உடனடிச்செய்திகள்

Friday, May 23, 2008

வெள்ள நிவாரணம் கோரி உழவர்கள் ஆர்ப்பாட்டம்

நிகழ்வுகள்


வெள்ள நிவாரணம் கோரி உழவர்கள் ஆர்ப்பாட்டம்


மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கும், குத்தகைதாரர்களுக்கும் அரசு நிவாரண தொகை கொடுக்க மறுப்பதை கண்டித்து தமிழக உழவர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

 

24.04.2008 அன்று மாலை து}த்துக்குடி மாவட்டம்  குரும்பூரில் நடந்தது. இவ்வார்ப்பாட்டத்திற்கு ஆழ்வார்திருநகரி ஒன்றியத் தலைவர் பெ.மகாராஜன் தலைமை வகித்தார். குரும்பூர் நகரச் செயலாளர் சீ.கர்ணன், நகரத் தலைவர் மு.தியாகராஜன் முன்னிலை வகித்தனர். தமிழக அரசு வெள்ள நிவாரணத் தொகையை குத்தகை விவசாயிகளுக்குக் கொடுக்க மறுப்பதைக் கண்டித்தும், ஏக்கருக்கு ரூ.12000 நிவாரணம் கோரியும்  து}த்துக்குடி மாவட்ட த.உ.மு. அமைப்பாளர் மு.தமிழ்மணி மற்றும் மு.ராஜரத்தினம், கல்லை க.பெருமாள், சோ.வடிவேலன், த.சின்னத்துரை,
சு.ஜெயராஜ், ம.சொர்ணபாண்டியன், பே.இராசேந்திரன் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.


முடிவில் ஆ.முத்துப்பாண்டி நன்றி கூறினார். உழவர்கள் திரளாகக் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

 

Thursday, May 22, 2008

மண்ணின் மைந்தர்களுக்கே வேலை :: த.தே.பொ.க. மறியல் :: 160 பேர் கைது


:: மண்ணின் மைந்தர்களுக்கே வேலை ::

த.தே.பொ.க. மறியல் :: 160 பேர் கைது


திருச்சி, மே 20: திருச்சி "பெல்' நிறுவனத்தில் 80 சதம் தமிழர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி நடத்திய மறியலில் 35 பெண்கள் உள்பட 160 பேர் கைது செய்யப்பட்டனர்.


திருச்சி "பெல்' ஆலை வாயிலை நோக்கி சுமார் 300 பேர் பேரணியாக எழுச்சியுடன் மறியலுக்குச் சென்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கேயே சாலையில் அனைவரும் அமர்ந்து முழக்கங்கள் எழுப்பினர்.


மறியலுக்கு போராட்டக் குழுத் தலைவர் தோழர் குழ. பால்ராசு தலைமை வகித்தார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலர் தோழர் பெ. மணியரசன் மறியலைத் தொடங்கி வைத்தார்.


மதிமுக சொத்துப் பாதுகாப்புக் குழுத் துணைத் தலைவர் வேங்கூர் புலவர் க. முருகேசன் வாழ்த்திப் பேசினார்.


தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி. வெங்கட்ராமன், தமிழக இளைஞர் முன்னணி பொதுச்செயலர் நா. வைகறை, கோ. மாரிமுத்து, மகளிர் ஆயம் தமிழக ஒருங்கிணைப்பாளர் மதுரை அருணா, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை திருச்சி மாவட்டத் தலைவர் கவித்துவன், செயலர் ராஜா ரகுநாதன் உள்ளிட்டோர் மறியலில் கலந்து கொண்டனர். முன்னதாக மறியலுக்கு அப்பகுதியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தொழிலாளர்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இம்மறியலில் தமிழக முழுவதுமிருந்து த.தே.பொ.க. தோழர்கள் திரளாக கலந்து கொண்டனா.

"பெல்' ஆலை மட்டுமின்றி தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஆலைகளிலும் ஆள்களைத் தேர்வு செய்யும்போது தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Monday, May 19, 2008

தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுப்பு :: த.தே.பொ.க. போராட்டம்

இந்திய அரச நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுப்பு!
திருச்சி பாரத் மிகுமின் நிலையம் முன் த.தே.பொ.க.  மறியல்
தமிழ் இனத்தின் தற்காப்பு மறியல் போர்
 
நாள் : 20-05-2008, செவ்வாய்
நேரம் : காலை 10.மணி
தலைமை : தோழர் குழ.பால்ராசு
 
தமிழகத்தில் உள்ள இந்திய மிகுமின தொழிற்சாலைகள்(பெல்), தொடர்வண்டித் துறை, துப்பாக்கித் தொழிற்சாலை, பெட்ரோலிய உற்பத்தி மற்றும் தூய்மைத் தொழில்கள், நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத் தொழிலகம் உள்ளிட்ட பலவற்றில் வெளிமாநிலத்தவர் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது.
 
மேலே குறிப்பிட்ட தொழிலகங்களில் உள்ள உயர் அலுவலர்கள் திட்டமிட்டுத் தமிழர்களை வேலைக்குச் சேர்க்காமல் புறக்கணிக்கின்றனர்.
 
திருச்சி மிகுமின் ஆலையில் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. ஆயிரக்கணக்கில் தொழிலாளர்களையும் நிர்வாகப் பிரிவினரையும் வெளி மாநிலத்திலிருந்து வேலைக்குச் சேர்த்து வருகின்றனர்.
 
நிர்வாகப் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றவர்களைச் சேர்க்கிறார்கள். 2005 முதல் 4 தொகுப்பாக 138 பொறியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பொறியியல் கல்லூரிகள் அதிகம். ஆனால் பணியமர்த்தப்பட்டுள்ளவர்களில் ஒருவர் கூடத் தமிழர் இல்லை.
 
தொழிலாளர் பிரிவில் பெல் நிறுவனம் தமிழர்களை மிக மிகக் குறைவாகவே சேர்த்துள்ளது.
 
வேலைக்கு ஆள் எடுப்பது குறித்து பெல் நிறவனத்தில் பணியாளர் கையேடு(Personal Manual)  உள்ளது. அதில் தொகுதி 1 (volume-1),  பிரிவு (A), உட்பிரிவு(a)(Statement  of Recuritment Policy) வேலைக்கு ஆள் சேர்க்கும் கொள்கை பற்றிக் கூறுகிறது. அதில் பயிற்சித் திறனற்றோர் (Unskilled), பாதித்திறனாளர் (Semiskilled), திறனாளர்(Skilled), மேற்பார்வையாளர்(Super visor) ஆகிய தொழில் நிலைப் பிரிவுகளுக்குத் தமிழ்நாட்டில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்கள் வழியாகத்தான் தொழிலாளர்களைப் பணியமர்த்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பெல் அலுவலகர்கள் அவ்வாறு செய்யாமல் நேரடியாக ஆளி் சேர்க்கிறார்கள்.
 
பெல் நிறுவனப் பொது மேலானர்களில் பெரும்பாலோர் வேற்று இனத்தவராக இருப்பதால் தமிழர்களை வேலைக்குச் சேர்க்காமல் வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள்.
 
பல்லாண்டு காலமாக அங்கே பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர், தற்காலிகத் தொழிலாளர் ஆகியோரை முன்னுரிமை அடிப்படையில் நிரந்தரப்படுத்தாமல் வெளிமாநிலத்தவரைப் புதிதாக நிரந்தரப் பணிகளில் சேர்க்கின்றனா.
 
தமிழகமெங்கும் உள்ள தொடர்வண்டித் துறை வேலை வாய்ப்புகளைப் பீகாரிகள் பறித்து வருகின்றனர். அத்துறை அமைச்சர் லல்லு பிரசாத் ஒரு பிகாரி என்பதால் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை தராமல் பீகாரிகளைக் கொண்டுவந்து குவிக்கிறார். பொன்மலைப் பணிமனையில் 300 பீகாரிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். பல்வேறு இரயில் நிலையங்களில் இந்திக்காரர்களே வேலைகைளைப் பறித்துக் கொண்டுள்ளனர்.
 
திருச்சி அருகே உள்ள துப்பாக்கித் தொழிற்சாலையிலும் வெளிமாநிலத்தவர்களே மிகுதியாக வேலை பெற்றுள்ளனர். நரிமணம் பெட்ரோல் ஆலையிலும் வெளியார் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது.
 
தமிழகம் முழுவதம் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் அயலாரின் ஆதிக்கம் மேலும் மேலும் அதிகரிக்கிறது. தனியார் துறை வேலைவாய்ப்பிலும் அயலார் ஆதிக்கம் பெருகி வருகிறது. தமிழக அரசில் பணிபுரியும் இந்திய ஆட்சி(IAS) மற்றும் இந்திய காவல் பணி(IPS) அலுவலர்கள் பெரும்பாலும் வேற்று மாநிலத்தவரே.
 
அயலார் மிகுதியாக  வேலைக்கு வருவதால் ஒரு பக்கம் தமிழர்களின் வேலை வாய்ப்பும் வாழ்வுரிமையும் பறிக்கப்படு்ம். மறுபக்கம் தமிழகத்தில் அயலாரின் குடியிருப்புகள் அதிகரிக்கும்;அவாகளின் மக்கள் தொகை பெருகும். அவாகள் தமிழர்களுக்குப் புறம்பான தங்களின் மொழி மற்றும் பண்பாடுகளைப் பரப்புவர். தமிழர்கள் தங்கள் தாயகத்திலேயே தற்சார்பற்று, பெருமிதம் இழந்து, இரண்டாந்தரக் குடிமக்களாகக் கீழ்நிலை அடைவர்.
 
    ஏற்கெனவே தமிழகத் தொழில், வணிகம் ஆகியவற்றில் மார்வாடி, குசராத்தி சேட்டுகள் மேலாதிக்கம் செய்கின்றனர். அவர்கள் கூட்டம் கூட்டமாகத் தமிழகத்தில் வந்து குவிகின்றனர். இந்நிலையில் சென்னையில் தமிழர்களுக்கு வீடு தராமல் பல இந்திக்காரர்களுக்கு மட்டும் வீடு தரக்கூடிய பல வடநாட்டு அடுக்ககங்கள் உள்ளன என்பதை 'தமிழ் ஓசை' நாளிதழ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுட்டிக்காட்டியது. மலையாளிகள் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் சற்றொப்ப மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகையினராகப் பெருத்துள்ளனர். தமிழகம் முழுவதுமான பல்வேறு வேலை வாய்ப்புகள், தொழில், வணிகம் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர். இந்நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் மிக விரைவில் தமிழாகள் சிறுபான்மையினராகி அயல் இனத்தவாகள் பெரம்பான்மை ஆகிவிடுவர். தாயகத்தை இழந்துவிடுவர்.
 
இந்திய அரசமைப்புச் சட்டப்படி இந்தியாவெங்கும் சென்று வசிக்க, தொழில்புரிய ஒருவருக்கு உரிமை உண்டு என்று கூறுவர். ஆனால் அசாம், நாகலாந்து, மராட்டியம் போன்ற மாநிலங்களில் வெளியாரை வெளியேற்றும் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. காசுமீரில் வெளி மாநிலத்தவர் சொத்து வாங்க முடியாது. இந்தியாவில் மட்டுமல்லாது பிரிட்டன் பொன்ற அயல்நாடுகளிலும் வெளியார் சிக்கலை எதிர்த்து அம்மண்ணின் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் மட்டும் ஏமாளியாக இருக்க வேண்டுமா? தாயகத்தை இழக்க வேண்டுமா? கூடாது. 1956 ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டதன் நோக்கம் அந்தந்தத் தேசிய இன மக்கள் தங்கள் தாயகத்தில் தொழில், வணிகம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முழுமையாகப் பெற்று முன்னேற வேண்டும் என்பதாகும்.
 
எனவே வெளியார் ஆக்கிரமிப்பைத் தடுக்கும் நமது போராட்டம் சட்ட விரோதமானதல்ல. வெளியாரை வெளியேற்றப் போராடிய அசாம் மாணவர்களுடன் அன்றையப் பிரதமர் இராசீவ் காந்தி உடன்படிக்கை செய்து கொண்டதையும் நினைவில் கொள்ள வெண்டும்.
 
தமி்ழ்ப் பெருமக்களே! நமது தாயகத்தில் நமது தொழில், வணிகம், வேலைவாய்ப்பு ஆகியவை பறிபோவதைத் தடுக்கும் கொள்கையும் ஆற்றலும் தேர்தல்கட்சிகள் எவற்றுக்குமே இல்லை. அவற்றின் இலக்கு பதவி, பணம், புகழ் என்பவைதாம்.
 
எனவே தற்காப்பு உணர்வுள்ள தமிழர்கள் குறிப்பாக இளைஞர்கள் களத்திற்கு வரவேண்டும். கைகொடுக்க வேண்டும்.
 
நமது கோரிக்கை:
 
  • தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் 80 விழுக்காடு வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே வழங்க வேண்டும்.

 

  • தமிழ்நாட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மற்றும் அரசுத் தேர்வாணையம் வழியாக மட்டுமே அந்நிறுவனங்களில் வேலைக்கு ஆள் சேர்க்க வெண்டும்

 

  • தமிழ்நாட்டில் உள்ள இட ஒதுக்கீட்டு முறையை அந்நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
திருச்சி மிகுமின் நிலைய வாயிலில் நடக்கும்
அடையாள மறியல் போராட்டத்திற்கு புறப்படுவீர்!
தமிழர்களே வாருங்கள்!
 

Monday, May 5, 2008

சென்னை மாநகரக் காவல்துறையினரை கண்டித்து உண்ணாப்போராட்டம்

அரசுப் பேருந்துகளில் ஆங்கில எழுத்துக்களை அழித்த
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினரை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கிய
மாநகர காவல்துறையினரைக் கண்டித்து சென்னையில் உண்ணாப்போராட்டம்
பழ.நெடுமாறன் கண்டன உரை





 

தமிழக அரசு தமிழைப் புறக்கணித்து ஆங்கிலத்திற்கு  முதன்மை தரும் போக்கைக் கண்டித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் கடந்த சனவரி 25 மொழிப் போர் நாளில் அரசுப் பேருந்துகளில் தமிழாக்கம் கூட இல்லாமல் 'அல்ட்ரா டீலக்ஸ்', 'பாயின்ட்-டு-பாயின்ட்' என்று  எழுதப்பட்டிருந்த ஆங்கில எழுத்துக்களை கோயம்பேட்டில் கருப்பு மை பூசி அழித்தனர். அப்போது கோயம்பேடு காவல்துறை ஆய்வாளர் தேன் தமிழ்வளவனும் மற்ற காவலர்களும் கருப்பு மை பூசி ஆங்கில எழுத்துகளை அழித்த த.தே.பொ.க.வினரை காட்டுமிராண்டித்தனமாக தடியால் அடித்து படுகாயப்படுத்தினர். ஒரு தோழருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்கள் 22 பேரை கைது செய்த பின் பேருந்துக்குள் வைத்தும் காவல்நிலையத்தில் வைத்தும் மீண்டும் மீண்டும் தடியால் அடித்து காவல்துறையினர்  படுகாயப்படுத்தினர். அவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவமனையில் காயம்பட்ட அனைவரும் சிகிச்சை பெற்றனர்.
 


    சட்டவிரோதமாக தாக்கிய தேன் தமிழ்வளவன் உள்ளிட்ட காவலது; றையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகரக் காவல் ஆணையர், தமிழகக் காவல்துறைத்தலைவர், தமிழக முதலமைச்சர் ஆகியோருக்கு புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. சட்டவிரோதமாக தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கைக் கோரி கடந்த 22-02-2008 அன்று உண்ணாப்போராட்டம் நடத்த அனுமதி கோரிய போது மாநகரக் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இத்தடையை எதிர்த்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிப்பேராணை வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. அவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் 03-05-2008 அன்று உண்ணாப்போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. தமிழ்த் தேசப்  பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் 300 பேர் ஆண்களும், பெண்களும் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை
அருகே காலை 9.00 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரை உண்ணாப்போராட்டம் நடத்தினர். காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கிய ஆய்வாளர் தேன் தமிழ்வளவன் மற்றும் காவலர்களை இடை நீக்கம் செய்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. உண்ணாப்போராட்டத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர்  திரு.த.வெள்ளையன தொடங்கி வைத்தார். மறுமலர்ச்சி தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு மல்லை சத்யா, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, திரைப்பட இயக்குநர் சீமான், தமிழக
ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் நிலவன், தமிழக மனித உரிமைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் அரங்க.குணசேகரன், மார்க்சியப் பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி கவிஞர் தமிழேந்தி, புலவர் கி.த.பச்சையப்பனார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.







நிறைவாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் திரு பழ.நெடுமாறன் கண்டன உரையாற்றி  உண்ணாப்போராட்டத்தை முடித்து வைத்தார். அப்போது அவர் தமிழ் இன உரிமைகளைக் காக்கவும் மீட்கவும், தமிழ் மொழி தமிழகத்தின் ஆட்சிமொழியாய் மிளிரவும் நாம் எடுக்கும் போராட்டங்களைத் தமிழக அரசு தொடர்ந்து தடை செய்து வருகிறது. காவல்துறையை ஏவித் தாக்குகிறது. தமிழ் மக்கள் நலனுக்காக நாம் எடுக்கும் நடவடிக்கைகள் அரசுக்கு
ஆத்திரமூட்டுகிறது. அவ்வாறு அரசுக்கு ஆத்திரமூட்டும் செயல்களை தமிழக நலன் கருதி நாம் மீண்டும் மீண்டும் செய்வோம் என்றார்.


Friday, May 2, 2008

சென்னையில் நாளை உண்ணாப்போராட்டம் - பெ.மணியரசன் அறிக்கை

தமிழக அரசின் ஆங்கிலத் திணிப்பைக் கண்டித்துப் போராடியோரைக்
காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை கோரி
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி நாளை
சென்னையில் உண்ணாப்போராட்டம்
 
பெ.மணியரசன் அறிக்கை
 
தமிழக அரசின் ஆங்கிலத் திணிப்பைக் கண்டித்துக் கடந்த 25 மொழிப்போர் நாளன்று சென்னை கோயம்பெடு பேருந்து நிலையத்தில் அரசு விரைவுப் பேருந்தகளில் தமிழாக்கம கூட இல்லாமல் எழுதப்பட்டிருந்த ஆங்கில எழுத்துக்களைக் கருப்பு மை பூசி அழிக்கும் போராட்டத்தைத் தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சித் தோழர்கள் நடத்தினர்.
 
    அப்போது கோயம்பேடு காவல்நிலைய ஆய்வாளா தேன் தமிழ்வளவனும் மற்றம் காவலர்களும் அமைதியாகப் போராட்ட்ததில் ஈடுபட்ட தோழர்களைக் காட்டுமிராண்டித் தனமாகத் தடியால் அடித்துப் படுகாயப்படுத்தினர். ஒரு தோழருக்குக் கை எலும்பு முறிந்தது.
 
        காவல்துறைக்கு முன்கூட்டியே அறிவித்துவிட்டு, அடையாளப்பூர்வமாக ஆங்கில எழுத்துக்களைகட கருப்பு மை பூசி அழித்தத் தோழர்களை சட்டத்திற்கு புறம்பாகத் தடியடி நடத்தியும் இழிவான சொற்களில் திட்டியும் அராஜகம் புரிந்த ஆய்வாளா தேன் தமி்ழ்வளவன் உள்ளிட்டோரை இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்த்தெசப் பொதுவடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் கடந்த இருமாதங்களுக்கு முன்பேயே உண்ணாப்போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். முதலில் அதற்கு அனுமதி அளித்த காவல்தறை பின்னர் அப்பபோராட்டத்திற்கான அனுமதியை போராட்டம் நடக்கும் தினத்திற்கு முந்தைய நாளில் அவரசக் கடிதம் ஒன்றை அனுப்பி அனுமதி மறுத்தனர். அதன்பிறகு நீதிமன்றத்தில் த.தே.பொ.க. வழக்குத் தொடுத்தது. அதன் பயனாக 03-05-3008 சனி காலை 9.00 மண முதல் மாலை 6.00 மணி வரை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே உண்ணாப்போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்தது. உண்ணாப்போராட்டத்திற்கே காவல்துறை அனுமதி மறுத்ததும் அதனை தகர்த்தெறிந்து இப்போராட்டம் நடைபெறுவதாலும் இப்போராட்டம் எழுச்சியடன் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும்  த.தே.பொ.க.இயக்கத் தோழர்களும் தமிழின உணர்வாளர்களும் இப்போராட்டத்தில் பங்குபெற சென்னை வருகிறார்கள்.
 
        இவ்வுண்ணாப்போட்டத்தைத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு த.வெள்ளையன் அவர்கள் தொடங்கி வைக்கிறார். உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ.நெடுமாறன் அவாகள் முடித்து வைக்கிறார். 
 
        ம.திமு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு மல்லை சத்யா, இயக்குநர் சீமான், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, தமிழர் கழகத் தலைவர் திர இரா.பாவாணன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் அரங்க குணசேகரன், மார்க்சியப் பொரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்களில் ஒருவரான கவிஞர் தமிழெந்தி, புலவர் கி.த.பச்சையப்பனார் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றுகின்றனர். இப்போராட்டத்தில் தமிழின உணர்வாளர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
 
தோழமையுடன்
தோழர் பெ.மணியரசன்
 பொதுச் செயலாளர்
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி
 
 
 
 
 

Sunday, April 20, 2008

தமிழர்கள் பகையாளியா? சிங்களர்கள் பங்காளியா?

தமிழர்கள் பகையாளியா? சிங்களர்கள் பங்காளியா?
இந்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
தடையை மீறி ஏராளமானோர் கைது!

இலங்கை இனவெறி இராணுவத்திற்கு தொடர்ந்து ஆயுத உதவியும், இராணுவப் பயிற்சியும் வழங்கும் இந்திய அரசைக் கண்டித்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் 22-3-2008 சனிக்கிழமையன்று மாலை 4 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென அறிவிக்கப் பட்டிருந்தது, ஆனால் நிகழ்வு நடப்பதற்கு முன் தினம், 21-3-2008 அன்று தமிழக காவல்துறை இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தது.

அதனைத் தொடர்ந்து, தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடக்குமென ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் அறிவித்திருந்தார். அதன்படி இன்று மாலை 3 மணியிலிருந்தே சென்னை அரசு மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் விக்டோரியா மெமோரியல் அரங்கத்தின் முன் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த அமைப்புகளின் தோழர்களும் அமைப்புகளைச் சேராத தமிழ் உணர்வாளர்களும் சென்னையில் பெய்துக் கொண்டிருந்த மழையையும் பொருட்படுத்தாது பெருமளவில் கூடத் தொடங்கினர். சென்னையிலிருந்து மட்டுமல்லாது விழுப்புரம், கடலூர், காஞ்சிபரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தோழர்கள் திரண்டனர்.

அந்த இடத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பொதுமக்களுக்கு அச்ச மூட்டும் வகையில் காவல்துறையை மிகப் பெரிய அளவில் குவித்திருந்தது தமிழக அரசு.

மாலை 4 மணியளவில் பழ. நெடுமாறன் தலைமையில் ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்களும் தமிழ் உணர்வாளர்களும், இந்திய அரசைக் கண்டிக்கும் பதாகைகளை ஏந்திக் கொண்டும், இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் எதிராக பெரும் உணர்வெழுச்சியுடன் முழக்கமிட்டுக் கொண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈழத் தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் தொடர்ந்து கொன்று குவிக்கும் சிங்கள இனவெறி இராணுவத்திற்கு ஆயுத உதவி வழங்கும் இந்திய அரசையும், அதைத் தடுத்து நிறுத்தாத தமிழக அரசையும் கண்டித்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் கண்டன உரை ஆற்றினார். அவரைத் தொடர்ந்து தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் கண்டன உரை நிகழ்த்தினார். தொடர்ந்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ. மணியரசன் இந்திய அரசைக் கண்டித்து முழக்கமெழுப்ப அவரை பின்பற்றி கூடியிருந்தோர் உணர்வெழுச்சியுடன் முழக்கங்கள் எழுப்பினர்.

கொடுக்காதே கொடுக்காதே தமிழர்களைக் கொல்ல சிங்களவனுக்கு ஆயுதம் கொடுக்காதே

இந்தய அரசே இந்திய அரசே தமிழர்கள் உன் பகைவர்களா

இந்தய அரசே இந்திய அரசே சிங்களவன் உன் பங்காளியா

போன்ற முழக்கங்கள் எழுப்பப் பட்டன.

மேலும் பேசவோ, ஆர்ப்பாட்டத்தை தொடரவோ விடாமல் காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் அய்ம்பதுக்கும் மேற்பட்ட பெண்களும், சிறுவர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவர்கள் 7 காவல்துறை பேருந்துகளில் ஏற்றப்பட்டு சென்னை கொண்டித்தோப்பு காவல் துறை திருமண மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டனர்.

இவ்வார்ப்பாட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத் தோழர்கள், தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் மற்றும் அவ்வியக்கத் தோழர்கள், பெரியார் திராவிடர் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் ஆனூர் ஜெகதீசன் மற்றும் அவ்வியக்கத் தோழர்கள், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ. மணியரசன் மற்றும் அக்கட்சித் தோழர்கள், தமிழ்த் தேச விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு மற்றும் அவ்வியக்கத் தோழர்கள், தமிழ்நாடு மார்க்சியப் பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியினர், புரட்சிகர இளைஞர் முன்னணியினர், புரட்சிகர ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி யினர், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தினர் மற்றும் பேராசிரியர் மருதமுத்து, ஓவியர் வீர சந்தனம், இயக்குநர் புகழேந்தி, உலகத் தமிழர் பேரமைப்பு அலுவலகச் செயலாளர் பத்மநாபன் ஆகியோரும் திரளான தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.



நன்றி : தென் ஆசிய செய்தி

Friday, April 18, 2008

ஒகேனக்கலில் தமிழர் பேரெழுச்சி

தமிழர் மீது இனப்பகை கொண்டு காவிரியைத் தடுத்துவரும் கன்னடக் கலகக்காரர்கள், இப்பொழுது ஒகேனக்கல், ஓசூர், தென்கனிக்கோட்டை போன்ற தமிழகப் பகுதிகளைக் கர்நாடகத்துடன் இணைக்குமாறு உள் நுழைந்து

கூச்சல் போடுகிறார்கள்.
 

இரண்டு மாதங்களுக்கு முன் "கன்னட ரட்சன வேதிகே' என்ற தமிழர் எதிர்ப்பு அமைப்பு ஒகேனக்கல் அருவி வர வந்து ஆர்ப்பாட்டம் நடத்தி அப்பகுதியைக் கர்நாடகத்துடன் இணைக்கக் கோரியது. கடந்த மாதம் கர்நாடக பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா ஒரு கும்பலுடன் அருவி வர வந்து கர்நாடகத்துடன் ஒகேனக்கலை இணைக்கும்படி கூச்சலிட்டார். அடுத்து பா.ஜ.க.வின் கர்நாடக விவசாயிகள் சங்கத் தலைவர் உசமணி தலைமையில் 250 பேர் தொங்குபாலம் வர வந்து

கர்நாடகத்துடன் இணைக்குமாறு கூச்சலிட்டனர். சட்டவி÷ராத நோக்குடன் அத்துமீறி தமிழக எல்லைக்குள் நுழையும் கர்நாடகக் கலகக்காரர்களைத் தமிழகக் காவல் துறையினர் கைது செய்யாமல், அவர்களுக்கு வழிக்காவலாக

வந்தனர். மேலிடத்தின் வழிகாட்டல் அப்படியிருந்திருக்கிறது. ஒகேனக்கல் உரிமைப் பாதுகாப்புக்குழு அழைப்பின் பெயரில், 26.3.2008 பிற்பகல் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் பேöரழுச்சியுடன் ஒகேனக்கலில் நடந்தது. பாதுகாப்புக்குழுத்

தலைவர் திரு அதிபதி, ஒருங்கிணைப்பாளர் தோழர் ந.நஞ்சப்பன், செயலாளர் திரு. தமிழ்ச் செல்வன் ஆகியோர் தலைமை தாங்கியும் முன்னிலை வகித்தும் செல்ல, தோழர்கள் பெ.மணியரசன் (த.தே.பொ.க.), கொளத்தூர் த.செ.மணி

(பெரியார் தி.க.), தகடூர் தமிழ்ச் செல்வன் (விடுதலைச் சிறுத்தைகள்), மந்திரி (பா.ம.க.), எம்.கோபால் (சி.பி.ஐ.), கே.முனுசாமி (காங்கிரஸ்), சம்பத் (ம.தி.மு.க.), அருண் (வி.வி.மு.), அ.தீர்த்தகிரி (தி.க.), பேரா.சின்னச்சாமி (தமிழக விவசாயிகள் சங்கம்), ரமேஷ்வர்மா (தே.மு.தி.க.), கந்தசாமி (பா.ஜ.க.), உள்ளிட்டோர் அணிவகுத்துச் செல்ல, ஆயிரக் கணக்கானோர் அவரவர் அமைப்புக் கொடியுடன் அருவி ஓசையை அமுக்கிடும் பே÷ராசையுடன் கன்னட வெறியர்களுக்கு எதிராகக் கண்டனம் முழங்கி, காவிரி ஆற்றில் இறங்கி, மணல் திட்டுவர சென்று ஆர்ப்பாட்டம் செய்தனர். ஓசூர் த.தே.பொ.க. தோழர்கள் ஒரு சிறு பேருந்தில்

வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டன

தண்டோரா அறிவிப்புக்கு தடை த.தே.பொ.க. கோரிக்கை வெற்றி

அரசுத் துறைகள், உள்ளாட்சி மன்றங்கள் நீதிமன்றங்கள் வழிபாட்டு நிறுவனங்கள் போன்றவை தமது அறிவிப்புகளை தண்டோரா போட்டு (பறையடித்து) தெரிவிக்கும் முறையைக் கைவிடுவது என தமிழக அரசு முடிவு செய்ய உள்ளது. 
இவ்வாறு பறையடித்து அறிவிக்கும் முறை தீண்டாமைக்கு உள்ளாகும் குறிப்பிட்ட சாதியினர் செய்யும் பணியாக காலங்காலமாகத் தொடர்கிறது. பல்வேறு தகவல் தொடர்பு சாதனங்கள் வளர்ந்துள்ள இந்தக் காலத்திலும்
அரசே இத்தீண்டாமைப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பது கொடுமை யானது என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சுட்டிக்காட்டியது. இப்பழக்கத்தைக்
கைவிடவேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
 
த.தே.பொ.க. 1997 பிப்.22 அன்று திருத்துறைப் பூண்டியில் நடத்திய தீண்டாமை ஒழிப்பு தமிழர் ஒற்றுமை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட வரலாற்று சிறப்புமிக்கத் தீர்மானங்களில் இக்கோரிக்கையும் முக்கியமானது. இதற்கு
முன்னர் த.தே.பொ.க. இரண்டாவது சிறப்பு பொதுக்குழு (பேராளர் மாநாடு) 1995ஆம் ஆகஸ்ட் 11, 12, 13 ஆகிய நாட்களில் விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் நடந்தது. அதில் தீண்டாமைக்கு எதிரான தொடர் இயக்கங்கள் நடத்துவதற்கு சில அடிப்படை முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கிணங்கவே  திருத்துறைப்பூண்டி மாநாடு நடத்தப்பட்டது.

திருத்துறைப் பூண்டி தீர்மானம் தமிழ்த் தேசியப் போராட்டத்திற்கும் தீண்டாமை ஒழிப்பிற்குமுள்ள இன்றியமையா உறவுகளைக் கோட்பாட்டு வகையில் நிறுவியதோடு, தமிழகத்தில் தீண்டாமை நிலவும் பல்வேறு வடிவங்களை ஆய்வு செய்து அவற்றைத் தீர்ப்பதற்கான நுணுக்கமான கோரிக்கைகளை வøரயறுத்தது.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு அரசாங்கம் தனிக் குடியிருப்புகள் கட்டுவதைவிட அனைத்துச் சாதியினரும் கலந்து வாழும் கலப்புக் குடியிருப்புகளைக் கட்டித்தர
வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். "பெரியார் நினைவு சமத்துவபுரம்' என்ற பெயரில் அது அரசாங்கத்தால் நடைமுறைப் படுத்தப்பட்டது. அதேபோல் தலைவர்கள், அறிஞர்கள் பெயøர மாவட்டங்களுக்கும் போக்குவரத்துக் கழகங்களுக்கும் சூட்டக் கூடாது என்று வலியுறுத்தினோம்.
சாதி மோதல்களை உருவாக்கிய இந்தத் தவறான நடைமுறையைப் பின்னால் தமிழக அரசும் கைவிட்டது. பறையடித்து அறிவிக்கும் பழக்கத்தை அரசு
கைவிட்டு துண்டறிக்கைகள், ஒலிபெருக்கிகள் வாயிலாக அறிவிக்கைகள் செய்ய வேண்டும் என்று திருத்துறைப்பூண்டி தீர்மானம் வலியுறுத்தியது. (தீர்மானம் எண்.11) தீண்டாமைக்கெதிரான திருத்துறைப்பூண்டித் தீர்மானத்தை வலியுறுத்தி த.தே.பொ.க.வும் தமிழக இளைஞர் முன்னணியும் தெருமுனைக்கூட்டங்கள்
பரப்புøரப் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், மறியல் போராட்டங்கள் எனக்கடந்த பத்தாண்டுகளாகத் தொடர் இயக்கங்களை நடத்திவருகின்றன.
தமிழக அரசு நியமித்த பேராசிரியர் நன்னன் குழு இப்போது தீண்டாமைக்கெதிராக அரசு செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துøரகளை முன்வைத்துள்ளது. இரட்டைக்குவளை ஒழிப்பு, தண்டோரா
அறிவிப்புக்குத் தடை போன்றவை இப்பரிந்துøரகளில் அடங்கும். இவற்றை ஏற்று தமிழக அரசு செயல்படுத்தும் என செய்திகள் கூறுகின்றன.

திருத்துறைப்பூண்டி தீர்மானம் சாதி மறுப்புத் திருமணம்செய்து கொண்டோருக்கு இடஒதுக்கீடு, கிராமப் பொது சொத்துகளில் தாழ்த்தப்பட்டோருக்கு பங்கு, கல்லூரி
பள்ளி நலத்துறை விடுதிகள் அனைத்திலும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட அனைத்து சாதியினரும் கலந்துறைதல் என்பன உள்ளிட்ட பலகோரிக்கைகளை
முன்வைத்துள்ளது. இவைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும். அதற்குத் தொடர்ந்து போராடுவோம்.

Wednesday, March 26, 2008

ஊதிய உயர்வு : இந்தியச் சந்தையை சேவைத்துறை சார்ந்ததாக மாற்றுகிறது - த.தே.பொ.க. அறிக்கை

ஊதிய உயர்வு : இந்தியச் சந்தையை
சேவைத்துறை சார்ந்ததாக மாற்றுகிறது
உற்பத்தித் துறை உழைக்கும் மக்கள்
தங்களுக்குரியப் பங்கைப் பெற போராட வேண்டும்
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி அறிக்கை

நடுவண் அரசு ஊழியர்கள், அதிகாரிகள், படைத்துறையினர் ஆகியோருக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்கான பரிந்துரையை நீதிபதி பி.என். ஸ்ரீ கிருஸ்ணா குழு அளித்துள்ளது. அப்பரிந்துரையை நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார். இப்பரிந்துரைகளைப் பார்க்கும் போது இது ஊதிய உயர்வு சார்ந்த அறிக்கை மட்டுமல்ல, இந்தியப் பொருளாதாரத்தின் சார்புத் தன்மையை மாற்றியமைக்கும் ஓர் ஏவுகணை என்று தெரிகிறது.

இப்பரிந்துரை அளித்த நீதிபதி ஸ்ரீ.கிருஸ்ணா, நிதியமைச்சர் ப.சிதம்பரம், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் உலகமயம் என்ற ஒரே படகில் தாராளமாகப் பயணம் செய்பவர்கள் என்றும் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியச் சந்தை, உற்பத்தித் துறையைச் சார்ந்திருப்பதற்கு மாறாக, சேவைத்துறையை சார்ந்திருக்க வேண்டும் என்ற நோக்கம் இதில் வெளிப்படுகிறது. இதனால் தான், அமைச்சரவைச் செயலர், தலைமை தளபதி போன்ற அதிகாரிகளுக்கு தற்போதுள்ள 30,000 ரூபாய் மாதச்சம்பளத்தை மும்மடங்காக மாற்றி ரூ.90,000 என்று உயர்த்துகிறது பரிந்துரை. இதே போல  இனி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் போன்றோர்க்கும் சம்பள உயர்வு வரும். தலைமை அதிகாரிகளுக்கு மட்டுமின்றி அடுத்தநிலை அதிகாரிகளுக்கும் பெரிய அளவு ஊதிய உயர்வு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதே பாணியிலான ஊதிய உயர்வு மாநில அரசு ஊழியர்களுக்கும் தர வேண்டும். இவையனைத்தும் சேவைத்துறை சார்ந்தவை. ஆனால் உற்பத்தி சார்ந்த, தொழில் துறை மற்றும் வேளாண் துறை ஆகிய இரண்டிலும் உழைக்கும் மக்கள் ஊதியமும் வருவாயும் மிக மேசாமாக வெவ்வேறு வடிவங்களில் வெட்டிக் குறைக்கப்படுகின்றன. தொழில் துறையில் நிரந்தர தொழிலாளர்கள் எண்ணிக்கையை மிகவும் குறைவாக வைத்துக் கொண்டு குறைந்த கூலியில் ஒப்பந்த தொழிலாளர்களை பெருவாரியாக அமர்த்தி வேலை வாங்கும் முறை மேலோங்கிவருகிறது. தொழிலாளி வர்க்கத்தைக் கொல்லைப்புற வழியாக நுழைந்து சுரண்டும் இப்போக்கை அரசுத்துறை மேலும் மேலும் ஊக்குவிக்கிறது. தனியார் துறையில் நிலவும் ஒப்பந்த கூலிமுறை சொல்லும் தரமன்று. மாதம் 20,000 ரூபாய் சம்பளம் பெற வேண்டிய திறன் மிக்க தொழிலாளியை வெறும ரூ.4,000 அல்லது 5,000 ரூபாய்க்கு ஒப்பந்தக் கூலியாக வைத்துக் கொள்கிறார்கள. பணம் காய்க்கும் மரம் என்று வர்ணிக்கப்படும் தகவல் தொழில்நுட்பத்துறையிலேயே 'அமர்த்து பிறகு துரத்து' (Hire and fire) என்ற வகையில் திறன்மிக்க ஊழியர்களுக்கு குறைந்த கூலி தருகிறார்கள். வேலை நிரந்தரம் செய்யவும் மறுக்கிறார்கள்.
 
வேளாண் துறையில் நெல், கோதுமை, கரும்பு, வாழை, பருத்தி, பயறு, நிலக்கடலை, எள், உளுந்து, காய்கறி, போன்ற உற்பத்தி பொருட்களுக்கு லாப விலை வழங்கியதே கிடையாது. கட்டுபடியான விலை கூட அளித்ததில்லை. இப்பொழுது வரவுள்ள ஊதிய உயர்வும், பங்குச்சந்தை சூதாட்டமும் சந்தைத் திறனை சேவைத்துறை சார்ந்ததாக மாற்றி விடும். அதை எதிர்கொள்ளும் ஆற்றல், உற்பத்தி துறையில் உழைக்கும் மக்களுக்கு இல்லாமல் போய்விடும்.
எடுத்துக்காட்டாக, இப்பொழுது பரிந்துரைக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு விகிதத்திற்கு ஏற்ற விலையை நிர்ணயப்பிது என்றால் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ. 2500/- தர வேண்டும். அவ்வாறு தந்தால் தான் அந்நெல்லை உற்பத்தி செய்த உழவர் சந்தையை எதிர் கொண்டு வாழ்க்கைத் தரத்தை பாதுகாக்க முடியும். அதே போல் அந்நெல்லை உற்பத்தி செய்யப் பாடுபட்ட உழவுத் தொழிலாளியின் நாள் சம்பளம் இன்றுள்ளதை போல் இருமடங்கு உயர வேண்டும். பிரமிடு வடிவிலான பொருளாதாரம் மேலும் வளர்ந்து, பலர் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய அல்லாடும் நிலையும் சிலர் சமூக உற்பத்தியின் பெரும் பகுதியைக் கவர்ந்து கொள்ளும் உச்சி வாழ்வும் பெறுவர்.
 
விலைவாசி உயர்வு பன்மடங்காகும். அதன் பலன் அப்பண்டங்களை உற்பத்தி செய்தவர்களுக்குப் போய்ச் சேராது. பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஊக பேர பெரு வணிகர்களுக்கும் மட்டுமே விலைவாசி உயர்வால் வரும் பெரு நிதியம் போய்ச் சேரும். பண வீக்கம், வீக்கம் என்ற நிலையைத் தாண்டி பூதமாகப் பெருக்கும். சேவைத்துறை சார்ந்த இந்த ஊதியப் பெருக்கம் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் பெறும் இலஞ்சத் தொகையின் அளவையும் பன்மடங்காக்கும். ஊழியர்களின் மனதையும் பண்பையும் கறைப்படுத்தும். எனவே, இப்பொழுது உற்பத்தித் துறை சார்ந்த உழைப்பாளிகள் குரல் கொடுக்க வேண்டியது,
பரிந்துரைக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வைக் குறைக்க வேண்டும் என்பதற்கல்ல. மாறாக வேளாண் துறை உற்பத்தி பொருட்களுக்கு சந்தை நிலவரப்படியான இலாப விலை, உழவுத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு, ஆலைத் தொழிலாளிகளுக்கு - நிரந்தர தொழிலாளர்களாக இருந்தாலும், ஒப்பந்தத் தொழிலாளர்களாக இருந்தாலும் புதிய சந்தையை எதிர் கொள்ளும் அளவிற்குச் சம்பள உயர்வு ஆகியவற்றைக் கோரிப் போராடுவதே இன்றைய உடனடித் தேவை. ஒவ்வொரு துறை சார்ந்த உழைக்கும் மக்களும் தங்கள் உற்பத்திப் பொருட்களுக்கான விலை, உழைப்பிற்கான சம்பளம் ஆகியவற்றைப் புதிதாக நிர்ணயம் செய்து தாங்களே அறிவிக்க வேண்டும். அவ்வாறு நிர்ணயம் செய்து கொள்ள அந்தந்தப் பிரிவு உழைக்கும் மக்களும் தங்களுக்கான வல்லுநர் குழுவை அமைத்து மூன்று மாதஙகளுக்குள் முடிவு செய்து விலை உயர்வு அல்லது சம்பள உயர்வுக்கான பட்டியலை வெளியிட்டு அதை அடைவதற்காகப் போராட்டத்தைத் தொடங்க வேண்டும். இப்போராட்டத்தில் ஒருவருக்கொருவர் உறுதுணையாய் பங்கெடுக்க வேண்டும் என்று தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
 
தோழமையுடன்,
பெ.மணியரசன்
பொதுச் செயலாளர்
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி

Friday, March 21, 2008

சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்திய அரசே!
 
ஈழத் தமிழர்கள் உன் பகைவர்களா?
சிங்களர்கள் உன் பங்காளியா?
ஈழத்தமிழர்களை கொல்ல ஆயுதம் வழங்குவது ஏன்?
 
இந்திய அரசைக் கண்டித்து
அனைத்து தமிழர் அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்
 
நாள் : 22-03-2008     நேரம் : மாலை 5.00 மணிக்கு
இடம் : மெமேரியல் ஹால் சென்னை
 
அழைக்கிறது
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி
சென்னை
 

Saturday, March 8, 2008

மக்கள் விரோத – மாநில விரோத வரவு செலவுத்திட்டம் - பெ.மணியரசன்

மக்கள் விரோத – மாநில விரோத வரவு செலவுத்திட்டம்
பன்னாட்டு முதலாளிகளின் கொற்றம்
பெ.மணியரசன் கண்டன அறிக்கை
 
நிதியமைச்சர் ப.சிதம்பரம் முன்வைத்துள்ள 2008-2009 க்கான வரவு செலவுத்திட்டத்தைப் பற்றி ஒற்ற வரியில் சொல்வதென்றால் "நிகழ்காலத்தை ஒப்பேற்ற எதிர்காலத்தை எரிக்கும் திட்டம்" என்று கூறலாம். அறுபதாயிரம் கோடி ரூபாய்க்கு உழவர்களின் கடனைத் தள்ளுபடி செய்யும் அவரது திட்டம் வாய்ப்பந்தலாக உள்ளதே தவிர, அதற்காக ஒரு காசு கூட நிதி ஒதுக்கவில்லை. இது பற்றி கேட்ட போது, "இதற்கு நிதியேற்பாட்டை வரும் மூண்றாண்டுகளுக்குள் செய்து முடிப்போம்"  என்று முதலில் சொன்னார். பிறகு, "குறிப்பிட்ட காலத்திற்குள் இத்தொகையை வங்கிகளுக்கு ஈடுசெய்வோம். அதற்கான கலைத்திறன் என்னிடம் உள்ளது" என்றார். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருக்குமா? ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருப்பாரா? அடுத்த ஆண்டு மக்களவைக்கு தேர்தல் ஆண்டு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏற்கெனவே ஒரு வரவு செலவுத் திட்டத்தில் சென்னைக்குக் கடல்நீரைக் குடிநீராக்க ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்தார். ஒரு காசு கூட அதற்காக ஒதுக்கவில்லை என்று அப்போதிருந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்து, மறுக்க முடியுமா என்று அறைகூவலும் விட்டார். கடல்நீரைக் குடிநீராக்கும் சென்னைத் திட்டத்திற்கு, இந்த வரவு – செலவு முன்மொழிவில் தான் ரூபாய் முந்நூறு கோடி ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பே, அவர் ஏற்கெனவே ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கவில்லை என்பதற்கான சான்று.

தொகை ஒதுக்காமலேயே அறுபதாயிரம் கோடி ரூபாய்க் கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் போல் ஆகிவிடக்கூடாது. இரண்டு எக்டேர் (5 ஏக்கர் கூட அல்ல. அதற்கும் கீழே) வரை நிலம் கொண்டுள்ள சிறு, குறு உழவர்களின் கடன்கள் தான் தள்ளுபடி செய்யப்படும் என்கிறார். மெய்யான துயர் தணிப்பு, எல்லா உழவர் கடனையும் தள்ளுபடி செய்வதாகும். மராட்டியத்தில் விதர்பா பகுதியில் தான் அதிக எண்ணிக்கையில் பருத்தி உழவர்கள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார்கள். விதர்பா ஜன அந்தோலன் என்ற அமைப்பின் தலைவர் கிசோர் திவாரி, உழவர் தற்கொலை மிகுந்துள்ள ஆறு விதர்பா மாவட்டங்களில் இக்கடன் தள்ளுபடி பயன் அளிக்காது. சாதாரணமாக, ஆறு அல்லது ஏழு ஏக்கர் நிலம் உள்ளவர்கள் அங்கு  மிகுதி என்கிறார். இரண்டு எக்கேருக்கு மேல் நிலம் உள்ள உழவர்கள் கடனில் அசல் வட்டி  இரண்டையும் சேர்த்து 75 விழுக்காடு செலுத்தினால் 25 விழுக்காடு தள்ளுபடி ஆகும் என்கிறார். வட்டியைக்கூட தள்ளுபடி செய்யாத இந்த ஏற்பாடு வசூல் தந்திரம் தவிர வேறு அல்ல. ஒரே நேரத்தில் கடன் தீர்க்கும் திட்டத்தின் கீழ் வணிக வங்கிகள் ஏற்கெனவே இவ்வாறான சலுகைகள்  வழங்கி வருகின்றன. உழவர் உற்பத்திப் பொருட்களுக்கு இலாபவிலை கிடைக்கவும், சந்தை வாய்ப்பு பெருகவும் எந்த ஏற்பாட்டையும், இந்த வரவு செலவுத் திட்டம் முன்வைக்கவில்லை. அது மட்டுமல்ல, பன்னாட்டு நிறுவனங்கள் நம் தாயாகிய விலைநிலங்களை, பூச்சி மருந்து உரம் வேதிப்பொருட்களால் நஞ்சாக்கி, மலடாக்கிவிட்டனர். மான்சாண்டோ போன்ற உயிர் கொல்லி  நிறுவனங்கள் மரபீனி மாற்று விதைகளைக் கொண்டு வந்து, மரபுவழிப்பட்ட விதைகளை அழித்து, நீடித்து விளைச்சல் தராத புதிய விதைகளைக் கொடுத்து, உழவர்களை ஓட்டாண்டி ஆக்கிவிட்டனர். இந்தக் கொள்ளை நோயைத் தடுக்கவும், வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு இலாப விலை கிடைக்கவும் துரும்பைக் கூட அசைக்கவில்லை. சோனியா –
மன்மோகன் புகழ்ந்து தள்ளும் சிதம்பரம் வரவு செலவுத் திட்டம் இது.

சிறப்புப் பொருளியல் மண்டலங்களுக்காக, விளை நிலங்களை அபகரித்து, கிராமங்களைக் காலி செய்யும் பன்னாட்டுப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த எந்த முன்மொழிவையும் இத்திட்டம் கூறவில்லை. நாட்டின் பொருளியல் வளர்ச்சி அடைந்து வருவதாகப் போலித் தோற்றம் காட்டி வந்த மன்மோகன்- ப.சிதம்பரம் வாய்வீச்சு இந்த வரவு செலவுத் திட்டத்தில் அம்மணமாக அம்பலமாகிவிட்டது. இந்த ஆண்டு செலவில், மிக அதிக விகிதத்தைப் பெற்றிருப்பது நடுவண் அரசின் திட்டங்களோ மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் வரிப் பங்குத்தொகைகளோ அல்ல. நடுவண் அரசு கட்ட வேண்டிய வட்டித் தொகை தான் அது! மொத்தச் செலவில் 21 விழுக்காடு வட்டி செலுத்த மட்டுமே போகிறது. அசலைக் கட்டுவதற்கான அறிகுறி தொடுவானத்திற்கப்பால் கூட தெரியவில்லை. அத்துடன் புதுக்கடன் இவ்வாண்டு ஏராளமாகத் திரட்டப்போகிறார்கள். மொத்த வரவில் 14 விழுக்காடு கடன் வாங்குவதன் மூலம் வரும் தொகையாகும். ஆனால் உண்மையில் 14 விழுக்காட்டிற்கும் மேல் பல்லாயிரம் கோடி கடன் வாங்க உள்ளார். கடன் என்று சொல்லாமல் "சந்தை நிலை நிறுத்தல் திட்டம்" (Market stabilisation Scheme) என்று அக்கடன் வரவுக்குப்
புதுப்பெயர் சூட்டியுள்ளார்.

இந்திட்டத்தின்படி ரூ.13,958 கோடி கடன் திரட்டுகிறார். இஃதன்னியில் எண்ணெய் நிறுவனக்கடன் பத்திரங்கள் மூலம் ரூ.5519 கோடியும், உணவுக்கழக கடன் பத்திரங்கள் மூலம் ரூ.1319 கோடியும் திரட்டுவது வேறு. இவையனைத்தும் கடன் வரவில் காட்டப்படவில்லை ஓட்டு மொத்த நிதிப்பற்றாக்குறை என்று அவர் கணக்குக் காட்டியிருப்பது ரூ.1,33,287 கோடியாகும். உண்மையான பற்றாக்குறை இதைவிடக் கூடுதலாகும். வேளாண்கடன் தள்ளுபடிக்கு ரூ.60,000 கோடி நிதி ஒதுக்கப்படாததால், அத்தொகைiயும் பற்றாக்குறையில் சேர்க்க வேண்டும். அதே போல் நடுவண் அரசு ஊழியர் 6வது சம்பளக் குழு பரிந்துரைப்படி தரவேண்டிய ஊதிய உயர்வு மட்டும் ரூ.30 ஆயிரம் கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான ஒதுக்கீடு செலவு திட்டத்தில் காட்டப்படவில்லை. இவ்விரு தொகைகளையும் சேர்த்தால் ரூ.90,0000 கோடி ரூபாய் பற்றாக்குறை வருகிறது. அதாவது கண்ணுக்குத் தெரிந்த பற்றாக்குறை ரூ.1,33,2887 + ரூ.90,000 = ரூ.2,23,287 கோடி. இவ்வளவு பற்றாக்குறையையும் எப்படி ஈடுகட்டப் போகிறார்கள். கடன்வாங்கியும், அரசுத்துறை உற்பத்திப் பொருட்களின் விலையை உயர்த்தியும், புதுவரிகளைக் கண்டுபிடித்தும், வரி உயர்வு செய்தும்,
கணக்கை மீறி ரூபாய்த் தாள்களை அச்சிட்டும் தான் ஈடுகட்டப் போகிறாhர்கள். விலை உயர்வு, பணவீக்கம், பொருளியல் மந்த நிலை என்பவை தான் இதனால் உண்டாகும்.

மருத்துவ நலத்திட்டங்களுக்கு கடந்த ஆண்ட விட 15 விழுக்காடு நிதி அதிகமாக
ஒதுக்கிவிட்டதாக ப.சிதம்பரம் தம்பட்டம் அடிக்கிறார். தனியார் மருத்துவமனைகளுக்குச் சலுகைகளை வாரி வழங்கியுள்ளார். கிராமப்புறங்களில் அமைக்கப்படும் தனியார் பன்முகச்சிறப்பு மருத்துவமனைகளுக்கு (Mutlti speciality Hospitals) ஐந்தாண்டுகளுக்கு வரி ஏதும் கிடையாது. இவை உண்மையில் மையக்கிராமப் பகுதிகளில் அமையாது. மாநகராட்சி, நகராட்சியை ஒட்டியுள்ள கிராமத்தில் மருத்துவமனையை
நிறுவிக்கொண்டு, வரிவிலக்குப் பெறுவார்கள். அவ்வாறான மருத்துவமனைகள் ஏற்கனவே நோயாளிகளைக் கொள்ளையடிப்பது நாடறிந்த உண்மை.

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தலங்களில், நட்சத்திரவிடுதிகள் கட்டும்,  முதலாளிகளுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு வரி கிடையாது என்கிறார் ப.சிதம்பரம். ஆனால் அதே கிராமப்பகுதியில் ஐந்து ஏக்கர் நிலம் உள்ள ஏழை உழவனுக்கு வட்டித் தள்ளுபடி செய்யக்கூட மறுக்கிறார். கிராமப்புறங்களில் மருத்துவமனை, நட்சத்திர விடுதி என்று இந்திய முதலாளிகளும், பன்னாட்டு முதலாளிகளையும் அனுமதிப்பதன் மூலம் மனைத்தொழில் இறக்கை கட்டிப்பறக்கப் போகிறது. 2007 சனவரி முதல் மனைத் தொழிலில் (Real Estate) நூற்றுக்கு நூறு வெளிநாட்டு முதலாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் நுழையும் வெளிநாட்டு மூலதனத்தில் 2003-04 இல் 4.5
விழுக்காடாக இருந்த மனைத்தொழில் மூலதனம் 2006-2007-இல் 26 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்ற விவரம், அபாயத்தின் தீவிரத்தை உணர்த்தும். தங்கள் தாய் மண்ணை இழந்து, நாடோடிகளாக நம்மக்கள் மாறுவர். மனைத்தொழிலில் ஒரு சில ஆண்டுகளில் 130 மடங்கு வரை லாபம் கிடைக்கிறது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.(செமினார் ஆங்கில இதழ், 2008 பிப்ரவரி - ஸ்ரீவத்சவா, பக்கம் 60) மார்க்கன் ஸ்டேன்லி, ப்ளாக் ஸ்டோன் நிறுவனங்கள் பல்லாயிரம் கோடி டாலர்களை கடந்த சில
மாதங்களில் இந்திய ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்துள்ளன.(ASSOCHAM  அறிக்கை -2007)

இந்த வரவு – செலவுத்திட்டத்தில் சிறுகார், இருசக்கர தானியங்கி வாகனங்கள் ஆகியவற்றிகு 4% வரி குறைக்கப்பட்டுள்ளது. சிங்கூர் டாட்டா சிறுகார் உற்பத்திக்கு ஒரு விழுக்காடு வட்டியில் கடன் தருகிறார்கள். பத்தாண்டுகளுக்கு மதிப்புக்கூட்டு வரிவதிப்பில்லை என்று விலக்கு அளித்துள்ளார்கள். உழவர்களிடம் 7 விழுக்காடு வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது. படைத்துறைக்கான செலவு 1 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. ரூ 1,05,600 கோடியை ஒதுக்கியுள்ளார். கடந்த ஆண்டு (2007-2008) ஒதுக்கிய ரூ. 96,000 கோடியில் ரூ.4,217 கோடி செலவு செய்யப்படாமலேயே உள்ளது.   அந்த நிலையில், இவ்வாண்டு இன்னும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. வருமானவரி, மதிப்புக் கூட்டு வரி, உற்பத்தி வரி ஆகியவற்றில் சில இனங்களில் வரியைக்
குறைத்துள்ளார். அதே வேளை கம்பெனி வருமானவரியைக் (Corporate Tax) குறைக்கவே இல்லை. காரணம், முன்னவை மாநிலங்களுக்கும் பங்கு கொடுக்கப்படவேண்டியவை. கம்பெனி வருமானவரி, அதற்கென துணை வரி ஆகியவற்றில் மாநிலஙக்ளுக்கு எந்தப் பங்குத்தொகையும் கிடையாது. மொத்த வரி வருமானத்தில் கம்பெனி வருமானவரி தான் மிக அதிக விகிதம் கொண்டது. அது 24 விழுக்காடாகும். மாநிலங்கள் மேலும்  மேலும் இந்திய அரசை நோக்கி பிச்சைப்பாத்திரம் ஏந்தும் நிலையிலேயே
வைக்கப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கு வரிப்பங்கீட்டில் கூடுதல் தொகை ஒதுக்குவதுடன், கம்பெனி வருமானவரியில் குறைந்தது 50 விழுக்காடாவது ஒதுக்க வேண்டும். நேரடியான மக்கள் நலத்திட்டங்களான, கல்வி, நலத்துறை, வேளாண்துறை, சாலை வசதி போன்றவற்றை செயல்படுத்துபவை மாநிலங்களே.

பொருளியல் வளர்ச்சி (GDP) நடப்பாண்டில் (2007-2008) 10 விழுக்காடு வரும் என்று
கூறிக்கொண்டிருந்தனர் மன்மோகனும் சிதம்பரமும். அது கடந்த ஆண்டை விடவும் குறைந்து 8.7 விழுக்காடு தான் வந்துள்ளது. இதில், வேளாண் உற்பத்தியின் பங்களிப்பு வெறும் 2.6 விழுக்காடு மட்டுமே. கடந்த ஆண்டு (2007-2008) உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) 9.4. சுருக்கமாகச் சொன்னால் திரு ப.சிதம்பரம் முன்வைத்துள்ளது மக்கள் விரோத – மாநில விரோத வரவு செலவுத் திட்டம். பன்னாட்டு முதலாளிகளுக்கான திட்டம் இது. இந்தியப் பெருளாதாரதத்தை மேலும் திவாலாக்கும். இந்த வரவு செலவுத் திட்டத்தை தேர்தல் கண்ணோட்டத்துடன் போடப்பட்ட திட்டம் என்று எதிர்க்கட்சிகள் திறனாய்வு செய்தது காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக பாராட்டும் செயலாகவே அமையும். வாக்கு வாங்கும் நோக்கில் மக்களுக்கு வாரி வழங்கியுள்ளதாக பொருள் படும். ஆனால் இது முழுக்க முழுக்க மக்கள் விரோத வரவு செலவுத் திட்டம்.
அனைத்துக்கட்சிகளும் இத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் எதிர்த்து முறியடிக்க வேண்டும். புதிய மாற்றுத் திட்டத்திற்கு முன்மொழிவுகள் வைக்க வேண்டும்.
 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT