இனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு!
“தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்கள் - தொழிற்சாலைகள் - அலுவலகங்களில் 90 விழுக்காட்டு வேலைகளை தமிழர்களுக்கே அளிக்க வேண்டும்” - “10 விழுக்காட்டிற்கு மேல் பணியில் அமர்த்தப்பட்டுள்ள வெளி மாநிலத்தவர்களை வெளியேற்று” ஆகிய முழக்கங்களை தமிழ் மக்கள் உயர்த்திப் பிடிக்கும் வகையில், சமூக வலைத்தளங்களில்#90PercentJobsForTamils என்ற குறியீட்டுச் சொற்றொடர் உருவாக்கப்பட்டுள்ளது.
இக்கோரிக்கையை முன்வைத்து, இன்று (10.09.2016) காலை 8 மணி முதல் சமூக வலைத்தளங்களில் HASHTAG PROTEST நடக்கிறது.
#90PercentJobsForTamils
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், மேற்கண்ட குறியீட்டுச் சொற்றொடரை பயன்படுத்தி, இந்த கோரிக்கை குறித்து உங்கள் முகநூல் மற்றும் ட்விட்டர் கணக்கில் பதிவுகள் எழுத வேண்டும்.
என்ன பதிவிடுவது என்று தெரியவில்லை என்றால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சென்று ஏதேனும் ஒரு பதிவை தேர்வு செய்து பதிவிடலாம்.
இணைப்பு:
இப்பரப்புரை வெற்றி பெறுவது நம் கைகளில் தான் உள்ளது. ட்விட்டர் - முகநூல் வலைத்தளங்களில் முதல் குறியீடாக நம் செய்தி வருமென்றால் நாடு முழுவதும் நம் செய்தி பரவும். இந்திய அரசின் காதுகளுக்கும் இது எட்டும். வெளியார் ஆக்கிரமிப்பை தடுப்போம், தமிழர் தாயகத்தைப் பாதுகாப்போம்!
தமிழ்நாட்டின் படித்தவர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம மிகக் கடுமையாக இருக்கிறது. வேலை வாய்ப்பு அலுவலகங்களில் வேலை தேடி பதிவு செய்துள்ளோர் எண்ணிக்கை 92 இலட்சம்!
பொறியியல் மற்ற பட்டப் படிப்புகள், பட்ட மேற்படிப்புகள், தொழிலியல் கல்வி, தொழில்நுட்பப் பட்டயப் படிப்பு போன்ற பலதுறைக் கல்வியைப் படித்துத் தேறிய தமிழ்நாட்டு ஆண் – பெண் இளைஞர்களுக்கு உரிய வேலை கிடைக்காமல் அவர்களில் பலர் தங்கள் படிப்புக்குத் தொடர்பில்லாத பல்வேறு அன்றாடக் கூலி வேலைகளில் ஈடுபடுகின்றனர். வாயில் காப்புப் பணி உட்பட பல பணிகளுக்குச் செல்கின்றனர். அக்கூலி வேலையும் கிடைக்காமல் பலர் வறுமையில் வாடுகின்றனர்.
படிக்கும் போது வங்கியில் கல்விக் கடன் பெற்றவர்கள் படித்து முடித்தவுடன் வேலை கிடைக்காததால் அந்தக் கடனை அடைக்க முடியாமல் பல்வேறு அவமானங்களுக்கு ஆளாகிறார்கள். மதுரையில் பொறியியல் பட்டதாரி இலெனின் செய்ததைப் போல் பலர் தற்கொலை செய்து கொண்டார்கள்.
தமிழ்நாட்டில் படித்தவர்களுக்கு அவர்களின் கல்விக்கேற்ப வேலை கிடைக்காமல் மண்ணின் மக்கள் துயரப்படும் நிலையில், தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசுத் தொழிற்சாலைகளில் மற்றும் அலுவலகங்களில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு 50 – 60 விழுக்காடு வேலை வழங்குகிறார்கள்.
தொடர்வண்டித்துறையில் மிக அதிக எண்ணிக்கையில் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலை தருகிறார்கள்.
சென்னையில் தொடர்வண்டித்துறையில் பழகுநர் பயிற்சி (Act Apprentice) 5000 பேர் வேலை மறுக்கப்பட்டுத் தெருவில் நிற்கிறார்கள். அவர்களில் 27 பேர் தற்கொலை செய்து கொண்டார்கள்.
திருச்சி பொன்மலை பணிமனை (Workshop)-இல் மட்டும் கிட்டத்தட்ட 1200 பேர் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். திருச்சி திருவெறும்பூரிலுள்ள பி.எச்.இ.எல். தொழிற்சாலையில் மொத்தத் தொழிலாளர் எண்ணிக்கையில், 40 விழுக்காட்டினரும் அதிகாரிகளில் 80 விழுக்காட்டினரும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இதே பி.எச்.இ.எல்.லில் பயிற்சி பெற்ற தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு, வேலை தர மறுத்துள்ளது அந்நிர்வாகம்!
அதேபோல், திருச்சி, ஆவடி, அரவங்காடு பகுதிகளில் உள்ள இராணுவத் தொழிற்சாலைகளில் அண்மைக்காலத்தில் நடந்த புதிய ஆள் சேர்ப்பில், கிட்டத்தட்ட 70 விழுக்காட்டினர் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். நடுவண் அரசின் வருமானவரித் துறை, உற்பத்தி வரி அலுவலகம், சுங்க வரி அலுவலகம், கணக்காயர் அலுவலகம் மற்றும் சென்னை சாஸ்திரி பவன் அலுவலகங்கள் அண்மைக்காலமாக புதிய பணியமர்த்தத்தில், 70 விழுக்காட்டினர் அயல் மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டதன் நோக்கம், ஒவ்வொரு மாநிலத்திலும் பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கு இந்திய அரசும் அம்மாநில அரசும் முன்னுரிமையும் தனிக்கவனமும் தர வேண்டும் என்பதுதான். அதன்படி, தமிழர்களின் தாயகமாக “தமிழ்நாடு” 1956 நவம்பர் 1-ஆம் நாள் நிறுவப்பட்டது. அந்த நோக்கத்திற்கு நேர் முரணாகத் தமிழ்நாட்டில் பிற மாநிலத்தவர்களை இந்திய அரசு தனது துறைகளில் திட்டமிட்டுச் சேர்க்கிறது.
அதற்காக அனைத்திந்திய அளவில் வேலைக்கானத் தேர்வு என்ற ஒரு சூதாட்டத்தை நடத்துகிறது. அத்தேர்வுகளில் பல்வேறு தில்லுமுல்லுகள் செய்து, வெளி மாநிலத்தவர்கள் வேலையில் சேர்கிறார்கள். இந்தியில் தேர்வெழுதினால் அதற்காக மட்டும் 15 மதிப்பெண்கள் போடப்படுகிறது. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அந்தத் தேர்வுகள் நடக்கின்றன. நடுவண் அரசுத் தொழிற்சாலைகளில் அந்தந்த மாநில வேலை வாய்ப்பு அலுவலகங்களின் மூலம்தான் வேலைக்கு ஆள் எடுத்தார்கள். அந்த முறையைப் பின்னர் மாற்றி, தேர்வுச் சூதாட்டத்தைப் புகுத்தி விட்டார்கள்.
இந்திய அரசுத்துறை மட்டுமின்றி, தனியார் துறை வேலைகளிலும் வரம்பற்று அன்றாடம் வெளி மாநிலத்தவர்கள் பல்லாயிரம் பேர் வந்து குவிகிறார்கள். இப்படியே தொடர்ந்தால் தமிழர்களின் தாயகம் என்ற நிலை மாறி, அயல் இனங்களின் வேட்டைக்காடாக தமிழ்நாடு சிதைந்து போகும்.
கர்நாடகத்தில் பிற மாநிலத்தவர் வரம்பற்று வேலை பெறுவதைத் தடுப்பதற்காக 1986ஆம் ஆண்டு, சரோஜினி மகிசிக் குழுவின் பரிந்துரைகளை அம்மாநில அரசு ஏற்றுக் கொண்டது. அதன்படி இந்திய அரசுத்துறை மற்றும் தனியார் துறை ஆகியவற்றில் தர வாரியாக 90 விழுக்காடு, 80 விழுக்காடு, 70 விழுக்காடு என்று மண்ணின் மக்களாகிய கன்னடர்களுக்கு வேலை வழங்க வேண்டிய கட்டாயம் அங்குள்ளது. சரோஜினி மகிசி பரிந்துரைகளை கர்நாடக மாநில அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
எனவே, தமிழ்நாட்டில் இந்திய அரசுத்துறை தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்கள் அனைத்திலும் 90 விழுக்காடு வேலைகள் தமிழ்நாட்டு மக்களுக்கே வழங்க வேண்டுமென்றும், 10 விழுக்காட்டிற்கு மேல் மேற்கண்ட தொழிற்சாலைகளிலும் அலுவலகங்களிலும் பணியாற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் வெளியேற்ற வேண்டுமென்றும் இந்திய அரசை தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இதற்காக, தமிழ்நாடு அரசு கர்நாடக அரசு அமைத்துள்ள சரோஜினி மகிசிக் குழு போல் ஒரு குழுவை உடனடியாக அமைக்க வேண்டுமென்றும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது.
தமிழே அலுவல் மொழி
--------------------------------------
1976ஆம் ஆண்டு, இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழிச் சட்டத்தின்படி, தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தமிழை மட்டுமே அலுவல் மொழியாகச் செயல்படுத்துமாறு இந்திய அரசை தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இக்கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, வருகின்ற 12.09.2016 காலை 10 மணிக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமையில் திருச்சியிலுள்ள தொடர்வண்டிக் கோட்டத் தலைமையகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுகின்றது.
ஆதிக்க இந்தியாவை நம் குரல் உலுக்கட்டும்!
#90PercentJobsForTamils
Post a Comment