உடனடிச்செய்திகள்

Wednesday, March 6, 2013

தி.மு.க.வின் டெசோ நடத்தும் பொது வேலை நிறுத்தம்: சிங்கள- இந்திய அரசுகளின் இனக்கொலைப் போரை மறைக்கும் மூடுதிரையா? - தோழர் பெ.மணியரசன் கேள்வி


தி.மு.க.வின் டெசோ நடத்தும் பொது வேலை நிறுத்தம்:
சிங்கள- இந்திய அரசுகளின்
இனக்கொலைப் போரை மறைக்கும் மூடுதிரையா?
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்  தோழர் பெ.மணியரசன் கேள்வி

ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. தலைமையிலான டெசோ அமைப்பு வருகின்ற மார்ச்சு 12ஆம் நாள், தமிழகம் தழுவிய பொது வேலை நிறுத்தம் நடத்தும்படி அழைப்பு விடுத்துள்ளது. டெசோ வெளியிட்டுயிருக்கும் செய்திக் குறிப்பில், “இலங்கை அரசின் இனப்படுகொலை, மனித உரிமை மீறல் ஆகியவற்றைக் கண்டித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று வலியுறுத்துவதற்காகபொதுவேலை நிறுத்தம் நடத்துவதென்று கூறியுள்ளது.
அமெரிக்க அரசு கொண்டுவரவுள்ள தீர்மானத்தில் இலங்கை அரசு இனப்படுகொலை செய்ததாக கூறப்படவில்லை. அமெரிக்காவின் தீர்மானம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும் இணையதளங்களில் வெவ்வேறு வழிகளில் தேடி எடுக்கப்பட்ட அமெரிக்காவின் முன்மொழிவில் இலங்கை அரசின் இனப்படுகொலைக் குற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென்று எந்தக் கோரிக்கையும் இல்லை. மாறாக சிங்கள அரசு அமைத்த கற்றுக் கொண்ட படிப்பினைகளுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணையம்(எல்.எல்.ஆர்.சி) கண்டறிந்தவைகள் மற்றும் அதன் ஆக்கப்பூர்வமான பரிந்துரைகள் மீது  இலங்கை அரசு முழுமையாக நடவடிக்கையெடுக்காதது கவலையளிக்கிறது என்றுதான் உள்ளது. கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் ஜெனிவாவில் கூடிய ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத்திலும்  இலங்கை அரசின் எல்.எல்.ஆர்.சி. முடிவுகள் மீது நடவடிக்கைகள் எடுக்குமாறுதான் அமெரிக்கத் தீர்மானம் கூறியது.

இப்பொழுது முன்வைத்துள்ள அமெரிக்கத் தீர்மானம் பின்வருமாறு கூறுகிறது:

“2. இலங்கை அரசின் எல்.எல்.ஆர்.சி. அறிக்கையில் கூறியுள்ளபடி நீதி, சமத்துவம், நடந்த நிகழ்வுகளுக்கு பொறுப்பேற்றுக்கொள்வது, இலங்கையர் அனைவருக்குமான நல்லிணக்கம் ஆகியவை குறித்து எல்.எல்.ஆர்.சி.  கூறியுள்ளவற்றை நம்பத்தகுந்த முறையிலும் ஆக்கப்பூர்வமான வழியிலும் இலங்கை அரசு விரைந்து நிறை வேற்றவேண்டும்.

 “3.  நீதிபதிகள், மனித உரிமைக் காப்பாளர்கள் ஆகியோரின் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் அமைப்பு நடத்தும் சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாக்கவும் விசாரணையின்றியும் அவசர கதியிலும் எதேச்சாதிகாரமாகவும் மரணதண்டனை அளித்தல், சிறுபான்மை மக்களுக்கான பிரச்சினைகள், சிலர் காணாமல் போய்விடுவது, பெண்களுக்கெதிரான பாகுபாடு ஆகியவை தொடர்பான வேண்டுகோள்களுக்கு இலங்கை அரசு மறுமொழி கூறவேண்டும் எதிர்வினை புரிய வேண்டும்.

 “4. மேற்கண்ட முடிவுகளைச் செயல்படுத்த ஐ.நா. மனித உரிமை ஆணையரும் மற்றும் அது தொடர்பான அதிகாரிகளும் இலங்கை அரசுடன் கலந்து பேசி அதன் ஒப்புதல் பெற்று தங்களுடைய அறிவுரைகளையும் உதவிகளையும் வழங்க வேண்டும்.

 “5. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையரும் மற்றும் அதிகாரிகளும் மேற்கண்ட வகையில் செயல்பட்டு இலங்கையில் மக்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படுத்தவும் நடந்த நிகழ்வுகளுக்கு இலங்கை அரசு பொறுப்பேற்றுக் கொண்டதற்கும், இலங்கையில் நடந்த பன்னாட்டுச்சட்ட மீறல்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை தயாரித்து ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் 25 ஆவது கூட்டத்தில் அளிக்க வேண்டும்.

மேற்கண்டவைதான் அமெரிக்கத் தீர்மானத்தில் உள்ள கூறுகள். இதில், தமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றம்பற்றி விசாரிப்பதற்கு எதுவும் கூறப்படவில்லை. அதிக அளவாக அமெரிக்கத் தீர்மானம் கூறுவது எல்.எல்.ஆர்.சி. கண்டறிந்த குற்றங்கள் மீது இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான்.

இலங்கை அரசு அமைத்த எல்.எல்.ஆர்.சி அறிக்கை ஏற்கெனவே வெளிவந்துள்ளது. அதில், 2008-2009 ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசும், இலங்கை இராணுவமும் தமிழ்ப் பயங்கரவாதிகள் மீது போர் நடத்தி அவர்களை தோற்கடித்ததற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போரில் இலங்கை அரசுக்குத் தலைமை தாங்கியோரும், இலங்கை இராணுவத்திற்குத் தலைமை தாங்கியோரும் எந்தக்குற்றமும் செய்யவில்லை என்று நற்சான்று அளித்துள்ளது. இலங்கைப் படையின் கீழ்நிலைப் பொறுப்பிலுள்ள சிலர் மனித உரிமை மீறல்கள் சிலவற்றில் ஈடுபட்டுள்ளர்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மட்டும் கூறியுள்ளது.

அதிகாரப் பகிர்வு, வடக்கு மாநிலத்திலிருந்து இராணுவத்தை விலக்கிக்கொள்ளுதல், பேச்சு உரிமையளித்தல் போன்றவற்றை எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைத்திருந்தாலும் அப்பரிந்துரைகளை இராசபட்சேக் கும்பல் எள்ளளவும் சட்டை செய்யவில்லை. மேலும் 13ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற மாட்டோம் என்று பகிரங்கமாக கோத்தபய இராசபட்சே கொக்கரித்தார். கடந்த இலங்கை சுதந்திர நாள் உரையில் தமிழர்களுக்குத் தன்னாட்சி நிர்வாகம் தர முடியாது என்று அறிவித்தார் இராசபட்சே. இதே இராசபட்சேக் கும்பல் எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளை எப்படி நிறைவேற்றும்?

எல்.எல்.ஆர்.சி பரிந்துரைகளை முழுமையாக செயல்படுத்தும் படி மட்டுமே அமெரிக்கத் தீர்மானம் வலியுறுத்துகிறது. இதில் தி.மு.க.வின் டெசோ அறிக்கையில் கூறியுள்ளது போல் இலங்கை அரசின் இனப்படுகொலை குற்றத்தைக் கண்டித்து அமெரிக்கத் தீர்மானம் வருகிறதுஎன்பதற்கு என்ன சான்று இருக்கிறது?

2008 - 2009இல் ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்களை இலங்கை அரசு இனப்படுகொலை செய்தது. உயிரைப் பாதுகாத்துக் கொள்ள போரில்லா மண்டலமான பாதுகாப்பு வலயத்திற்கு வாருங்கள் வாருங்கள்என்று ஈழத்தமிழர்களை வற்புறுத்தி அழைத்தது இலங்கை இராணுவம். அந்த வாக்குறுதியை நம்பி சென்ற இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களை வான் குண்டு வீசிக் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவித்தது சிங்கள இராணுவம்.

போர் நடந்தபோது இரு தரப்புத் துப்பாக்கிச் சூட்டுக்கு இடையே மடிந்தவர்கள் அல்லர் இவர்கள். உயிரைப் பாதுகாத்துக் கொள்ளச் சென்ற அப்பாவி மக்களைத்தான் சிங்களப் படையினர் இனப்படுகொலை செய்தார்கள்  என்பது ஐயமற்ற உண்மையாகும். பால் வடியும் முகத்துப் பாலகன் பாலச்சந்திரன் படுகொலையே இதற்குத் தெளிவான சான்று.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் இளையமகன் பாலச்சந்திரனை சிங்கள இராணுவம் கடத்திக் கொண்டுவந்து தங்களுடைய இராணுவப் பதுங்கு குழியில் வைத்திருந்து 2009 மே 19 அன்று ஐந்து முறை சுட்டுக் கொன்றுள்ளது. அந்நிகழ்வு பற்றிய புகைப்படங்கள் வெளிவந்து உலகத்தின் மனச்சான்றை உலுக்கிக் கொண்டுள்ளன. உலகத்தின் தலைச்சிறந்த தடயவியல் வல்லுநர்கள் அப்புகைப்படங்கள் புனையப்பட்டவை அல்ல என்றும் உண்மையானவையென்றும், அவை 2009 மே 19 ஆம் நாள் எடுக்கப் பட்டவையென்றும் உறுதி செய்துள்ளனர்.

இலங்கையில் போர் 2009 மே 18 அன்று முடிந்து விட்டதென்று இலங்கை அரசும் ஐ.நா. மன்றமும் அறிவித்தன. போர் முடிந்துவிட்ட நிலையில் மே 19 ஆம் நாள் பாலகன் பாலச்சந்திரனைச் சுட்டுக்கொள்ள வேண்டிய தேவையென்ன வந்தது. எனவேதான் இலங்கை அரசு நடத்தியது மிகக் கொடூரமான தமிழின அழிப்புப் போர் என்பதை நாம் உறுதி செய்கிறோம்.

போர் முடிந்து நான்காண்டுகள் ஆன பின்னும் தமிழீழப் பகுதிகளில் தங்கள் சொந்த இல்லங்களில் தமிழர்கள் வாழ முடியவில்லை. ஈழத்தமிழர்கள் அனைவரையும் பணயகைதிகள் போல் இலங்கை அரசு வைத்துள்ளது. தமிழர்களின் வீடுகளையும் விளை நிலங்கலையும் சிங்களர்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார்கள்.  சிங்கள அரசு தமிழர்களின் வழிபாட்டுத் தளங்களை புத்தவிகாரைகளாக மாற்றி வருகிறது. தமிழர்களின் ஊர்ப் பெயர்களையும் சிங்களப் பெயர்களாக மாற்றி வருகிறது. இவ்வாறான இன அழிப்பு, இனப் பண்பாட்டு அழிப்பு ஆகிய குற்றங்களைச் செய்த, செய்துகொண்டுள்ள இராசபட்சே பொன்சேகா கும்பல் மீது நடவடிக்கையெடுக்க எந்தக் கோரிக்கையும் இல்லை அமெரிக்கத் தீர்மானத்தில்.

இராசபட்சே - பொன்சேகா கும்பலின் இனப்படுகொலை மற்றும் இனப்பண்பாட்டு அழிப்புக் குற்றங்களை உலகத்தின் கண்களிலிருந்து மறைப்பதற்கான மூடு திரையாகவே அமெரிக்கத் தீர்மானம் உள்ளது. அதனால் தான் இராசபட்சேக் கும்பலின் ஒப்புதலோடு இந்தத் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் முன் மொழிந்து வாக்கெடுப்பு நடத்தாமல் ஒருமனதாக நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டு அமெரிக்க பிரதிநிதிகளும் இலங்கைப் பிரதிநிதிகளும் கடந்த சில நாள்களாக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்பேச்சுவார்த்தையை இந்தியாதான் ஏற்பாடு செய்தது.

இந்திய நாடாளுமன்றத்தில், 27.2.2013 அன்று மாநிலங்களவையில் ஈழம் குறித்து நடந்த விவாதத்தில் முன்மொழிந்து பேசிய நடுவண் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்சித், ஜெனிவாவில் அமெரிக்க அரசு பிரதிநிதிகளும் இலங்கை அரசு பிரதிநிதிகளும் பேச்சு வார்த்தை நடத்தி ஒருமித்த கருத்துடன் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரவேண்டும் எனக் கூறியது இங்கு நினைவு கூரத்தக்கது. இந்திய அரசின் இத்திட்டம் இனப்படுகொலை செய்த கொலைக்காரர்களைத் தப்ப வைக்கும் திட்டம் மட்டுமல்ல அவர்களையே நீதிபதிகளாக்கும் திட்டமாகும்.

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளுக்கு தண்டனைப் பெற்றுத் தருவதோ தமிழீழ மக்களின் தேச விடுதலைப் போராட்டத்திற்கு செவிகொடுப்பதோ அமெரிக்க அரசின் நோக்கமல்ல. சிறிய அளவில் இலங்கையை மிரட்டி அதுமேலும் மேலும் சீனாவுடன் நெருக்கம் கொள்ளாமல் தடுப்பதே அமெரிக்காவின் உத்தி. இந்தியாவின் விருப்பமும் அதுதான். இனப்படுகொலை போரில் அழிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கும் இன்றும் குடிமை உரிமைகள் பறிக்கப்பட்டு பணயக் கைதிகள் போல் வாழும் எஞ்சியுள்ள தமிழர்களுக்கும் உலக அரங்கில் நீதியும், அங்கீகாரமும் கிடைக்காமல் தடுப்பதே இந்திய அரசின் நோக்கம். மேலும் சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலைப்போரில் கூட்டுக் குற்றவாளி இந்திய அரசு. இப்பின்னணியில்தான் இந்தியா - அமெரிக்கா இலங்கை கூட்டணி இன்று இயங்குகிறது.

ஒரு வேளை இலங்கை அரசு முரட்டுத்தனமாக நடந்து கொண்டு அமெரிக்காவின் இணக்க முயற்சிகளுக்கு ஒத்துழைக்காத நிலையில் அமெரிக்க தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தி அது வெற்றிபெற்றாலும் என்ன நடக்கும்? இலங்கை அரசின் அதிகாரத்தின் கீழ் அது அனுமதித்தால் மட்டுமே போர்க்குற்றங்களின் மீதான நடவடிக்கைகளுக்கு ஐ.நா. மனித உரிமை மன்றம் அறிவுரையும் மற்ற உதவிகளும் செய்ய முடியும். இதே தீர்மானம் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டு ஓர் அங்குலம் கூட முன்னேற்றமில்லை.

தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இப்படிபட்ட இராசபட்சேக் கும்பலை நீதிபதிகளாக்கும் அமெரிக்கத் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துவதும் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுவதும் பல ஐயங்களை எழுப்புகிறது. தி.மு.க. டெசோ போராட்டங்களின் திரைமறைவில் இந்திய அரசு இருக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது.

ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றவாளிகள் மீது நடவடிக்கையெடுக்கவும் எஞ்சியுள்ள தமிழர்களுக்கு அரசுரிமைக் கிடைத்து அமைதியாக வாழவும் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.

1.       ஐ.நா. மன்றத்தின் பொதுச் செயலாளர் பான்கி மூன் அமைத்த தாருசுமான் தலைமையிலான மூவர் குழு 2008-2009இல் இலங்கை அரசு தமிழர்களுக் கெதிராக நடத்திய போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் என்றும் அவற்றின் மீது பன்னாட்டுப் புலனாய்வு மன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பரிந்துரைத்துள்ளது.

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைப் போரில் ஏற்பட்ட மனித அழிவுகளை தடுத்து நிறுத்த ஐ.நா. மன்றப் பொதுச் செயலாளர் பான்கிமூனும், விஜய் நம்பியார், ஜான் ஹோம்ஸ் போன்ற அதிகாரிகளும் தவறியதை, ஐ.நா.வில் இன்னொரு அதிகாரியான சார்லஸ் பெட்ரி தயாரித்த உள்ளக அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. எனவே இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் முதலியவை நடந்ததற்கான புதிய விசாரணை (Inquiry) எதுவும் தேவையில்லை. அவர்கள் கண்டறிந்த குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை விசாரணை (investigation) தேவை. தாருசுமான் குழு தனது பரிந்துரையில் நடவடிக்கை விசாரணைக்குத் தற்சார்புள்ள பன்னாட்டு நடவடிக்கை விசாரணை மன்றம் (Independent International Investigation) உடனடியாக ஐ.நா. மன்றத்தால் அமைக்கப்பட வேண்டும் என்றது. அதன் விசாரணை முடிவுகளின் அடிப்படையில் இராசபட்சே உள்ளிட்ட அனைத்துக் குற்றவாளிகள் மீதும் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும்.

2.       இவ்வளவு பெரிய இனப்படுகொலை நடந்த பிறகு இன்றைக்கும் ஈழத் தமிழர்களின் தாயக உரிமை மறுக்கப்பட்டு அது ஆக்கிரமிக்கப்படுகிறது. ஈழத்தமிழர்கள் குடிமை உரிமை மறுக்கப்பட்டு பணயக் கைதிகள் போல் வைக்கப்பட்டுள்ளார்கள் இந்நிலையில் அம்மக்களை சிங்களர்களுடன் நல்லிணக்கமாக வாழும்படி சொல்வது சிங்கள இனவெறிக்குத் துணை போவதாகும். எனவே இன்று இலங்கையில் இனங்களுக்கிடையே நல்லிணக்கம் பேசுவது மனித நேயமற்றது; மனித உரிமை மீறலாகும். ஈழத்தமிழர்கள் சிங்களர்களோடு ஒரே நாட்டில் சேர்ந்து வாழ விரும்புகிறார்களாக அல்லது பிரிந்து தனிநாடு அமைத்துக் கொள்ள விரும்புகிறார்களா என்பதை அறிந்து அவர்களின் பெரும்பான்மை முடிவை செயல்படுத்துவதற்குரிய கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இக்கருத்து வாக்கெடுப்பு ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் நடக்க வேண்டும்.

3.       இலங்கையின் வடக்கு கிழக்கு மாநிலங்கள் ஈழத்தமிழர்களின் தொன்மைத் தாயகமாகும். அங்கு அவர்கள் தங்கள் குடியிருப்புகளில் சுதந்திரமாக வாழவும் பேச்சுரிமை, எழுத்துரிமை, தொழில் செய்யும் உரிமை, கூட்டம் கூடும் உரிமை, அமைப்பு நடத்தும் உரிமை ஆகிய அனைத்து உரிமைகளையும் செயல்படுத்தவும் உரிமை வேண்டும். இன அழிப்புப்போரினால் உயிர் உடமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு நிதி உதவி செய்தல் உள் கட்டமைப்பு வசதி செய்து தருதல் உள்ளிட்ட அனைத்து துயர்துடைப்பு பணிகளும் உடனடியாகச் செய்யப்படவேண்டும். இவை அனைத்தையும் ஐ.நா. மன்றமே நேரடியாகச் செய்ய வேண்டும். இத்துயர் துடைப்புப் பணிகளைச் செய்வதற்கு ஐ.நா. மன்றத்திற்கு உதவியாக வடக்கு கிழக்கு மாநிலங்களில் தமிழர்களைக் கொண்ட இடைக்கால நிர்வாக அமைப்பு ஒன்றை ஐ.நா. மன்றம் உருவாக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்படுவதே ஈழத்தமிழர் சிக்கலுக்குச் சரியான தீர்வாகும். இவ்வாறான தீர்மானத்தை ஐ.நா. மன்றத்தில் கொண்டுவர உலக நாடுகளை வலியுறுத்தித் தமிழ்நாட்டிலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் தமிழர்கள் போராட வேண்டும். இவ்வாறான தீர்மானத்தை இந்திய அரசு ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் முன்மொழிய வேண்டும் என்று தமிழ்நாட்டுத் தமிழர்கள் போராட வேண்டும்.

மொட்டையாக இந்திய அரசு அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் எனக் கோருவது இராசபட்சேக் கும்பல் நடத்திய இனப்படுகொலைக் குற்றங்களை மறைத்திடும் மூடுதிரையாகவே அமையும். அது மட்டுமின்றி அன்றும், இன்றும் இராசபட்சே கும்பலின் போருக்கும், இனஒதுக்கல் செயல்களுக்கும் துணைநிற்கும் இந்திய அரசின் தமிழின விரோதச் செயல்களுக்குத் தமிழர்களே இராசபாட்டை போட்டுக் கொடுத்ததாகவே அமையும்.

அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் எனக் கோரி தி.மு.க. நடத்தவுள்ள பொதுவேலை நிறுத்தம் அதன் இனத்துரோக நடவடிக்கைகள் இன்றும் தொடர்வதையே வெளிச்சமிடுகின்றது.
இவண்,                                                                                
                                                                           பெ.மணியரசன்

இடம்: தஞ்சை
 
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT