செங்கல்பட்டு கலெக்டர் பிள்ளையார் கோயில்
குடமுழுக்கைத் தமிழ் வழியில் நடத்த வேண்டும்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் கோரிக்கை!
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகிலுள்ள சக்தி விநாயகர் கோயில் “கலெக்டர் பிள்ளையார் கோயில்” என்று மக்களிடம் புகழ்பெற்று விளங்குகிறது. இக்கோயிலின் குடமுழுக்கு 27.01.2021 அன்று நடைபெறுகின்றது.
இக்குடமுழுக்கு விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க. பாண்டியராசன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
கலெக்டர் பிள்ளையார் கோயில் குடமுழுக்கை தமிழ் மந்திரங்கள் ஓதி நடத்துவதற்கு உரிய ஏற்பாட்டை இந்து சமய அறநிலையத்துறை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஏற்கெனவே தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு, கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கு ஆகியவற்றில் தமிழ் மந்திரங்களை ஓதி அர்ச்சனையும், குடமுழுக்கும் செய்வதற்கும், தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் இதுபோல் நடக்க வேண்டுமென்றும், தமிழ் ஓதுவார்கள் பெயர்களை குடமுழுக்கு அழைப்பிதழில் அச்சிட வேண்டுமென்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு ஆணையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனைக் கடைபிடிக்கும் வகையில், தமிழ் மந்திரங்களை ஓதி செங்கல்பட்டு கலெக்டர் பிள்ளையார் கோயில் குடமுழுக்கை நிகழ்த்துமாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Post a Comment