சென்னையில் இன்று(04.03.2013) காலை நுங்கம்பாக்கத்திலுள்ள சிங்களத் துணைத் தூதரகம் தமிழ் உணர்வாளர்களால் முற்றுகையிடப்பட்டது.
இராபசபக்சே கும்பல் மீது அனைத்துலக விசாரணை, தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற இப்போராட்டத்தை மக்கள் நல்வாழ்வு இயக்கம் அழைப்பு விடுத்தது. அதன்படி, நுங்கம்பாக்கம் இலயோலா கல்லுரி வாயிலிலிருந்து கருப்புக் கொடிகளுடன் முழக்கங்கள் எழுப்பியவாறு, பேரணியாகப் புறப்பட்ட தோழர்கள் அனைவரையும் காவல்துறை கைது செய்தது. சிங்களக் கொடியும், இனவெறியன் இராசபக்சே உருவபொம்மைகளும் தீயிட்டு கொளுத்தபட, பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினருக்கும், போராட்டத் தோழர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் தி.க. தலைவர் திரு. ஆனூர் ஜெகதீசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி.வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும் தோழர்களும் இதில் பங்கேற்கு கைதாயினர். மக்கள் நலவாழ்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. கண.குறிஞ்சி நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தி.நகர் செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன், தமிழக இளைஞர் முன்னணி சென்னை மாநகரத் தலைவர் தோழர் வினோத், செயலாளர் தோழர் கோபிநாத், தாம்பரம் செயலாளர் தோழர் வெற்றித்தமிழன் உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள் இதில் பங்கேற்றுக் கைதாகியுள்ளனர்.
Post a Comment