உடனடிச்செய்திகள்

Monday, October 26, 2020

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் மீது பொய் வழக்கு! ஐயா பெ. மணியரசன் கண்டனம்!



விடுதலைச் சிறுத்தைகள் தலைவர்
தொல். திருமாவளவன் மீது பொய் வழக்கு!


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் கண்டனம்!


கடந்த செப்டம்பர் 27ஆம் நாள் ஐரோப்பிய வாழ் தமிழர்களிடையே பெரியார் குறித்த இணையவழிக் கருத்தரங்கில் உரையாற்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல். திருமாவளவன் அவர்கள், மனுநீதி நூலில் வர்ண வேறுபாடின்றிப் பெண்கள் அனைவரையும் பிறப்பு அடிப்படையில் இழிவுபடுத்திய ஒரு பகுதியை அந்நூலில் இருந்து படித்துக் காட்டினார். இத்திறனாய்வு மூலம் பெண்களை அவர் இழிவுபடுத்திவிட்டதாக, ஆரியத்துவாவாதிகள் கூச்சல் எழுப்புகின்றனர்.

மனு தமது நூலில், பல பத்திகளில் பெண்களை மிகமிக இழிவாகக் கூறி கேவலப் படுத்தியுள்ளார். அவ்வாறு பெண்களை இழிவுபடுத்தி மனு கூறியுள்ள பத்திகளை எடுத்துப் போட்டு, அவற்றை மறுத்து மனுவை ஞாயப்படுத்தி ஆரியத்துவாவாதிகள் விளக்கம் அளித்தால் அது ஆக்கவழிப்பட்ட விவாதமாக இருக்கும்.

ஆனால், தோழர் திருமாவளவன் மேற்கோள் காட்டிய மனுவின் அசல் வரிகளை மறைத்து விட்டு, திருமாவைச் சிறையில் அடைக்க வேண்டும் என்று எச். இராசா போன்ற நிரந்திரத் தமிழினப் பகைவர்கள் கூச்சல் போடுவது கண்டனத்திற்குரியது.

ஆரியத்துவா முகாமைச் சேர்ந்த நபர் ஒருவர் கொடுத்த புகாரை விசாரித்து உண்மை அறியாமல், அப்படியே இ.த.ச.வின் 153, 153 a, 295a, 298, 505(1), 505 (2) ஆகிய ஆறு பிரிவுகளில் தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தைப் பொறுத்தவரை, மனுநீதி போன்ற மனிதகுல அநீதி ஆரிய நூல்களைத் தடை செய்யக் கூடாது என்று கருதுகிறது. ஏனெனில், அடுத்தடுத்த தலைமுறை தமிழர்கள் ஆரியத்தின் மனிதகுல விரோத நூலைப் படித்து எச்சரிக்கை அடைந்து, ஆரிய அபாயத்தைப் புரிந்து கொள்ள மனுநீதி நூல் புழக்கத்தில் இருப்பதே பாதுகாப்பானது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தனியே தக்க அதிகாரியை அமர்த்தி, தோழர் திருமாவளவன் பேச்சின் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குப் பிரிவுகள் அனைத்தையும் ஆய்வு செய்து, அவ்வழக்கைக் கைவிடுமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT