உடனடிச்செய்திகள்

Friday, March 1, 2013

இந்திய அரசின் வரவு - செலவுத் திட்டம் மாய்மாலக் கணக்குகளில் ஒளிந்துள்ள மக்கள் பகைத் திட்டம் - தோழர் கி.வெங்கட்ராமன் அறிக்கைஇந்திய அரசின் வரவு - செலவுத் திட்டம்
மாய்மாலக் கணக்குகளில் ஒளிந்துள்ள
மக்கள் பகைத் திட்டம்
 

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர்
தோழர் கி.வெங்கட்ராமன் அறிக்கை

உண்மை நிலையைச் சொல்வது போன்ற பாவனையில் பித்தலாட்டங்கள், அறிவார்ந்த மேற்கோள்களுக்கு அடியில் இழிவான நோக்கம், மாய்மாலக் கணக்குகளில் பதுங்கி இருக்கும் மக்கள் பகைத்திட்டம் – இதுவே ப.சிதம்பரம் முன் வைத்துள்ள வரவு -செலவுத் திட்டம்.

நாடாளுமனற மக்களவையில் 28-02-2013 அன்று இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் முன்வைத்த இந்தியாவின் வரவு செலவுத் திட்டம் 2013 – 2014, வளர்ச்சி நோக்கிய  நிதித் திட்டம் என்று மன்மோகன்சிங் மட்டுமே பாராட்ட முடியும். பன்னாட்டு பெரு நிறுவனங்கள் மட்டுமே மகிழ்ச்சி அடையமுடியும்.

நாடாளுமன்றத்தில் வரவு-செலவுத் திட்டம் முன்வைக்கப்படுவதற்கு முன்னாலேயே தனித்தனி அறிவிப்புகள் மூலம் மக்கள் மீது நிதிச் சுமைகளை ஏற்றுவது அண்மைக்காலமாக வழக்கமாகிவிட்ட ஒன்று. இந்த வரவு செலவு திட்டத்திற்கு முன்பாகவே பெட்ரோல் டீசல் விலைகள் உயர்த்தபட்டுவிட்டன. மண்ணெண்ணெய் அளவு வெட்டப்பட்டுவிட்டது. மானியவிலை எரிவளி உருளைகளுக்கு வரம்புகட்டப்பட்டுவிட்டது. இதற்கு முதல் நாள் முன்வைக்கப்பட்ட தொடர்வண்டி வரவு செலவு அறிக்கையில் சரக்குக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுவிட்டன. ஆறு மாதத்துக்கு ஒருமுறை பயணிகள் கட்டணம், சரக்குக் கட்டணம் ஆகியவற்றை உயர்த்திக்கொள்ள நிரந்தர ஏற்பாடும் செய்யப்பட்டுவிட்டது.

பட்ஜெட் அறிவித்த மறுநாள்(01.03.2013) அன்று மீண்டும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இவைபோன்ற தில்லி அரசின் கொள்கைகளால் ஏற்கெனவே பண வீக்கமும், விலை உயர்வும் மக்களை அழுத்திவருகின்றன. இதற்குமேல் ப.சிதம்பரம் மக்களுக்கான மானியச் செலவுகளை இந்த வரவு செலவுத் திட்டத்தில் கடுமையாகக் குறைத்துவிட்டார். வேளாண்மை மற்றும் சமூக நல மானியங்கள் சென்ற ஆண்டை ஒப்பிட 26,571 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. எரி எண்ணெய் மானியம் 30 ஆயிரம் கோடி ரூபாய் வெட்டப்பட்டுள்ளது.  உணவு மானியத்துக்கு சென்ற ஆண்டை விட கூடுதலாக குறைந்தது 25 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட வேண்டும் என இதற்கான நாடாளுமன்ற நிலைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ள  நிலையில் இந்த வரவு செலவுத்திட்டத்தில் வெறும் 5 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.  பண வீக்கத்தை கருத்தில் கொண்டால் இதுவும் குறையும்.

இவை அனைத்தும் விலை உயர்வை இன்னும் அதிகரிக்கும்.

சென்ற வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்படும் போது கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு 5,21,25,000 கோடிரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த வரவு செலவு திட்ட அறிக்கையில் மேற்கண்ட திட்ட மதிப்பீடு திருத்திய மதிப்பீட்டில் 4,29,1840 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சமூகப் பாதுகாப்பு திட்ட செலவுகளில் பெரும்பாலானவை மாநில அரசுகளின் வழியாக செயல்படுத்தப்படுபவை ஆகும். நிதிவரவை நம்பி மாநில அரசுகள் பல நலத்திட்டங்களுக்கு செலவு செய்துவிட்டன. இந்நிலையில் திருத்திய மதிப்பீட்டில் ஏறத்தாழ 1 இலட்சம் கோடி ரூபாய் குறைவாக அறிவிக்கப்பட்டால் மாநில அரசுகள் இக்கட்டான நிலையில் வைக்கப்படும்.

இந்திய அரசின் வரவு செலவுத் திட்ட அறிக்கை நம்ப முடியாத பித்தலாட்டமாக இழிந்துவிட்டதை இது எடுத்துக்காட்டுகிறது. 

ப.சிதம்பரம் விதித்துள்ள வரியினங்கள் பெரும்பாலும்  மேல்வரி (சர் சார்ஜ்), சேவை வரி போன்றவையே ஆகும். இந்த வரி வருமானத்தில் மாநிலங்களுக்கு பங்கு கொடுக்க வேண்டியதில்லை. எனவே மாநில வரிப் பங்கு உயர வாய்ப்பில்லை  மாறாக இந்த வரவு செலவுத் திட்டத்தில் மாநிலங்களுக்கான வரி வருமானப் பங்கு 8000 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.  பல தலைப்புகளில் மாநிலங்களுக்கு இந்திய அரசு வழங்கி வந்த நிதித்தொகை 38,000 கோடி ரூபாய் வெட்டப்பட்டுள்ளது.

வேளாண்மைக்கு சென்ற நிதியாண்டைவிட 1.25 இலட்சம் கோடி ரூபாய் கூடுதலாக சேர்த்து 7 இலட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளதாக வாண வேடிக்கை காட்டப்பட்டுள்ளது.   வரவு - செலவு திட்டத்தில் இதற்கென்று ஒரு ரூபாய் கூட  ஒதுக்கப்படவில்லை. இது அரசு வங்கிகளுக்கான வழிகாட்டல் இலக்கே தவிர வேறொன்றுமில்லை.

கடந்த 2007-க்குப் பிறகு ’வேளாண்மை’ என்ற வகையினத்துக்குள் வேளாண்மைக்கு மறைமுகமாகத் துணை செய்பவை என்ற பெயரால் உணவுப் பதப்படுத்துதல், உரம், நீர் மோட்டார்கள், உழவு எந்திரங்கள், விதை உற்ப்பத்தி போன்ற பலத்தொழில்களும் கொண்டுவரப்பட்டுவிட்டன.

இத்தொழில் நிறுவனங்களுக்கு சலுகை வட்டியில் வேளாண்மைக் கடன் என்ற பெயரில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப் படுகிறது. உழவர்கள் பெயரால் இம்பீரியல் டொபாக்கோ, இந்துஸ்தான் லீவர், கிரிலோஸ்கர், மகிந்திரா, பைசர், மான்சாண்டோ ஆகிய பெரு நிறுவனங்களுக்கும், அவற்றின் துணை நிறுவனங்களுக்கும் மக்களின் சேமிப்புப் பணம் சலுகைக் கடனாக வழங்கப்படுகிறது.

அரசுடைமை வங்கிகளின் வேளாண் கடன் விவரங்களை உற்று நோக்கினால் இது புரியும். 

கடந்த 20 ஆண்டுகளில் அரசு வங்கிகளின் கிராமப்புற கிளைகள் வழங்கிய வேளாண்மைக் கடன் அவ்வங்கிகளின் மொத்தக் கடன் வழங்கலில் 55 விழுக்காட்டிலிருந்து 38.4 விழுக்காடாக குறைந்துள்ளது.   மாறாக நகரங்களிலும், பெரு நகரங்களிலும் உள்ள அரசு வங்கிக் கிளைகளில் பெறப்பட்டுள்ள வேளாண்மைக்கடன் இதே கால இடைவெளியில் 4 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாக ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது.

வேளாண்மைக் கடன் என்ற பெயரால் 2 இலட்சத்திற்கு மேல் 25 கோடி ரூபாய்வரை கடன் பெற்றுள்ளவர்கள் விழுக்காடே உயர்ந்துவருகிறது.  எடுத்துகாட்டாக கடந்த 20 ஆண்டுகளில் 2 இலட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ளவர்களுக்கு கடன்வழங்கல் தொகை 83 விழுக்காட்டிலிருந்து 44 விழுக்காடாக சரிந்துள்ளது. இதுதான் உண்மையில் உழவர்கள் பெற்ற பயிர்க் கடனாகும். உழவர்களுக்கு பயிர்க்கடன் வழங்கல் குறைந்து வரும் அதே காலத்தில் வேளாண்மைக் கடன் என்றப் பெயரால் 25 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெறுவோருக்கான கடன் வழங்கல் விழுக்காடு 5% லிருந்து 18 % ஆக உயர்ந்துள்ளது.

இது தாராள மயமாக்கலுக்குப் பிறகு படிப்படியாக வளர்ந்து வரும் போக்காகும். இதுபற்றி ஆய்வறிக்கைகளை மேற்கோள்காட்டி அவ்வப்போது சுட்டிக்காட்டிவருகிறோம். (எ.கா: காண்க: எதிர்க்கப்பட வேண்டிய வரவு செலவுத்திட்டம் – கி.வெங்கட்ராமன் , தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் – மார்ச் 16 – 31, 2011 இதழ்)  

அரசுத்துறை நிறுவன பங்குகளை தனியார் முதலாளிகளுக்கு விற்பனை செய்து அதில் கிடைக்கும் தொகையே வரும் நிதியாண்டில் வருவாயைத் திரட்ட  முதன்மையான வழியாக ப.சிதம்பரத்தின் வரவு செலவுத் திட்டம் கூறுகிறது. இவ்வாறு வரும் நிதியாண்டில் 50 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.   பாட்டன் சேர்த்த சொத்தை விற்று செலவு செய்யும் நாட்டுப்புற சோக்காளிகளின் ஊதாரித்தனத்துக்கு பெரிய பொருளியல் திட்டம் போன்ற ஒப்பனை செய்யப்படுகிறது.

ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு பத்து விழுக்காடு மேல் வரி போடப்பட்டுள்ளது. பணக்காரர்கள் மேல் வரிவிதித்து அத்தொகையை ஏழைகளுக்கு செலவு செய்யும்  ஆகப்பெரிய மக்கள் நலத்திட்டம் போல் இதனை காங்கிரசு தலைமை புகழ்ந்து தள்ளுகிறது.

ஆனால், இந்த வரவு செலவுத்திட்டத்தில் மட்டும் இந்த நிதியாண்டில் மட்டும் இந்திய  மற்றும் வெளிநாட்டுப் பெருமுதலாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வரிச்சலுகை 5,73,630 கோடி ரூபாய் ஆகும். இவ்வளவு பெரும் தொகையை  பெருமுதலாளிகளுக்கு வரிகுறைப்பாக வாரி வழங்கிவிட்டு நிதிப் பற்றாக்குறை இந்திய அரசை நிமிர முடியாமல் அழுத்துவதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் புலம்புகிறார்.

அவர் கூறுகிற நிதிப்பற்றாக்குறை திருத்திய மதிப்பீட்டின்படி 5,20,925 கோடி ரூபாய் ஆகும். பெரு முதலாளிகளுக்கு வழங்கப்பட்ட மேற்கூறிய வரிச்சலுகையை விட இந்த நிதிப் பற்றாக்குறை குறைவானது. அதாவது பெருமுதலாளிகளுக்கு சலுகை செய்வதற்காகவே  நிதிப்பற்றாக்குறையை இந்திய அரசு சுமக்கிறது. இந்த சுமையை அப்படியே மக்கள் மீதும், மாநிலங்கள் மீதும் இறக்கிவிடுகிறது.

இந்த மக்கள் பகைத்திட்டத்தை நிறைவேற்ற பல்வேறு மாய்மாலக் கணக்குகளைக் காட்டி மக்கள் கண்ணில் மண் தூவ முயல்கிறார் ப.சிதம்பரம்.

இவண்,
கி.வெங்கட்ராமன்,
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

இடம்: சிதம்பரம்


 
 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT