“தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வில் வெளி மாநிலத்தவர்களை அனுமதிக்காதீர்” தமிழக முதல்வரிடம் தோழர் பெ. மணியரசன் வலியுறுத்தல்!
தமிழ்நாடு அரசின் 9,351 பணியிடங்களுக்காக தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையம், வரும் 11.02.2018 அன்று நடத்தவுள்ள பொதுத் தேர்வில் வெளி மாநிலத்தவரை அனுமதிக்கக் கூடாது என்று, தமிழ்நாடு முதலமைச்சரின் இல்ல அலுவலகத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் இன்று (08.02.2018) மனு அளிக்கப்பட்டது.
முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி, கண் அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் இருப்பதால், முதலமைச்சரின் தனிச் செயலாளர் அவர்களிடம் இம்மனுவை, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், இயக்குநர் வ. கௌதமன் ஆகியோர் நேரில் சென்று கையளித்தனர். பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, தோழர் சி. பிரகாசு பாரதி ஆகியோர் உடன் சென்றனர்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அரசுப் பணிகளில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் 2016ஆம் ஆண்டு செப்டம்பரில் கொண்டு வரப்பட்ட புதிய சட்டத்தின்படி, தமிழ்நாட்டு அரசுப் பணிகளுக்கு இந்தியாவின் பிற மாநிலத்தவர் மட்டுமின்றி, நேப்பாளம், பூட்டான், பாக்கித்தான், மியான்மர் உள்ளிட்ட வெளி நாட்டவரும் போட்டியிடலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த புதிய அறிவிப்பின் அடிப்படையிலேயே வரும் 11.02.2018 தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையத்தின் தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வில், தமிழர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், இன்று (08.02.2018) பகல் அடையாறிலுள்ள தமிழ்நாடு முதலமைச்சரின் இல்ல அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி 3 (2018) அன்று, சென்னை அண்ணா அரங்கில் எழுச்சியுடன் நடைபெற்ற “தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே – வெளி மாநிலத்தவர்க்கு அல்ல!” – சிறப்பு மாநாட்டின் தீர்மானங்களும், இந்தியாவெங்கும் அந்தந்த மாநிலங்களில் செயலில் உள்ள மண்ணின் மக்களுக்கே வேலை அளிக்கும் சட்டங்கள், ஆணைகள், தீர்மானங்கள் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட வரைவுச் சட்டம் ஆகியவையும் முதலமைச்சர் மனுவுடன் இணைத்து அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசே!
தமிழ்நாட்டு அரசுப் பணிகளுக்கான தேர்வில் வெளியாரை அனுமதிக்காதே!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: WWW.tamizhthesiyam.com
Post a Comment