உடனடிச்செய்திகள்

Wednesday, March 27, 2013

திருச்சியில் மாணவரைத் தாக்கியக் காங்கிரசாரைக் கைது செய்க - தோழர் பெ.மணியரசன் அறிக்கை



திருச்சியில் மாணவரைத் தாக்கியக்
காங்கிரசாரைக் கைது செய்க!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்
தோழர் பெ.மணியரசன் கோரிக்கை!

திருச்சியில் காங்கிரசுத் தலைவர் திரு. ஞானதேசிகன் அவர்களுக்கு ஈழப்பிரச்சினை தொடர்பாகக் கருப்புக் கொடி காட்டச் சென்ற சட்டக் கல்லூரி மாணவர்களைக்  காங்கிரசார் கடுமையாகத் தாக்கிப் படுகாயப்படுத்தியிருக்கிறார்கள். முகமது ஜிப்ரி, கஜேந்திரபாபு, சத்தியகுமார் ஆகிய மூவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். முகமது ஜிப்ரிக்குக் கால் எலும்பு முறிந்துள்ளது.

காங்கிரசுக்காரர்கள் நாடாளுமன்றத் தொகுதி நிர்வாகிகள் கூட்டம் நடத்திய எல்.கே.எஸ்.மகாலில் ஏற்கெனவே தயாராக உருட்டுக் கட்டைகள் வைத்திருந்திருக்கிறார்கள்.

அடிபட்டுக் காயமடைந்த வெங்கடேஷ், சதாசிவம் என்ற இரு மாணவர்களைக் காவல்துறையினர் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்துள்ளார்கள்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவர்கள் உள்ளிட்டு ஆறு மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, பிணையில் வர முடியாத பிரிவுகளைச் சேர்த்துள்ளார்கள். ஆனால், தொட்டியம் தொகுதியின் முன்னாள் காங்கிரசு சட்டப் பேரவை உறுப்பினர் இராசசேகரன் தம்பி இராமகிருஷ்ணன் தலைமையில் திரட்டப்பட்டு, தாக்குதலில் உருட்டுக்கட்டைகளுடன் ஈடுபட்ட குண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை.

அக்குண்டர்கள் மாணவர்களை அடித்தது மட்டுமில்லாமல் பேருந்துகளை உருட்டுக்கட்டையால் அடிப்பதையும் தொலைக்காட்சிகள் காட்டுகின்றன. அவர்கள் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை?

1965 சனவரி 25 அன்று இந்தித் திணிப்பை எதிர்த்துத் தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஊர்வலம் போனார்கள். மதுரையில் காங்கிரசுக்காரர்கள் ஊர்வலம் போன மாணவர்களைத் தாக்கிப் படுகாயப்படுத்தினர். அதன்பிறகுதான் தமிழகம் முழுவதும் மாணவர் போராட்டம் பற்றி எரிந்தது. அதே போன்று ஒரு நிகழ்வைக் காங்கிரசார் திருச்சியில் தொடங்கியுள்ளார்கள்.

மாணவர்களிடமிருந்த கருப்புக் கொடியைப் பிடுங்கி வைத்திருந்த ஒரு காங்கிரஸ் இளைஞரை மாணவர் என்று தவறாகப் புரிந்து கொண்டு கடுமையாகத் தாக்கிப் படுகாயப்படுத்திவிட்டார்கள். இப்பொழுது அந்நபரை மாணவர்கள் மீது புகார் கொடுக்கச் சொல்லி காங்கிரசார் வழக்குச் சோடித்துள்ளார்கள். இதற்குத் திருச்சிக் காவல்துறையினர் பலியானது ஏன்?

மேலும் வெங்கடேஷ், சதாசிவம் என்ற இரு மாணவர்களைக் காவல்துறையினர் எங்கே வைத்துள்ளார்கள் என்று கேட்கச் சென்ற பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தமிழ் இன உணர்வாளர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

அறவழியில் 15 நாட்களுக்கு மேல் நடந்து வந்த மாணவர் போராட்டத்தில் வன்முறையை ஏவியுள்ளது காங்கிரசுக் கட்சி.

தமிழக முதல்வர் அவர்கள் தலையிட்டு, பாதிக்கப்பட்ட மாணவர்களை விடுதலை செய்ய ஆணையிடுமாறும் வன்முறையில் இறங்கி மாணவர்களைத் தாக்கிய காங்கிரசார் மற்றும் குண்டர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இங்ஙனம்,
பெ.மணியரசன்,

இடம்: தஞ்சை
 
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT