“காவிரி நீரைத் தடுக்கும் கர்நாடகத்திற்கு தமிழக மின்சாரம் செல்ல அனுமதிக்க மாட்டோம்” என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், ஆகத்து 10 நெய்வேலி அனல் மின் நிலையத் தலைமை நிறுவன முற்றுகைப் போராட்டம் குறித்தான செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
காவிரி நீர் மறுக்கும் கர்நாடகாவுக்கு நெய்வேலி மின்சாரத்தை தடுப்போம் என வலியுறுத்தி, நெய்வேலி அனல் மின் நிலையத் தலைமையகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை ஆகத்து 10 அன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்தவுள்ளது. இப்போராட்டம் குறித்து விளக்குவதற்காக 08.08.2012 அன்று காலை 11 மணியளவில், சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட, செய்தியாளர் சந்திப்பு நிகழ்வில் பேசிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், “கர்நாடகத்தில் காவிரி ஆற்றைச் சேர்ந்த கிருஷ்ணராஜ அணையின் மொத்த உயரம் 120-அடி. இன்றைய நிலவரப்படி அதில் 119-அடி தண்ணீர் உள்ளது. கபினி அணையின் மொத்தக் கொள்ளளவு 16.6 டி.எம்.சி. அதில் இன்றைய நிலவரப்படி 15 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. ஹேமாவதி அணையின் மொத்த உயரம் கடல் மட்டத்திலிருந்து 2922-அடி. அதில் இன்று 2890 அடி தண்ணீர் உள்ளது. ஏரங்கி அணையின் மொத்த உயரம் கடல் மட்டத்திலிருந்து 2859 அடி அது அன்றே நிரம்பி 4.08.2012 மிச்ச நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. கர்நாடகத்தில் இந்த அளவு தண்ணீர் இருந்தும் காவிரி தீர்ப்பாயத்தின் இடைக் காலத் தீர்ப்பின் படி சூன் மாதம் தர வேண்டிய 10.16 டி.எம்.சி. தண்ணீரும் தரவில்லை. சூலையில் தர வேண்டிய 42.76 டி.எம்.சி. தண்ணீரும் தரவில்லை. ஆகத்து மாதம் முதல் வாரத்தில் தர வேண்டிய 13.5 டி.எம்.சி. தண்ணீரும் தரவில்லை.
எனவே, கர்நாடகத்தில் பருவ மழை பொய்த்துவிட்டது, அணைகள் வறண்டு கிடக்கின்றன என்ற கூற்றுதான் பொய். அணைகள் நிரம்பி உடையும் ஆபத்து ஏற்பட்டால் மட்டுமே, தனது அணையின் தற்காப்புக் கருதி கர்நாடகம் மிச்ச நீரை வெளியேற்றும் உத்தியை கடந்த பல ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறது. சூன் – சூலை மாதங்களில் குறைந்த அளவாக 25 டி.எம்.சி. தண்ணீர் கொடுத்திருந்தால் கூட காவிரி பாசனம் மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்திருக்க முடியும்.
மத்திய அரசின் நீர்வளத்துறைக்கு மேலே குறிப்பிட்ட புள்ளி விவரங்கள் அனைத்தும் அன்றாடம் போய்க் கொண்டிருக்கின்றன. இந்த உண்மைகள் தெரிந்தும் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை, மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் தகராறு சட்டம் 1956-ன்படி செயல்படுத்தித் தர வேண்டிய பொறுப்பும் அதிகாரமும் இருந்தும் சட்டத்தை நிலைநாட்ட மறுக்கிறது. தமிழக முதலமைச்சர் கேட்டுக் கொண்டும் பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையத்தைக் கூட்ட மத்திய அரசு மறுக்கிறது. மத்திய அரசை நம்பியும் பயனில்லை சட்டத்தை நம்பியும் பயனில்லை என்ற அவலமே தமிழ்நாட்டிற்கு மிஞ்சியுள்ளது.
கர்நாடகம் பல்வேறு பொருளாதார நிலைகளுக்கு தமிழ்நாட்டைச் சார்ந்துள்ளது. குறிப்பாக நெய்வேலி அனல் மின் நிலையத்திலிருந்து ஒரு நாளைக்கு 11 கோடி யூனிட் மின்சாரம் கர்நாடகத்திற்கு போகிறது. கர்நாடகத்தின் வளர்ச்சி தமிழ்நாட்டைச் சார்ந்துள்ளது என்ற உண்மையை எடுத்துக்காட்ட கர்நாடகத்திற்கு செல்லும் நெய்வேலி மின்சாரத்தை நிறுத்தும் போராட்டத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி 10.08.2012 அன்று நடத்துகிறது.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையில் அன்று காலை 10 மணிக்கு, கர்நாடகம் செல்லும் மின்சாரத்தை நிறுத்த வலியுறுத்தி நெய்வேலியில் அனல் மின் நிறுவனத் தலைமையகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் த.தே.பொ.க. தோழர்களும், உழவர்களும் கலந்து கொள்கிறார்கள். தமிழ் மக்கள் அனைவரும் கட்சி வேறுபாடின்றி இதில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்“ என பேசினார்.
சந்திப்பின் போது, த.தே.பொ.க. மூத்தத் தோழர் இரா.கோவிந்தசாமி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு உறுப்பினர் கவிஞர் கவிபாஸ்கர், த.தே.பொ.க. தலைமையக் செயலர் தோழர் கோபிநாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நம்மை அடிப்பவனுக்கு அதன் வலியை நாம் உணர்த்தியே ஆகவேண்டும்.
Post a Comment