உடனடிச்செய்திகள்

Sunday, September 18, 2016

காவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்!காவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த
தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்!


காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிமையானத் தண்ணீரை கேட்டு, ஒட்டு மொத்தத் தமிழ்நாடும் கொந்தளித்து எழுந்துள்ள நேரத்தில், காவிரி உரிமைக்காக தீக்குளித்த தம்பி விக்னேசு உயரீகம் செய்துள்ளார்.
கடந்த 15.09.2016 அன்று, சென்னை எழும்பூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய “காவிரி உரிமை மீட்புப் பேரணி”யில் பங்கேற்ற, அக்கட்சியின் திருவாரூர் மேற்கு மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் தம்பி பா. விக்னேசு, காவிரி உரிமைக்கான முழக்கங்களை எழுப்பிக் கொண்டு திடீரென பேரணியில் தீக்குளித்தார். உடனடியாக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட விக்னேசு, நேற்று (16.09.2016) காலை சிகிச்சைப் பலனின்றி காலமானார். அவருக்கு அகவை 25.
தீக்குளிப்பிற்கு முன்பு விக்னேசு எழுதிய கடிதத்தில், “காவிரியில் நீரை பெற்று விவசாயத்தை மீட்டு எடுக்க போராடுங்கள், என் தாய் மண் மன்னார்குடியில் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதை நிறுத்த போராடுங்கள், எம் மண்ணை மலடாக்கும் மன்னையில் இயங்கும் சாராய ஆலையை மூட போராடுங்கள், இந்தி திணிப்பால் தமிழ் மொழி அழிந்து விடும் என்று 800 க்கும் மேற்ப்பட்ட மொழிப்போர் மறவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தார்கள் - அதுபோல புதிய கல்விக் கொள்கையால் சமற்கிருதம் திணிக்கப்பட்டு நம் தாய்மொழி சாகக் கூடாது என்பதற்காக முதல் மற்றும் இறுதி உயிராக என்னுயிர் இருக்கட்டும் அதற்காக போராடுங்கள்” என்றெல்லாம் தெரிவித்திருந்தார். (முழு கடிதம் இணைக்கப்பட்டுள்ளது).
தம்பி விக்னேசின் உயிரிழப்பு ஈடு செய்ய முடியாதது. தமிழின உணர்வுடன் போராட்டக் களத்திற்கு வரும் இளம் தோழர்கள், மக்களைத் திரட்டி கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட வேண்டுமே தவிர, “தீக்குளிப்பு” போன்றவற்றால் கோரிக்கைகளை வென்றெடுத்துவிட முடியாது என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.

தம்பி விக்னேசின் உடலை சென்னை போரூரிலுள்ள நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்திற்குக் கொண்டு செல்ல முயன்ற போது, காவல்துறையினர் தலையிட்டு, உடலை நேரடியாக அவரது சொந்த ஊரான மன்னார்குடிக்குதான் கொண்டு செல்ல வேண்டுமென நிர்பந்தித்தனர். எனினும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலேயே இதனை எதிர்த்துப் போராட்டம் நடைபெறவிருந்த சூழலில், பின்னர் வேறு வழியின்றி போரூருக்கு கொண்டு செல்ல காவல்துறையினர் அனுமதித்தனர்.

அதன்படி, நேற்று (16.09.2016) மாலை வரை, போரூர் – வளசரவாக்கத்திலுள்ள நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில் தம்பி விக்னேசின் உடல் பொதுமக்கள் வணக்கம் செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. பல்வேறு அரசியல் கட்சி – இயக்கங்களைச் சேர்ந்தவர்களும், தமிழின உணர்வாளர்களும் அங்கு சென்று தம்பி விக்னேசுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், தமிழக இளைஞர் முன்னணி செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், சென்னை த.தே.பே. செயலாளர் தோழர் வி. கோவேந்தன், வடசென்னை செயலாளர் தோழர் செந்தில், தோழர்கள் செ. ஏந்தல், சத்தியா உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள், தம்பி விக்னேசின் உடலுக்கு மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.

இன்று (17.09.2016) காலை, மன்னார்குடியில், தம்பி விக்னேசின் உடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தப்பட்டு, இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமான், அனைத்து விவசாய சங்கங்கள் ஒருங்கிணைப்புக்குழு திரு. பி.ஆர். பாண்டியன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி துணைச் செயலாளர் தோழர் சி. மகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு கட்சி – இயக்கங்களைச் சேர்ந்தவர்களும், திரளான உழவர்கள் – பொது மக்களும் தம்பி விக்னேசுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை, மூத்த தோழர் இரா. கோவிந்தசாமி, தஞ்சை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரா. சு. முனியாண்டி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் தீந்தமிழன், தோழர்கள் பொறியாளர் செயபால், மன்னார்குடி ரெ.செயபால், கோட்டூர் செயபால், பொறியாளர் இரா. பன்னீர்செல்வம், செயக்குமார், குடந்தை செழியன், அன்பு உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் தம்பி விக்னேசுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

காவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்!

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT