உடனடிச்செய்திகள்

Saturday, September 17, 2016

தஞ்சை இந்திய அரசு உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை! நூற்றுக்கணக்கானோர் கைது!


ர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும்
தஞ்சை இந்திய அரசு உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை!
நூற்றுக்கணக்கானோர் கைது!



உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நீரைத் திறந்து விட மறுத்து, கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி - தமிழர்களின் உடைமைகளை சூறையாடிய கன்னட இனவெறியர்களைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை அமைக்க மறுக்கும் இந்திய அரசைக் கண்டித்தும், தஞ்சை இந்திய அரசு உற்பத்தி வரி அலுவலகம் இன்று (16.09.2016) முற்றுகையிடப்பட்டது.
காவிரி உரிமை மீட்புக் குழு – அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ள “காவிரி போராட்டக் குழு” சார்பில், அழைப்பு விடுக்கப்பட்டு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரதாரவுடன் தமிழ்நாடு முழுவதும் முழு அடைப்பு நடந்து வரும் நிலையில், காவிரி போராட்டக் குழு சார்பில், தஞ்சை இந்திய அரசு உற்பத்தி வரி வசூல் அலுவலகம், திருவாரூர் ஓ.என்.ஜி.சி. அலுவலகம், நாகை இந்திய அரசு பெட்ரோலிய நிறுவனம் உள்ளிட்ட தமிழ்நாடெங்கும் உள்ள இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளன.
தஞ்சையில் காவிரி போராட்டக் குழு சார்பில் மருத்துவக் கல்லூரி சாலையிலுள்ள இந்திய அரசின் உற்பத்தி வரிவசூல் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. அய்யனாவரம் சி. முருகேசன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் திரு. குடந்தை அரசன், இந்திய சனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளர் திரு. சிமியோன் சேவியர்ராஜ், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முனைவர் த. செயராமன், தமிழக உழவர் முன்னணி பொறுப்பாளர் திரு. நகர் செல்லையா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இதில் பங்கேற்றுள்ளனர்.
“காவிரி உரிமையைப் பெற்றுத் தராத இந்திய அரசே! தமிழ்நாட்டில் வரி வசூலிக்காதே!”, “காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமை!” என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களுடன் ஆவேசமாக எழுப்பிக் கொண்டு பேரணியாகச் சென்ற தோழர்களை, உற்பத்தி வரி அலுவலகத்தின் வாயிலில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். முன்னேறிச் செல்ல முயன்ற தோழர்களுடன் காவல்துறையினர் தள்ளுமுள்ளில் ஈடுபட்டன. தோழர்கள் அனைவரும் சாலையில் அமர்ந்தனர்.
தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் இராசாரகுநாதன், தஞ்சை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரா.சு. முனியாண்டி உள்ளிட்ட திரளான தோழர்கள் கைதாகியுள்ளனர். 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT