உடனடிச்செய்திகள்

Thursday, March 7, 2013

வெனிசுலா குடியரசுத் தலைவர் ஹூகோ சாவேஸ்-க்கு வீரவணக்கம்! - தோழர் பெ.மணியரசன் அறிக்கை


வெனிசுலா குடியரசுத் தலைவர் ஹூகோ சாவேஸ்-க்கு வீரவணக்கம்!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்  தோழர் பெ.மணியரசன் அறிக்கை

இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுவேலாவின் குடியரசுத் தலைவர் ஹூகோ சாவேஸ் அவர்கள் மறைந்த செய்தி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. புற்றுநோயால் சிறிது காலம் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவரது மறைவு, உலகெங்கும் வாழும் நிகரமைச் சிந்தனையாளர்களை உலுக்கியுள்ளது.

தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவை, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உறுதிமிக்க நாடாக வளர்த்தெடுத்தவர், அதன் குடியரசுத் தலைவர் சாவேஸ் ஆவார். 1999இல் இருந்து, இன்றுவரை தொடர்ச்சியாக நான்கு முறை மக்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சாவேஸ் அவர்கள், மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக, வெனிசுவேலாவில் நிகரமை நோக்கியப் பொருளியல் சீர்திருத்த நடவடிக்கைகளை தொடர்ந்தவர் ஆவார்.

தமிழீழ சிக்கலில் நமக்கு எதிரான நிலைபாட்டை அவர் மேற்கொண்டிருந்த போது, அதனை நாம் கடுமையாக விமர்சித்தோம். எனினும், தனது சொந்த நாட்டு மக்களை ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியாது வளர்த்தெடுத்த அவரது செயல்பாடுகளை நாம் பாராட்டுகிறோம்.

நிகரமை நோக்கிப் பயணிப்பதை தமது இலட்சியமாக அறிவித்த சாவேஸ் அவர்கள், மக்கள் பங்கேற்பு சனநாயகத்துடன் அந்நாட்டு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தம் முயற்சியில் ஈடுபட்டது முன் எடுத்துக்காட்டு நடவடிக்கையாகும்.  

வெனிசுலா குடியரசுத் தலைவர் ஹூகோ சாவேஸ் அவர்களுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்துகிறோம். அவர் வளர்த்தெடுத்த வெனிசுவேலா, தொடர்ந்து ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நிகரமை நோக்கியப் பயணத்தில் பயணிக்கும் என நம்புகிறோம்.

இவண்,                                                                                
                                                                           பெ.மணியரசன்

இடம்: தஞ்சை
 
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT