உடனடிச்செய்திகள்

Sunday, August 5, 2012

ஆகத்து – 6 –ஹிரோசிமா நாளில் த.தே.பொ.க. சார்பில் அணுசக்திக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள்!


ஆகத்து 6 ஹிரோசிமா நாளில் த.தே.பொ.க. சார்பில் அணுசக்திக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள்!

1945ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு 6 அன்று ஜப்பான் நகரின் ஹிரோசிமாவிலும், ஆகஸ்ட்டு 9 நாகசாகி நகரின் மீதும் அமெரிக்க வல்லரசு அணுகுண்டு வீசி பல இலட்சக்கணக்கான மக்களை ஒரே நொடியில் கொன்றொழித்தது. பல்லாண்டுகள் ஆன பிறகும், இன்றுவரை அப்பகுதி மக்கள் அந்த அணுகுண்டு வீச்சின் கதிர்வீச்சுத் தாக்கத்தை வலியுடன் அனுபவித்து வருகின்றனர்.

வெடிக்கும் போது மட்டுமின்றி, துகள்களாகவும், கதிர்வீச்சாகவும் பல்லாண்டுகள் அழியாது தங்கி மனிதர்களைக் மெதுவாகக் கொன்றொழிக்கும் வல்லமை படைத்தவையே அணுசக்தியாகும். எனவே, ஹிரோசிமா நாளான ஆகஸ்ட்டு 6ஆம் நாளை, அணுசக்தியின் கொடூரக் கரங்களால் மறைந்த மக்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையிலும், அணுசக்தி இல்லாத உலகம் அமைய உறுதியேற்கும் வகையிலும் நாம் கடைபிடிக்க வேண்டும்.

இந்நாளில், தமிழகத்திலுள்ள கல்பாக்கம் கூடங்குளம் அணுஉலைகளை நிரந்தரமாக இழுத்து மூட வலியுறுத்தியும், கூடங்குளம் அணுஉலையைத் திறக்கக் கூடாதென அறவழியில் போராடும் மக்களுக்கு ஆதரவுத் தெரிவித்து கரம் கொடுக்கும் வகையிலும், சென்னை – கோவை – ஓசூர் நகரங்களில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

சென்னை
சென்னையில் தியாகராயர் நகர் தென் மேற்கு போக் சாலை – மதுரை வீரன் கோயில் தெரு சந்திப்பு அருகில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் 06.08.2012 அன்று மாலை 6 மணியளவில் ஹிரோசிமா நாள் வீரவணக்கத் தெருமுனைக் கூட்டம் நடைபெறுகின்றது. கூட்டத்திற்கு, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி தலைமையேற்கிறார். த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் வரவேற்புரையாற்றுகிறார். பெரியார் திராவிடர் கழகச் செயற்குழு உறுப்பினர் தோழர் அன்பு தனசேகரன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை ஒருங்கிணைப்பாளர் தோழர் அருண்சோரி, தமிழ்த் தேச மாணவர் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் இளையராசா, தமிழக இளைஞர் முன்னணி குன்றத்தூர் கிளை அமைப்பாளர் தோழர் சரவணன் ஆகியோர் உரை நிகழ்த்துகின்றனர். நிறைவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் சிறப்புரை வழங்குகிறார். தாம்பரம் த.தே.பொ.க. செயலாளர் தோழர் தமிழ்க்கனல் நன்றி நவில்கிறார்.

கோவை
கோவையில், 06.08.2012 அன்று மாலை செஞ்சிலுவை சங்கம் அருகில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஹிரோசிமா நினைவு நாளையொட்டி, அணுக்கதிர் வீச்சு ஆபத்தை விளைவிக்கும் தமிழகத்திலுள்ள கூடங்குளம்  கல்பாக்கம் அணுஉலைகளை இழுத்து மூடக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பா.தமிழரசன் தலைமையேற்கிறார். தமிழக இளைஞர் முன்னணி நகரச் செயலாளர் தோழர் பா.சங்கர வடிவேர், கிளைச் செயலாளர்கள் தோழர் கு.இராசேசுக்குமார், பிறை.சுரேசு, இரா.கண்ணன் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.

ஓசூர்
ஓசூரில், அணுசக்திக்கு எதிரானக் கூட்டியக்கம் சார்பில் 06.08.2012 அன்று மாலை 5 மணிக்கு, ஹிரோசிமா நினைவு நாளையொட்டி, அணுகுண்டுகளை உற்பத்தி செய்யப் பயன்படும் அணுஉலைகளை இழத்து மூடுக என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் நடவரசன் தலைமையேற்கிறார். பெரியார் தி.க.  மாவட்டத் தலைவர் தோழர் குமார், தமிழர் தேசிய இயக்கம் மாவட்டத் தலைவர் திரு. முருகேசன், விடுதலை சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் திரு. செந்தமிழ்,  ம.தி.மு.க. நகரச் செயலாளர் தோழர் பி.வெள்ளைச்சாமி, பா.ம.க. மாவட்டச் செயலாளர் திரு. தே.அருண்ராஜன், தமிழக மக்கள் விடுதலை முன்னணி அமைப்பாளர் தோழர் ஒப்புரவாளன், மனித உரிமைப் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திரு. க.மா.இளவரசன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து பேசுகிறார்.

மின்தேவைக்குத் தான் அணுஉலை என இந்திய அரசுக் கட்டமைக்கும் மாயத் தோற்றத்தைப் புறந்தள்ளுவோம்! காவிரி முல்லைப் பெரியாறு சிறுவாணி பாலாறு என தமிழகத்திற்கு ஆற்றுநீரைத் தடுக்க முயலும் அண்டை மாநிலங்களுக்கு, நெய்வேலி அனல் மின்நிலையத்திலிருந்து செல்லும் மின்சாரத்தைத் தடுத்து, தமிழகத்தின் மின்தேவையைப் நிறைவு செய்யப் போராடுவோம்! “ஆபத்தில்லாத புற்றுநோய் இல்லை! ஆபத்தில்லாத அணுஉலை இல்லை!என்று முழங்குவோம்!

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT