எது கேவலம்?
நடுவண் அமைச்சர்
பொன். இராதாகிருட்டிணனுக்கு
தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர்
தோழர் பெ. மணியரசன் கேள்வி
மூன்று நாட்களுக்கு முன் (10.9.2016) தமிழ் மாணவர் சந்தோஷ் என்பவரை பெங்களூரில் கன்னட இனவெறியர்கள் தெருவில் வைத்து அடித்து, மண்டிபோட செய்து, மன்னிப்புக் கேட்கச் சொல்லி, காவிரி கர்நாடகத்திற்கு உரியதென்றும், கர்நாடகா வாழ்க என்றும் உச்சரிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தி, செத்தநாயை இழுத்துப் போடுவதுபோல் தெருவில் போட்டுவிட்டுப் போனார்கள்.
அக்கொடிய காட்சிகளை அக்கன்னட வெறியர்களே படம் பிடித்து அவர்களின் சமூக வலை தளங்களில் பரவவிட்டார்கள். இக்காட்சிகளைத் தமிழ்த் தொலைக்காட்சிகள் காட்டிய போது அதைப் பார்த்த ஒவ்வொரு சராசரி தமிழனும் தமிழச்சியும் தங்கள் நெஞ்சில் ஈட்டி பாய்ச்சியது போன்று துடித்துப் போயினர். மனித நேயம், தமிழர் தன்மானம் போன்ற மனித உணர்வுள்ள அனைவரின் இரத்தமும் கொதித்தது.
இந்த வன்கொடுமைக்கு எதிர்வினையாகத் தமிழ் இளைஞர்கள் சிலர் இராமேசுவரம் வந்த கன்னடப் பயணிகளில் ஒருவரைப் பிடித்து “ காவிரி தமிழ்நாட்டுக்கு உரியது என்று சொல்லச் சொல்லி மிரட்டினார்கள். சிலர் அவரை அடித்தார்கள். ஆனால் அங்கு நின்றிருந்த மற்ற தமிழ் இளைஞர்கள் ”அடிக்காதே” என்று கூறியதும், அதற்குப் பிறகு அவர்கள் அடிக்கவில்லை. கன்னடர்கள் வந்த ஊர்தியின் கண்ணாடி உடைக்கப் பட்டிருந்தது. இக்காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வந்தன.
கர்நாடகத்தில் நேற்று (12.09.2016) தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குச் சொந்தமான சுமார் 60 சொகுசுப்பேருந்துகளையும், 27 சரக்குந்து களையும் கன்னடவெறியர்கள் ஒரே நேரத்தில் தீ வைத்து எரித்து எலும்புக் கூடுகளாக்கினர்.
இந்நிகழ்வு பற்றி இன்று (13.09.2016) நடுவண் அமைச்சர் பொன். இராதாகிருட்டிணன் அவர்களிடம் செய்தியாளர்கள் கருத்துக் கேட்ட போது அவர், “ கர்நாடகத்தில் நடந்தது மிகவும் கண்டிக்கத்தக்கது; இராமேசுவரத்தில் நடந்தது கேவலமானது என்று கூறினார். தொலைக்காட்சியில் இது ஒளிபரப்பானது.
எது கேவலம்?
கன்னடர்களின் இனவெறியாட்டத்தைக் கண்டிக்க அவர்கள் பாணியில் தமிழ்நாட்டு இளைஞர்கள் செயல்படக் கூடாது; இந்த அணுகுமுறை தவறானது என்று பொன். இராதாகிருட்டிணன் கூறியிருந்தால் அது பொறுப்புள்ள அறிவுரையாகும். ஆனால் முகத்தை அருவருப்புடன் கோணலாக்கிக் கொண்டு “இராமேசுவரத்தில் நடந்தது கேவலம்” என்று கூறினார்.
கன்னட இனவெறியர்களைக் கண்டிக்கும் போது “கேவலம்” என்ற சொல்லை அவர் பயன்படுத்தவில்லை. வழக்கமாக அனைவரும் பயன்படுத்தும் கண்டனம் என்ற சொல்லைக் கூறினார்.
உச்சநீதிமன்றம் 5.9.2016 இல் காவிரி வழக்கில் தீர்ப்பளித்தது முதல் கர்நாடகத்தில் கன்னட இனவெறி அமைப்புகளும் இனவெறியர்களும், தமிழ்நாட்டுப் பதிவெண் கொண்ட ஊர்திகளை அடித்து நொறுக்கினர்; சாலைகளில் பகல் முழுவதும் டயர்களைப் போட்டுக் கொளுத்தி நெருப்பு எரியச் செய்தனர்; தமிழ்நாட்டு அரசுப் பேருந்துகள் கர்நாடகம் போக முடியாமல் முடக்கப்பட்டன.
உச்ச நீதிமன்றத்தைக் கண்டித்து 09.09.2016 அன்று கர்நாடகம் முழுதும் முழு அடைப்பு நடந்தது. மேற்கண்ட அனைத்துச் சட்ட விரோதச் செயல்களையும் மறைமுகமாகவும், நேர்முகமாகவும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஆதரித்தார். கர்நாடகத்தைச் சேர்ந்த பா.ச.க. நடுவண் அமைச்சர்கள் ஆனந்தக்குமார், சதானந்த கெளடா ஆகியோர் இந்த மேற்கண்ட வன்முறைகளை கண்டிக்கவில்லை. கர்நாடக முதலமைச்சர் மற்றும் நடுவண் அமைச்சர்களின் இச்செயல்கள் கேவலமானது இல்லையா?
கர்நாடகத்தில் 5.9.2016 இல் இருந்து உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும், தமிழர்களுக்கு எதிராகவும் நடந்து வரும் இனவெறி அட்டூழியங்களை நேற்றுவரை கண்டிக்காத பிரதமர் நரேந்திரமோடியின் மெளனமும் – உள்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங்கின் மெளனமும் என்ன வகையைச் சேர்ந்தவை?
இன்று வாய் திறந்த நரேந்திரமோடி பொத்தாம் பொதுவில் அமைதி காக்கும்படி கூறியிருப்பது என்ன வகை நேர்மை? என்ன வகை நடுநிலைமை?
கன்னட இன வெறியர்களின் வெறியாட்டத்தை நடுவண் ஆட்சியாளர்கள் கண்டிக்கும் படி செல்வாக்குச் செலுத்த முடியாத பொன்.இராதாகிருட்டிணன் அரசியல் தகுதி எத்தகையது?
உச்சநீதிமன்ற கட்டளைப்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டிய சட்டக் கட்டாயம் நடுவண் அரசுக்கு இருக்கிறது. அந்தச் சட்டக் கட்டாயக் கடமையைக் கூட தமிழ்நாட்டின் நலன் கருதி நடுவண் அரசை செய்ய வைக்க முடியாமல் நடுவண் அமைச்சர் பதவியில் பொன். இராதாகிருட்டிணன் தொடர்வது கேவலமில்லையா?
தில்லிக்கு எசமான விசுவாசத்தைக் காட்டி பலன் அடைவதற்காக இனிமேலாவது தமிழின இளைஞர்களை இழிவுபடுத்தும் சொற்களைப் பயன்படுத்தாமல், பொறுப்பான அறிவுரைகளை வழங்கும் நிதானத்தை நடுவண் அமைச்சர் பொன்னார் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
Post a Comment