உடனடிச்செய்திகள்

Saturday, September 17, 2016

கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் ஓசூர் இந்திய அரசு தலைமை அஞ்சலகம் முற்றுகை



கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும்
ஓசூர் இந்திய அரசு தலைமை அஞ்சலகம் முற்றுகை - 50 பேர் கைது!

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நீரைத் திறந்து விட மறுத்து, கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி - தமிழர்களின் உடைமைகளை சூறையாடிய கன்னட இனவெறியர்களைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை அமைக்க மறுக்கும் இந்திய அரசைக் கண்டித்தும், ஓசூர் இந்திய அரசுத் தலைமை அஞ்சலகம் இன்று (16.09.2016) முற்றுகையிடப்பட்டது.

காவிரி உரிமை மீட்புக் குழு – அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ள “காவிரி போராட்டக் குழு” சார்பில், அழைப்பு விடுக்கப்பட்டு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரதாரவுடன் தமிழ்நாடு முழுவதும் முழு அடைப்பு நடந்து வரும் நிலையில், காவிரி போராட்டக் குழு சார்பில், தஞ்சை இந்திய அரசு உற்பத்தி வரி வசூல் அலுவலகம், திருவாரூர் ஓ.என்.ஜி.சி. அலுவலகம், நாகை இந்திய அரசு பெட்ரோலிய நிறுவனம் உள்ளிட்ட தமிழ்நாடெங்கும் உள்ள இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளன.
ஓசூரில் காவிரி போராட்டக் குழு சார்பில் இந்திய அரசுத் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிடும் போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
காவிரி போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான தோழர் கோ. மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், தமிழகத் தொழிலாளர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் தமிழரசன், தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் தூருவாசன், தொழிலாளர் பாதுகாப்புப் பேரவை செயலாளர் தோழர் முருகன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் தோழர் செம்பரிதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும் தோழர்களும் பங்கேற்றுள்ளனர்.
“காவிரி உரிமையைப் பெற்றுத் தராத இந்திய அரசே! தமிழ்நாட்டில் வரி வசூலிக்காதே!”, “காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமை!” என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களுடன் ஆவேசமாக எழுப்பிக் கொண்டு பேரணியாகச் சென்ற தோழர்களை, அஞ்சலகத்தின் வாயிலில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனிடையே, முன் கூட்டியே திட்டமிட்டு – அஞ்சலகத்திற்குள்ளே நுழைந்த இளம் தோழர்கள் நிகரன், சுதிர் நந்தன், ஆதித்யன், தமிழ்மாறன் ஆகிய நால்வரும் வேகமாக உள்ளே சென்று, முழக்கங்கள் எழுப்பிக் கொண்டு அலுவலகத்தை தாழ்ப்பாள் போட்டனர். ஓடி வந்து அவர்களை பிடித்தக் காவல்துறையினர் அனைவரையும் கைது செய்வதாக அறிவித்து, தாங்கள் கொண்டு வந்த வாகனங்களில் ஏற்றினர். 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT