உடனடிச்செய்திகள்

Wednesday, January 27, 2021

அடுத்தடுத்து வடமாநிலத்தவரால் நடைபெறும் கொலை – கொள்ளை நிகழ்வுகள் : உள்அனுமதிச் சீட்டு முறை (Inner Line Permit) வேண்டும்! - ஐயா கி. வெங்கட்ராமன் கோரிக்கை!



அடுத்தடுத்து வடமாநிலத்தவரால் நடைபெறும்
கொலை – கொள்ளை நிகழ்வுகள் :
உள்அனுமதிச் சீட்டு முறை (Inner Line Permit) வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் 
ஐயா கி. வெங்கட்ராமன் கோரிக்கை!


தமிழ்நாட்டில் வடமாநிலக் கொள்ளையர்கள் அடுத்தடுத்து நடத்திவரும் கொலை மற்றும் கொள்ளை நிகழ்வுகள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. 

சீர்காழியில், வடநாட்டு நகை அடகு வியாபாரி வீட்டில் புகுந்த வடமாநில கொள்ளையர்கள், அவரது மனைவி மற்றும் மகளை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, 16 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியுள்ளனர். நகை வியாபாரி மற்றும் மருமகள்  படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கில் தொடர்புள்ள வடமாநிலக் கொள்ளையர்களை காவல்துறையினர் பிடிக்க முயன்றபோது, ஒருவர் காவல்துறையினரைத் தாக்கியதாகவும், அதனால் அவரைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாகவும் கூறப்படுகிறது. மீதமுள்ளவர்கள் நகைகளுடன் பிடிபட்டுள்ளனர். 

கடந்த வாரம், கிருட்டிணகிரி மாவட்டம் - ஓசூரில் இயங்கி வரும் மலையாள முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் 25 கிலோ தங்க நகைகள் உள்பட 12 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்ற வடமாநிலக் கொள்ளையர்களை தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திற்குத் துரத்திச் சென்று தமிழகக் காவல்துறையினர் பிடித்து வந்துள்ளனர். 

இதேபோல், சென்னையில் இயங்கிவரும் பிரபல நகைக்கடையான லலிதா ஜூவல்லரியில் இருந்து 5 கிலோ தங்க நகைகளை திருடிச் சென்ற வடமாநிலக் கொள்ளையர்களை காவல்துறையினர் தற்போது தேடி வருகின்றனர். 

இவ்வாறு, அடுத்தடுத்து நடைபெற்று வரும் வடமாநிலக் கொள்ளையர்களின் கொள்ளை மற்றும் கொலைக் குற்றங்கள் பெரும் அச்சமூட்டுகின்றன. தமிழ்நாட்டில் குடியேறும் வடமாநிலத்தவருக்கு எவ்வித பதிவு முறையும் இல்லாததால், ஏற்கெனவே குற்றச்செயல்களில் ஈடுபட்ட பல கொள்ளையர்கள் தமிழ்நாட்டில் குடியேறி குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். இவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டும் உள்ளது. 

எந்த விதப் பதிவும் இல்லாததானால் தமிழ்நாடு காவல்துறையினர் பல வழக்குகளில் கொள்ளையர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். தமிழ் மக்கள் தங்கள் சொந்த தாயகத்திலேயே வெளி மாநிலத்தவரால் தமக்கு பாதிப்பு ஏற்படுமென அச்சத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

எனவே, தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் குடியேற்றத்திற்கு தமிழ்நாடு அரசு உடனடியாகத்  தடை விதிக்க வேண்டும். ஏற்கெனவே குடியேறியுள்ள வெளி மாநிலத்தவரை படிப்படியாக வெளியேற்ற வேண்டும். 

மிசோரம், அருணாச்சலப்பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் வெளி மாநிலத்தவர் உள்ளே நுழைய “உள் அனுமதிச்சீட்டு முறை” (Inner Line Permit) இந்திய அரசால் செயல்படுத்தப்படுவதைப் போல், தமிழ்நாட்டிற்குள்ளும் பிற மாநிலத்தவருக்கு உள் அனுமதிச்சீட்டு முறை வேண்டும். இதை வலியுறுத்தி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறது. 
 
தற்போது, வெளி மாநிலத்தவரால் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கே சீர்குலைந்து மக்கள் அச்சப்படும் சூழல் நிலவுகின்ற நிலையில், தமிழ்நாடு அரசு “உள் அனுமதிச்சீட்டு முறை”யைக் கொண்டு வர வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.         


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

 


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT