இலங்கை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் : ஈழத்தமிழர்கள் இனத்துரோகிகளைப் புறந்தள்ள வேண்டும்! உண்மையான இன உரிமை அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!
இலங்கை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் சிங்கள மக்களிடம் இனத் தீவிரவாதம் கூடுதலாக வளர்ந்துள்ளதையே காட்டுகின்றன. மொத்தமுள்ள 341 உள்ளாட்சி சபைகளில் 239-ஐ இராசபட்சேயின் சிறீலங்கா பொதுசன பெரமுனா வென்றுள்ளது. தலைமை அமைச்சர் இரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சி, மிகக் குறைவாக 41 சபைகளில்தான் வென்றுள்ளது.
குடியரசுத் தலைவர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திக் கட்சி வெறும் 10 இடங்களில் தான் வென்றுள்ளது.
இதனால் இப்போது இலங்கை கூட்டணி ஆட்சியாளர்களிடையே உறுதியற்ற தன்மையும் - பிளவுகளும் ஏற்பட்டுள்ளது. இது நல்லது.
இராசபட்சே வருங்காலத்தில் ஆட்சியைப் பிடித்தாலும் புதிதாக பேராபத்து வரப் போவதில்லை! எல்லா அழிவு வேலைகளையும் உரிமைப் பறிப்புகளையும தமிழரகளுக்கெதிராக ஏற்கனவே செய்து முடித்து விட்டார்கள்.
இராசபட்சே, சிங்களர்களுக்கிடையே இழந்த செல்வாக்கை மீண்டும் பெற்றுவிட்டார் என்று சொல்ல முடியாது. ஏற்கெனவே குடியரசுத் தலைவர் தேர்தலில் சிங்களர்கள் இராசபட்சேவுக்குத்தான் பெரும்பான்மையான வாக்குகளை கொடுத்தார்கள். தமிழர்களின் எதிர்ப்பு வாக்குகளால்தான் அவர் தோற்றார். அன்றிலிருந்து இன்று வரை சிங்களர்களிடம் தமிழர்களை அரவணைத்துச் செல்லும் சனநாயக நோக்கு பெரும்பான்மை பெறவே இல்லை. ஏற்கெனவே தமிழர்களுக்கு எதிராக இருந்த இனவெறி நீடிக்கிறது அல்லது சற்றுக் கூடுதலாகி இருக்கிறது என்று கணிக்கலாம்.
அடுத்து சிறீசேனா - இரணில் இருவரும் தமிழர்களை அரவணைத்துச் செல்லும் பண்பாளர்களோ, பன்மைவாதிகளோ அல்லர். தமிழின எதிர்ப்பில் முகமூடி அணியாத பகைவன் இராசபட்சே - முகமூடி அணிந்த பகைவர்கள் சிறீசேனாவும் - இரணிலும்!
சிறீசேனா - இரணில் அரசு, இராசபட்சேயின் சாரமான தமிழின எதிர்ப்புக் கொள்கைகளைத்தான் பின்பற்றுகிறது. வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து படையை விலக்கிக் கொள்ள மறுத்து விட்டது. படையாட்கள் வன்கவர்தல் செய்த தமிழர் காணிகளைத் திருப்பித் தரவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே மிகச் சில காணிகள் தமிழர்களுக்கு மீண்டும் கிடைத்தன.
வடக்கு கிழக்கு மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் தரவில்லை. விடுதலைப்புலிகள் என்று குற்றம் சாட்டி கொடுஞ்சிறைகளில் அடைத்துள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களை விடுதலை செய்ய புதிய அரசு மறுத்து விட்டது. காணாமல் போனவர்கள் என்று சொல்லப்படும் தமிழர்களுக்கான பொறுப்பு (Accountability) எதையும் செயல்படுத்த வில்லை. ஐ.நா. மனித உரிமை மன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி சிங்கள அரசும் படையாட்களும் செய்த “போர்க்குற்றங்கள்” குறித்த விசாரணை எதையும் செய்யவில்லை. இன அழிப்புக் கயவர்கள் யாருமே தண்டிக்கப்படவில்லை!
இப்பொழுது நடைமுறையில் உள்ள சிங்களப் பேரினவாத ஒற்றையாட்சி முறைக்கு மேலும் கூடுதல் அதிகாரம் தரவும், வடக்கு கிழக்கு மாகாண இணைப்பை நிரந்தரமாக மறுக்கவுமான புதிய அரசமைப்பு யாப்பை சிறீசேனா அரசு கொண்டு வருகிறது. எனவே இராசபட்சே மீண்டும் வருவதால் தமிழர்கள் புதிதாக இழப்பதற்கு ஏதுமில்லை!
மாறாக தமிழர்களுக்கிடையே புதிய விழிப்புணர்ச்சி வளர்ந்து வருகிறது. சம்பந்தர் தலைமையிலான தமிழினத் துரோகக் கூட்டணியைப் புறக்கணிக்க தமிழர்கள் முன்வந்துள்ளார்கள். கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சாவகச்சேரி, பருத்தித்துறை நகராட்சிகளை வென்றுள்ளது. மேலும் உள்ளாட்சி உறுப்பினர்கள் பலரைப் பெற்றுள்ளது.
சம்பந்தரின் இனத்துரோகம் பளிச்சென்று தெரியும் வகையில், எதிரிகளோடு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். தனிப்பெரும்பான்மை யாருக்கும் இல்லாத நிலையில், யாழ்ப்பாணம் நகராட்சியில் நிர்வாகம் அமைக்க, இன எதிரி இரணில் கட்சியுடனும், இராசபட்சேயின் கூட்டாளி டக்ளஸ் தேவானந்தாவுடனும் பேச்சு நடத்நடத்துகிறார். டக்ளஸ் தேவானந்தாவுக்கும் சிறு வளர்ச்சி உள்ளது.
கஜேந்திரகுமாரின் முன்னேற்றம் வரவேற்கத்தக்கது. சம்பந்தர் கூட்டணியிலிருந்து விலகியுள்ள பிரேமச்சந்திரனும் கஜேந்திரகுமாரும் கூட்டுச் செயல்பாடுகளுக்கு முயன்றால் நல்லது!
சிங்கள இனவாதம் அதே தீவிரத்துடன் இருப்பதால், தமிழர்களிடையே இன உணர்ச்சியும், சந்தர்ப்பவாதத்தைப் புறந்தள்ளி ஒருங்கிணையும் புதிய போக்கும் போர்க்குணமும் வளரும்!
எனவே இராசபட்சே வளர்ச்சியைக் கண்டு அச்சப்படாமல், தமிழர் சனநாயகப் போராட்டங்களை விரிவுபடுத்தவும் விரைவுபடுத்தவும் கிடைத்த புறநிலை ஊக்கமாக இச்சூழ்நிலையைப் பயன்படுத்த வேண்டும்! அதேபோல், உண்மையான தமிழீழ தேசிய ஆற்றல்கள் கூட்டு நடவடிக்கைகளை வளர்க்க வேண்டும்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
Post a Comment