உடனடிச்செய்திகள்

Wednesday, August 15, 2012

ஆகத்து 19 – “இப்படிக்கு தோழர் செங்கொடி” ஆவணப்படம் வெளியீட்டு விழா!


ஆகத்து 19 – “இப்படிக்கு தோழர் செங்கொடி” ஆவணப்படம் வெளியீட்டு விழா!

தமிழ் உணர்வாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘இப்படிக்கு தோழர் செங்கொடி’ ஆவணப்படம், வரும் ஆகத்து 19 அன்று வெளியிடப்படுகின்றது.

இராசீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டும் எனக்கோரி, தீக்குளித்து ஈகியான காஞ்சிபுரம் தோழர் செங்கொடியின் வாழ்க்கை வரலாறு “இப்படிக்கு தோழர் செங்கொடி” என்ற பெயரில் ஆவணப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில் “பொன்னுசாமி” என்ற புனை பெயரில் எழுதி வரும் திரு. வெற்றிவேல் சந்திரசேகர் இந்த ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். இவர், இயக்குநர் “பாலை“ ம.செந்தமிழனிடம் துணை இயக்குநராக பணியாற்றுகிறார். திரு. மு.நியாஸ் அகமது ஒளிப்பதிவாளராகவும், கவிஞர் கவிபாஸ்கர் பாடலாசிரியராகவும், திரு. ரிச்சர்ட் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். உணர்வாளர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் ஏஸ் சினிமாஸ்(ACE CINEMAS)என்ற நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தின் வெளியீட்டு விழா, வரும் ஆகத்து 19 அன்று சென்னையில் நடைபெறுகின்றது. சென்னை கீழ்ப்பாகத்தில் அமைந்துள்ள சிகா வளாகத்திலுள்ள டான் போஸ்கோ அரங்கில், மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவிற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையேற்கிறார். திரைப்பட நடிகர் திரு. சத்யராஜ் படத்தை வெளியிட, பேரறிவாளின் தாயார் அற்புதம் அம்மையார் முதற்படி பெற்றுக் கொள்கிறார். திரைப்பட இயக்குனர் “பாலை” ம.செந்தமிழன், மே பதினேழு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.

நிறைவில், படத்தின் இயக்குனர் திரு. வெற்றிவேல் சந்திரசேகர் ஏற்புரை வழங்குகிறார். படத்தின் ஒளிப்பதிவாளர் திரு. மு.நியாஸ் அகமது நன்றி நவில்கிறார். RJ இன்பா நிகழ்வை தொகுத்து வழங்குகிறார். விழாவின் போது, படம் திரையிடப்படும்.

ஈகி செங்கொடியின் ஈகத்தை, தமிழ்த் தேசிய உணர்வாளர்களும், சனநாயக சக்திகளும் அவரவர்களது பகுதிகளிலும், இல்லங்களிலும் பரப்புரை செய்ய வேண்டும். அதற்கு இந்த ஆவணப்படத்தை நாம் கருவியாகக் கருதி, ஆதரிக்க வேண்டும். இப்படத்தின் வெளியீட்டு விழாவில், பெருந்திரளான உணர்வாளர்கள் கலந்து கொள்ள வேண்டும்.



(செய்தி: த.தே.பொ.க., செய்திப் பிரிவு, இணைப்பு: வெளியீட்டு விழா அழைப்பிதழ்)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT