அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கத்தின் போராட்டம் ஓராண்டு நிறைவிற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மனித குல கொலைக்களமாக உள்ள கூடங்குளம் அணு உலைகளை தொடங்கக் கூடாது என்று வலியுறுத்தி அணுசக்திகெதிரான மக்கள் இயக்கம் போராட்டம் தொடங்கி நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்று இன்று (16.8.2012) மறு ஆண்டு பிறக்கிறது.
இன்றும் போராட்டம் தொடர்கிறது. இன்றைய நாள் இடிந்தகரை போராளிகளுக்கு போராட்டப்புத்தாண்டு நாளாகும். இந்நாளில் கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி கடந்த ஓராண்டாக இடிந்தகரையை தலைமைக் களமாக்கி போராடிக் கொண்டியிருக்கும் மக்கள் அனைவருக்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கூடங்குளம் அணு உலைக்கெதிராகவும் கல்பாக்கம் உள்ளிட்ட அனைத்து அணு உலைகளை மூட வலியுறுத்தியும் கடந்த ஓராண்டாக நடந்து வரும் தொடர் போராட்டத்தில் தமிழ்த் தேசப்பொதுவுடைமைக் கட்சி தன்னையும் இணைத்துக் கொண்டு இயன்றவரை போராட்டங்களில் பங்கெடுத்துள்ளது. இத்தொடர் போராட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி இனியும்உறுதியாக பங்கேற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகச் சாதனையாக நடைபெறும் இப்போராட்டத்தை தலைமை தாங்கி நட்த்திச் செல்லும் தோழர்கள் உதயகுமார் புஷ்பராயன் உள்ளிட்ட அனைவருக்கும் பங்கெடுத்துக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் பாராட்டுகள். இப்போராட்டம் தமிழ்மக்களுக்கு புதிய விழிப்புணர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.
இந்தியத் துணைக்கண்டம் முழுமைக்கும் ஒரு வெளிச்சத்தைக் காட்டியிருக்கிறது. வருங்காலத்தில் கூடங்குளம் அணு உலை மூடுவதற்கான பெரும் புயல் உருவாவதற்கான அடித்தளத்தைப் போட்டுள்ளது.
அணு உலைக்கு எதிராக மட்டுமின்றி மற்ற மற்ற உரிமைகளுக்காக ஞாயங்களுக்காக போராடுவோர்க்கு ஓர் உந்து விசையும் போராட்ட வடிவமும் வழங்கியிருக்கிறது. இடிந்தகரைப் போராட்டம். கூடங்குளம் அணு உலை இழுத்து மூடப்படும் காலம் வரும் வெற்றி பெரும் வரை போராடுவோம். போராட்டக்களத்தை விரிவு படுத்து வோம்!
போராளிகளுக்கு மீண்டும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்
தோழமையுள்ள
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
இடம்: சென்னை
Post a Comment