தமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதாவும்
எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினும்
கர்நாடகத்தில் தமிழர் சொத்துகள்
நாசப்படுத்தப்பட்ட இடங்களைத் தனித்தனியே
நேரில் சென்று பார்வையிட வேண்டும்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!
உச்ச நீதிமன்றம் கடந்த 05.09.2016 அன்று காவிரி வழக்கில் தமிழ்நாட்டிற்குக் கர்நாடகம் ஒரு பகுதித் தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று ஆணையிட்டதிலிருந்து கர்நாடகத்தில் அம்மாநில அரசின் மறைமுக உதவியுடன் கன்னட வெறியர்கள் தமிழர்களைத் தாக்கியும், தமிழர் வணிக நிறுவனங்களைச் சூறையாடியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்களின் பேருந்துகளை – சரக்குந்துகளை – மகிழுந்துகளை தீ வைத்து எரித்தும் – தாக்கி உடைத்தும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த கே.பி. நடராசன் அவர்களின் உயர்தர உலாப் பேருந்துகள் 42 எரிக்கப்பட்டன. இவ்வாறு தமிழர்கள் பலருக்கும் பலவகைச் சேதங்கள். அத்துடன் அவமானங்கள். எப்பொழுது என்ன நடக்குமோ என்ற உயிர் அச்சத்தோடு கர்நாடகத்தில் தமிழ் மக்கள் இன்றைக்கும் ஒளிந்து மறைந்து வாழ்கிறார்கள்.
இவ்வாறான சூழ்நிலையில், அம்மக்களுக்கு ஆறுதல் கூறவும் - நம்பிக்கை அளிக்கவும் – கன்னட வெறியர்களின் அட்டூழியங்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு பெறவும் தமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதா அவர்களும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களும் உடனடியாகத் தனித்தனியே கர்நாடகம் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளையும் மக்களையும் நேரில் பார்த்து ஆறுதல் கூற வேண்டும்.
அதன்பிறகு, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை இவ்விருவரும் தனித்தனியே நேரில் சந்தித்து, கர்நாடகத்தில் தமிழர்களுக்குப் பாதுகாப்பும், ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடும் வழங்கிடவும், குற்றச் செயல்களில் ஈடுபட்ட கன்னட இனவெறியர்கள் அனைவரையும் உரிய குற்றப் பிரிவுகளின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்கவும் வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும், எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
பீகாரிகள் அசாமில் அசாமியரால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தாக்கப்பட்ட போது, லல்லு பிரசாத் யாதவ் அசாமில் சம்பவம் நிகழ்ந்த இடங்களுக்கே சென்று பீகாரிகளுக்கு ஆறுதல் கூறியதுடன், அம்மாநில முதலமைச்சரைச் சந்தித்து உரிய பாதுகாப்பு கொடுக்கவும் வலியுறுத்தினார்.
சென்னை மவுலிவாக்கத்தில் கட்டடம் ஒன்று தகர்ந்து, ஆந்திரத் தொழிலாளிகள் பலர் ஒரே நேரத்தில் இறந்தபோது, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சென்னை வந்து, சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்டு நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் மேம்படுத்தவும் வேண்டுகோள் வைத்தார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
Post a Comment