நாமக்கல் பகுதி நூற்பாலையில் தமிழ் பெண்ணைப் பாலியல் துன்பறுத்தல் செய்து தமிழ்த் தொழிலாளிகளைத் தாக்கிய இந்திக்காரர்களைக் கைது செய்க!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் அறிக்கை!
நாமக்கல் மாவட்டம் என்.புதுப்பட்டியில் உள்ள கே.கே.பி நூற்பாலையில் வேலை பார்க்கும் இந்திக்காரர்கள் அங்கு பணியாற்றும் இளம் பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தல்கள் செய்ததுடன், தட்டிக் கேட்ட தமிழ்த் தொழிலாளிகளையும் தாக்கியுள்ளனர். காவல் துறையில் புகார் கொடுத்தும் குற்றம் புரிந்த இந்திக்காரர்களைத் தங்கள் மாநிலம் செல்ல அனுமதித்துள்ளனர். காவல் துறையின் இச்செயல் கண்டனத்திற்குரியது.
கடந்த 1.1.2021 இரவுப் பணி நேரத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இந்திக்கார இளைஞன் அப்போது தொழிற் சாலைப் பணியில் இருந்த தமிழ்நாட்டு இளம் பெண்ணைப் பாலியல் துன்புறுத்தல்கள் செய்துள்ளான். அதைத் தடுத்துத் தட்டிக்கேட்ட மேற்பார்வையாளர் சரவணன், மேற்பார்வையாளர் வடிவேல் ஆகியோரையும் மற்ற தமிழ்த் தொழிலாளிகளையும் ஜார்கண்ட் மாநிலத் தொழிலாளிகள் அடித்துள்ளனர். இதில் மேற்பார்வையாளர் சரவணனுக்கு இலேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.
அந்தப் பணி நேரத்தில் ஜார்கண்ட் தொழிலாளிகள் அதிக எண்ணிக்கையில் இருந்துள்ளார்கள்.
இது பற்றி கே.கே.பி. நூற்பாலை நிர்வாகத்திடம் தொழிலாளர்களும் மேற்பார்வையாளர்களும் புகார் கொடுத்தும் ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வில்லை. தமிழ்ப் பெண்ணை இழிவுபடுத்தி, தமிழர்களைத் தாக்கிய இந்திக்கார வன்முறையாளர்களுக்கு ஆதரவாகவே நிர்வாகம் இருந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த – அந்த நூற்பாலையில் வேலை செய்யும் தொட்டியம் பகுதி தொழிலாளர்களும் அப்பகுதி மக்களும் 2.1.2021 அன்று தொழிலாளிகளை வேலைக்கு ஏற்றிச் செல்ல வந்த ஆலையின் ஊர்திகளைத் தொட்டியத்தில் முற்றுகையிட்டுப் போராடியிருக்கிறார்கள். அதன் பிறகு காவல்துறையினர் தலையிட்டு வேன்களை விடுவித்து அனுப்பியிருக்கிறார்கள்.
தமிழ்ப் பெண்ணைப் பாலியல் துன்புறுத்தல் செய்து, தமிழ்த் தொழிலாளிகள் மீது தாக்குதல் நடத்திய ஜார்கண்ட் தொழிலாளிகள் மீது நாமக்கல் மாவட்டக் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல், அவர்களை அவர்கள் மாநிலத்திற்குப் பாதுகாப்பாக அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
இன்னும் மேற்படித் தொழிற் சாலையில் அசாம், ஒரிசா போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களே அதிக எண்ணிக்கையில் வேலை பார்க்கிறார்கள். தொழிற் சாலை நிர்வாகம் தமிழர்களைத் தாக்கிய இந்திக்காரர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவது கண்டிக்கத் தக்கது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தலையிட்டு, தமிழ்த் தொழிலாளிகளைத் தாக்கிய – தமிழ்ப்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த ஜார்கண்ட் தொழிலாளிகள் எங்கிருந்தாலும் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்து வழக்கு நடத்த வேண்டும் என்றும், மேற்படி கே.கே.பி நூற்பாலையில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளிகள் அனைவரையும் வெளியேற்ற ஆணையிட வேண்டும் என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
மேற்படி நூற்பாலைக்குத் தேவையான தொழிலாளிகளை அந்தப் பகுதியில் உள்ள ஊர்களிலிருந்து தமிழர்களைச் சேர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தேவையான தொழிலாளிகளை – அப்பகுதியில் இருந்து பட்டியல் எடுத்துத் தர நாங்கள் கட்டணமின்றிப் பணியாற்றவும் உறுதி அளிக்கிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Post a Comment