உடனடிச்செய்திகள்

Monday, May 14, 2012

கூடங்குளம் அணுஉலை: மாற்று கருத்து மேலாண்மை நிறுவ நாமே ஊடகமாக மாறவேண்டும் -கி.வெங்கட்ராமன் பேச்சு!


"மாற்று கருத்து மேலாண்மை நிறுவ நாமே ஊடகமாக மாற வேண்டும்" என்று தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் பேசினார்.

இடிந்தகரையில் 144 தடை உத்தரவை நீக்க வேண்டும், போட பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெறவேண்டும் ,சிறையில் இருக்கின்ற தோழர்களை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து பரிமளா, சமந்தா, ஜார்ஜ் மற்றும் ஜான்சன் ஆகியோர் 100 ம்ணி நேர உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



மூன்றாம் நாளான நேற்று(14.05.2012) மாலை ம.தி.மு.க கவிஞர் மணிவேந்தன், இந்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் குமரேசன், பேராசிரியர் சிவக்குமார், சிபிஐஎம்எல் மக்ரேஷ், எம்.ஆர்.எப் தொழிற்சங்கம் சிவப்பிரகாஷ், தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன், தமிழ்த் தேசப்  பொதுவுடைமை கட்சி பொதுசெயலாளர் கி.வெங்கட்ராமன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி பொதுசெயளாலர் கி.வெங்கட்ராமன் அவர்கள் பேசிய போது.
கூடங்குளம அணுமின்நிலையத்தை முட வேண்டும் என்ற தொடர் போராட்டத்தின் ஒரு வடிவமாக அங்கே இடிந்தகரையில் 144 தடை உத்தரவை நீக்க வேண்டும் போடப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்ப பெற வேண்டும். சிறையில் இருக்கின்ற தோழர்களை விடுதலை செய்ய வேண்டும். தொடர்ச்சியாக நம் மக்கள் மீது நடத்தும் தாக்குதலை நிறுத்த வேண்டும். கோரிக்கைகளை முன் வைத்து இங்கு நான்கு பேர் 100 மணி நேர உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

இந்த போரட்டத்தைத் தமிழ்த் தேசப் பொதுவுடைக்மை கட்சியின் சார்பில் பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன். இந்த போராட்டதிற்கு உறுதியான ஆதரவைத் தெறுவிக்கின்றேன். அரங்கத்தில் கூடியிருக்கின்ற தோழர்கள் இந்த போராட்டத்தில் அக்கரை உள்ளவர்கள் என்ற முறையில் சில கருத்துக்களை நாம் செய்ய வேண்டியதைப் பேச வேண்டும் என்று கருதுகிறேன்.

இந்தப் போராட்டத்தை சமநிலையில் இருந்து நாம் நடத்தவில்லை. அரசாங்கம் பொதுவானது அடக்கு முறை என்ற கருத்துகளுக்கு உள்ள சம வாய்ப்பு இந்த கருத்தை பேசுவதற்க்கு வழங்க பட வில்லை. அது கூடங்குளம் பிரச்சனை மட்டும் அல்ல, ஈழத்தமிழர் பிரச்சனையானாலும், காவிரிப் பிரச்சனை என்றாலும் சரி, எல்லா இடத்திலும் இதைத்தான் சந்தித்துத் கொண்டு இருகிறோம்.

மாவோயிஸ்ட் ஆயுதம் தாங்கி போரடினால் ஆட்சியாளரும், அவர்களை ஆதரிக்கிற ஊடகங்களும் என்ன சொல்கிறார்கள் அமைதி வழியில் பேசுங்கள் உங்களுடையக் கருத்தை மக்களிடையே சொல்லுங்கள் ஆயுதம் என்பது சரியன்று சட்ட விரோதமானது என்று அவர்கள் சொல்கிறார்கள். சரி அமைதிவழியில் சில கருத்துகளை சொல்லம் என்று சொன்னால் அதற்க்கான வாய்ப்பை அவர்கள் வழங்குவது இல்லை.

கூடங்குளம் அணு உலை வேண்டும் என்று அப்துல்கலாமுக்கு மட்டும் மல்லாமல் நாராயணசாமியும் சொல்லாம். ஆனால் கூடாங்குளம் வேண்டாம் என்று சொல்லமுடியாது. இனியன் என்ற குழுவை தமிழக அரசு நியமித்து இனியன் யார் என்று கேட்டால் அணு உலையை ஆதரவாகப் பேசிவருபவர் தான். தமிழக அரசு போரட்டக்குழுவிற்கு ஆதரவாக சட்டமன்றத்திலே சில திர்மாணம் போட்டது அதுவும் உள்ளாட்சி தேர்தல் இடை தேர்தல் வரையே. அப்போது கூட கூடங்குளம் அணுலைக்கு எதிராகப் பேச முடிய வில்லை.

கூடங்குளம் போராட்டனம் ஒரு நீடித்தப் போராட்டமாகத் தான் நடத்த முடியும். இதை சந்திபதற்கான வடிவம் தான் வேறு அரசியல் கட்சிகளை அணுகி மேடையில் பேச வைப்பதால் இப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வர முடியாது.

இதையும் தாண்டி கருத்தியல் நிலவவேண்டும். இடிந்தகரையிலே போராட்ட பந்தலில் மக்களைத் திரட்டி நடந்து கொண்டு இருகிற போராட்டம் உலக அரங்கிலே ஒரு விவாதத்தையும் அழுத்ததையும் தருகிறது.

அதற்கெதிராக ஆட்சியாளர்கள் கூடங்குளம் இல்லை என்றால் தமிழ்நாடே இருண்டுவிடும் என்ற பரப்புரையை பரப்புகிறார்கள் .அதை முறியடிக்கும் விதமாக நாம், குழு குழு வாகப் பிரிந்து ஒரு கருத்தியலைப் பரப்ப வேண்டும் . இப்பொது இருக்கின்ற தகவல் தொழில் நுட்பதை பயன்படுத்தி நாம் அதைசெய்ய வேண்டும். இப்படி மாற்றுக் கருத்து மேலாண்மை நாம் நிறுவ வேண்டும்.

ஸ்பெயின் நாட்டில் பிரங்கோ என்ற சர்வாதிகாரி 40 ஆண்டுகளாக ஸ்பெயின் கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்தார் அப்போது தங்கள் கட்சி நாளிதழை 1 லட்சம் பிரதிகளை விற்று கருத்துகளை பரப்பினர்.அதை போல நாம் ஊடகமாக வேண்டும் ஒரு ஊடகமாக செயல் பட வேண்டும்.

நெய்வேலி மின்சாரத்தை முழுவதும் தமிழ்நாட்டுக்கு கொடுத்தால் இப்பொழுது இருக்கிற பற்றாக்குறையில் 80 சதவிதம் சமாளிக்க முடியும்.பன்னாட்டு கம்பெனிக்கு கொடுக்முன் மின்சாரத்தை மக்களுக்கு கொடுத்தாளல் போது மானது.

கட்சி சாரா சிவில் கூட்டமைபபை கட்டமைபக்க வேண்டும். சிவில் கூட்டமைப்பு என்றால் தொழிற்சங்கங்கள் , வணிக சங்கங்கள் போன்றவைகள் கூட்டாகக் செயல் பட வேண்டும். மாற்று மின்சக்தியாக காற்றாலை, கதிரவன் மின்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். எனவே மாற்று கருத்து மேலாண்மை நிறுவ நாமே ஊடகமாக மாறவேண்டும் வேண்டும்” என பேசினார்.

Tuesday, May 8, 2012

முல்லைப் பெரியாறு சிக்கல்: நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரின் மலையாள வெறிக் கூச்சலுக்கு கண்டனம் - கி.வெங்கட்ராமன் அறிக்கை!

முல்லைப் பெரியாறு சிக்கல்:

நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரின் மலையாள வெறிக் கூச்சலுக்கு

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கண்டனம்

 

முல்லைப்பெரியாறு வழக்கில் உச்ச நீதிமன்றம் நியமித்த நீதிபதி ஆனந்த்  தலைமையிலான அதிகாரம் பெற்ற குழு அளித்த ஆய்வறிக்கை கடந்த 4.5.2012 அன்று உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது.

 

"முல்லைப் பெரியாறு அணை கட்டமைப்பு வகையிலும், நீரியல் ஆய்வின் படியும், நிலநடுக்க ஆய்வின் படியும் உறுதியாக இருப்பது தெளிவாகிவிட்டது. அண்மையில் முல்லைப்பெரியாறு அணைப் பகுதியிலும், இடுக்கி அணைப்பகுதியிலும் ஏற்பட்ட நில அதிர்வுகள் இரண்டு அணைகளிலும் எவ்வித சிறு பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை. எனவே முல்லைப் பெரியாறு அணையில் உடனடியாக 142 அடி தண்ணீர் தேக்கலாம்" என இவ்வறிக்கை உறுதிபடக் கூறியது.

 

நாம் ஐயப்பட்டது போலவே கேரளத் தரப்பு நடந்துகொண்டுள்ளது. கேரள நீர்ப்பாசன அமைச்சர் பி.ஜே. ஜோசப்  "ஆனந்த் குழு அறிக்கையை ஏற்கமுடியாது; அணையின் நீர் மட்டத்தை 142 அடி உயர்த்த அனுமதிக்கமுடியாது" என கொக்கரித்தார். அக்குழுவில் கேரளாவின் சார்பில் அமர்த்தப் பட்டிருந்த நீதிபதி கே.டி.தாமஸ் மீதும் பாய்ந்தார். மலையாள வெறியர்கள் சிலர் கே.டி.தாமஸ் இல்லம் நோக்கி கண்டன ஊர்வலம் நடத்தி, அவர் வீட்டின் மீது கல்லெறிந்தனர்.

 

இவர்கள் அனைவரையும் விஞ்சி  உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர்  மலையாள வெறி உச்சத்தில் ஏற "ஆனந்த் குழு அறிக்கையை வீசி எறியுங்கள். முல்லைப் பெரியாறு அணையின் வலுவைப்பற்றி முடிவு கூற நீதிபதிகள் ஒன்றும் பொறியியல் வல்லுநர்கள் அல்லர். பொறியியல் அறிவை பொருத்தளவில் அவர்கள் தற்குறிகள்தாம். அவர்கள் கருத்தை ஏற்க வேண்டியதில்லை. பன்னாட்டு வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு செய்த பிறகே உச்ச நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும். அதுவரை 136 அடி அளவே நீர்த் தேக்கப்பட வேண்டும்" என கூச்ச லிட்டார் (தி. இந்து, கொச்சி, 7.5.2012)

 

உச்ச நீதிமன்றம் நீதிபதி ஆனந்த் தலைமையில் நியமித்த ஐவர் குழுவில் நடுவண் நீர்வளத்துறை முன்னாள் செயலாளர் சி.டி. தத்தே, நடுவண் நீர்வள ஆணைய முன்னாள் தலைமைப் பொறியாளர் டி.கே. மேத்தா ஆகிய தொழில் நுட்ப வல்லுநர்கள் இடம் பெற்றிருந்தனர். இக்குழு முல்லைப் பெரியாறு அணையில் ஏழு இடங்களில் ஆழமாகத் தோண்டிப்பார்த்து அதில் கிடைத்த விவரங்களையும், மண் மாதிரிகளையும் உரிய ஆய்வகங்களுக்கு அனுப்பி அவற்றின் ஆய்வு முடிவுகளைப் பெற்று அதற்குப் பிறகே தங்கள் அறிக்கையை அணியப்படுத்தினர்.

இவர்களைத்தான் தற்குறிகள் என்கிறார் வி.ஆர்.கிருஷ்ணய்யர். ஆனால் அவரே ஆனந்த் குழுவில் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு வல்லுநர்கள் இருந்தார்கள் என்ற உண்மையையும் தனது அறிக்கையில் ஒப்புக் கொள்கிறார். இந்திய வல்லுநர்கள்  சரியில்லை வெளிநாட்டு வல்லுநர் களைக் கொண்டுதான் ஆய்வு செய்ய வேண்டும் என வல்லடி செய்கிறார்.

 

இன வெறி வி.ஆர். கிருஷ்ணய்யர் போன்ற மதிப்புமிக்க மனிதர்களைக் கூட தரம் தாழ்த்தி விடுகிறது. அச்சுதானந்தன், ஜோசப் போன்ற மலையாள இனவெறியர் களையும் தாண்டி கிருஷ்ணய்யரின்  மலையாள வெறிக் கூச்சல் காதைக் கிழிக்கிறது.

 

நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரின் இந்த மலையாள வெறி அறிக்கைக்கு தமிழ்த் தேசப் பொதுவுடை மைக் கட்சி  சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

கிருஷ்ணய்யரின் கருத்துப் படியே வெளிநாட்டு வல்லுநர்களின் ஆய்வைக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மலையாள அமைப்பு வழக்குத் தொடுத்துள்ளது. இழுத்தடிப்பு வேலைகள் தொடர்கின்றன. ஆனந்த் குழுவின் ஆய்வறிக்கை அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விடக் கூடாது என்பதற்காகவே இந்த மனு போடப்பட்டுள்ளது.

 

இதையும் தாண்டி முல்லைப்பெரியாறு அணையில் 142 அடித் தண்ணீரை தேக்கலாம் என உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துவிட்டால் அது "தற்குறிகளின் தீர்ப்பாகவே இருக்கும். அதை மதிக்கத் தேவையில்லைஎன  வி.ஆர். கிருஷ்ணய்யர்  மலையாள வெறியர்களுக்கு எடுத்துக் கொடுத்து விட்டார். நியாயத் தீர்ப்பு வந்தால் மலையாளிகள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதற்கு கிருஷ்ணய்யரின்  கூற்று ஒரு முன்னறிவிப்பாகும்.

 

முல்லைப் பெரியாறு அணையில் நியாயத் தீர்ப்பு பெறுவதற்கு மட்டுமின்றி அத்தீர்ப்பை செயலுக்கு கொண்டுவருவதற்கும் தமிழர்கள் தமிழின உணர்வோடு மலையாள வெறியர்களுக்கு எதிராகப் போராடித்தான் ஆக வேண்டும்.

 

தோழமையுள்ள,

கி.வெங்கட்ராமன்,

பொதுச் செயலாளர்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


இடம்: சென்னை 

நாள் : 08.05.2012


Monday, May 7, 2012

பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பது மன்னிக்க முடியாத இனத்துரோகம் - பெ.மணியரசன் அறிக்கை!

பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பது மன்னிக்க முடியாத இனத்துரோகம்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை!

இந்தியக் குடியரசுத் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பது மன்னிக்க முடியாத இனத்துரோகம் ஆகும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக பிரணாப் முகர்ஜியை நிறுத்துவதற்கு காங்கிரஸ் தலைமை விரும்புவதாகச் செய்திகள் வெளிவருகின்றன. தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி, பிராணப் முகர்ஜி தமது நீண்ட நாள் நண்பர் என்றும் அவரை ஆதரிப்போம் என்றும் கூறியுள்ளார்.

2009இல் இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களை சிங்கள அரசு இனப்படுகொலை செய்த போரில் இந்தியாவும் பங்கெடுத்துத் துணை செய்தது. சிங்கள இன வெறி அரசுக்குத் துணையாக பங்காற்றி தமிழினத்தை அழித்த முயற்சியில் துடிப்பாகச் செயல்பட்டவர்களில் மலையாளிகளும் வங்காளிகளும் முக்கியமானவர்கள்.

வங்காளத்திலிருந்து இலங்கையில் குடியேறிய விஜயன் வழி வந்தவர்கள் என்று சிங்களர்கள் தங்களைக் கூறிக் கொள்கின்றனர். வங்காளிகள் தங்கள் பங்காளிகள் என்று சிங்களவர்கள் கருதுகிறார்கள். அதே போல் இந்திய நாட்டு வங்காளிகளும் சிங்களரைக் கருதுகிறார்கள்.

நமது இக் கருத்துக்குச் சான்றாக 25.3.2012 அன்று டைம்ஸ் ஆஃப் இண்டியா ஏட்டில், ஸ்வப்பன் தாஸ் குப்பதா என்ற வங்காளிப் பத்திரிகையாளர் எழுதிய கட்டுரை உள்ளது. ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா கொண்டு வந்த உப்புசப்பில்லாத தீர்மானத்தை மேலும் நீர்த்துப் போகச் செய்து அதன்பிறகு அதை இந்தியா ஆதரித்தது. இதைக் கூட வங்காளி இதழாளர் ஸ்வப்பன் தாஸ் குப்பதாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

"ஒரு நட்பு நாட்டின் நம்பிக்கைத் துரோகம்" என்ற தலைப்பில் அவர் 25.3.2012 டைம்ஸ் ஆஃப் இண்டியா இதழில் கட்டுரை எழுதியுள்ளார். அதில், 1980லிருந்து 2009 உள்நாட்டுப் போர் முடியும் வரை கொழும்பிற்குப் பயணம் செய்வது ஒரு மகிழ்ச்சிகரமானதும் அதே நேரம் மனச் சோர்வு தருவதுமான அனுபவம் ஆகும். "இலங்கையின் முதல் சிங்கள மன்னன் விஜயா வங்களாத்திலிருந்து கடல் மூலமாக இலங்கை சென்ற வங்காளி என்பதால் இங்கிருந்து கொழும்பு செல்லும் வங்காளிகளைச் சிங்களர்கள் மிக்க அன்புடனும் சகோதர பாசத்துடனும் விருந்தோம்புகின்றனர்.மனச் சோர்வு தரும் செய்தி என்னவென்றால் விடுதலைப் புலிகள் என்னும் தீவிரவாத அமைப்பு சுட்டும், குண்டுவைத்தும் சிங்களர்களைக் கொன்ற சம்பவங்களே."

"பொதுமக்களையும் அவர்களில் பெண்களையும் சிறுவர்களையும் விடுதலைப் புலிகளிடமிருந்து பிரித்து இனம் காண முடியாது. ஆகவே இறுதிப்போரில் நாற்பதாயிரம் பேரைக் கொல்லவேண்டி வந்ததும் தவிர்க்க முடியாததே" என்று எழுதியுள்ளார் தாஸ் குப்தா.

இதே வங்காளி மன நிலையில் உள்ளவர்தான் நடுவண் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி. 2009இல் அவர் வெளியுறவு அமைச்சராக இருந்தார். அடிக்கடி இலங்கை சென்று வந்தார். இலங்கைப் போர் குறித்து முக்கிய முடிவு எடுக்கும் இடத்தில் அவர் இருந்தார். 2009 ல் போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை சென்ற பிரணாப் முகர்ஜி தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுடன் இருந்த மூன்றரை இலட்சம் மக்கள் தொகையை வெறும் ஒரு இலட்சத்து எண்பதாயிரம் பேர் என்று குறைத்து அங்கிருந்தே அறிக்கை விட்டார்.

இலட்சக் கணக்கான மக்கள் இறுதிப் போரில் கொல்லப்படலாம் என்பதை முன்னறிந்து அப்பொழுது அதை மூடி மறைக்க சதித்திட்டம் போட்டு ராஜபட்சே, பிரபாகரனுடன் இருந்த மக்கள் தொகையை வேண்டுமென்றே குறைத்துச் சொன்னார். அதை அப்படியே ஏற்று இலங்கையிலிருந்துபடியே சொன்னவர்தான் பிரணாப் முகர்ஜி.

ஈழத்தில் போரை நிறுத்தவில்லையென்றால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள் என்ற ஒரு நாடகத்தை கருணாநிதி நடத்தினார். அந்த நாடகத்தை முடித்து வைக்க சென்னை வந்தவர் இதே பிரணாப் முகர்ஜி. கருணாநிதியைச் சந்தித்துவிட்டு அவரது வீட்டிலிருந்து வெளியே வந்த பிரணாப் முகர்ஜியை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு போர் நிறுத்தம் வருமா என்று கேட்டபோது நாங்கள் போர் நிறுத்தம் கோரவில்லை (We are not for ceasefire) என்று அறிவித்தார். அத்துடன் இனிமேல் இலங்கை அரசுக்கு ஆயுதம் தரமாட்டீர்களே என்று செய்தியாளர் கேட்டதற்கு இந்தியாவின் தென்பகுதியில் நாம் சில அமைப்புகளை நிறுவியுள்ளோம். (We have some installations) அவற்றைப் பாதுகாக்க இலங்கை அரசுக்குச் சில போர்க்கருவிகளைத் தரவேண்டியுள்ளது என்றார். அடுத்து சிங்கள இராணுவத்திற்கு இந்தியாவில் இனிமேலும் பயிற்சி தரப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பல நாட்டு இராணுவத்தினர் இந்தியாவில் பயிற்சி பெறுகிறார்கள், இந்திய இராணுவ வீரர்களும் பல நாடுகளில் பயிற்சி பெறுகிறார்கள். அதைப் போல் இலங்கை இராணுவ வீரர்களும் இந்தியாவில் பயிற்சி பெறுவார்கள் என்று பதில் சொன்னார்.

டைம்ஸ் ஆஃப் இண்டியா கட்டுரையாளர் ஒளிவு மறைவின்றி சிங்கள இனவெறியை வங்காளி இன உணர்ச்சியாகப் பாசத்தோடு கூறியிருக்கிறார். அதே உணர்வோடுதான் பிரணாப் முகர்ஜி செயல்பட்டார் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
எனவே இப்படிப்பட்ட தமிழினப் பகைவராகவும் சிங்கள இனப் பங்காளியாகவும் செயல்பட்டு ஈழத் தமிழர் பேரழிவுக்குக் காரணமாக இருந்தவர்களில் ஒருவரான பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் ஆவதற்குத் தமிழ்நாட்டில் எந்தக் கட்சியும் ஆதரவு தரக் கூடாது.

பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் ஆவதற்கு வாக்களித்தால் அது மன்னிக்க முடியாதத் தமிழினத் துரோகம் ஆகும். தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் இன உணர்ச்சியோடும் ஈழத் தமிழர்களுக்கு நேர்ந்த இன அழிப்பை நினைவு கூர்ந்தும் பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக நிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 


Friday, May 4, 2012

மே நாள் உழைக்கும் மக்களின் நாள் மட்டுல்மல்ல! ஒடுக்கப் பட்ட தேசிய இனங்கள் விடுதலையை சூளுரைக்கும் நாள் - பெ.மணியரசன் பேச்சு

"மே நாள் உழைக்கும் மக்களின் நாள் மட்டுல்மல்ல!

ஒடுக்கப் பட்ட தேசிய இனங்கள் விடுதலையை சூளுரைக்கும் நாள்"

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேச்சு!

 

"மே நாள் உழைக்கும் மக்களின் நாள் மட்டுல்மல்ல! ஒடுக்கப் பட்ட தேசிய இனங்கள் விடுதலையை சூளுரைக்கும் நாள்" என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசினார். மே 1 உழைப்பாளர் நாளை தமிழ்த் தேசிய எழுச்சி நாளாக தமிழகமெங்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கொண்டாடியது.

 

சென்னை

சென்னையிலுள்ள தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமை அலுவலகம் அருகில் நடைபெற்ற விழாவில், த.தே.பொ.க. கொடியேற்றி வைத்தார் கட்சியின் தலைவர் தோழர் பெ.மணியரசன். அப்போது பேசிய அவர், "1886இல் அமெரிக்காவின் சிகாகோ நகரில், உரிமை கேட்டுப் போராடிய தொழிலாளர்கள் துப்பாக்கியால் சுட்டும், தூக்கிலிடப்பட்டும் கொல்லப்பட்டார்கள். அவர்களது ஈகத்தின் விளைவாக 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என உரிமைகள் அளிக்கப்பட்டு தொழிலாளர்களின் சுரண்டல்களுக்கு வரம்புகட்டப்பட்டது. ஆசியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் தான் முதன் முறையாக மே நாள் கொண்டாடப்பட்டது. அதைக் கொண்டாடியவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர். முற்போக்குக் கருத்துகளை வெகு வேகத்தில் ஈர்த்துக் கொள்ளும் இனம் தமிழினம் என்பதற்கு இதுவொரு சான்று. அப்படியான தமிழகம் இன்று அயலாருக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் உழைப்பைச் சுரண்டுபவர்கள் பெரும்பாலும், பன்னாட்டு முதலாளிகளாகவும், வடநாட்டவர்களாகவும் வேற்றினத்தவர்களாகவுமே உள்ளர். தமிழகத்திற்குள் உள்ள தமிழர்களால் தமிழ் மக்களின் உழைப்புச் சுரண்டப்படுவது மிகவும் குறைவுதான் எனினும், அதனை சரி செய்து கொள்ள முடியும். அதற்கு முன், அயலாரின் உழைப்புச் சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது நம் கடமை. மே 1 தொழிலாளர் தினத்தை வெறும் உழைக்கும் மக்களுக்கான நாளாக மட்டும் கருதக்கூடாது. இந்நாள் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் தங்கள் உரிமைகளை வெல்வதற்கு சூளுரை மேற்கொள்ளும் நாள் என நாம் நினைவில் கொள்ள வேண்டும்" என்றார்.

 

விழாவிற்கு, த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் தலைமையேற்றார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் உதயமூர்த்தி, அருணபாரதி, தாம்பரம் கிளைச் செயலாளர் தோழர் தமிழ்க்கனல் உள்ளிட்ட திரளான தோழர்கள் பங்கேற்றனர்.

 

திருத்துறைப்பூண்டி

மன்னார்குடி வட்டம் கோட்டூர் கடைத் தெருவில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் காலை 9 மணியளவில் நடைபெற்ற மே நாள் கொடியேற்ற விழாவிற்கும், காலை 11 மணியளவில் திருத்துறைப்பூண்டி நகரில் நடைபெற்ற கொடியேற்று விழாவிற்கும் த.தே.பொ.க. ஒன்றியச் செயலாளர் தோழர்  அ.தனபால் தலைமையேற்றார். இந் நிகழ்வில் த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கலந்து கொண்டு த.தே.பொ.க. கொடியேற்றி வைத்தார். த.தே.பொ.க தோழர்கள் க.அரசு, இ.தனஞ்செயன், க.பாலசுப்ரமணியன், கை.செ.குமார், நகர செயலாளர் தோழர் து.ரமேசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

வேதாரணியத்தில் உப்புத் தொழிலாளர் பேரணி

வேதாரணியம் வட்டம் பன்னாள் பள்ளிக்கூடம் அருகிள் மே 1 மாலை 6 மணிக்கு தொடங்கிய உப்புத் தொழிலாளர்ப் பேரணி கடினல் வயல் ஜி.எச்.சி.எல் உப்புத் தொழிற்சாலை வாயிலை அடையும் போது இரவு 11 மணி.

 

விம்கோ உப்புத் தொழிலாளர் சங்கம் நட்த்திய இந்த எழுச்சிமிகு மே நாள் பேரணிக்கு சங்கத்தின் தலைவரும், த.தே.பொ.க. பொதுச்செயலாளருமான தோழர் கி.வெங்கட்ராமன் தலைமை வகித்தார். பேரணியின் தொடக்கத்தில் பன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் திரு.ஏ.கே.விசுவநாதன், துணைத் தலைவர் திரு.கே.சண்முகசுந்தரம், ஆசிரியர் சகன்நாதன், கடினல் வயல் ஊராட்சிமன்றத் தலைவர் திரு தமிழ்ழகன், வேதாரணியம் ஒன்றியக் குழு உறுப்பினர் திரு.இராசசேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

 

தஞ்சை செல்வராசு குழுவினரின் நாட்டுப்புற நடனக்குழுவின் கலை நிகழ்ச்சியோடு நடைபெற்ற இப் பேரணியை விம்கோ உப்புத் தொழிலாளர் சங்க செயலாளர் தோழர் இரா.தியாகராசன், துணைச் செயலாளர் தோழர் வாசுதேவன், பொருளாளர் தோழர் இளங்கோவன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் நெறிப்படுத்தினர்.

 

கிராமச்சாலைகள் வழியாகவே சுமார் 5 கி.மீ நடைபெற்ற இப்பேரணியில் தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், ஆதரவாளர்களுமாக 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பேரணிப் பாதை நெடுகிலும் சங்க உறுப்பினர் குடுபங்களை சேர்ந்தவர்களும், ஓய்வு பெற்றத் தொழிலாளர்களும் கூடி நின்று குளிர்பானம் அளித்தும், தேனீர் வழங்கியும் தோழர் கி.வெ அவர்களுக்கு ஆடை அணிவித்தும் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

 

பேரணி நிறைவில் சங்க கொடியை தோழர் கி.வெங்கட்ராமன் ஏற்றிவைத்து மே நாள் உரை நிகழ்த்தினார். ஒன்றிய கவுன்சிலர் திரு இராசசேகர், கடினல் வயல் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் திருமதி தனலெட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். செயலாளர் தோழர் தியகராசன் நன்றி நவின்றார்.

 

தஞ்சை நகரம்

தஞ்சை த.தே.பொ.க. கட்சி அலுவலகத்தில் காலை 9 மணியளவில் மே நாள் கொடியேற்று விழா நகர செயளாலர் இரா.சு.முனியாண்டி தலைமையில் நடைபெற்றது தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை கட்சி கொடியேற்றிவைத்து சிறப்புரையாற்றினார் . அதனைத்  தொடர்ந்து த.தே.பொ.க தோழர்கள்  இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்று மருத்துவக் கல்லூரி, கலைஞர் நகர், முனியாண்டவர் காலனி, பூக்கார லாயம், கோரிக்குளம், ரெங்கநாதபுரம், இந்திரா நகர், அண்ணா நகர் 7ஆம் தெரு, முதல் தெரு, வடக்குவாசல், தஞ்சை பழைய பேருந்து நிலையம் பழக்கடை உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியாக கொடியேற்ற விழாக்கள் நடைபெற்றன. த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.இராசேந்திரன், நா.வைகறை நகரத் துணைச் செயலாளர் தோழர் தமிழ்ச்செல்வன், தமிழக இளைஞர் முன்னணி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ரெ.சிவராசு ஆகியோர் அங்கங்கே கட்சி மற்றும் த.இ.மு கொடியேற்றி வைத்தனர்.

 

தஞ்சை ஒன்றியம்

தஞ்சை ஒன்றியம் வல்லம் கடைவீதி அண்ணா சிலை அருகில் மே நாள் கொடியேற்று விழா மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் பி.முருகையன் தலைமையில் நடைபெற்றது. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன் கொடியேற்றி மே நாள் உரைநிகழ்த்தினார்.

 

பூதலூர் ஒன்றியம்

தஞ்சை வட்டம் பூதலூர் இரயிலடியில் காலை 8 மணியளில் நடைபெற்ற, மே நாள் கொடியேற்று நிகழ்வுக்கு த.தே.பொ.க. ஒன்றியச் செயலாளர் தோழர் காமராசு தலைமையேற்றார். த.தே.பொ.க. மாவட்டச் செயற்குழு தோழர் ரெ.கருணாநிதி, த.இ.மு. செயலாளர் தோழர் கே.செந்தில்குமார் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

 

அதனைத் தொடர்ந்து ஒன்றியத்தில் வீரப்புடையான்பட்டி, முத்துவீரக்கண்டியம்பட்டி, நந்தவனப்பட்டி, புதுப்பட்டி, கக்கனூர், மனையேறிப்பட்டி, வெண்டையம்பட்டி, புதுக்குடி, புதுக்குடி முதன்மைச்சாலை, காமாட்சிபுரம், சமத்துவப்புரம், வளம்பக்குடி, காதாட்டிப்பட்டி, துருசுப்பட்டி, நண்டப்பட்டி, பாலையப்பட்டி, ஆச்சாம்பட்டி, கொசுவப்பட்டி, வன்னிப்பட்டி, செங்கிப்பட்டி ஆகிய கிராமங்களில் தொடச்சியாக மாலை வரை கட்சிக் கொடியும், தமிழக இளைஞர் முன்னணி கொடியும் ஏற்றப் பட்டு மே நாள் தெருமுனைக் கூட்டங்கள் எழுச்சியோடு நடைப் பெற்றன.

 

நிறைவில் மாலை 6 மணியளவில் நடைபெற்ற சாணுரப்பட்டி தானிஓட்டுனர் சங்க மே நாள் கொடியேற்று நிகழ்விற்கு, சங்கச் செயலாளரும் த.இ.மு. பொறுப்பாளருமான தோழர் தட்சிணாமூர்த்தி தலைமையேற்றார். மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி கொடியேற்றி வைத்து, அங்கு நடைபெற்ற த.தே.பொ.க. பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார். நிகழ்வில், த.தே.பொ.க. கிளைச் செயலாளர் தோழர் கருப்பசாமி, தோழர் இரமேசு, தோழர் கு.சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

மதுரை

மதுரை மாநகர் செல்லூர் - தாகூர் நகரில் காலை 10 மணியளவில் நடைபெற்ற மே நாள் கொடியேற்ற நிகழ்வுக்கு, த.தே.பொ.க  தோழர் மு.அழகர்சாமி தலைமையேற்றார், பா.இராசேந்திரன் (சித்திரைவீதி தானி ஓட்டுனர் சங்கச்செயலாளர்) அவர்கள் கொடியேற்றி வைத்து  கருத்துரை வழங்கினார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் ஆ.அனந்தன், தமிழக மகளிர் ஆயம் ஒருகிணைப்பளர் தோழர் அருணா, மதுரை மக்கள் உரிமை பேரவை அமைப்பாளர் வழக்குரைஞர் சு.அருணாசலம், வழக்குறைஞர் மணி, த.தே.பொ.க மதுரை செயலாளர் தோழர்.ரெ.இராசு உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர். சித்திரை வீதி தானி ஓட்டூனர்களும் பொதுமக்களும் திராளானோர் கலந்துக் கொண்டனர்.

 

கோவை

கோவை பேரூர் சாலையிலுள்ள செட்டி வீதி அசோக்நகர் பகுதியில், காலை 10 மணியளவில் நடைபெற்ற மே தின கொடியேற்று விழாவிற்கு தமிழக இளைஞர் முன்னணி பெரியக்கடை வீதி கிளைச் செயலாளர் தோழர் இரா.கண்ணன் தலைமையேற்றார், த.இ.மு. மாநகரச் செயலாளர் தோழர் பா.சங்கரவடிவேல் த.தே.பொ.க கொடி ஏற்றினார். தோழர்கள் பிறை.சுரேசு, கு.இராஜேஷ்குமார், சு.மாரியப்பன் உள்ளிட்ட த.தே.பொ.க தோழர்களும், த.இ.மு. தோழர்களும் கலந்து கொண்டனர். மே நாள் போராளிகளுக்கு வீரவணக்கம்! தமிழ்நாடு விடுதலை பெறுவோம்!! வெளியாரை வெளியேற்றுவோம்!!! உள்ளிட்ட முழக்கங்கள் அந்தப் பகுதியின் அனைவரின் கவனத்தை ஈர்த்தது..

 

காலை 11.30 மணியளவில் எல்.ஐ.சி. குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற மே நாள் கொடியேற்று நிகழ்விற்கு, செல்வபுரம் த.இ.மு. கிளைச் செயலாளர் தோழர் பிறை.சுரேசு தலைமைஏற்றார் த.இ.மு. கொடியை தோழர் பா.சங்கரவடிவேல் ஏற்றினார். தோழர் கு.இராசேசு, இரா.கண்ணன், சு.மாரியப்பன், ஜா.ஸ்டீபன், மா.தளவாய்சாமி உள்ளிட்ட கட்சித் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 

சிதம்பரம்

சிதம்பரம் காசுக்கடைத் தெருவில் காலை 8.30 மணியளவில் நடந்த கொடியேற்று விழாவிற்கு, த.தே.பொ.க. மூத்த உறுப்பினர் தோழர் மு.முருகவேள் தலைமை தாங்கினார், த.தே.பொ.க.நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் கட்சி கொடியேற்றினார்.கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் தோழர் ம.கோ.தேவராசன், த.இ.மு. அமைப்புக் குழு உறுப்பினர் தோழர் பா.பிரபாகரன், தமிழக இளைஞர் முன்னணி நகரச் செயலாளர் ஆ.குபேரன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா, செயலாளர் செ.செயப்பிரகாசு மற்றும் த.தே.பொ.க தோழர்களும் த.இ.மு தோழர்களும் அப் பகுதி மக்களும் திரளானோர் கலந்து கொண்டனர்.

 

ஈரோடு

ஈரோடு கருங்கல்பாளையம் பச்சியம்மன கோயில் வீதியில் காலை 9 மணியளவில் நடைபெற்ற மே நாள் கொடியேற்று விழாவில்,  த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் குமரேசன் த.தே.பொ.க கொடியேற்றி சிறப்புரை வழங்கினார் த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் இராசையா கருத்துரை வழங்குகின்றனர். த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் வெ.இளங்கோவன் தலைமை தாங்கினார்.

 

பரமக்குடி

பரமக்குடியில் காலை 11 மணியளவில் நடைபெற்ற மே நாள் கொடியேற்று நிகழ்வுக்கு, த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் இளங்கோவன் தலைமையேற்று த.தே.பொ.க கொடியேற்றினார்.

 

பெண்ணாடம்

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மற்றும் முருகங்குடி பகுதிகளில் மே 1 மாலை நடைபெற்ற மே நாள் கொடியேற்று விழாவில் த.தே.பொ.க தோழர் கனகசபை தலைமையில் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் குழ.பால்ராசு த.தே.பொ.க கொடியேற்றி மே நாள் சிறப்புரையாற்றினார் ஆசிரியர் பழனிமாணிக்கம், த.தே.பொ.க பொதுக் குழு உறுப்பினர் தோழர் மு.முருகன் ஆகியோர் கருத்துரை வழங்கினர் த.இ.மு தோழர் பிரகாசு நன்றியுரையாற்றினார்.

 

ஓசூர்

ஓசூர்  ராம் நகரியில் உள்ள த.தே.பொ.க கட்சிக் கொடியை த.தே.பொ.க தலைமை செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார். கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் தோழர் நடவரசு தலைமையேற்றார். தோழர் ஸ்டாலின் நன்றியுரையாற்றினார்.

 

திருச்சி

திருச்சிமாவட்டம் துவாக்குடியில் அண்ணா வளைவில் காலை 9 மணியளவில் நடைபெற்ற மே நாள் கொடியேற்று விழாவிற்கு செயலாளர் தோழர் வே.க.லெட்சுமணன் தலைமைதங்கினார் பாவலர் முவ.பரணர் த.தே.பொ.க கொடியை ஏற்றினார். வழக்கறிஞர் தோழர் த.பானுமதி சிறப்புரையாற்றினார் தமிழ் கலைஇலக்கிய பேரவை தலைவர் இரெ.சு.மணி, தமிழ் கலைஇலக்கியப் பேரவை செயளாலர் ந.ராஜாரகுநாதன், தோழர் இனியன், தோழர் ஆத்மநாதன், திருச்சி செயளாலர் தோழர் கவித்துவன் ஆகியோர் கருத்துரை வழங்கினர் முன்னதாக ஈகவஅரசன் எழுச்சிப் பாடல் பாடினார்.

 

திருச்சி விமான நிலைத்தில் காலை 10.30 மணியலவில் நடைபெற்ற மே நாள் கொடியேற்று விழாவிற்கு தோழர் இனியன் தலைமைதாங்கினார் தமிழ் கலைஇலக்கியப் பேரவை தலைவர் இரெ.சு.மணி த.தே.பொ.க கொடியேற்றினார். வழக்கறிஞர் தோழர் த.பானுமதி சிறப்புரையாற்றினார்.

 

திருச்செந்தூர்

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் கடைத் தெருவில் மாலை 6.30 மணியளவில் நடைபெற்ற மே நாள் கொடியேற்று விழாவில் த.தே.பொ.க பொதுக்குழு உறுப்பினர் தோழர் மு.தமிழ்மணி கொடியேற்றி உரை நிகழ்த்தினார் விழாவில் த.தே.பொ.க தோழர்கள் உச்சிராசு, தோழர் தமிழ்த்தேசியன், தமிழரும்பு, சபரிவாசன், தோழர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

 

இடம்: சென்னை

 
 

 

 

 


தலைமைச் செயலகம்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி



Wednesday, May 2, 2012

மூவர் தூக்கு வழக்கை மாற்றியது கூட்டாட்சி நீதி முறைமைக்கு மிகப் பெரிய ஊறு விளைவிக்கும் - கி.வெங்கட்ராமன் அறிக்கை!

பேரறிவாளன், முருகன், சாந்தன்

மூவர் தூக்கிற்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றியது

கூட்டாட்சி நீதி முறைமைக்கு மிகப் பெரிய ஊறு விளைவிக்கும்!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டனம்!

 

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூன்று தமிழர் மரண தண்டனையில் கருணை மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதி மன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் தானாகவே தன் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.  இது கூட்டாட்சி நீதி முறைமைக்கும், இயற்கை நீதிக்கும் எதிரானது.

 

இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது, வேறு ஒரு மாநில உயர்நீதி மன்றம்தான் விசாரிக்க வேண்டும் என மூப்பனார் பேரவை என்ற முகவரித்தாள் அமைப்பைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் தொடுத்த வழக்கிற்கும் இதற்கும் தொடர்பில்லை என்று உச்சநீதிமன்றம் சொன்னபோதிலும் உண்மையில் மறைமுகமாக அவரது வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாகவே அம்மன்றத்தின் நடவடிக்கை உள்ளது.

 

ஒரு குற்றவியல் வழக்கில் பாதிக்கப்பட்ட ஒருவர் உயர்நீதிமன்றத்தில் தனக்குள்ள சட்ட உரிமையையும், நியாயத்தையும் வலியுறுத்தி சட்ட வழியில் போராடுவதற்கு இருக்கும் ஒரு வாய்ப்பை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பறிக்கிறது. இராஜீவ் காந்தி கொலைவழக்கில் தடா நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு மன்றமாக உச்சநீதிமன்றம் செயல்பட்ட போது அதன் தீர்ப்பில் தீவிரமான உள் முரண்பாடுகள், சட்டவழிப்பட்ட பிழைகள் இருப்பதை அத்தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான கே.டி. தாமஸ் அவர்களே "தி ஏஷியன் ஏஜ்" ஏட்டில் ஒத்துக் கொண்டிருக்கிறார். அவ்வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரிகளின் பல்வேறு நேர்காணல்களும் கட்டுரைகளும் இராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையில் ஏற்பட்ட குழறுபடிகளை எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். 

 

மிக நீண்ட காலம் மன உளைச்சலிலேயே காத்திருக்க வைத்துவிட்டு இந்திய அரசு இம்மூவரின் மரண தண்டனையை உறுதி செய்தது.

 

இவை பற்றியெல்லாம் சட்டவழியில் போராடுவதற்கு உள்ள சென்னை உயர்நீதிமன்றம் என்ற களத்தை உச்ச நீதிமன்றம் பறித்துவிட்டது. 

 

எந்த உயர்நீதிமன்றத்திலும் வழக்கை தானே எடுத்து விசாரிப்பதற்கு அரசமைப்புச் சட்டத்தில் உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும் அவ்வதிகாரத்தை உச்சநீதிமன்றம் அரிதாகவே பயன்படுத்தவேண்டும். அதுதான் கூட்டாட்சி முறைமையை நீதித்துறையில் பாதுகாக்க உதவும். 

 

கூட்டாட்சி முறைமை என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளில் ஒன்று. (Basic structure of the Constitution) என கேசவானந்த பாரதி வழக்கில் உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை இப்போதைய உச்ச நீதிமன்ற நடவடிக்கை மீறுவதாக உள்ளது. 

 

உயர்நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கை இதே போன்ற வேறு சில மரண தண்டனை வழக்குகளைக் காரணம் காட்டி தன்னுடைய விசாரணைக்கு உச்சநீதிமன்றம் எடுத்துக் கொண்டிருப்பது இயற்கை நீதிக்கு எதிரானது.

 

உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு மறைமுகமாக சென்னை உயர்நீதி மன்றத்தின் மீது அதற்குள்ள நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தும் செயலே ஆகும். இது கூட்டாட்சி நீதி முறைமைக்கு மிகப் பெரிய ஊறு விளைவிக்கும்.

 

எனவே, தமிழக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தை உரியவாறு அணுகி சென்னை உயர்நீதிமன்றத்திலேயே இவ்வழக்கை விசாரிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.

 

தங்கள் உண்மையுள்ள,

கி.வெங்கட்ராமன்,

பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


நாள்: 02.05.2012, சிதம்பரம்



Sunday, April 29, 2012

தமிழ்த் தேசிய எழுச்சி நாளாக மே நாளைக் கடைபிடிப்போம் - தமிழகமெங்கும் த.தே.பொ.க. மே நாள் நிகழ்வுகள்!

தமிழ்த் தேசிய எழுச்சி நாளாக மே நாளைக் கடைபிடிப்போம்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் மே நாள் வாழ்த்துச் செய்தி!

ஆண்டைகள் பூட்டிய அடிமை விலங்குகளை உடைத்தெறிந்த உழைக்கும் மக்களை மீண்டும் அடிமைப்படுத்த புதிய முறையில் சட்டதிட்டங்களை இயற்றிக் கொண்டார்கள் ஆளும் வர்க்கத்தினர். அந்தப் புதிய அடிமைத் தளைகளை அறுத்தெறிய 19ஆம் நூற்றாண்டில் பாய்ந்தெழுந்த பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சி நாள் மே நாள். அதன் பிறகு மே நாள் என்பது ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் நாளாக மட்டுமின்றி ஒடுக்கபட்ட தேசிய இனங்களின் எழுச்சி நாளாகவும் ஆகிவிட்டது. இந்த மே நாளில் தமிழ்த் தேசிய எழுச்சிக்கும் விடுதலைக்கும் சூளுரைப்போம்!

 தமிழகமெங்கும் த.தே.பொ.க. சார்பில் மே நாள் கொடியேற்று விழாக்கள்!

உழைக்கும் மக்களுக்கு 8 மணி நேர வேலை உள்ளிட்ட பல்வேறு உரிமைகளைப் பெற்றுத்தந்த போர்க்குணமிக்க மே நாள் போராட்டங்களை நினைவு கூறும் வகையிலும், தமிழ்த் தேச விடுதலைக்கு தமிழ்த் தேசப் பாட்டாளிகள் உறுதியேற்க வேண்டுமென வலியுறுத்தியும்  தமிழகமெங்கும் மே-1ல் கொடியேற்றி மேநாளை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது.


சென்னை

சென்னை த.தே.பொ.க. தலைமை அலுவலகம் அமைந்துள்ள தியாகராயர் நகர் முத்துரங்கம் சாலையில், காலை 9 மணியளவில் மே நாள் கொடியேற்று விழா நடைபெறுகிறது. த.தே.பொ.க. தலைவைர் தோழர் பெ.மணியரசன் கட்சியின் கொடியேற்றி மே நாள் உரை நிகழ்த்துகிறார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழா பழ.நல்.ஆறுமுகம், தாம்பரம் கிளைச் செயலாளர் தோழா தமிழ்க்கனல் உள்ளிட்டோர் உரையாற்றுக்கின்றனர்.

 

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி நீதிமன்றம் அருகில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் காலை 9 மணியளவில் நடைபெறும் நிகழ்வில், த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கலந்து கொண்டு த.தே.பொ.க. கொடியேற்றி வைத்து உரை நிகழ்த்துகிறார். நிகழ்வுக்கு, திருத்துறைப்பூண்டி த.தே.பொ.க. ஒன்றியச் செயலாளர் தோழர் அ.தனபால் தலைமையேற்கிறார்.


வேதாரணியம்

வேதாரணியம் வட்டம் கடினல்வயலில் விம்கோ உப்புத் தொழிலாளர் சங்கம் சார்பில் மே தின கொடியேற்று விழா நடைபெறுகின்றது. சங்கச் செயலாளர் தோழர் இரெ.தியாகராசன் நிகழ்வுக்குத் தலைமையேற்கிறார். பன்னாள் கிராமத்திலிருந்து தொடங்கும் தொழிலாளர்கள் பேரணி சற்றொப்ப 5 கிலோ மீட்டர் நடந்து கடினல்வயல் விம்கோ  உப்புத் தொழிற்சாலை வாயில் நிறைவடைகிறது. அங்கு நடைபெறும் நிகழ்வில், த.தே.பொ.க. பொதுச் செயலாளரும், தொழிலாளர் சங்கத் தலைவருமான தோழர் கி.வெங்கட்ராமன்  தொழிற்சங்கக் கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்துகிறார்.


தஞ்சை நகரம்

தஞ்சை த.தே.பொ.க. கட்சி அலுவலகத்தில் காலை 9 மணிக்கு தொடங்கும் மே நாள் கொடியேற்று நிகழ்வைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி, கலைஞர் நகர், முனியாண்டவர் காலனி, பூக்கார லாயம், கோரிக்குளம், ரெங்கநாதபுரம், இந்திரா நகர், அண்ணா நகர் 7ஆம் தெரு, முதல் தெரு, வடக்குவாசல், தஞ்சை பழைய பேருந்து நிலையம் பழக்கடை உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியாக கொடியேற்ற விழாக்கள் நடைபெறுகின்ற. த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் நா.வைகறை, தோழர் பழ.இராசேந்திரன், நகரச் செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி, நகரத் துணைச் செயலாளர் தோழர் தமிழ்ச்செல்வன், தமிழக இளைஞர் முன்னணி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ரெ.சிவராசு ஆகியோர் கொடியேற்றி வைக்கின்றனர்.


தஞ்சை ஒன்றியம்

தஞ்சை ஒன்றியம் வல்லம் கடைவீதி அண்ணா சிலை அருகில் மே நாள் கொடியேற்றுவிழா மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் பி.முருகையன் தலைமையில் நடைபெறும். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன் கொடியேற்றி மே நாள் உரைநிகழ்த்துகிறார்.

 

பூதலூர் ஒன்றியம்

தஞ்சை வட்டம் பூதலூர் இரயிலடியில் காலை 8 மணியளில் நடைபெறும், மே நாள் கொடியேற்று நிகழ்வுக்கு த.தே.பொ.க. ஒன்றியச் செயலாளர் தோழர் காமராசு தலைமையேற்கிறார். த.தே.பொ.க. மாவட்டச் செயற்குழு தோழர் ரெ.கருணாநிதி த.இ.மு. செயலாளர் தோழர் கே.செந்தில்குமார் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.அதனைத் தொடர்ந்து ஒன்றியத்தில் 30க்கும் மேற்ப் பட்ட கிராமங்களில் தொடச்சியாக மாலைவரை கட்சிக் கொடியும், தமிழக இளைஞர் முன்னணி கொடியும் ஏற்றப் பட்டு மே நாள் தெருமுனைக் கூட்டங்கள் நடைப் பெறும்.

 

செங்கிப்பட்டியில் மாலை 6 மணியளவில் நடைபெறும் சாணுரப்பட்டி தானிஓட்டுனர் சங்க மே நாள் கொடியேற்று நிகழ்விற்கு, சங்கச் செயலாளரும் த.இ.மு. பொறுப்பாளருமான தோழர் தட்சிணாமூர்த்தி தலைமையேற்கிறார். மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிர் த.பானுமதி கொடியேற்றி வைத்து, பின்னர் அங்கு த.தே.பொ.க. நடத்தும் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார். நிகழ்வில், த.தே.பொ.க. கிளைச் செயலாளர் தோழர் கருப்பசாமி, தோழர் இரமேசு, தோழர் கு.சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

 

மதுரை

மதுரை மாவட்டம் செல்லூர் - தாகூர் நகரில் காலை 9 மணியளவில் நடைபெறும் மே நாள் கொடியேற்ற நிகழ்வுக்கு, த.தே.பொ.க. செயலாளர் தோழர் இராசு தலைமையேற்கிறார். சித்திரை வீதி தானி ஓட்டுநர் சங்கச் செயலாளர் தோழர் இராசேந்திரன் த.தே.பொ.க. கொடியேற்றி வைக்கிறார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சு.அருணாச்சலம், மகளிர் ஆயம் பொறுப்பாளர்கள் தோழர் மேரி,தோழர் இளமதி, தோழர் செரபினா உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.

 

கோவை

கோவை பேரூர் சாலையிலுள்ள செட்டி வீதி அருகில், காலை 10 மணியளவில் நடைபெறும் மே நாள் கொடியேற்று விழாவிற்கு தலைமையேற்கும், தமிழக இளைஞர் முன்னணி  பெரியக்கடை வீதி கிளைச் செயலாளர் தோழர் இரா.கண்ணன், த.தே.பொ.க. கொடியேற்றி வைக்கிறார். காலை 11.30 மணியளவில் எல்.ஐ.சி. குடியிருப்பு பகுதியில் நடைபெறும் மே தினக் கொடியேற்று நிகழ்விற்கு, செல்வபுரம் த.இ.மு. கிளைச் செயலாளர் தோழர் பிறை.சுரேசு தலைமை தாங்கி, த.இ.மு. கொடியேற்றி வைக்கிறார். த.இ.மு. மாநகரச் செயலாளர் தோழர் பா.சங்கர் மற்றும் கட்சிப் பொறுப்பாளர்கள் மே நாள் உரை நிகழ்த்துவார்கள்.

 

சிதம்பரம்

சிதம்பரம் காசுக்கடைத் தெருவில் காலை 8.30 மணியளவில் நடக்கும் கொடியேற்று விழாவிற்கு, த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் கொடியேற்றி வைக்கிறார். தமிழக இளைஞர் முன்னணி நகரச் செயலாளர் ஆ.குபேரன் தலைமை தாங்குகிறார்.


ஈரோடு

கருங்கல்பாளையம் பச்சியம்மன கோயில் வீதியில் காலை 9 மணியளவில் நடைபெறும் மே நாள் கொடியேறறு விழா நிகழ்விற்கு, த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் குமரேசன் தலைமையேற்கிறார். த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் இராசையா கருத்துரை வழங்குகிறார். த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் வெ.இளங்கோவன் கொடியேற்றி வைக்கிறார்.

 

பெண்ணாடம்

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மற்றும் முருகங்குடி பகுதிகளில் நடைப் பெறும் மே நாள் கொடியேற்று விழாவில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க.முருகன் தலைமையில் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் குழ.பால்ராசு த.தே.பொ.க கொடியேற்றி மே நாள் சிறப்புரையாற்றுகிறார்.

 

ஓசூர்

ஓசூர் கடைவீதி கட்சிக் கொடியை ஏற்றிவைத்து தலைமை செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து உரையாற்றுகிறார். கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் தோழர் நடவரசு தலைமையேற்கிறார்.

 

குடந்தை

குடந்தை, சுவாமிமலை ஆகிய ஊர்களில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் தோழர் விடுதலைச்சுடர் த.தே.பொ.க கொடியையும், பாபநாசத்தில் தமிழக இளைஞர் முன்னணி கொடியையும் ஏற்றிவைக்கிறார்.

 

திருச்சி

துவாக்குடியில் நடைபெறும் மே நாள் கொடியேற்று விழாவிற்கு செயலாளர் தோழர் கவித்துவன் தலைமைதாங்க வழக்கறிஞர் தோழர் த.பானுமதி த.தே.பொ.க கொடியேற்றி உரை நிகழ்த்துகிறார்.

 

திருச்செந்தூர்

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் கடைத் தெருவில் தோழர் உச்சிராசு தலைமையிலும், திருச்செந்தூர் தேரடி அருகில் தோழர் தமிழ்த்தேசியன் தலைமையிலும் நடைபெறும் மே நாள் விழாக்களில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் தோழர் மு.தமிழ்மணி த.தே.பொ.க கொடியேற்றி உரை நிகழ்த்துகிறார்.

 

இம் மே நாள் விழாக்களில் த.தே.பொ.க. தோழர்களும், தமிழ் உணர்வாளர்களும் திரளாகப் பங்கேற்று சிறப்பிக்குமாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது. 


தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தலைமைச் செயலகம், சென்னை-17.


Friday, April 27, 2012

செங்கல்பட்டு - பூந்தமல்லி தமிழீழ அகதிகள் முகாம்களை முடக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய கண்டன உரை..!

செங்கல்பட்டு - பூந்தமல்லி தமிழீழ அகதிகள் முகாம்களை முடக்கக்கோரி, தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில் 26-4-2012 அன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய கண்டன உரை..!

Tuesday, April 24, 2012

டி.கே.ரெங்கராசனுக்கு இவ்வாண்டு லங்கா ரத்னா விருது கிடைக்குமா? - பெ.மணியரசன் கேள்வி!

டி.கே.ரெங்கராசனுக்கு இவ்வாண்டு லங்கா ரத்னா விருது கிடைக்குமா?

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் கேள்வி!

 

இந்திய அரசால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குழுவில் சென்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே.ரெங்கராசன், சென்னையில் தனியே ஒரு செய்தியாளர் கூட்டம் நடத்தி 22.04.2012 அன்று செவ்வி கொடுத்துள்ளார். அதில், "இலங்கையில் உள்ள தமிழர் அமைப்புகள், தமிழர் அரசியல் தலைவர்கள், தமிழ்ப் பொதுமக்கள் யாரும் தனிஈழத்தை விரும்பவில்லை. ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஉரிமையுடன் கூடிய அரசியல் தீர்வையே விரும்புகின்றனர்" என்று கூறியுள்ளார்.

 

சிங்கள இனவெறி அரசு நடத்திய இன அழிப்புப் போரில் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அதன் பிறகு, தமிழர்களின் ஊர்களில் சிங்களர் குடியேற்றப்பட்டு, தமிழர்களின் வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இயல்பான குடிவாழ்க்கை வாழ முடியாமல் இராணுவத்தினர் தமிழர்கள் பகுதியெங்கும் நிரப்ப்ப்பட்டுள்ளனர். இராணுவத்தின் அனுமதியின்றி, திருமணச் சடங்குகள், இறப்புச் சடங்குகள் கூட நடத்த முடியாத கெடுபிடிகள் தொடர்கின்றன. மறுவாழ்விற்கான துயர் துடைப்புப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இலங்கை அரசு அமைத்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையம் அளித்த மனித உரிமை மீறல் குற்றம் புரிந்தோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிங்கள இனவெறியாட்டம் தொடர்கிறது.

 

இந்த அவலங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசை வலியுறுத்தாமல், தனி ஈழத்தைத் தமிழர்களே கோரவில்லை என்பதைக் கண்டறிந்ததாகக் கூறி, தமிழ்நாட்டுத் தமிழர்களையும், உலக சமுதாயத்தையும் குழப்புவதே இந்திய நாடாளுமன்றக் குழுவின் முதன்மையான நோக்கமாக இருந்திருக்கிறது.

 

ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கத் தீர்மானத்தைத் திருத்தத்துடன் ஆதரித்து வாக்களித்ததற்காக, இலங்கை இனவெறியன் இராசபட்சேயிடம் மன்னிப்புக் கேட்காதது மட்டும்தான் பாக்கி. மற்ற எல்லா விளக்கங்களையும் பணிந்து சொல்லிக் கொண்டுள்ளது இந்தியா. பிரதமர் மன்மோகன் சிங் விளக்கமளித்து இராசபட்சேக்கு மடல் எழுதினார்.

 

இவை எல்லாம் போதாதென்று ஒரு நல்லெண்ணத் தூதுக்குழுவாக, சுஷ்மா சுவராஜ் தலைமையில் நாடாளுமன்றக் குழுவை இந்தியா இலங்கைக்கு அனுப்பி வைத்தது. அந்தக் குழுவும் இந்திய அரசின் விருப்பத்தை அது எதிர்ப்பார்த்ததைத் தாண்டி நிறைவேற்றியுள்ளது.

 

ஈழத்தமிழர்கள் யாரும் தனிநாடு கோரவில்லை என்று கூறினார்கள் என்பது உண்மையெனில், ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் ஒரு கருத்து வாக்கெடுப்பு நடத்துமாறு, சுஷ்மா சுவராஜ் கோரியிருக்கலாம். டி.கே.ரெங்கராசனும், சுதர்சன நாச்சியப்பனும் கோரியிருக்கலாம்.

 

இன அழிப்பு செய்த இராணுவத்தின், 24 மணி நேர தீவிரக் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ள மக்கள் தங்கள் கருத்தைப் பகிரங்கமாக கூறும் நிலை ஈழத்தில் இல்லை. பரிவாரங்கள் இல்லாமல் தனித்தனியே மக்களைச் சந்தித்துக் கேட்டிருந்தால் அவர்கள் தங்கள் உள்ளக் கிடக்கையைச் சொல்லியிருப்பார்கள்.

 

தமிழ் ஈழ விடுதலைக்காகப் புலிப்படையில் சேர்ந்து 40 ஆயிரம் புலிகள் உயிரீகம் செய்துள்ளார்கள். மக்களின் கோரிக்கையாக, தனித் தமிழீழம் இல்லையென்றால், வீட்டுக்கொருவர், இருவர் என்று கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலிருந்தும் புலிப்படையில் சேர்ந்திருப்பார்களா? தமிழீழத் தேசியத் தலைவராகப் பிரபாகரன் அவர்களை மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்களா? முள்ளிவாய்க்கால் வரை அவருடன் இலட்சக்கணக்கான தமிழர்கள் வந்திருப்பார்களா? முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்ட போது அங்கும் புலிக்கொடி ஏற்றியிருப்பார்களா?

 

தமிழ்நாட்டிலிருந்து பலர் தமிழ் ஈழப்பகுதிகளுக்குப் போய் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் எந்தப் பரிவாரங்களும் இல்லாமல் தனித்தனியே தமிழர்களைச் சந்தித்து வருகிறார்கள். அப்போது, ஈழத்தமிழர்கள் சொன்னது "இனி மேலும் சிங்களன்களோடு வாழ முடியாது. நாட்டு விடுதலை ஒன்று தான் ஒரே தீர்வு" என்பது தான்.

 

ஈழத்தில் பகிரங்கமாக விடுதலைக் கருத்தைக் கூறமுடியாத நெருக்கடி இருப்பதால், புலம் பெயர்ந்த நாடுகளில் தான், ஈழவிடுதலை இலட்சிணம் இப்பொழுது முன்னெடுக்கப்படுகிறது. ஏனெனில், அந்நாடுகளில்தான் ஈழத்தமிழர்கள் சுதந்திரமாகக் கருத்துக் கூறும் நிலை உள்ளது.

 

ஈழத்தில் இருக்கும் இராணுவ நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு, டி.கே.ரெங்கராசன், தமிழ் ஈழத்தைத் தமிழர்கள் விரும்பவில்லை என்று கூறுகிறார். இது இராணுவம் கருத்துரிமையைப் பறித்ததற்குச் சமமான கருத்துரிமைப் பறிப்பாகும். இதற்காக இவ்வாண்டிற்குரிய லங்கா ரத்னா விருது டி.கே.ரெங்கராசனுக்குக் கிடைத்தாலும் கிடைக்கலாம்.

 

ஒன்றுபட்ட இலங்கைக்குள் சம உரிமையுடன் வாழவிரும்புகிறார்கள் என்று கூறும் ரெங்கராசன் அந்த சமஉரிமையைப் பெற்றுத்தர அவரது கட்சி என்ன செய்கிறது? அதற்காக இந்தியா என்ன செய்கிறது?

 

சமஉரிமை என்ற கானல் நீரைக்காட்டி, ஈழத்தமிழர்களின் விடுதலை தாகத்தைத் தணிக்கச் சொல்லி மடைமாற்றுவதே இந்தியாவின் தந்திரம்! சி.பி.எம். கட்சியின் தந்திரமும் அதுவே. ஈழத்தமிழர்கள் ஏமாறமாட்டார்கள். தமிழகத் தமிழர்கள் குழம்ப வேண்டாம்.


தோழமையுள்ள,

பெ.மணியரசன்

தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


இடம் சென்னை 

நாள் 25.04.2012


Monday, April 16, 2012

கூடங்குளம் அணுஉலைச் சிக்கலில் தொடரும் சி.பி.எம்.மின் பித்தலாட்டம் - த.தே.பொ.க. அறிக்கை!

கூடங்குளம் அணுஉலை:

தொடரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பித்தலாட்டம்!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அறிக்கை!

 


கூடங்குளம் அணுஉலைத் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிற பித்தலாட்ட நாடகம் தொழில்முறைப் பொய்யர்களைக் கூடப்பின்னுக்குத் தள்ளி விடும்.

 

அண்மையில், கோழிக்கோட்டில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அனைத்திந்திய மாநாட்டில் தொடக்க உரையாற்றிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூடங்குளம் அணுஉலைத் திறப்பதை தாங்கள் ஆதரிப்பதற்கான 'விசித்திரமான' காரணத்தை  முன்வைத்தார்.

 

"செய்தாப்பூர் அணுஉலை என்பது தனியார் நிறுவனத்தின் அணுஉலை என்பதாலும், அமெரிக்க அணு ஆயுதத் திட்டத்தோடு இந்தியாவை இணைக்கும் என்பதாலும் செய்தாப்பூர் அணஉலையை சிபி.எம். எதிர்த்த்து. ஆனால் கூடங்குளம் அணுஉலைத் திட்டம் அப்படியானதல்ல. இது சோசலிச சோவியத் ஒன்றியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம். எனவேதான் கூடங்குளம் அணுஉலைத் திட்டத்தை நாம் ஆதரித்தோம்" என்று அவர் பேசியுள்ளார்.

 

அணுஉலையிலும் அதில் வெளியிடும் அணுக்கதிரியக்கத்திலும் தத்துவ வேறுபாடு எதுவுமில்லை. கம்யூனிஸ்ட்டுகளின் அணுஉலை அணுக்கதிரியக்கத்தை வெளிப்படுத்தாது, முதலாளிய அணுஉலை தான் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் என நம்புவதற்கு அறிவியல் அடிப்படை எதுவுமில்லை. யார் நிறுவினாலும் அணுஉலை அணுஉலை தான். தீமை விளைவிப்பவை தான்.

 

மேலும், பிரகாஷ் காரத் சொல்லுவது போல் இப்போது கூடங்குளத்தில் நிறுவப்படும் அணுஉலை கம்யூனிஸ்ட் சோவியத் ஒன்றியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலானது அல்ல. 1988இல் சோவியத் ஒன்றியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் அந்நாடு சிதறுண்டதுடன் காலாவதியானது. எனவே, பொதுவுடைமையைக் கைவிட்டு முதலாளியத்திற்குத் திரும்பிய இரசிய நாட்டுடன் 2001ஆம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமே கூடங்குளம் அணுஉலை ஒப்பந்தமாகும்.

 

அதை செயல்படுத்தும் இப்போதைய இரசியக் குடியரசுத் தலைவர் புடின், இரசியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கென்னடி குயனைவ் அவர்களை தோற்கடித்து பதவிக்கு வந்தவராவார். அவருடைய ஆட்சி தான் கூடங்குளம் அணுஉலையை செயல்படுத்தப் போகிறது. எனவே, பிரகாஷ் காரத் குறிப்பிடுவதைப் போல் கூடங்குளம் அணுஉலையோடு கம்யூனிஸ்ட் கட்சி ஒட்டிக் கொண்டிருக்கவில்லை.

 

கூடங்குளம் அணுஉலையை ஆதரிப்பதற்கு அப்பட்டமான பொய்யையும், அறிவியலுக்குப் புறம்பான செய்திகளையும் துணைக் கொள்கிறார் பிரகாஷ் காரத்.

 

காரத்துக்கு முன்னால் சி.பி.எம். கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன் தங்கள் கூடங்குளம் அணுஉலை ஆதரவுக்கு வேறொரு காரணத்தைச் சொன்னார். அக்கட்சியின் தமிழக மாநில மாநாடு நாகப்பட்டினத்தில் நடந்த போது, சிறப்புரையாற்றிய ஜி.இராமகிருஷ்ணன், "கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள வி.வி.இ.ஆர். 1000 என்ற இரசிய அணுஉலை செய்தாப்பூரில் நிறுவப்பட இருந்த பிரஞ்சு அணுஉலையை விட உயர்த் தொழில்நுட்பத்தில் இயங்குவது. அதில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. எனவே தான் செய்தாப்பூர் அணுஉலையை எதிர்க்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூடங்குளம் அணுஉலையை ஆதரிக்கிறது" என்று கூறினார்.

 

வி.வி.இ.ஆர். 1000 தொழில்நுட்பம், 13 உடனடியாக சரி செய்யவேண்டிய முக்கியமான பாதுகாப்புக் கோளாறுகளை உள்ளடக்கியது என இரசிய நாட்டு அணுஉலை அறிவியலாளர்களே அறிவித்துள்ளனர். அந்நாட்டுப் பிரதமரிடம் கடந்த 2011 சூன் மாதம் அளித்த அறிக்கையில் வி.வி.இ.ஆர். 1000 அணுஉலை அது இயங்கத் தொடங்கிய 2ஆவது ஆண்டிலிருந்தே பாதுகாப்புக் கோளாறுகளில் சிக்கிக் கொள்ளும். அதில் உள்ள கட்டுப்பாட்டுக் கம்பி(Control Rod) இயங்குவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு நேர்ந்தால் அணுஉலையில் அளவுக்கு அதிகமான வெப்பம் உயர்ந்து சிறுக் கீறல் முதல் பெரு வெடிப்பு வரை நிகழ் வாய்ப்புண்டு என்று தெரிவித்துள்ளனர்.

 

அது மட்டுமின்றி வி.வி.இ.ஆர். 1000 அணுஉலையில் மையக்கலனில் உள்ள பற்றவைப்புகள் (Welding) பலவீனமானது என்றும் தொடர்ச்சியான அணுத்துகள்களின் மோதல்களின் விளைவாக அவை இற்றுப்போக வாய்ப்புண்டு என்றும் எச்சரித்துள்ளனர்.

 

உண்மை இவ்வாறிருக்க, வி.வி.இ.ஆர். 1000 அணுஉலை பாதுகாப்பானது என்பதற்கு திரு. ஜி.இராமகிருஷ்ணன் அவர்களுக்கு எங்கிருந்து அறிவியல் சான்று கிடைத்த்தோ தெரியவில்லை. தங்கள் கூடங்குளம் அணுஉலை ஆதரவை ஞயாயப்படுத்த எந்தப் பொய்யையும் சொல்வதற்கு இவர்கள் அணியமாக இருக்கிறார்கள்.

 

கோழிக்கோடு மாநாட்டின் தீர்மானங்களை விளக்கி செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சித்தாராம் யெச்சூரி, தங்கள் முடிவுக்கு வேறொரு காரணத்தைச் சொன்னார். "கைகா அணுஉலையைப் போல கூடங்குளம் அணுஉலை ஏற்கெனவே இயக்கத்தில் இருப்பது. அதிலிருந்து ஏற்கெனவே மின்சாரம் உற்பத்தியாகி வருகிறது. ஆனால்,  செய்தாப்பூர் அணுஉலை இனிமேல் தான் நிறுவப்பட வேண்டும். எனவே தான் கூடங்குளம் அணுஉலையை நாங்கள் ஆதரிக்கிறோம்" என்றார்.

 

கூடங்குளம் அணுஉலையில் இனிமேல் தான் எரிபொருள் நிரப்ப வேண்டும். அதன் பிறகு தான் மின்சார உற்பத்தி நடக்கும் என நாள்தோறும் அரசு அறிவித்துக் கொண்டுள்ள நிலையில், எல்லா செய்தித்தாள்களிலும் அச்செய்தி வந்து கொண்டிருக்கும் போது, இந்த அடிப்படைத் தகவல் கூட தெரியாமல் சீத்தாராம் யெச்சூரி பேசுவதாக நம்பமுடியவில்லை. ஆளுக்கொரு கருத்தைச் சொல்லி தங்கள் முடிவை ஞாயப்படுத்த, மக்களைக் குழப்ப அக்கட்சியின் தலைவர்கள் முனைகிறார்கள். அதில் ஒன்று தான் யெச்சூரியின் கூற்று.

 

கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய்விட்டார். கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து போராடி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இடிந்தகரைக்கே வருவதாக அறிவித்தார். அக்கட்சித் தலைமை கட்டளையிட்டதன் அடிப்படையில் கடைசி நேரத்தில் அப்பயணத்தைத் தவிர்த்துக் கொண்டார்.

 

இவ்வாறு, கூடங்குளம் அணுஉலைத் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்யும் பித்தலாட்டம் அளவிட முடியாமல் சென்று கொண்டிருக்கிறது. 


தோழமையுடன்,

கி.வெங்கட்ராமன்

பொதுச் செயலாளர்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


இடம்: சிதம்பரம்,

நாள்: 16.04.2012



Saturday, April 14, 2012

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீட்டை விலக்கின்றி தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் - த.தே.பொ.க. வலியுறுத்தல்!

ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கு தனியார் பள்ளி இடஒதுக்கீட்டை

விலக்கின்றி தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அறிக்கை!

 

கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் அனைத்து தன்நிதி தனியார் பள்ளிகளிலும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழை மாணவர்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் தனது 12.04.2012 நாளது தீர்ப்பின் மூலம் உறுதிசெய்துள்ளது. இது வரவேற்கத்தக்கது.


ஆயினும், இத்தீர்ப்பு இச்சட்டப்பிரிவிலிருந்து சிறுபான்மையினர் நடத்தும் தன்நிதி பள்ளிகளுக்கு விலக்களித்திருப்பது சமூகநீதியின்பாற்பட்டதல்ல. இது மறுஆய்வுக்கு உட் படுத்தப்பட வேண்டும். சிறுபான்மையினர் நடத்தும் தன்நிதி பள்ளிகள் உள்ளிட்டு அனைத்துத் தனியார் பள்ளிகளுக்கும் விலக்கின்றி இச்சட்டம் செயலுக்கு வரவேண்டும். 


தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில், சென்ற கல்வி ஆண்டிலேயே இச்சட்டச் செயலாக்கம் குறித்து பள்ளிகளுக்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இத்தீர்ப்பின் அடிப்படையில், அனைத்து ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கும் 25 விழுக்காடு இடஒதுக்கீடு கிடைப்பதை தமிழக அரசு உன்னிப்பாக கவனித்து உறுதிப்படுத்த வேண்டும். 


இதனை செயல்படுத்தும் போது, நடைமுறையில் இதனை பயனற்றதாக்கும் சூழ்ச்சியில் தன்நிதிப் பள்ளி நிர்வாகங்கள் இறங்கக் கூடும். எடுத்துக்காட்டாக, இடஒதுக்கீட்டு மாணவர்களை தனி வகுப்புப் பிரிவாக(செக்ஷன்) பிரித்து வைத்து, பிற மாணவர்களுடன் இணைய விடாமலும் அவ்வகுப்புப் பிரிவுகளை ஏனொதானோவென்று நடத்திப் புறக்கணிப்பதிலும், அந்நிர்வாகங்கள் ஈடுபடக் கூடும். இவ்வாறு நிகழாமல் இச்சட்டம் முறையாகச் செயல்பட தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை உரிய கவனம் செலுத்த வேண்டும். 


வரும் கல்வியாண்டில் இதை செயல்படுத்துவதிலிருந்து தவிர்ப்பதற்காக பல தனியார் கல்வி நிறுவனங்கள் முன்கூட்டியே மாணவர் சேர்க்கையை முடித்து விட்டதாக அறிகிறோம். அவ்வாறான பள்ளிகளில், விலக்கின்றி வரும் கல்வியாண்டே இச்சட்டம் முழுமையாக செயலாவதை பள்ளிக் கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும். 


தனியார் பள்ளிகளின் இடஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு விலையில்லாப் பேருந்துப் பருவச் சீட்டு(இலவச பஸ் பாஸ்) தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு செய்தால் தான் இச்சட்டத்தின் பயன் தொடர்புடையவர்களுக்கு சென்று சேரும். இதனை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.


 தங்கள் உண்மையுள்ள,

கி.வெங்கட்ராமன்,

பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


இடம்: சென்னை



Friday, April 6, 2012

தமிழீழ விடுதலையின் அடுத்த கட்டம் குறித்து தோழர் பெ.மணியரசன்


தமிழீழ விடுதலையின் அடுத்த கட்டம் குறித்து தோழர் பெ.மணியரசன்

தமிழீழ விடுதலையின் அடுத்த கட்டம் குறித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் முழக்கம் இணைய இதழுக்கு வழங்கிள காணொளி செவ்வி..!




நாள்: ஏப்ரல் 5, 2012

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT