உடனடிச்செய்திகள்

Saturday, October 10, 2020

அண்ணா பல்கலையை இந்திய அரசிடம் ஒப்படைக்கும் துணைவேந்தர் முயற்சியைத் தடுக்க வேண்டும்! தமிழ்நாடு முதல்வருக்கு ஐயா பெ. மணியரசன் வேண்டுகோள்!



அண்ணா பல்கலையை இந்திய அரசிடம்
ஒப்படைக்கும் துணைவேந்தர்
முயற்சியைத் தடுக்க வேண்டும்!


தமிழ்நாடு முதல்வருக்கு
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் வேண்டுகோள்!



தமிழ்நாட்டு அரசின் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தை இந்திய அரசு தன் வசப்படுத்திக் கொள்ள தொடர்ந்து முயன்று வருகிறது. தமிழ்நாடு அரசு அதற்கு ஒப்புதல் தெரிவிக்காத நிலையைில், இந்திய அரசின் கல்வி அமைச்சகம் புதுஉத்தி ஒன்றைக் கையாள்கிறது.

இந்தியாவின் உயராய்வு நிறுவனமாக (Institute of Eminence) அண்ணா பல்கலைக்கழகத்தை இந்திய அரசின் கல்வி அமைச்சகம் ஏற்றுக் கொண்டு அதில் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவது என்பதே அத்திட்டம்.

அவ்வாறு அண்ணா பல்கலையை ஏற்றுக் கொள்வதற்கு நடுவண் கல்வி அமைச்சகத்திற்கு தமிழ்நாடு அரசு 1,500 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் அத்தொகையில் 1,000 கோடி ரூபாயை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் இந்திய அரசு கோருகிறது.

தனது உரிமையைப் பறிக்கும் இத்திட்டத்தைத் தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை. ஆனால், அதை வெளிப்படையாகச் சொல்லாமல் வேறு காரணங்களைத் தமிழ்நாடு அரசு கூறி வருகிறது. அண்ணா பொறியியல் பல்கலைக்கழகம் இந்திய நாட்டில் உள்ள முதல் தரமான பல்கலைகளில் ஒன்று. இது இந்திய அரசு வசம் போனால், மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் - அலுவலர்கள் சேர்க்கை ஆகியவற்றில் கடைபிடிக்கப்படும் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு பறிபோய்விடும். இதை ஒரு காரணமாகத் தமிழ்நாடு அரசு கூறி வருகிறது. இது ஞாயமான காரணமே!

அண்ணா பல்கலையை இந்திய அரசின் கல்வித் துறை வசம் ஒப்படைப்பது தொடர்பாக பரிந்துரை வழங்குவதற்காக தமிழ்நாட்டின் ஐந்து அமைச்சர்களைக் கொண்ட ஆய்வுக் குழுவை தமிழ்நாடு முதலமைச்சர் அமைத்துள்ளார். அக்குழு இன்னும் பரிந்துரை வழங்கவில்லை.

ஆனால், அதற்குள் அண்ணா பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் சூரப்பா, இந்திய அரசின் கல்வித்துறைக்குத் தன்னிச்சையாக ஓர் உறுதிமொழி விண்ணப்பம் அனுப்பியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தை உயராய்வுக் கல்வி நிறுவனமாக உடனே ஏற்றுக் கொள்ளுமாறும், இதற்காக செலுத்த வேண்டிய 1,570 கோடி ரூபாயை அண்ணா பல்கலையே செலுத்தும் என்றும், தமிழ்நாடு அரசிடம் அத்தொகையைக் கேட்க வேண்டியதில்லை என்றும் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களிடம் வசூலிக்கும் தேர்வுக் கட்டணம், கல்விக் கட்டணம், அதன் கீழ் உள்ள கல்லூரிகள் கட்டும் இணைப்புக் கட்டணம் ஆகியவற்றிலிருந்து ஓர் ஆண்டுக்கு 314 கோடி ரூபாய் என ஐந்து ஆண்டுகளில் 1,570 கோடி ரூபாய் செலுத்தி விடுவதாக உறுதி கொடுத்துள்ளார் சூரப்பா!

அத்துடன் சூரப்பா தமது இந்த ஏற்பாட்டைத் தானே புகழ்ந்து கொண்டு ஏடுகளுக்கு செய்தியும் கொடுத்துள்ளார். தமது இந்த ஏற்பாட்டால் தமிழர்கள் பெருமகிழ்ச்சி அடைவார்கள் என்றும் கூறியுள்ளார்.

சூரப்பாவின் இந்தத் தன் ஆணவத் தலையீட்டைக் கண்டு விழிப்புணர்வு பெற்றுள்ள தமிழர்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறார்கள். தமிழ்நாட்டு உரிமைகளை அன்றாடம் பறித்து வரும் மோடி அரசுக்குக் கையாள் வேலை பார்த்து அண்ணா பல்கலைக்கழகத்தை அதன் அதிகாரத்திற்குக் கைமாற்றிவிடும் சூரப்பாவின் சட்டவிரோதச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இவ்வாறெல்லாம் தமிழ்நாடு அரசுக்கு எதிராக உள்ளிருந்து கொண்டே குழி பறிக்கத் தகுதியானவர் என்பதை முன்னறிந்துதான், தமிழ்நாடு அரசுடன் கலந்தாய்வு செய்யாமல் வழக்கத்திற்கு மாறாக தன்னிச்சையாக கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழகத்திற்குத் துணை வேந்தர் ஆக்கினார் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித். ஆளுநரின் திட்டத்தை அரங்கேற்றிக் கொண்டுள்ளார் சூரப்பா!

தமிழ்நாடு முதலமைச்சர், சூரப்பாவின் இந்தத் தன்முனைப்பு நடவடிக்கையை வெளிப்படை யாகக் கண்டிக்க வேண்டும். சூரப்பாவின் மேற்படி நடவடிக்கையைத் தடுத்து நிறுத்துவதுடன் அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் களமிறங்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT