தமிழீழத்தில் நடைபெற்ற
இனப்படுகொலையை மூடி மறைத்தும், ஒன்றுபட்ட இலங்கையை பாதுகாப்பதாகவும் உள்ள வகையில்,
அமெரிக்கா முன்வைத்துள்ள ஐ.நா. தீர்மானத்தையும், இலங்கை அரசைப் பாராட்டி இந்திய அரசு
ஜெனீவாவில் அளித்துள்ள அறிக்கையும், இன்று(19.03.2013) தமிழக இளைஞர் முன்னணி சார்பில்,
பாடையில் கொண்டு சென்று தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
சென்னை
சென்னை நுங்கம்பாக்கம்
இலயோலா கல்லூரி வாயிலிருந்து, தமிழக இளைஞா முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி
தலைமையில் துவங்கிய பேரணியில், அமெரிக்கத் தீர்மானமும், இந்தியாவின் அறிக்கையும் பாடையில்
எடுத்துச் செல்லப்பட்டது.
நுங்கம்பாக்கம் சுடுகாடு
வரை சென்ற பேரணியின் முடிவில், சுடுகாடு வாயிலில் அமெரிக்கத் தீர்மானமும், இந்தியாவின்
அறிக்கையும் மட்டுமின்றி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரசுக் கொடியும், சிங்களப் பேரினவாத
அரசின் கொடியும் எழுச்சி முழக்கங்களுக்கிடையே தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
நிகழ்வில், தமிழ்த் தேசப்
பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தமிழக இளைஞர் முன்னணி
சென்னை நகரத் தலைவர் தோழர் வினோத், தாம்பரம் தலைவர் தோழர் இளங்குமரன், செயலாளர் தோழர்
வெற்றித்தமிழன், பல்லாவரம் செயலாளர் தோழர் அகத்தாய்வன் உள்ளிட்ட த.இ.மு. நிர்வாகிகளும்,
மே பதினேழு இயக்கத் தோழர்கள் ஹரிஹரன், கொண்டல்சாமி உள்ளிட்டவர்களும் திரளாகக் கலந்து
கொண்டனர்.
ஓசூர்
ஓசூரில், இன்று காலை பேருந்து
நிலையம் முன்பு 10.30 மணியளவில், தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து
தலைமையில், மோசடியான அமெரிக்கத் தீர்மானமும், இந்திய அரசின் அறிக்கையும் பாடை கட்டி
தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. போராட்டத்தில், கிருட்டிணகிரி நகர அமைப்பாளர் தோழர் பெ.ஈசுவரன்,
தோழர் செம்பரிதி கண்டன முழக்கங்களை எழுப்பினார். இந்நிகழ்வில், திரளான உணர்வாளர்களும்
பொது மக்களும் கலந்து கொண்டனர்.
சிதம்பரம்
சிதம்பரம் பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில், இன்று காலை தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன் தலைமையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து, அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்தும், இந்திய அரசின் மோசடி அறிக்கையையும் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களும், திரளான இளைஞர்களும் பங்கேற்றனர். தமிழக இளைஞர் முன்னணி மூத்தத் தோழர் நா.வைகறை , ஐ.நா. மன்ற அமெரிக்கத் தீர்மானம் மற்றும் அதில் இந்திய அரசு முன்வைத்த அறிக்கை ஆகியவை ஈழத்தமிழர் இனப்படுகொலையை மூடி மறைக்கும் வஞ்சக செயல் என்பதை விளக்கிப் பேசினார்.
அப்போது இந்திய - சிங்கள அரசுகளுக்கு எதிரான முழக்கங்களுக்கு இடையே ஈழத்தமிழர்களுக்கு எதிரான இந்திய -அமெரிக்க தீர்மானத்தை தீயிட்டு கொளுத்தினர். இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள், சிதம்பரம் அரசுக் கலைக் கல்லூரி மாணவிகள், பொதுமக்கள், உணர்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : பாலா)
Post a Comment