிகழ்ச்சிகளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குப் பரிசளிக்க வேண்டும். இதுபோன்ற ஆவணப்படங்கள் வணிகரீதியில் வெற்றி பெறவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

“இப்படிக்கு தோழர் செங்கொடி ஆவணப்பட இயக்குநர் வே.வெற்றிவேல் சந்திரசேகரை அவர் குமுதம் ரிப்போர்ட்டரில் செய்தியாளராக இருந்த போதே அறிவேன். ஈழத்தமிழர்க்கு ஆதரவாக பேசிய வழக்கில் நான் கைது செய்யப்பட இருந்த சில நிமிடங்களுக்கு முன் என்னை பேட்டி கண்டார். அந்தப் பேட்டியின் போது நான் தெரிவித்த நுட்பமான கருத்துகளை மிகக் கவனமாகவும், தைரியமாகவும் பத்திரிகையில் பதிவு செய்திருந்தார்.

அதே அக்கறையோடு இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் உயிர்நீத்த தோழர்களுக்கு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் எதுவும் செய்யாத நிலையில், செங்கொடி போன்ற நம் இனத்தின் நாயகி பற்றிய இந்தப் பதிவு நல்ல தொடக்கம்!” என்று பேசினார் பெ.மணியரசன்.

இறுதியாக பேசிய சத்யராஜ், “சினிமாத் துறையைச் சேர்ந்த நான் இந்தப் படத்தின் தொழில்நுட்ப நேர்த்தியை மறந்துவிட்டு, படத்தின் உள்ளடகத்தில் மூழ்கிப் போனேன். அந்தளவுக்கு இந்தப் படத்தில் அரிய தகவல்களைச் சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக, செங்கொடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த பெண் என்பதையொட்டி, இருளர் சமூகம் என்றைக்கும் அனுபவித்து வரும் வேதனைகளைப் பதிவு செய்த விதத்தில் இந்தப் படத்தை முக்கியமான வரலாற்றுப் பதிவாகக் கருத வேண்டியிருக்கிறது” என்றார்.

விழா முடிவில் பெ.மணியரசனும், சத்யராஜும் இப்படிக்கு தோழர் ஆவணப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக தலா நூறு குறுந்தகடுக்கான தொகையை (தலா ரூ.10 ஆயிரம்) படக்குழுவினரிடம் வழங்கினார்கள்.

நிறைவாக ஏற்புரையில் ஆவணப்படத்தின் இயக்குநர் வே.வெற்றிவேல் சந்திரசேகர் “சுதந்திர இந்திய வரலாற்றில் சமூக நோக்கத்துக்காக தற்கொலை செய்து கொண்ட முதல் பெண் செங்கொடி. இதுவே அந்தப் பெண்ணைப் பற்றிய ஆவணப்படத்தை எடுக்க என்னைத் தூண்டியது” என்றார். ஆர்.ஜே. இன்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நியாஷ் அகமது நன்றி நவின்றார். இறுதியாக படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. அரங்கம் நிரம்பிய தமிழின உணர்வாளர்கள் குறுந்தகடுகள் வாங்கிச்சென்றனர். இந்த ஆவணப்படம் தொடர்பான மேலும் விவரங்களுக்கு 99941 55339 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

செங்கொடியின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வையோட்டி பிரஞ்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பு  வருகிற 25.08.2012 அன்று மாலை 3.30 மணியளவில் ரொக்கன்ரோ (தொடர்வண்டி நிலையம் அருகில்) மணித உரிமை சதுக்கத்தில் “இப்படிக்கு தோழர் செங்கொடி” ஆவணப்படம் வெளியீட்டு படுகிறது.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT