உடனடிச்செய்திகள்

Sunday, April 29, 2012

தமிழ்த் தேசிய எழுச்சி நாளாக மே நாளைக் கடைபிடிப்போம் - தமிழகமெங்கும் த.தே.பொ.க. மே நாள் நிகழ்வுகள்!

தமிழ்த் தேசிய எழுச்சி நாளாக மே நாளைக் கடைபிடிப்போம்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் மே நாள் வாழ்த்துச் செய்தி!

ஆண்டைகள் பூட்டிய அடிமை விலங்குகளை உடைத்தெறிந்த உழைக்கும் மக்களை மீண்டும் அடிமைப்படுத்த புதிய முறையில் சட்டதிட்டங்களை இயற்றிக் கொண்டார்கள் ஆளும் வர்க்கத்தினர். அந்தப் புதிய அடிமைத் தளைகளை அறுத்தெறிய 19ஆம் நூற்றாண்டில் பாய்ந்தெழுந்த பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சி நாள் மே நாள். அதன் பிறகு மே நாள் என்பது ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் நாளாக மட்டுமின்றி ஒடுக்கபட்ட தேசிய இனங்களின் எழுச்சி நாளாகவும் ஆகிவிட்டது. இந்த மே நாளில் தமிழ்த் தேசிய எழுச்சிக்கும் விடுதலைக்கும் சூளுரைப்போம்!

 தமிழகமெங்கும் த.தே.பொ.க. சார்பில் மே நாள் கொடியேற்று விழாக்கள்!

உழைக்கும் மக்களுக்கு 8 மணி நேர வேலை உள்ளிட்ட பல்வேறு உரிமைகளைப் பெற்றுத்தந்த போர்க்குணமிக்க மே நாள் போராட்டங்களை நினைவு கூறும் வகையிலும், தமிழ்த் தேச விடுதலைக்கு தமிழ்த் தேசப் பாட்டாளிகள் உறுதியேற்க வேண்டுமென வலியுறுத்தியும்  தமிழகமெங்கும் மே-1ல் கொடியேற்றி மேநாளை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது.


சென்னை

சென்னை த.தே.பொ.க. தலைமை அலுவலகம் அமைந்துள்ள தியாகராயர் நகர் முத்துரங்கம் சாலையில், காலை 9 மணியளவில் மே நாள் கொடியேற்று விழா நடைபெறுகிறது. த.தே.பொ.க. தலைவைர் தோழர் பெ.மணியரசன் கட்சியின் கொடியேற்றி மே நாள் உரை நிகழ்த்துகிறார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழா பழ.நல்.ஆறுமுகம், தாம்பரம் கிளைச் செயலாளர் தோழா தமிழ்க்கனல் உள்ளிட்டோர் உரையாற்றுக்கின்றனர்.

 

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி நீதிமன்றம் அருகில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் காலை 9 மணியளவில் நடைபெறும் நிகழ்வில், த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கலந்து கொண்டு த.தே.பொ.க. கொடியேற்றி வைத்து உரை நிகழ்த்துகிறார். நிகழ்வுக்கு, திருத்துறைப்பூண்டி த.தே.பொ.க. ஒன்றியச் செயலாளர் தோழர் அ.தனபால் தலைமையேற்கிறார்.


வேதாரணியம்

வேதாரணியம் வட்டம் கடினல்வயலில் விம்கோ உப்புத் தொழிலாளர் சங்கம் சார்பில் மே தின கொடியேற்று விழா நடைபெறுகின்றது. சங்கச் செயலாளர் தோழர் இரெ.தியாகராசன் நிகழ்வுக்குத் தலைமையேற்கிறார். பன்னாள் கிராமத்திலிருந்து தொடங்கும் தொழிலாளர்கள் பேரணி சற்றொப்ப 5 கிலோ மீட்டர் நடந்து கடினல்வயல் விம்கோ  உப்புத் தொழிற்சாலை வாயில் நிறைவடைகிறது. அங்கு நடைபெறும் நிகழ்வில், த.தே.பொ.க. பொதுச் செயலாளரும், தொழிலாளர் சங்கத் தலைவருமான தோழர் கி.வெங்கட்ராமன்  தொழிற்சங்கக் கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்துகிறார்.


தஞ்சை நகரம்

தஞ்சை த.தே.பொ.க. கட்சி அலுவலகத்தில் காலை 9 மணிக்கு தொடங்கும் மே நாள் கொடியேற்று நிகழ்வைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி, கலைஞர் நகர், முனியாண்டவர் காலனி, பூக்கார லாயம், கோரிக்குளம், ரெங்கநாதபுரம், இந்திரா நகர், அண்ணா நகர் 7ஆம் தெரு, முதல் தெரு, வடக்குவாசல், தஞ்சை பழைய பேருந்து நிலையம் பழக்கடை உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியாக கொடியேற்ற விழாக்கள் நடைபெறுகின்ற. த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் நா.வைகறை, தோழர் பழ.இராசேந்திரன், நகரச் செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி, நகரத் துணைச் செயலாளர் தோழர் தமிழ்ச்செல்வன், தமிழக இளைஞர் முன்னணி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ரெ.சிவராசு ஆகியோர் கொடியேற்றி வைக்கின்றனர்.


தஞ்சை ஒன்றியம்

தஞ்சை ஒன்றியம் வல்லம் கடைவீதி அண்ணா சிலை அருகில் மே நாள் கொடியேற்றுவிழா மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் பி.முருகையன் தலைமையில் நடைபெறும். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன் கொடியேற்றி மே நாள் உரைநிகழ்த்துகிறார்.

 

பூதலூர் ஒன்றியம்

தஞ்சை வட்டம் பூதலூர் இரயிலடியில் காலை 8 மணியளில் நடைபெறும், மே நாள் கொடியேற்று நிகழ்வுக்கு த.தே.பொ.க. ஒன்றியச் செயலாளர் தோழர் காமராசு தலைமையேற்கிறார். த.தே.பொ.க. மாவட்டச் செயற்குழு தோழர் ரெ.கருணாநிதி த.இ.மு. செயலாளர் தோழர் கே.செந்தில்குமார் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.அதனைத் தொடர்ந்து ஒன்றியத்தில் 30க்கும் மேற்ப் பட்ட கிராமங்களில் தொடச்சியாக மாலைவரை கட்சிக் கொடியும், தமிழக இளைஞர் முன்னணி கொடியும் ஏற்றப் பட்டு மே நாள் தெருமுனைக் கூட்டங்கள் நடைப் பெறும்.

 

செங்கிப்பட்டியில் மாலை 6 மணியளவில் நடைபெறும் சாணுரப்பட்டி தானிஓட்டுனர் சங்க மே நாள் கொடியேற்று நிகழ்விற்கு, சங்கச் செயலாளரும் த.இ.மு. பொறுப்பாளருமான தோழர் தட்சிணாமூர்த்தி தலைமையேற்கிறார். மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிர் த.பானுமதி கொடியேற்றி வைத்து, பின்னர் அங்கு த.தே.பொ.க. நடத்தும் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார். நிகழ்வில், த.தே.பொ.க. கிளைச் செயலாளர் தோழர் கருப்பசாமி, தோழர் இரமேசு, தோழர் கு.சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

 

மதுரை

மதுரை மாவட்டம் செல்லூர் - தாகூர் நகரில் காலை 9 மணியளவில் நடைபெறும் மே நாள் கொடியேற்ற நிகழ்வுக்கு, த.தே.பொ.க. செயலாளர் தோழர் இராசு தலைமையேற்கிறார். சித்திரை வீதி தானி ஓட்டுநர் சங்கச் செயலாளர் தோழர் இராசேந்திரன் த.தே.பொ.க. கொடியேற்றி வைக்கிறார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சு.அருணாச்சலம், மகளிர் ஆயம் பொறுப்பாளர்கள் தோழர் மேரி,தோழர் இளமதி, தோழர் செரபினா உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.

 

கோவை

கோவை பேரூர் சாலையிலுள்ள செட்டி வீதி அருகில், காலை 10 மணியளவில் நடைபெறும் மே நாள் கொடியேற்று விழாவிற்கு தலைமையேற்கும், தமிழக இளைஞர் முன்னணி  பெரியக்கடை வீதி கிளைச் செயலாளர் தோழர் இரா.கண்ணன், த.தே.பொ.க. கொடியேற்றி வைக்கிறார். காலை 11.30 மணியளவில் எல்.ஐ.சி. குடியிருப்பு பகுதியில் நடைபெறும் மே தினக் கொடியேற்று நிகழ்விற்கு, செல்வபுரம் த.இ.மு. கிளைச் செயலாளர் தோழர் பிறை.சுரேசு தலைமை தாங்கி, த.இ.மு. கொடியேற்றி வைக்கிறார். த.இ.மு. மாநகரச் செயலாளர் தோழர் பா.சங்கர் மற்றும் கட்சிப் பொறுப்பாளர்கள் மே நாள் உரை நிகழ்த்துவார்கள்.

 

சிதம்பரம்

சிதம்பரம் காசுக்கடைத் தெருவில் காலை 8.30 மணியளவில் நடக்கும் கொடியேற்று விழாவிற்கு, த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் கொடியேற்றி வைக்கிறார். தமிழக இளைஞர் முன்னணி நகரச் செயலாளர் ஆ.குபேரன் தலைமை தாங்குகிறார்.


ஈரோடு

கருங்கல்பாளையம் பச்சியம்மன கோயில் வீதியில் காலை 9 மணியளவில் நடைபெறும் மே நாள் கொடியேறறு விழா நிகழ்விற்கு, த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் குமரேசன் தலைமையேற்கிறார். த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் இராசையா கருத்துரை வழங்குகிறார். த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் வெ.இளங்கோவன் கொடியேற்றி வைக்கிறார்.

 

பெண்ணாடம்

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மற்றும் முருகங்குடி பகுதிகளில் நடைப் பெறும் மே நாள் கொடியேற்று விழாவில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க.முருகன் தலைமையில் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் குழ.பால்ராசு த.தே.பொ.க கொடியேற்றி மே நாள் சிறப்புரையாற்றுகிறார்.

 

ஓசூர்

ஓசூர் கடைவீதி கட்சிக் கொடியை ஏற்றிவைத்து தலைமை செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து உரையாற்றுகிறார். கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் தோழர் நடவரசு தலைமையேற்கிறார்.

 

குடந்தை

குடந்தை, சுவாமிமலை ஆகிய ஊர்களில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் தோழர் விடுதலைச்சுடர் த.தே.பொ.க கொடியையும், பாபநாசத்தில் தமிழக இளைஞர் முன்னணி கொடியையும் ஏற்றிவைக்கிறார்.

 

திருச்சி

துவாக்குடியில் நடைபெறும் மே நாள் கொடியேற்று விழாவிற்கு செயலாளர் தோழர் கவித்துவன் தலைமைதாங்க வழக்கறிஞர் தோழர் த.பானுமதி த.தே.பொ.க கொடியேற்றி உரை நிகழ்த்துகிறார்.

 

திருச்செந்தூர்

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் கடைத் தெருவில் தோழர் உச்சிராசு தலைமையிலும், திருச்செந்தூர் தேரடி அருகில் தோழர் தமிழ்த்தேசியன் தலைமையிலும் நடைபெறும் மே நாள் விழாக்களில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் தோழர் மு.தமிழ்மணி த.தே.பொ.க கொடியேற்றி உரை நிகழ்த்துகிறார்.

 

இம் மே நாள் விழாக்களில் த.தே.பொ.க. தோழர்களும், தமிழ் உணர்வாளர்களும் திரளாகப் பங்கேற்று சிறப்பிக்குமாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது. 


தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தலைமைச் செயலகம், சென்னை-17.


Friday, April 27, 2012

செங்கல்பட்டு - பூந்தமல்லி தமிழீழ அகதிகள் முகாம்களை முடக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய கண்டன உரை..!

செங்கல்பட்டு - பூந்தமல்லி தமிழீழ அகதிகள் முகாம்களை முடக்கக்கோரி, தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில் 26-4-2012 அன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய கண்டன உரை..!

Tuesday, April 24, 2012

டி.கே.ரெங்கராசனுக்கு இவ்வாண்டு லங்கா ரத்னா விருது கிடைக்குமா? - பெ.மணியரசன் கேள்வி!

டி.கே.ரெங்கராசனுக்கு இவ்வாண்டு லங்கா ரத்னா விருது கிடைக்குமா?

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் கேள்வி!

 

இந்திய அரசால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குழுவில் சென்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே.ரெங்கராசன், சென்னையில் தனியே ஒரு செய்தியாளர் கூட்டம் நடத்தி 22.04.2012 அன்று செவ்வி கொடுத்துள்ளார். அதில், "இலங்கையில் உள்ள தமிழர் அமைப்புகள், தமிழர் அரசியல் தலைவர்கள், தமிழ்ப் பொதுமக்கள் யாரும் தனிஈழத்தை விரும்பவில்லை. ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஉரிமையுடன் கூடிய அரசியல் தீர்வையே விரும்புகின்றனர்" என்று கூறியுள்ளார்.

 

சிங்கள இனவெறி அரசு நடத்திய இன அழிப்புப் போரில் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அதன் பிறகு, தமிழர்களின் ஊர்களில் சிங்களர் குடியேற்றப்பட்டு, தமிழர்களின் வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இயல்பான குடிவாழ்க்கை வாழ முடியாமல் இராணுவத்தினர் தமிழர்கள் பகுதியெங்கும் நிரப்ப்ப்பட்டுள்ளனர். இராணுவத்தின் அனுமதியின்றி, திருமணச் சடங்குகள், இறப்புச் சடங்குகள் கூட நடத்த முடியாத கெடுபிடிகள் தொடர்கின்றன. மறுவாழ்விற்கான துயர் துடைப்புப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இலங்கை அரசு அமைத்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையம் அளித்த மனித உரிமை மீறல் குற்றம் புரிந்தோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிங்கள இனவெறியாட்டம் தொடர்கிறது.

 

இந்த அவலங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசை வலியுறுத்தாமல், தனி ஈழத்தைத் தமிழர்களே கோரவில்லை என்பதைக் கண்டறிந்ததாகக் கூறி, தமிழ்நாட்டுத் தமிழர்களையும், உலக சமுதாயத்தையும் குழப்புவதே இந்திய நாடாளுமன்றக் குழுவின் முதன்மையான நோக்கமாக இருந்திருக்கிறது.

 

ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கத் தீர்மானத்தைத் திருத்தத்துடன் ஆதரித்து வாக்களித்ததற்காக, இலங்கை இனவெறியன் இராசபட்சேயிடம் மன்னிப்புக் கேட்காதது மட்டும்தான் பாக்கி. மற்ற எல்லா விளக்கங்களையும் பணிந்து சொல்லிக் கொண்டுள்ளது இந்தியா. பிரதமர் மன்மோகன் சிங் விளக்கமளித்து இராசபட்சேக்கு மடல் எழுதினார்.

 

இவை எல்லாம் போதாதென்று ஒரு நல்லெண்ணத் தூதுக்குழுவாக, சுஷ்மா சுவராஜ் தலைமையில் நாடாளுமன்றக் குழுவை இந்தியா இலங்கைக்கு அனுப்பி வைத்தது. அந்தக் குழுவும் இந்திய அரசின் விருப்பத்தை அது எதிர்ப்பார்த்ததைத் தாண்டி நிறைவேற்றியுள்ளது.

 

ஈழத்தமிழர்கள் யாரும் தனிநாடு கோரவில்லை என்று கூறினார்கள் என்பது உண்மையெனில், ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் ஒரு கருத்து வாக்கெடுப்பு நடத்துமாறு, சுஷ்மா சுவராஜ் கோரியிருக்கலாம். டி.கே.ரெங்கராசனும், சுதர்சன நாச்சியப்பனும் கோரியிருக்கலாம்.

 

இன அழிப்பு செய்த இராணுவத்தின், 24 மணி நேர தீவிரக் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ள மக்கள் தங்கள் கருத்தைப் பகிரங்கமாக கூறும் நிலை ஈழத்தில் இல்லை. பரிவாரங்கள் இல்லாமல் தனித்தனியே மக்களைச் சந்தித்துக் கேட்டிருந்தால் அவர்கள் தங்கள் உள்ளக் கிடக்கையைச் சொல்லியிருப்பார்கள்.

 

தமிழ் ஈழ விடுதலைக்காகப் புலிப்படையில் சேர்ந்து 40 ஆயிரம் புலிகள் உயிரீகம் செய்துள்ளார்கள். மக்களின் கோரிக்கையாக, தனித் தமிழீழம் இல்லையென்றால், வீட்டுக்கொருவர், இருவர் என்று கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலிருந்தும் புலிப்படையில் சேர்ந்திருப்பார்களா? தமிழீழத் தேசியத் தலைவராகப் பிரபாகரன் அவர்களை மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்களா? முள்ளிவாய்க்கால் வரை அவருடன் இலட்சக்கணக்கான தமிழர்கள் வந்திருப்பார்களா? முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்ட போது அங்கும் புலிக்கொடி ஏற்றியிருப்பார்களா?

 

தமிழ்நாட்டிலிருந்து பலர் தமிழ் ஈழப்பகுதிகளுக்குப் போய் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் எந்தப் பரிவாரங்களும் இல்லாமல் தனித்தனியே தமிழர்களைச் சந்தித்து வருகிறார்கள். அப்போது, ஈழத்தமிழர்கள் சொன்னது "இனி மேலும் சிங்களன்களோடு வாழ முடியாது. நாட்டு விடுதலை ஒன்று தான் ஒரே தீர்வு" என்பது தான்.

 

ஈழத்தில் பகிரங்கமாக விடுதலைக் கருத்தைக் கூறமுடியாத நெருக்கடி இருப்பதால், புலம் பெயர்ந்த நாடுகளில் தான், ஈழவிடுதலை இலட்சிணம் இப்பொழுது முன்னெடுக்கப்படுகிறது. ஏனெனில், அந்நாடுகளில்தான் ஈழத்தமிழர்கள் சுதந்திரமாகக் கருத்துக் கூறும் நிலை உள்ளது.

 

ஈழத்தில் இருக்கும் இராணுவ நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு, டி.கே.ரெங்கராசன், தமிழ் ஈழத்தைத் தமிழர்கள் விரும்பவில்லை என்று கூறுகிறார். இது இராணுவம் கருத்துரிமையைப் பறித்ததற்குச் சமமான கருத்துரிமைப் பறிப்பாகும். இதற்காக இவ்வாண்டிற்குரிய லங்கா ரத்னா விருது டி.கே.ரெங்கராசனுக்குக் கிடைத்தாலும் கிடைக்கலாம்.

 

ஒன்றுபட்ட இலங்கைக்குள் சம உரிமையுடன் வாழவிரும்புகிறார்கள் என்று கூறும் ரெங்கராசன் அந்த சமஉரிமையைப் பெற்றுத்தர அவரது கட்சி என்ன செய்கிறது? அதற்காக இந்தியா என்ன செய்கிறது?

 

சமஉரிமை என்ற கானல் நீரைக்காட்டி, ஈழத்தமிழர்களின் விடுதலை தாகத்தைத் தணிக்கச் சொல்லி மடைமாற்றுவதே இந்தியாவின் தந்திரம்! சி.பி.எம். கட்சியின் தந்திரமும் அதுவே. ஈழத்தமிழர்கள் ஏமாறமாட்டார்கள். தமிழகத் தமிழர்கள் குழம்ப வேண்டாம்.


தோழமையுள்ள,

பெ.மணியரசன்

தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


இடம் சென்னை 

நாள் 25.04.2012


Monday, April 16, 2012

கூடங்குளம் அணுஉலைச் சிக்கலில் தொடரும் சி.பி.எம்.மின் பித்தலாட்டம் - த.தே.பொ.க. அறிக்கை!

கூடங்குளம் அணுஉலை:

தொடரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பித்தலாட்டம்!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அறிக்கை!

 


கூடங்குளம் அணுஉலைத் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிற பித்தலாட்ட நாடகம் தொழில்முறைப் பொய்யர்களைக் கூடப்பின்னுக்குத் தள்ளி விடும்.

 

அண்மையில், கோழிக்கோட்டில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அனைத்திந்திய மாநாட்டில் தொடக்க உரையாற்றிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூடங்குளம் அணுஉலைத் திறப்பதை தாங்கள் ஆதரிப்பதற்கான 'விசித்திரமான' காரணத்தை  முன்வைத்தார்.

 

"செய்தாப்பூர் அணுஉலை என்பது தனியார் நிறுவனத்தின் அணுஉலை என்பதாலும், அமெரிக்க அணு ஆயுதத் திட்டத்தோடு இந்தியாவை இணைக்கும் என்பதாலும் செய்தாப்பூர் அணஉலையை சிபி.எம். எதிர்த்த்து. ஆனால் கூடங்குளம் அணுஉலைத் திட்டம் அப்படியானதல்ல. இது சோசலிச சோவியத் ஒன்றியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம். எனவேதான் கூடங்குளம் அணுஉலைத் திட்டத்தை நாம் ஆதரித்தோம்" என்று அவர் பேசியுள்ளார்.

 

அணுஉலையிலும் அதில் வெளியிடும் அணுக்கதிரியக்கத்திலும் தத்துவ வேறுபாடு எதுவுமில்லை. கம்யூனிஸ்ட்டுகளின் அணுஉலை அணுக்கதிரியக்கத்தை வெளிப்படுத்தாது, முதலாளிய அணுஉலை தான் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் என நம்புவதற்கு அறிவியல் அடிப்படை எதுவுமில்லை. யார் நிறுவினாலும் அணுஉலை அணுஉலை தான். தீமை விளைவிப்பவை தான்.

 

மேலும், பிரகாஷ் காரத் சொல்லுவது போல் இப்போது கூடங்குளத்தில் நிறுவப்படும் அணுஉலை கம்யூனிஸ்ட் சோவியத் ஒன்றியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலானது அல்ல. 1988இல் சோவியத் ஒன்றியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் அந்நாடு சிதறுண்டதுடன் காலாவதியானது. எனவே, பொதுவுடைமையைக் கைவிட்டு முதலாளியத்திற்குத் திரும்பிய இரசிய நாட்டுடன் 2001ஆம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமே கூடங்குளம் அணுஉலை ஒப்பந்தமாகும்.

 

அதை செயல்படுத்தும் இப்போதைய இரசியக் குடியரசுத் தலைவர் புடின், இரசியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கென்னடி குயனைவ் அவர்களை தோற்கடித்து பதவிக்கு வந்தவராவார். அவருடைய ஆட்சி தான் கூடங்குளம் அணுஉலையை செயல்படுத்தப் போகிறது. எனவே, பிரகாஷ் காரத் குறிப்பிடுவதைப் போல் கூடங்குளம் அணுஉலையோடு கம்யூனிஸ்ட் கட்சி ஒட்டிக் கொண்டிருக்கவில்லை.

 

கூடங்குளம் அணுஉலையை ஆதரிப்பதற்கு அப்பட்டமான பொய்யையும், அறிவியலுக்குப் புறம்பான செய்திகளையும் துணைக் கொள்கிறார் பிரகாஷ் காரத்.

 

காரத்துக்கு முன்னால் சி.பி.எம். கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன் தங்கள் கூடங்குளம் அணுஉலை ஆதரவுக்கு வேறொரு காரணத்தைச் சொன்னார். அக்கட்சியின் தமிழக மாநில மாநாடு நாகப்பட்டினத்தில் நடந்த போது, சிறப்புரையாற்றிய ஜி.இராமகிருஷ்ணன், "கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள வி.வி.இ.ஆர். 1000 என்ற இரசிய அணுஉலை செய்தாப்பூரில் நிறுவப்பட இருந்த பிரஞ்சு அணுஉலையை விட உயர்த் தொழில்நுட்பத்தில் இயங்குவது. அதில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. எனவே தான் செய்தாப்பூர் அணுஉலையை எதிர்க்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூடங்குளம் அணுஉலையை ஆதரிக்கிறது" என்று கூறினார்.

 

வி.வி.இ.ஆர். 1000 தொழில்நுட்பம், 13 உடனடியாக சரி செய்யவேண்டிய முக்கியமான பாதுகாப்புக் கோளாறுகளை உள்ளடக்கியது என இரசிய நாட்டு அணுஉலை அறிவியலாளர்களே அறிவித்துள்ளனர். அந்நாட்டுப் பிரதமரிடம் கடந்த 2011 சூன் மாதம் அளித்த அறிக்கையில் வி.வி.இ.ஆர். 1000 அணுஉலை அது இயங்கத் தொடங்கிய 2ஆவது ஆண்டிலிருந்தே பாதுகாப்புக் கோளாறுகளில் சிக்கிக் கொள்ளும். அதில் உள்ள கட்டுப்பாட்டுக் கம்பி(Control Rod) இயங்குவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு நேர்ந்தால் அணுஉலையில் அளவுக்கு அதிகமான வெப்பம் உயர்ந்து சிறுக் கீறல் முதல் பெரு வெடிப்பு வரை நிகழ் வாய்ப்புண்டு என்று தெரிவித்துள்ளனர்.

 

அது மட்டுமின்றி வி.வி.இ.ஆர். 1000 அணுஉலையில் மையக்கலனில் உள்ள பற்றவைப்புகள் (Welding) பலவீனமானது என்றும் தொடர்ச்சியான அணுத்துகள்களின் மோதல்களின் விளைவாக அவை இற்றுப்போக வாய்ப்புண்டு என்றும் எச்சரித்துள்ளனர்.

 

உண்மை இவ்வாறிருக்க, வி.வி.இ.ஆர். 1000 அணுஉலை பாதுகாப்பானது என்பதற்கு திரு. ஜி.இராமகிருஷ்ணன் அவர்களுக்கு எங்கிருந்து அறிவியல் சான்று கிடைத்த்தோ தெரியவில்லை. தங்கள் கூடங்குளம் அணுஉலை ஆதரவை ஞயாயப்படுத்த எந்தப் பொய்யையும் சொல்வதற்கு இவர்கள் அணியமாக இருக்கிறார்கள்.

 

கோழிக்கோடு மாநாட்டின் தீர்மானங்களை விளக்கி செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சித்தாராம் யெச்சூரி, தங்கள் முடிவுக்கு வேறொரு காரணத்தைச் சொன்னார். "கைகா அணுஉலையைப் போல கூடங்குளம் அணுஉலை ஏற்கெனவே இயக்கத்தில் இருப்பது. அதிலிருந்து ஏற்கெனவே மின்சாரம் உற்பத்தியாகி வருகிறது. ஆனால்,  செய்தாப்பூர் அணுஉலை இனிமேல் தான் நிறுவப்பட வேண்டும். எனவே தான் கூடங்குளம் அணுஉலையை நாங்கள் ஆதரிக்கிறோம்" என்றார்.

 

கூடங்குளம் அணுஉலையில் இனிமேல் தான் எரிபொருள் நிரப்ப வேண்டும். அதன் பிறகு தான் மின்சார உற்பத்தி நடக்கும் என நாள்தோறும் அரசு அறிவித்துக் கொண்டுள்ள நிலையில், எல்லா செய்தித்தாள்களிலும் அச்செய்தி வந்து கொண்டிருக்கும் போது, இந்த அடிப்படைத் தகவல் கூட தெரியாமல் சீத்தாராம் யெச்சூரி பேசுவதாக நம்பமுடியவில்லை. ஆளுக்கொரு கருத்தைச் சொல்லி தங்கள் முடிவை ஞாயப்படுத்த, மக்களைக் குழப்ப அக்கட்சியின் தலைவர்கள் முனைகிறார்கள். அதில் ஒன்று தான் யெச்சூரியின் கூற்று.

 

கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய்விட்டார். கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து போராடி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இடிந்தகரைக்கே வருவதாக அறிவித்தார். அக்கட்சித் தலைமை கட்டளையிட்டதன் அடிப்படையில் கடைசி நேரத்தில் அப்பயணத்தைத் தவிர்த்துக் கொண்டார்.

 

இவ்வாறு, கூடங்குளம் அணுஉலைத் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்யும் பித்தலாட்டம் அளவிட முடியாமல் சென்று கொண்டிருக்கிறது. 


தோழமையுடன்,

கி.வெங்கட்ராமன்

பொதுச் செயலாளர்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


இடம்: சிதம்பரம்,

நாள்: 16.04.2012



Saturday, April 14, 2012

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீட்டை விலக்கின்றி தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் - த.தே.பொ.க. வலியுறுத்தல்!

ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கு தனியார் பள்ளி இடஒதுக்கீட்டை

விலக்கின்றி தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அறிக்கை!

 

கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் அனைத்து தன்நிதி தனியார் பள்ளிகளிலும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழை மாணவர்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் தனது 12.04.2012 நாளது தீர்ப்பின் மூலம் உறுதிசெய்துள்ளது. இது வரவேற்கத்தக்கது.


ஆயினும், இத்தீர்ப்பு இச்சட்டப்பிரிவிலிருந்து சிறுபான்மையினர் நடத்தும் தன்நிதி பள்ளிகளுக்கு விலக்களித்திருப்பது சமூகநீதியின்பாற்பட்டதல்ல. இது மறுஆய்வுக்கு உட் படுத்தப்பட வேண்டும். சிறுபான்மையினர் நடத்தும் தன்நிதி பள்ளிகள் உள்ளிட்டு அனைத்துத் தனியார் பள்ளிகளுக்கும் விலக்கின்றி இச்சட்டம் செயலுக்கு வரவேண்டும். 


தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில், சென்ற கல்வி ஆண்டிலேயே இச்சட்டச் செயலாக்கம் குறித்து பள்ளிகளுக்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இத்தீர்ப்பின் அடிப்படையில், அனைத்து ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கும் 25 விழுக்காடு இடஒதுக்கீடு கிடைப்பதை தமிழக அரசு உன்னிப்பாக கவனித்து உறுதிப்படுத்த வேண்டும். 


இதனை செயல்படுத்தும் போது, நடைமுறையில் இதனை பயனற்றதாக்கும் சூழ்ச்சியில் தன்நிதிப் பள்ளி நிர்வாகங்கள் இறங்கக் கூடும். எடுத்துக்காட்டாக, இடஒதுக்கீட்டு மாணவர்களை தனி வகுப்புப் பிரிவாக(செக்ஷன்) பிரித்து வைத்து, பிற மாணவர்களுடன் இணைய விடாமலும் அவ்வகுப்புப் பிரிவுகளை ஏனொதானோவென்று நடத்திப் புறக்கணிப்பதிலும், அந்நிர்வாகங்கள் ஈடுபடக் கூடும். இவ்வாறு நிகழாமல் இச்சட்டம் முறையாகச் செயல்பட தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை உரிய கவனம் செலுத்த வேண்டும். 


வரும் கல்வியாண்டில் இதை செயல்படுத்துவதிலிருந்து தவிர்ப்பதற்காக பல தனியார் கல்வி நிறுவனங்கள் முன்கூட்டியே மாணவர் சேர்க்கையை முடித்து விட்டதாக அறிகிறோம். அவ்வாறான பள்ளிகளில், விலக்கின்றி வரும் கல்வியாண்டே இச்சட்டம் முழுமையாக செயலாவதை பள்ளிக் கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும். 


தனியார் பள்ளிகளின் இடஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு விலையில்லாப் பேருந்துப் பருவச் சீட்டு(இலவச பஸ் பாஸ்) தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு செய்தால் தான் இச்சட்டத்தின் பயன் தொடர்புடையவர்களுக்கு சென்று சேரும். இதனை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.


 தங்கள் உண்மையுள்ள,

கி.வெங்கட்ராமன்,

பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


இடம்: சென்னை



Friday, April 6, 2012

தமிழீழ விடுதலையின் அடுத்த கட்டம் குறித்து தோழர் பெ.மணியரசன்


தமிழீழ விடுதலையின் அடுத்த கட்டம் குறித்து தோழர் பெ.மணியரசன்

தமிழீழ விடுதலையின் அடுத்த கட்டம் குறித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் முழக்கம் இணைய இதழுக்கு வழங்கிள காணொளி செவ்வி..!




நாள்: ஏப்ரல் 5, 2012

Monday, March 26, 2012

வெளியார் சுரண்ட தமிழ்நாடென்ன வேட்டைக் காடா? – நா.வைகறை

வெளியார் சுரண்ட தமிழ்நாடென்ன வேட்டைக் காடா? – நா.வைகறை

 

"வெளிமாநிலத்தவர் சுரண்டுவதற்கு தமிழ்நாடு என்ன வேட்டைக்காடா?" என தமிழக இளைஞர் முன்னணிப் பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை கேள்வி எழுப்பினார். வெளிமாநிலத்தவர்களுக்கு வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை வழங்கக் கூடாது என வலியுறுத்தி தமிழகமெங்கும் இன்று(26.03.2012) தமிழக இளைஞர் முன்னணி மற்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

 

அதன் ஒருபகுதியாக, தஞ்சை மேரி முனையிலிருந்து காலை 10.30 மணியளவில் தமிழக இளைஞர் முன்னணி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ரெ.சிவராசு தலைமையில், பேரணியாகத் திரண்ட இளைஞர்கள், நகரின்  முக்கிய வீதிகளின் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைச் சென்றடைந்தனர்.  தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர்  குழ.பால்ராசு பேரணியைத் துவக்கி வைத்தார். பேரணியின் முடிவில், த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி, துணைச் செயலாளர் தோழர் ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.

 

நிறைவில், சிறப்புரையாற்றிய தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழா நா.வைகறை, "இந்திய அரசு சிங்கள அரசுக்கு உதவி செய்து நம் தமிழ் மக்களை ஈழத்தில் முள்வேலி முகாம்களுக்குள் அடைத்து வைத்துள்ளது. அதே போன்று, தமிழ்நாட்டிலும் தமிழர்களை அகதிகளாக்கும் வகையில் அதிக எண்ணிக்கையில் வெளி மாநிலத்தவர்களை திட்டமிட்டுக் குவித்துக் கொண்டிருக்கிறது இந்திய அரசு. இப்போக்கு நீடித்தால், தமிழகத்தில் நாம் திறந்தவெளிச் சிறைச்சாலையில் கிடக்க நேரிடும்.

 

வழிப்பறி,  கொலை, கொள்ளை, கற்பழிப்பு என வெளி மாநிலத்தவர்களால் நடக்கும் சீர்கெடுகளுக்கு எதிராக  காவல்துறை எடுக்கும் சட்டரீதியான நடவடிக்கைகளை நாம் வரவேற்கும் அதே வேளையில், வெளியார்களுக்கு இங்கு கட்டுப்பாடுகள் தேவை என்பதை உரத்துக் கூறுகிறோம். வெளியாருக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை வழங்கி அவர்களை இங்கேயே நிரந்தரமாக்க் குடியமர்த்துவது நமக்கு மேலும் சிக்கல்களைத் தான் ஏற்படுத்தும்.  

 

இந்தியா பல தேசிய இனத் தாயகங்களைக் கொண்டிருப்பதால் தான், 1956ஆம் ஆண்டு மொழிவழித் தாயகமாக தமிழ்நாடு என்ற மாநிலம் உருவாக்கப்பட்டது. அத்தாயகத் தனித்தன்மையை இந்திய அரசு மதிக்காமல், தேசிய இனத் தாயகங்களை அழித்தொழிக்கும் நோக்கில் தான் வெளியாரைத் திட்டமிட்டு இங்கு குவிக்கின்றது. இதே நிலை நீடித்தால் தமிழர்களின் தாயகம் நாளை என்னவாக இருக்கும்? இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு 370 காசுமீரிகளுக்கும், 371 பிரிவு அசாம், மணிப்புரா உள்ளிட்ட வேறு பல மாநிலத்தவர்களுக்கும் சலுகைகள் வழங்குகின்றன. இம்மாநிலங்களில் வெளி மாநிலத்தவர்கள் நிலம் வாங்கத் தடை விதிக்கப்பட்டு, அத்தாயகங்கள் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் என்ன நிலை? தமிழர்களின் கையில் தான் இன்று தமிழ்நாடு இருக்கிறதா? வெளி மாநிலத்தவர்கள் சுரண்டிக் கொழுக்கத் தமிழ்நாடென்ன திறந்த வீடா?" என்று ஆவேசமாகப் பேசினார்.  

 

கோவையில் 20 தோழர்கள் கைது

கோவை தொடர்வண்டி நிலையம் அருகில் காலை 11 மணியளவில் த.இ.மு. மாநகரச் செயலாளர் தோழர் பா.சங்கர் தலைமையில் பேரணியாகச் செல்ல முயன்ற தமிழக இளைஞர் முன்னணித் தோழர்கள் 20 பேரை காவல்துறை கைது செய்தது. த.இ.மு. செயலாளர் தோழர் இராஜேசுக்குமார், செயலாளர் தோழர் பிரை.சுரேஷ், கிளைச் செயலாளர் தோழர் இரா.கண்ணன், த.இ.மு. அமைப்பாளர்கள் தோழர் வே.திருவள்ளுவன், தோழர் ம.தளவாய்சாமி உள்ளிட்ட தோழர்கள் கைதாயினர். திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட தோழர்கள் மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

 

சிதம்பரம்

சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் காலை 10.30 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக இளைஞர் முன்னணி நகர அமைப்பாளர் தோழர் ஆ.குபேரன் தலைமை தாங்கினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா, தோழர் பா.பிரபாகரன்(த.தே.பொ.க.) ஆகியோர் விளக்கவுரை  நிகழ்த்தினர்.

 

சென்னை

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காலை 11 மணியளவில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக இளைஞர் முன்னணி செயலாளர் தோழர் தமிழ்க்கனல் தலைமை தாங்கினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை வாக்காளர் அட்டை வழங்கல் பொறுப்பு அதிகாரி ஆகியோரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு தோழர்களால் நேரில் கொடுக்கப்பட்டது.

 

குடந்தை

த.இ.மு. செயலாளர் தோழர் ச.கணேசன் தலைமையில், குடந்தை உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் காலை 10 மணியளவில் தொடங்கியப் பேரணியை தோழர் பெ.பூங்குன்றன்(த.தே.பொ.க.) துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார். கோட்டச்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்த பேரணியை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் முடித்து வைத்து விளக்கவுரை நிகழ்த்தினார்.

 

ஒசூர்

ஒசூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் காலை 10 மணியளவில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு, த.இ.மு அமைப்பாளர் தோழர் பி.சுப்ரமணியன் தலைமை தாங்குகிறார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர்கோ.மாரிமுத்து, தோழர் இராசு.நடவரசன் ஆகியோர் விளக்கவுரை நிகழ்த்துகின்றனர்.

 

திருச்சி

திருச்சி தொடர் வண்டி நிலையம் அருகிலுள்ள காதிகிராப்ட் முன்பு காலை 10 மணியளவில் நடந்த, ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் கவித்துவன் தலைமை தாங்கினார். பாவலர் முவ.பரணர், தோழர்கள் இரெ.சு.மணி, இனியன், ஆத்மநாதன், வே.பூ.ராமராஜ், சூர்யா, சத்யா, வே.க.இலட்சுமணன் ஆகியோர் பங்கேற்றனர். மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி, திருச்சி மாவட்ட தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் இலக்கிய விமர்சகர் வீ.ந.சோமசுந்தரம் உள்ளிட்டோர் விளக்கவுரை நிகழ்த்தினர். தோழர் மு.தியாகராஜன் நன்றி நவின்றார்.

 

கீரனூர்

கீரனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பகல் 1 மணியளவில், குன்றாண்டார் கோவில் ஒன்றிய த.தே.பொ.க செயலாளர் தோழர் சி.ஆரோக்கியசாமி தலைமையில் நடைபெற்ற கோரிக்கைப் பேரணியை, தோழர்.குளத்தூர் கிள்ளிவளவன் தொடங்கி வைத்தார். பொறியாளர் அகன்(பாவாணர் மன்றம்) பேரணியை நிறைவு செய்து பேசினார். தோழர்.இலெ.திருப்பதி நன்றி நவின்றார்.



Sunday, March 25, 2012

நாளை(26.03.2012) வெளிமாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை வழங்காதே என வலியுறுத்தி தமிழகமெங்கும் த.இ.மு. போராட்டங்கள்!

வெளிமாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை வழங்காதே!

தமிழகமெங்கும் தமிழக இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்!

 

தமிழகம் மிக வேகமாக வெளியார் மயமாகி வருகிறது. உலகமயம் என்பதே வெளியார் மயம் தான்! தமிழகத் தொழில், வணிகம் ஆகியவற்றை ஏற்கெனவே மார்வாரி, குசராத்தி சேட்டுகளும் மலையாளிகளும் கைப்பற்றி மேலாதிக்கம் செய்கின்றனர்.

 

கடந்த சில ஆண்குளாக அயல் மாநிலத்தவர் அன்றாடம் ஆயிரம் ஆயிரமாய் வந்து குவிகின்றனர். இவர்கள், தமிழர்களுக்குரிய தொழில், வணிகம், வேலை, கல்வி, உணவுப் பொருள்கள், தண்ணீர், மின்சாரம், இருப்பிடம் உள்ளிட்ட அனைத்தையும் உறிஞ்சிக் கொள்கின்றனர்.

 

இதனால் தமிழர்கள் தொழில், வணிக வாய்ப்புகளை இழக்கின்றனர். வேலையின்மை, வறுமை, சொந்த மண்ணில் அதிகாரமின்மை, உணவு, தண்ணீர், மின்சாரம் உள்ளிட்டவற்றில் பற்றாக்குறை எனத் தவிக்கின்றனர். எந்த வகை வரைமுறையும் இல்லாமல் வரம்பும் இல்லாமல் திமுதிமு என்று வெளி மாநிலத்தவர் தமிழ்நாட்டில் குடியேற அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களால் கொள்ளை, கொலை, பாலியல் வன்முறை போன்ற குற்றங்கள் அதிகரித்து விட்டன. பிற மாநிலத்தவரால் பல்வேறு சமூக, பண்பாட்டுத் தீங்குகளும் உருவாகின்றன.

 

ஒரு தேசிய இனத் தாயகத்தின் மக்கள் தொகையில் பிற இனத்தவர் பத்து விழுக்காட்டிற்கு மேல் இருந்தால் அத்தேசிய இனமக்கள் எல்லாவகை உரிமை இழப்புகளுக்கும் வாழ்வுரிமை மறுப்பிற்கும் உள்ளாவார்கள்.

 

தமிழகத்தில் வெளியார் குவியும் வேகம் இதே போக்கில் தொடர்ந்தால், இன்னும் பதினைந்து ஆண்டுகளில் தமிழ் மக்களின் எண்ணிக்கைக்குச் சமமாக அயல் இனத்தார் இங்கு நிரம்பி விடுவர். அதன் பிறகு, தமிழகம் தமிழர் தாயகமாக இருக்காது. கலப்பினத் தாயகமாக மாறும்.

 

வெளி இனத்தார் தங்கு தடையின்றி மிகை எண்ணிக்கையில் குடியேற அனுமதிப்பதால் 1956 நவம்பர் 1இல் மொழிவழி தாயகமாக தமிழ்நாடு அமைக்கப்பட்டதன் நோக்கம் தகர்க்கப்படுகிறது. எனவே, 1956 நவம்பர் 1-க்குப் பிறகு தமிழ்நாட்டில் குடியேறிய வெளியாரை வெளியேற்ற வேண்டியது கட்டாயத் தேவை ஆகும். மராட்டியம், அசாம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வெளியாரை வெளியேற்றும் போராட்டங்களும் கோரிக்கைகளும் எழுந்ததை எண்ணிப் பார்க்க வேண்டும்.

 

இப்பொழுது, உடனடிச் செயலாக வெளிமாநிலத்தவர்க்கு புதிதாக குடும்ப அட்டையோ, வாக்காளர் அடையாள அட்டையோ வழங்கக் கூடாது என்று தமிழக இளைஞர் முன்னணி போராட்டம் நடத்துகிறது.

26.03.2012 திங்கள் அன்று தமிழகமெங்கும் தமிழக இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம், பேரணி என பல்வேறு வடிவங்களில் பரப்புரைகள் நடக்கின்றன. இந்நிகழ்வுகளில் திரளான தமிழ் இளைஞர்களும், பொது மக்களும், ஊடகவியலாளர்களும் பங்கு கொள்ள வேண்டுகிறேன்.

 

 

 

தஞ்சை

தஞ்சை மேரி முனையிலிருந்து காலை 10 மணியளவில் துவங்கும், கோரிக்கைப் பேரணி முக்கிய வீதிகளின் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைச் சென்றடைகின்றது. தமிழக இளைஞர் முன்னணி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ரெ.சிவராசு தலைமை தாங்குகிறார். த.தே.பொ.க. மாவட்டச் செயலாளர் தோழர்  குழ.பால்ராசு பேரணியைத் தொடங்கி வைக்க, தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழா நா.வைகறை பேரணியை முடித்து வைத்துப் பேசுகிறார்.

 

கோவை

கோவை தொடர்வண்டி நிலையம் அருகில் காலை 11 மணியளவில் துவங்கும், த.இ.மு. கோரிக்கைப் பேரணி முக்கிய வீதிகளின் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைச் சென்றடைகிறது. த.இ.மு. செயலாளர் தோழர் இராஜேசுக்குமார் தலைமையில் நடக்கும் இந்நிகழ்வில், த.இ.மு. மாநகரச் செயலாளர் தோழர் பா.சங்கர், செயலாள தோழர் பிரை.சுரேஷ், கிளைச் செயலாளர் தோழர் இரா.கண்ணன், த.இ.மு. அமைப்பாளர்கள் தோழர் வே.திருவள்ளுவன், தோழர் ம.தளவாய்சாமி உள்ளிட்டோர் விளக்கவுரை நிகழ்த்துகின்றனர்.

 

குடந்தை

த.இ.மு. செயலாளர் தோழர் ச.கணேசன் தலைமையில், குடந்தை உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் காலை 10 மணியளவில் தொடங்கும் பேரணியை தோழர் பெ.பூங்குன்றன்(த.தே.பொ.க.) துவக்கி வைத்து உரை நிகழ்த்துகிறார். கோட்டச்சியர் அலுவலகத்தில் நிறைவடையும் பேரணியை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் முடித்து வைத்துப் பேசுகிறார்.

 

சிதம்பரம்

சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக இளைஞர் முன்னணி நகர அமைப்பாளர் தோழர் ஆ.குபேரன் தலைமை தாங்குகிறார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா, தோழர் பா.பிரபாகரன்(த.தே.பொ.க.) ஆகியோர் விளக்கவுரை  நிகழ்த்துகின்றனர்.

 

ஒசூர்

ஒசூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் காலை 10 மணியளவில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு, த.இ.மு அமைப்பாளர் தோழர் பி.சுப்ரமணியன் தலைமை தாங்குகிறார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து, தோழர் இராசு.நவரசன் ஆகியோர் விளக்கவுரை நிகழ்த்துகின்றனர்.

 

சென்னை

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக இளைஞர் முன்னணி செயலாளர் தோழர் தமிழ்க்கனல் தலைமை தாங்குகிறார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், கோரிக்கைகள் அடங்கிய மனு மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்படுகின்றது.

 

திருச்சி

திருச்சி தொடர் வண்டி நிலையம் அருகிலுள்ள காதிகிராப்ட் முன்பு காலை 10 மணியளவில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் கவித்துவன் தலைமை தாங்குகிறார். மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி, இலக்கிய விமர்சகர் வீ.ந.சோமசுந்தரம் உள்ளிட்டோர் விளக்கவுரை நிகழ்த்துகின்றனர். தோழர் மு.தியாகராஜன் நன்றி நவில்கிறார்.

 

கீரனூர்

கீரனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பகல் 1 மணியளவில், குன்றாண்டார் கோவில் ஒன்றிய த.தே.பொ.க செயலாளர் தோழர் சி.ஆரோக்கியசாமி தலைமையில் நடைபெறும் கோரிக்கைப் பேரணியை, தோழர்.குளத்தூர் கிள்ளிவளவன் தொடங்கி வைக்கிறார்.  பொறியாளர் அகன்(பாவாணர் மன்றம்) பேரணியை நிறைவு செய்து பேசுகிறார். தோழர்.இலெ.திருப்பதி நன்றி நவில்கிறார்.

 

•••

 

மேற்கண்ட நிகழ்வுகளில், தமிழ் உணர்வாளர்களும், மனித நேயர்களும், பத்திரிக்கையாளர்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

 

 

தோழமையுள்ள,

நா.வைகறை

பொதுச் செயலாளர்,

தமிழக இளைஞர் முன்னணி

நாள்   :  25.03.2012

இடம்  :  தஞ்சை





Tuesday, March 20, 2012

வெள்ளியன்று(23.03.2012) நெல்லையில் கூடுவோம் - த.தே.பொ.க. போராட்ட அழைப்பு!

கூடங்குளம் அணு உலை திறப்புக்கு எதிராக நெல்லையில் கூடுவோம்!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அழைப்பு!

 

தமிழினப்பேரழிவுத் திட்டமான கூடங்குளம் அணு உலையைத் திறக்க அனுமதிப்ப தென்று முதலமைச்சர் செயலலிதா தலைமையில் 19.3.2012 அன்று கூடிய தமிழக அமைச்சரவை முடிவு செய்து, அணு உலையை திறந்துள்ளது இந்த அணு உலைக் கெதிராக மக்களைத் திரட்டி அமைதி வழிப் போராட்டம் நடத்தி வரும் அணு சக்திக் கெதிரான போராட்டக் குழு உறுப்பினர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

 

கூடங்குளம் பகுதியில் 5000 க்கும் மேற்பட்ட காவல் துறையினரும் அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். கிராமம் கிராமமாக வீடுகளுக்குள் புகுந்து தேடுதல் வேட்டை என்ற பெயரால் கொடும் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசின் இந்த மக்கள் பகை, அடக்கு முறை நடவடிக்கைகளைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 

     அமெரிக்கா, சப்பான், செர்மனி, இத்தாலி ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் அணு உலைகளை மூட முடிவு செய்துள்ள நிலையில், உலகின் சிறந்த அறிவியலாளர்கள் பலரும் அணு உலைகள் பாதுகாப்பற்றவை என்று கருத்து தெரிவித்துள்ள நிலையில் இந்திய அரசின் விருப்பத்திற்கு இசைய கூடங்குளம் அணு உலையை திறக்க அணுமதிப்பது என தமிழக அரசு எடுத்துள்ள முடிவு ஒரு தலைச் சார்பானது. மக்களுக்கு எதிரானது.

 

அமைதி வழியில் போராட்டத்தை நடத்தி வரும் போராட்டக் குழுவினரைப் பொய் வழக்குகளில் கைது செய்வதும் காவல் துறையினரைக் குவித்து அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களை கைது செய்வதும், வேட்டையாடுவதும் அப்பட்டமான சனநாயக விரோத நடவடிக்கையாகும்.

 

கூடங்குளம் அணு உலையை திறப்பது என்ற தனது முடிவைத் திரும்பப் பெற வேண்டுமென்றும், கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்குழுவினரை விடுதலை செய்ய வேண்டுமென்றும், அப்பகுதியில் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினரை திரும்பப் பெற வேண்டுமென்றும் தமிழக அரசை வலியுறுத்தி போராடி வரும் மக்களுக்கு ஆதரவாக 23.3.2012 வெள்ளி அன்று திருநெல்வேலி தொடங்கி இடிந்தகரை செல்லும் போராட்டப் பயணத்தை கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இப்போராட்டப் பயணத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பங்கேற்பது என முடிவு செய்துள்ளது.

 

கட்சியின் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் திரளான த.தே.பொ.க. தோழர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்பார்கள். 23.3.2012. அன்று காலை 9.00 மணிக்கு பாளையங்கோட்டை திடலில் தொடங்கும் இப்போராட்டப் பயணத்தில் தமிழின உணர்வாளர்களும் மனித நேயர்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  

 தோழமையுடன்,

கி.வெங்கட்ராமன்

பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


| நாள் : 20.03.2012 | இடம்: சென்னை-17



கூடங்குளம் மக்கள் மீது அடக்குமுறை - த.தே.பொ.க. கடும் கண்டனம்!

கூடங்குளம் மக்கள் மீது அடக்குமுறை


தமிழ்த் தேசப்பொதுவுடைமைக் கட்சி கண்டனம்

  

தமிழினப்பேரழிவுத் திட்டமான கூடங்குளம் அணு உலையைத் திறக்க அனுமதிப்ப தென்று முதலமைச்சர் செயலலிதா தலைமையில் 19.3.2012 அன்று கூடிய தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த அணு உலைக்கெதிராக மக்களைத் திரட்டி அமைதி வழிப் போராட்டம் நடத்தி வரும் அணு சக்திக்கெதிரான போராட்டக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட 9 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. கூடங்குளம் பகுதியில் 5000 க்கும் மேற்பட்ட காவல் துறையினரும் அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

தமிழக அரசின் இந்த மக்கள் பகை, அடக்கு முறை நடவடிக்கைகளைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 

கூடங்குளம் அணு உலை பாதுகாப்புக் குறித்து போராட்டக் குழுவின் சார்பில் முன் வைக்கப்பட்ட வினாக்கள் எதற்கும்  இந்திய அரசின் வல்லுநர் குழுவோ, தமிழக அரசு நியமித்த வல்லுநர் குழுவோ போதுமான விளக்கம் அளிக்கவில்லை. முனைவர் இனியன் தலைமையில் அணு சக்திக் கழக முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன் உள்ளிட்டோரைக்கொண்டு தமிழக அரசு நியமித்த வல்லுநர்குழு போராட்டக்குழுவின் சார்பிலான அறிவியலாளர்களையோ, உயிர் அச்சத்தில் போராடிக்கொண்டிருக்கிற பொதுமக்களையோ சந்திக்க மறுத்து விட்டது. ஓரிரு மணி நேரம் அணு உலையை பார்வையிட்டப்பிறகு எல்லாம் சிறப்பாக இருக்கிறது. பாதுகாப்பாக இருக்கிறது. என்று அறிக்கை அளித்து விட்டது.

 

       அமெரிக்கா, சப்பான், செர்மனி, இத்தாலி ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் அணு உலைகளை மூட முடிவு செய்துள்ள நிலையில், உலகின் சிறந்த அறிவியலாளர்கள் பலரும் அணு உலைகள் பாதுகாப்பற்றவை என்று கருத்து தெரிவித்துள்ள நிலையில் இந்திய அரசின் விருப்பத்திற்கு இசைய கூடங்குளம் அணு உலையை திறக்க அணுமதிப்பது என தமிழக அரசு எடுத்துள்ள முடிவு ஒரு தலைச் சார்பானது. மக்களுக்கு எதிரானது.

 

அமைதி வழியில் போராட்டத்தை நடத்தி வரும் போராட்டக் குழுவினரைப் பொய் வழக்குகளில் கைது செய்வதும் காவல் துறையினரைக் குவித்து அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களை அச்சுறுத்துவதும் அப்பட்டமான சனநாயக விரோத நடவடிக்கையாகும். தமிழக அரசின் இச்செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 

கூடங்குளம் அணு உலையை திறப்பது என்ற தனது முடிவைத் திரும்பப் பெற வேண்டுமென்றும், கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்குழுவினரை விடுதலை செய்ய வேண்டுமென்றும், அப்பகுதியில் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினரை திரும்பப் பெற வேண்டு மென்றும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.


தோழமையுடன்,

கி.வெங்கட்ராமன்

பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


| நாள் 20.03.2012 | இடம் சென்னை | 



Monday, March 19, 2012

அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முன் வந்திருப்பதில் வரவேற்க ஒன்றுமில்லை - த.தே.பொ.க.

"அமெரிக்கத்  தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முன் வந்திருப்பதில் வரவேற்க ஒன்றுமில்லை" 

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அறிவிப்பு

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்ற பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பில் மகிழ்வதற்கு ஒன்றுமில்லை.

இந்திய நாடாளுமன்ற மக்கள் அவையில் 19.03.2012 அன்று உரையாற்றிய மன்மோகன்சிங் "அமெரிக்கா முன்வைத்துள்ள வரைவுத் தீர்மான அறிக்கை நமக்கு இன்னும் கிடைக்கவில்லை. இருந்த போதிலும் அத்தீர்மானத்தை ஆதரிக்க விரும்புகிறோம்" என்றார்.

நடந்துள்ளப் போர்குற்றங்கள் மீது விசாரணை நடத்த சார்பற்ற சர்வதேச விசாரணைக் குழுவை ஐ.நா. நியமிக்க வேண்டும் என்ற திருத்தத்தோடு அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என பிரதமர் அறிவித்திருந்தால் நாம் வரவேற்றிருக்கலாம். அமெரிக்கத் தீர்மானம் என்ன கோருகிறது?

ஈழத்தமிழர்க்கு எதிராக நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து இராசபட்சே குழுவினர் மீது பன்னாட்டுக் குற்றவியல் விசாரணை எதையும் அமெரிக்கத்தீர்மானம் கோரவில்லை. இராசபட்சே நியமித்த 'பெற்றப் படிப்பினைகள் மற்றும் இணக்கத்திற்கான ஆணையம்' கொடுத்துள்ள அறிக்கை மீது இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோருகிறது. அதாவது ஈழத்தமிழருக்கு எதிரான இன அழிப்புப் போர்க்குற்றம் செய்த இலங்கை ஆட்சியாளர்களே தமக்கெதிராக விசாரணை நடத்தி, தங்களையே தண்டித்துக் கொள்ள வேண்டும். என்று கோருகிற தீர்மானம் அது. பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் இராசபட்சே குழுவினரை நிறுத்துவதற்கான எந்த வாய்ப்பும் அதில் இல்லை. தமிழர் இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கான தொடக்க நிலை முயற்சி எதையும் அத்தீர்மானம் கோடிட்டுக்காட்டக் கூட இல்லை.

ஆயினும், மனித உரிமை விசாரணை மற்றும் நடவடிக்கைகளில் ஐ.நா. மனித உரிமை ஆணையரின் அறிவுரையையும், நுட்ப உதவிகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசையும், அந்நடவடிக்கைகள் குறித்து தகவல் அறிக்கையை ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் 22 ஆவது அமர்வில் அளிக்க வேண்டுமென்று மனித உரிமை ஆணையரையும் கேட்டுக்கொள்ளும் பகுதி அவ்வரைவுத் தீர்மானத்தில் முதலில் இடம்பெற்றது.

ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் அடுத்தக் கட்ட விசாரணைக்கு இது முதல் படியாக அமையும் என்று மிகையாக மதிப்பிட்ட சிலர் இத்தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று கோரினர். ஐ.நா. மனித உரிமை ஆணையரின் மேற்பார்வையில் இலங்கை அரசின் நடவடிக்கைகள் அமைய வேண்டுமென்ற அந்த பலவீனமான நிபந்தனையும் கூட இப்போது அமெரிக்க வரைவிலிருந்து நீக்கப்பட்டு விட்டதாக அறிகிறோம்.

அதாவது ஏற்கெனவே அமெரிக்கா முன்வைத்த சொத்தையான தீர்மானத்தை இன்னும் பலவீனப் படுத்தியதற்குப் பிறகே அத்தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக இந்தியா முடிவுவெடுத்துள்ளது. இதனால் தொகை தொகையாகக் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு ஒரு சிறு ஞாயமும் கிடைத்துவிடப் போவதில்லை. கொடும் போர்க் குற்றவாளியான, இனக்கொலையாளி இராசபட்சே சர்வதேச சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்கே வழி கோலப்பட்டுள்ளது.

'ஐ.நா. மனித உரிமை ஆணையர் மேற்பார்வை' என்ற நிபந்தனை நீக்கப்பட்டு விட்டப் பிறகு முன்னர் இருந்ததாக நம்பப்பட்ட சிறிய சர்வதேச தலையீட்டு வாய்ப்பும் கைநழுவிவிட்டது.

இனப்படுகொலைக்குத் தலைமை தாங்கி வழி நடத்திய இராசபட்சே உள்ளிட்ட முதன்மைக் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு வாய்ப்பளிக்கும் தீர்மானம் என்பதாலேயே இந்தியா அத்தீர்மானத்தை ஆதரிக்க முன் வந்துள்ளது. இதன் வழியாக தனது தமிழினப் பகைத் திட்டத்தை திறமையான சூழ்ச்சியின் மூலம் இந்திய அரசு மறைத்துக் கொண்டுள்ளது.

எனவே அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்க முடிவெடுத்துள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வரவேற்பதற்கு ஒன்றுமில்லை என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கருதுகிறது. இந்திய அரசின் இந்த இனப்பகை சூழ்ச்சித் திட்டத்தை புரிந்து கொண்டு இந்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து விழிப்புடன் போராட முன் வருமாறு தமிழர்களைத் த.தே.பொ.க. அழைக்கிறது.

நாள் : 19.03.2012 . இடம்: சென்னை

தோழமையுடன்,

பெ.மணியரசன்,

தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


கி.வெங்கட்ராமன் 

பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT