உடனடிச்செய்திகள்

Wednesday, November 28, 2012

சிதம்பரம் மின்வாரிய அலுவலகத்தை இழுத்துப் பூட்டியது த.இ.மு.!


சிதம்பரம் மின்வாரிய அலுவலகத்தை இழுத்துப் பூட்டியது த.இ.மு.!

தமிழகத்தில் நிலவிவரும் கடும் மின்வெட்டை எதிர்த்தும், சிதம்பரம் நகரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கடுமையான மின்வெட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், நெய்வேலி மின்சாரத்தை கேட்டுப் பெறாத தமிழக அரசை கண்டித்தும், சிதம்பரம் நகர மின்வாரிய அலுவலகத்தை இழுத்துப் பூட்டினர் தமிழக இளைஞர் முன்னணித் தோழர்கள்.

கடும் மின்வெட்டை செயல்படுத்தி வரும் சிதம்பரம் நகர மின்வாரிய அலுவலகத்தை இழுத்துப் பூட்டும் போராட்டம் நடத்தப்படும் என தமிழக இளைஞர் முன்னணி 25.11.2012 அன்று அறிவிப்பு வெளியிட்டது. இப்போராட்டத்திற்கு சிறுதொழில் முனைவோர் சங்கம் மற்றும் தமிழக உழவர் முன்னணி ஆகிய அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.

இந்நிலையில், இன்று (28.11.2012) காலை 11.30 மணியளவில் சிதம்பரம் மின்வாரிய அலுவலகத்தை இழுத்துப் பூட்டும் போராட்டத்திற்காக, சிதம்பரம் நகரக் காசுகடைத் தெருவிலிருந்து தமிழக இளைஞர் முன்னணித் தோழர்கள் பேரணியாக, முழக்கங்களுடன் சென்றனர். சிதம்பரம் மின்வாரிய அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

ஆவேசத்துடன் வந்த தோழர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இளைஞர் முன்னணி தோழர்களுக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுக் கொண்டிருந்த நிலையில், மின்வாரிய அலுவலகத்தின் முதன்மைக் கதவை, கையில் கொண்டுவந்திருந்த பூட்டைக் கொண்டு இழுத்துப் பூட்டினர் தோழர்கள்.

காவல்துறையினருடனான தள்ளுமுள்ளுவின் போது, தோழர் சுப்பிரமணிய சிவ, ச.பாபு, சுகன்ராஜ் ஆகியோருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது.

தமிழக இளைஞர் முண்ணனி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சிதம்பரம் நகர செயலாளர் தோழர் கு.சிவபிரகாசம், தமிழக இளைஞர் முன்னணி தோழர்களும், பெருந்திரளான பெண்களும், இளைஞர்கள் பங்கேற்றனர்.

ஆவேசமாகத் திரண்டிருந்த தோழர்களைக் கண்டக் காவல்துறையின்ர், அவர்களது கோரிக்கையின் ஞாயத்தை உணர்ந்து தோழர்களை கைது செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : சுகன்)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT