Thursday, July 4, 2013
சாதி ஆதிக்க அரசியலுக்கு இளவரசன் பலி! தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிக் கண்டனம்
Wednesday, July 3, 2013
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்குவதைக் கைவிட வலியுறுத்தி கோட்டையை நோக்கிக் கோரிக்கைப் பேரணி
தமிழ்வழி அரசுப் பள்ளிகளை அகற்றிவிட்டு, ஆங்கில வழிப் பள்ளிகள் அமைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் ஆகத்து 8 அன்று சென்னை கோட்டையை நோக்கி கோரிக்கைப் பேரணி நடத்தப்படும் என தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் அறிவித்தார்.
பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் அங்கம் வகிக்கும் தமிழ் வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் சார்பில், தமிழ்வழிப் பள்ளிகளை அகற்றும் தமிழக அரசுக்கு எதிராக பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைத் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் 01.07.2013 திங்கள் அன்று மாலை சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமைப்பாளர் சைதை திரு. கே.வி.சிவராமன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் துணைத் தலைவர் திரு. குணங்குடி அனிபா, திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசிகுமரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.
கூட்டத்தின் முடிவில், பின்வரும் கருத்துகள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.
1. தமிழக அரசு தமிழ்நாடெங்கும் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்குவதை கண்டித்தும் அத்திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும், கடந்த 28.05.2013 அன்று சென்னையில் பள்ளிக் கல்வி இயக்குனரகம் வாயிலில் எழுச்சியோடு முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். அடுத்த கட்டப்போராட்டமாக மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவெடுத்து அதன்படி 17.06.2013 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருட்டிணகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், மன்னார்குடி, புதுக்கோட்டை, மதுரை, இராசப்பாளையம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 18 இடங்களில் எழுச்சியோடு ஆர்ப்பாட்டம் நடந்தது. தருமபுரி, விழுப்புரம், கடலூர், இராமநாதபுரம் ஆகிய இடங்களில் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.
2. மூன்றாவது கட்டப் போராட்டமாக 08.08.2013 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னையில் கோட்டையை நோக்கி கோரிக்கைப் பேரணி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. கோட்டையில் தமிழக முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை விண்ணப்பம் கொடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
அதற்குமுன் ஒருமாத காலத்தில் தமிழகம் முழுவதும் கிராமங்கள், நகரங்கள் உட்பட பரப்புரை கூட்டங்கள் நடத்த வேண்டும். வீடு வீடாக கோரிக்கை விளக்கத் துண்டறிக்கை வழங்க வேண்டும். இப்பணிகளை அந்தந்த மாவட்டம் மற்றும் வட்டாரங்களில் உள்ள நமது தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தில் உள்ள அமைப்பினரையும் மற்றும் ஒத்த கருத்துள்ள அமைப்புகளையும், இன, மொழி உணர்வாளர்களையும், சனநாயக ஆற்றல்களையும் இணைத்துக் கொண்டு இப்பணிகளைச் செய்ய வேண்டும். கோட்டைப் பேரணிக்கு முன்பாக இப்பணிகளை சிறப்பாகச் செய்து பேரணிக்குப் பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்ட வேண்டும்.
3. தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக தோழர் பெ.மணியரசன் அவர்களும், செயற்குழு உறுப்பினர்களாக ஓர் இயக்கத்திற்கு ஒருவரும் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்
இதனைத் தொடர்ந்து, 02.07.2013 அன்று சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில், தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் திரு. தி.வேல்முருகன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.
Monday, July 1, 2013
“கலை இலக்கியப் படைப்பாளிகள் உரிமைக்கு போராடும் மக்கள் பக்கம் இருக்க வேண்டும்”- தோழர் பெ.மணியரசன் பேச்சு!
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில் தமிழ்த் தேசியப் பற்றாளர் இயக்குநர் தோழர் மணிவண்ணன் அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு, 29.6.2013 அன்று மாலை சென்னை, வடபழனியிலுள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க அரங்கத்தில் நடைபெற்றது.
Monday, June 17, 2013
தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றும் தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாடடம்!
Saturday, June 15, 2013
“கோபுரம் சாய்ந்தது” - இயக்குநர் மணிவண்ணன் அவர்களுக்கு தோழர் பெ.மணியரசன் வீரவணக்கம்!
Wednesday, June 12, 2013
“காவிரி உரிமை மீட்க தமிழக அரசு காவிரி எழுச்சி நாள் கடைபிடிக்க வேண்டும்” - தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு!
"காவிரி உரிமை மீட்க தமிழக அரசு காவிரி எழுச்சி நாள் கடைபிடிக்க வேண்டும்"
தமிழக உழவர் முன்னணி ஆர்ப்பாட்டத்தில் திரு. கி.வெங்கட்ராமன் வலியுறுத்தல்.
ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை பெற்றுத்தராத இந்திய அரசைக் கண்டித்து தமிழக உழவர் முன்னணி சார்பில் சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிதம்பரம் தலைமை அஞ்சலகம் முன்பு இன்று காலை 10.30 க்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்ட செயலாளர் திரு, சி. ஆறுமுகம் தலைமையேற்றார்.
காவிரி நீரை மறுத்துவரும் கர்நாடக அரசுக்கு எதிராகவும், காவிரி நீரை பெற்றுத்தராத இந்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்ககள் எழுப்பப்பட்டது. தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்ட தலைவர் திரு அ.கோ.சிவராமன், முன்னிலை வகித்தார். பொறுப்பாளர்கள், திரு தங்க.கென்னடி, பொறியாளர் என்.ஜெயபாலன் , கோ.பொன்னுசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
நிறைவாக தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் திரு, கி. வெங்கட்ராமன் ஆர்ப்பாட்டத்தினை விளக்கி பேசினார். அப்போது அவர், "தமிழகத்துக்குரிய காவிரி நீரை கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. உலக ஆற்று நீர் சட்டங்களையோ நீதிகளையோ, நீதிமன்ற உத்தரவுகளையோ மதிக்காத கர்நாடக அரசின் அடாவடித்தனத்துக்கு இந்திய அரசு துணை நிற்கிறது. தமிழகத்துக்குரிய காவிரி நீரை இழந்து தமிழக உழவர்கள் கையறு நிலையில் உள்ளனர். தொடர்ந்து காவிரி நீரின்றி நிலத்தடி நீர் குறைந்து வருவதால் காவிரி மாவட்ட மக்களின் குடிநீரும் கேள்விக்குறியாய் உள்ளது.
இந்திய அரசு நடுவர் மன்ற தீர்ப்பில் கூறியுள்ளபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து காவிரி அணைகளின் நீர் நிர்வாகப் பொறுப்பை அதனிடம் ஒப்படைத்து, தீர்ப்பின்படி தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்க தனது சட்டப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வழக்கு மன்றம் செல்வதோடு தனது கடமை முடிந்துவிட்டதாகக் கருதக் கூடாது. உடனடியாக தமிழகத்தில் அனைத்துக் கட்சி மற்றும் உழவர் அமைப்புகளின் கூட்டத்தைக் கூட்டி ஒருமித்தக் கருத்தை உருவாக்கி, அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துக் கொண்டு பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும். முதலமைச்சரே முன் முயற்சி எடுத்து காவிரி எழுச்சி நாள் அறிவித்து உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டும் "என்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக உழவர் முன்னணி அமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். நிறைவாக திரு,அ.மதிவாணன் நன்றி கூறினார்.






























