மதுரையில் நடந்த முற்றுகைப் போராட்டம்
17 பேர் கைது
ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு உதவும் இந்திய அரசைக் கண்டித்து மதுரை மத்திய வருமானவரித் துறை அலுவலகம் இன்று காலை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் முற்றுகையிடப்பட்டது. இப்போராட்டத்தில் பங்கு கொண்ட 17 தமிழ் உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு தொடர்ந்து உதவி புரிந்து வருகின்றது. தமிழ் மக்களின் வரிப்பணத்தில் இந்திய அரசு சிங்கள அரசுக்கு ஆயதங்கள் வழங்குவதால் தமிழத்தில் உள்ள இந்திய வருமானவரித் துறை அலுவலகங்களை முற்றுகையிடப் போவதாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா.செ.கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு உள்ளிட்ட தலைவர்கள்கூட்டாக விடுத்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று(20-02-2009) காலை 11.00 மணியளவில் மதுரை பி.பி.குளம் சாலையில் அமைந்துள்ள வருமானவரித் துறை முற்றுகையிடப்பட்டது. இப்போராட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் நா.வைகறை தலைமை தாங்கினார். பெரியார் திராவிடர் கழகம் மாயாண்டி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி இராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
"சிங்களன் உனக்கு பங்காளியா? தமிழன் உனக்கு பகையாளியா? இந்திய அரசே வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து முடு" என்பனப் போன்ற முழக்கங்களுடன் பேரணியாக புறப்பட்ட தோழர்கள் வருமானவரித்துறை அலுவலக நுழைவு வாயில் வரை செல்ல காவல்துறை தடை விதித்தது. தடையை மீறீ வாயில் வரை சென்ற 17 பேரை காவல்துறை கைது செய்தது.
கைது செய்யப்பட்ட தலைவர்களும் தோழர்களும் மதரை சேரிப்பாளையத்தில் உள்ள ஓரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment