உடனடிச்செய்திகள்

Tuesday, May 8, 2012

முல்லைப் பெரியாறு சிக்கல்: நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரின் மலையாள வெறிக் கூச்சலுக்கு கண்டனம் - கி.வெங்கட்ராமன் அறிக்கை!

முல்லைப் பெரியாறு சிக்கல்:

நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரின் மலையாள வெறிக் கூச்சலுக்கு

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கண்டனம்

 

முல்லைப்பெரியாறு வழக்கில் உச்ச நீதிமன்றம் நியமித்த நீதிபதி ஆனந்த்  தலைமையிலான அதிகாரம் பெற்ற குழு அளித்த ஆய்வறிக்கை கடந்த 4.5.2012 அன்று உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது.

 

"முல்லைப் பெரியாறு அணை கட்டமைப்பு வகையிலும், நீரியல் ஆய்வின் படியும், நிலநடுக்க ஆய்வின் படியும் உறுதியாக இருப்பது தெளிவாகிவிட்டது. அண்மையில் முல்லைப்பெரியாறு அணைப் பகுதியிலும், இடுக்கி அணைப்பகுதியிலும் ஏற்பட்ட நில அதிர்வுகள் இரண்டு அணைகளிலும் எவ்வித சிறு பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை. எனவே முல்லைப் பெரியாறு அணையில் உடனடியாக 142 அடி தண்ணீர் தேக்கலாம்" என இவ்வறிக்கை உறுதிபடக் கூறியது.

 

நாம் ஐயப்பட்டது போலவே கேரளத் தரப்பு நடந்துகொண்டுள்ளது. கேரள நீர்ப்பாசன அமைச்சர் பி.ஜே. ஜோசப்  "ஆனந்த் குழு அறிக்கையை ஏற்கமுடியாது; அணையின் நீர் மட்டத்தை 142 அடி உயர்த்த அனுமதிக்கமுடியாது" என கொக்கரித்தார். அக்குழுவில் கேரளாவின் சார்பில் அமர்த்தப் பட்டிருந்த நீதிபதி கே.டி.தாமஸ் மீதும் பாய்ந்தார். மலையாள வெறியர்கள் சிலர் கே.டி.தாமஸ் இல்லம் நோக்கி கண்டன ஊர்வலம் நடத்தி, அவர் வீட்டின் மீது கல்லெறிந்தனர்.

 

இவர்கள் அனைவரையும் விஞ்சி  உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர்  மலையாள வெறி உச்சத்தில் ஏற "ஆனந்த் குழு அறிக்கையை வீசி எறியுங்கள். முல்லைப் பெரியாறு அணையின் வலுவைப்பற்றி முடிவு கூற நீதிபதிகள் ஒன்றும் பொறியியல் வல்லுநர்கள் அல்லர். பொறியியல் அறிவை பொருத்தளவில் அவர்கள் தற்குறிகள்தாம். அவர்கள் கருத்தை ஏற்க வேண்டியதில்லை. பன்னாட்டு வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு செய்த பிறகே உச்ச நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும். அதுவரை 136 அடி அளவே நீர்த் தேக்கப்பட வேண்டும்" என கூச்ச லிட்டார் (தி. இந்து, கொச்சி, 7.5.2012)

 

உச்ச நீதிமன்றம் நீதிபதி ஆனந்த் தலைமையில் நியமித்த ஐவர் குழுவில் நடுவண் நீர்வளத்துறை முன்னாள் செயலாளர் சி.டி. தத்தே, நடுவண் நீர்வள ஆணைய முன்னாள் தலைமைப் பொறியாளர் டி.கே. மேத்தா ஆகிய தொழில் நுட்ப வல்லுநர்கள் இடம் பெற்றிருந்தனர். இக்குழு முல்லைப் பெரியாறு அணையில் ஏழு இடங்களில் ஆழமாகத் தோண்டிப்பார்த்து அதில் கிடைத்த விவரங்களையும், மண் மாதிரிகளையும் உரிய ஆய்வகங்களுக்கு அனுப்பி அவற்றின் ஆய்வு முடிவுகளைப் பெற்று அதற்குப் பிறகே தங்கள் அறிக்கையை அணியப்படுத்தினர்.

இவர்களைத்தான் தற்குறிகள் என்கிறார் வி.ஆர்.கிருஷ்ணய்யர். ஆனால் அவரே ஆனந்த் குழுவில் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு வல்லுநர்கள் இருந்தார்கள் என்ற உண்மையையும் தனது அறிக்கையில் ஒப்புக் கொள்கிறார். இந்திய வல்லுநர்கள்  சரியில்லை வெளிநாட்டு வல்லுநர் களைக் கொண்டுதான் ஆய்வு செய்ய வேண்டும் என வல்லடி செய்கிறார்.

 

இன வெறி வி.ஆர். கிருஷ்ணய்யர் போன்ற மதிப்புமிக்க மனிதர்களைக் கூட தரம் தாழ்த்தி விடுகிறது. அச்சுதானந்தன், ஜோசப் போன்ற மலையாள இனவெறியர் களையும் தாண்டி கிருஷ்ணய்யரின்  மலையாள வெறிக் கூச்சல் காதைக் கிழிக்கிறது.

 

நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரின் இந்த மலையாள வெறி அறிக்கைக்கு தமிழ்த் தேசப் பொதுவுடை மைக் கட்சி  சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

கிருஷ்ணய்யரின் கருத்துப் படியே வெளிநாட்டு வல்லுநர்களின் ஆய்வைக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மலையாள அமைப்பு வழக்குத் தொடுத்துள்ளது. இழுத்தடிப்பு வேலைகள் தொடர்கின்றன. ஆனந்த் குழுவின் ஆய்வறிக்கை அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விடக் கூடாது என்பதற்காகவே இந்த மனு போடப்பட்டுள்ளது.

 

இதையும் தாண்டி முல்லைப்பெரியாறு அணையில் 142 அடித் தண்ணீரை தேக்கலாம் என உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துவிட்டால் அது "தற்குறிகளின் தீர்ப்பாகவே இருக்கும். அதை மதிக்கத் தேவையில்லைஎன  வி.ஆர். கிருஷ்ணய்யர்  மலையாள வெறியர்களுக்கு எடுத்துக் கொடுத்து விட்டார். நியாயத் தீர்ப்பு வந்தால் மலையாளிகள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதற்கு கிருஷ்ணய்யரின்  கூற்று ஒரு முன்னறிவிப்பாகும்.

 

முல்லைப் பெரியாறு அணையில் நியாயத் தீர்ப்பு பெறுவதற்கு மட்டுமின்றி அத்தீர்ப்பை செயலுக்கு கொண்டுவருவதற்கும் தமிழர்கள் தமிழின உணர்வோடு மலையாள வெறியர்களுக்கு எதிராகப் போராடித்தான் ஆக வேண்டும்.

 

தோழமையுள்ள,

கி.வெங்கட்ராமன்,

பொதுச் செயலாளர்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


இடம்: சென்னை 

நாள் : 08.05.2012


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT