உடனடிச்செய்திகள்

Monday, July 9, 2012

“இந்தியம் தமிழினத்தின் பகை என்பதை உணராதவரை தமிழீழம் சாத்தியமில்லை” – நா.வைகறை பேச்சு!


“இந்தியம் தமிழினத்தின் பகை என்பதை உணராதவரை தமிழீழம் சாத்தியமில்லை” - தோழர் நா.வைகறை பேச்சு

“இந்தியம் தமிழினத்தின் பகை என்பதை உணராதவரை தமிழீழம் சாத்தியமில்லை” என தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை பேசினார். 

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழீழ மக்களைக் கொன்றொழித்த சிங்கள இனவெறி அரசுக்கு, முட்டுக் கொடுத்துப் போரை வழிநடத்திய இந்தியாவின் பங்கு குறித்து பேசும் முனைவர் த.செயராமன் அவர்கள் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு பன்மைவெளி வெளியீட்டகத்தால் ‘ஈழம்: இந்தியமும் இனப்படுகொலையும்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. ஈழப்போரில் இந்திய அரசு முனைப்புடன் ஈடுபடுவதற்கான காரணங்கள், சிங்கள அரசின் 13ஆவது சட்டத்திருத்தம் தமிழீழ மக்களுக்கு எவ்வகையில் உரிமைகளை மறுக்கிறது, தேசியத் தன்னுரிமை குறித்த அனைத்துலகச் சட்ட விளங்கங்கள், தமிழக மீனவர் சிக்கலுக்கானத் தீர்வு என பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. இந்நூலுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அணிந்துரை எழுதியுள்ளார்.

இந்நூலின் வெளியீட்டு விழா, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில் கடந்த 07.07.2012 அன்று மாலை சென்னை திருவல்லிக்கேணி நீலி வீராசாமி தெரு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியக் கட்டிடம் இரண்டாம் மாடியில் நடைபெற்றது. 

தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை விழாவிற்குத் தலைமையேற்றார். த.க.இ.பே. செயலாளர் கவிஞர் கவிபாஸ்கர் வரவேற்புரையாற்றினார். உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன் நூலை வெளியிட, எழுத்தாளர் அமரந்தா, புலவர் இரத்தினவேலவர், திரு இராமச்சந்திரன்(அனு ஃபைன் ஆர்ட்ஸ்), ஆகியோர் நூற்படி பெற்றனர். எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், இயக்குநர் புகழேந்தி தங்கராசு, இயக்குநர் வ.கௌதமன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். 

அப்போது, தனது தலைமையுரையில் தோழர் நா.வைகறை பேசியதாவது:

"முள்ளிவாய்க்கால் சோகம் தமிழினத்தின் தீராத காயம். தமிழீழ மக்களை அழித்தொழிக்க உதவிய இந்திய அரசு நம் இனத்தின் பகை அரசு. எனவே, இந்தியத்தை நாம் புரிந்து கொள்ளாத வரை தமிழீழ விடுதலையைப் பெற முடியாது. இத்தனை நடந்த பின்னரும் இந்தியாவை நாம் ஏன் நம்பவேண்டும்? இந்தியம் தமிழினத்தின் பகை என்பதை உணராதவரை தமிழீழம் சாத்தியமில்லை.தமிழீழ விடுதலைக்கு முன்பே, தமிழ்நாட்டு விடுதலையை நாம் அடைந்து விடுவோம் என்று எண்ணுகிற அளவிற்கு இந்திய அரசு தன் செயல்பாடுகளைத் தொடர்ந்து கொண்டுள்ளது. காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, சிறுவாணி என தொடர்ந்து தமிழகத்திற்கு ஆற்று நீர் உரிமை மறுக்கப்படுவது, நெய்வேலி மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்காமை என தொடர்ந்து இந்திய அரசின் கோர முகம் தமிழகத்தில் அம்பலப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, உலகத் தமிழர்கள் தமிழர்களுக்கு ஒரு நாடு என்றல்ல, தமிழீழம் - தனித்தமிழ்நாடு ஆகிய இரண்டு நாடுகளும் வேண்டும் என அணிதிரள வேண்டும்" என்று தோழர் நா.வைகறை பேசினார். 

எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் பேசிய போது, இந்திய அரசு தமிழீழத்தை அழிக்க என்னென்ன வகையில் உதவியிருக்கிறது என்பதை பட்டியலிடும் இந்நூலின் பக்கங்களைச் சுட்டிக் காட்டினார். இயக்குநர் புகழேந்தி தங்கராசு, இயக்குநர் வ.கவுதமன் ஆகியோர் நூலின் சிறப்புகளை விளக்கிப் பேசினர். உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், இந்நூல் தமிழீழ விடுதலையை முன்னெடுத்துச் செல்லும் படைக்கருவியாக விளங்குவதாகவும், நூலாசிரியர் பேரா. த.செயராமன் இது போன்ற பல படைக்கருவிகளை தமிழீழ விடுதலைக்கு உருவாக்கித் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

நூலாசிரியர் முனைவர் த.செயராமன் ஏற்புரை வழங்ய போது, ஈழத் தமிழர் இனப்படுகொலையில் சிங்களப் பேரினவாதிகள் மட்டும் குற்றவாளிகள் அல்ல; அப்படுகொலைக்குத் துணை நின்ற, நிற்கின்ற இந்திய தேசியவாதிகளும் குற்றவாளிகள்தாம். தமிழீழப் போராட்டத்தை ஆதரிக்கும் எவரும் அறிந்து கொள்ள வேண்டியது ‘இந்தியம்’ என்பது தமிழக்கும், தமிழருக்கும் எதிர்க்கருத்தியல், அது தமிழ் தேசிய இனத்துக்கும் பகைசக்தி. இந்தியத்தை எதிர்க்காமல் ஈழத்தைப் பெறமுடியாது. என பேசினார். 

கவிஞர் முழுநிலவன நன்றி நவின்றார்.

இக்கூட்டத்தில், திரளானோர் கலந்து கொண்டு இந்நூலை வாங்கிச் சென்றனர். 



         

 

(செய்தி - த.தே.பொ.க செய்திப் பிரிவு, படங்கள் - கோபிநாத்)

Friday, July 6, 2012

தனியார் நிறுவனங்கள் இலாபம் கொழுக்கும் வகையில் மின்கொள்முதல்: தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம் உணர்வாளர்களும், அமைப்புகளும் கடிதம் எழுத வேண்டுகோள்!


தனியார் மின் நிறுவனங்கள் இலாபம் கொழிக்கும் வகையில்தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின்சார கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும்இம்முடிவை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தடுத்த நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அவசரக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிக விலை கொடுத்த மின்சாரம் வாங்க முடிவு செய்திருக்கும்தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவு வாரியத்திற்குப் பெரும் இழப்பை ஏற்படுத்துவதோடுமக்களை கடுமையாக  பாதிக்கும். அமைச்சர்களுக்கும்தனியார் மின் நிறுவனங்களுக்கும் இடையே கையூட்டு வழித் தொடர்பிருப்பதால் தான்இவ்வாறான மோசமான முடிவை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் எடுத்திருப்பவர் என நாம் ஐயப்படுகிறோம்.

இது குறித்துதமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளருக்குதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு மின்சார வாரியம் நடப்பு சூலை-2012க்குஇந்து பாரத் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒரு யூனிட் ரூ5.50க்கு வாங்கும் முடிவெடுத்து செயல்படுத்தி வருகிறது.  இது சட்ட விரோதமானது;  வாரியத்திற்கு ஆண்டுக்கு சுமார் 5000 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தக்கூடியது.  மேலும் ஒரு கட்டண உயர்வுக்கு இட்டுச் செல்லக் கூடியது. 

தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களோடு செய்து கொள்ளப்பட்ட மின்வாரியத்தின் ஒப்பந்தம் 31.05.2012 உடன் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் அவசர முடிவாக சூன் 2012க்கு மட்டும் ரூ5.05க்கு சந்தை நிலவரத்தைவிட கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்க வாரியம் முடிவெடுத்தது. இம்முடிவை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மிகுந்த தயக்கத்தோடு ஏற்பதாக 2.06.2012 அன்று அறிவித்தது.

இப்போது மீண்டும் சூலை 2012க்கு தனியாரிடம் யூனிட்டுக்கு ரூ5.50 விலை கொடுத்து வாங்குவதாக முடிவெடுத்து செயல்படுத்தி வருகிறது.  வாரியம் தனது இம்முடிவிற்கு ஒழுங்கு முறை ஆணையத்தின் அனுமதியையும் பெறவில்லை.  இது சட்டவிரோதமானது ஆகும். 

இன்றைய நிலையில் எரிவாயு அடிப்படையில் மின்உற்பத்தி செய்யும் தனியார் மின்சாரத்தின் அதிகபட்ச சந்தை விலை ரூ3.40 ஆகும். (எ.கா.பென்னா நிறுவனம்) மின்வாரியத்தின் சொந்த எரிவாயு மின்உற்பத்தி நிலையத்தில் மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ரூ2.90 ஆகும். நிலக்கரியைப் பயன்படுத்தி மின்வாரியம் தயாரிக்கும் மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ரூ3.10 மட்டுமே.  நிலக்கரி மின்சாரம் தனியாரிடம் வாங்கினால் அதன் விலை யூனிட்டுக்கு ரூ4.28 ஆகும். 

சந்தை நிலவரம் இவ்வாறு இருக்க இந்து பாரத் உள்ளிட்ட தனியார் மின்உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து மின்வாரியம் யூனிட்டுக்கு ரூ5.50 கொடுத்து வாங்குவது நியாயமற்றது. தனியார் நிறுவனங்களுக்குச் சார்பாக மின்வாரியம் இவ்வாறு முடிவெடுத்துவிட்டதோ என்று ஐயுற அடிப்படை இருக்கிறது. 

ஏற்கெனவே தமிழ்நாடு மின்சார வாரியம் பெரும் இழப்பில் இயங்கி வருவதாகவும்கிட்டத்தட்ட மரணப்படுக்கையில் இருக்கும் வாரியத்திற்கு அரசு பல்லாயிரம் கோடி மானியம் அளித்து தூக்கி நிறுத்தி வந்ததாகவும்வேறு வழியின்றி கடுமையான மின்கட்டண உயர்வை மக்கள் மீது சுமத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் சட்டமன்றத்தில் தமிழக முதலமைச்சர் விளக்கம் அளித்தார். 

இச்சூழலில் சந்தை விலையைவிடக் கூடுதலாக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதற்கு வாரியம் முனைந்திருப்பது மேலும் கூடுதலாக ஆண்டுக்கு ரூ.5000கோடி இழப்பை ஏற்படுத்தும்.  அதாவது இம்முடிவு செயலாகிற ஒவ்வொரு நாளும் வாரியத்திற்கு ஏறத்தாழ ரூ13.7கோடி  இழப்பு ஏற்படுகிறது என்று பொருள்.  அதே நேரம் தனியார் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் கூடுதலாக ரூ3 கோடி இலாபம் பெறுகின்றன. 

இச்சுமை முழுவதும் வருங்காலத்தில் கட்டண உயர்வாக மக்கள் தலையில் சுமத்தப்படக்கூடும். தனியார் மின் உற்பத்தியாளர்களுக்குக் கூடுதல் இலாபம் பெற்றுத் தருவதற்காக மின்வாரியத்திற்குத் தேவையற்ற இழப்பை ஏற்படுத்தியுள்ள வாரிய இயக்குநர் குழு (Board Of Directors) முடிவு மிகவும் தவறானது.  இச்செயலை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். 

ஒழுங்கு முறை ஆணையம் தலையிட்டு மின்வாரியத்தின் இந்த மக்கள் பகை முடிவைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தோழர் கி.வெங்கட்ராமன் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

இதே போன்ற கடிதத்தை அவரவர்களும்தனிப்பட்ட முறையிலும்அல்லது அவர்களது அமைப்பைச் சார்ந்தும் எழுதி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அனுப்புமாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின்னஞ்சல் முகவரி: tnerc@nic.in

இடம்: சென்னை-17
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

ஈழப்போரில் இந்தியாவின் பங்கு குறித்த நூல் சென்னையில் வெளியீடு!


ஈழப்போரில் இந்தியாவின் பங்கு குறித்த நூல் சென்னையில் வெளியீடு!

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழீழ மக்களைக் கொன்றொழித்த சிங்கள இனவெறி அரசுக்கு, முட்டுக் கொடுத்துப் போரை வழிநடத்திய இந்தியாவின் பங்கு குறித்து பேசும் முனைவர் த.செயராமன் அவர்கள் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு பன்மைவெளி வெளியீட்டகத்தால் ‘ஈழம்: இந்தியமும் இனப்படுகொலையும்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவருகிறது.

ஈழப்போரில் இந்திய அரசு முனைப்புடன் ஈடுபடுவதற்கான காரணங்கள், சிங்கள அரசின் 13ஆவது சட்டத்திருத்தம் தமிழீழ மக்களுக்கு எவ்வகையில் உரிமைகளை மறுக்கிறது, தேசியத் தன்னுரிமை குறித்த அனைத்துலகச் சட்ட விளங்கங்கள், தமிழக மீனவர் சிக்கலுக்கானத் தீர்வு என பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. இந்நூலுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அணிந்துரை எழுதியுள்ளார்.

இந்நூலின் வெளியீட்டு விழா, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில் வரும் 07.07.2012 அன்று மாலை 5 மணியளவில் சென்னை திருவல்லிக்கேணி நீலி வீராசாமி தெரு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியக் கட்டிடம் இரண்டாம் மாடியில் நடைபெறுகின்றது.

தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை விழாவிற்குத் தலைமையேற்கிறார். த.க.இ.பே. செயலாளர் கவிஞர் கவிபாஸ்கர் வரவேற்புரையாற்றுகிறார். உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன் நூலை வெளியிட, திரு இராமச்சந்திரன்(அனு ஃபைன் ஆர்ட்ஸ்), எழுத்தாளர் அமரந்தா, புலவர் இரத்தினவேலவர் ஆகியோர் நூற்படி பெறுகின்றனர். எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், இயக்குநர் புகழேந்தி தங்கராசு, இயக்குநர் வ.கௌதமன் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.

நூலாசிரியர் முனைவர் த.செயராமன் ஏற்புரை வழங்குகின்றார். கவிஞர் முழுநிலவன நன்றி நவில்கிறார்.

Wednesday, July 4, 2012

“அணுஉலையைத் திறப்பதில் மன்மோகன் சிங்கும் செயலலிதாவும் கூட்டுக் களவாணிகள்” - பெ.மணியரசன் பேச்சு!


“அணுஉலையைத் திறப்பதில் மன்மோகன் சிங்கும் செயலலிதாவும் கூட்டுக் களவாணிகள் பெ.மணியரசன் பேச்சு!

கூடங்குளம் அணுஉலையைத் திறப்பதில் மன்மோகன் சிங்கும், செயலலிதாவும் கூட்டுக் களவாணிகளாக செயல்படுகின்றனர் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசினார்.

இந்திய அரசால் கூடங்குளத்தில் நிறுவப்பட்டு வரும் அணுஉலையை கைவிட வலியுறுத்தி, தொடர் உண்ணாப் போராட்டத்தின் 321ஆம் நாளான, 01.07.2012 ஞாயிறு அன்று, கூடங்குளம் இடிந்தகரையில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின்  தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது.

மாநாட்டிற்கு, உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ.நெடுமாறன் தலைமையேற்றார்.  அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு.ப.உதயக்குமார் வரவேற்றார்.

மாநாட்டிற்கு முன்னிலை வகித்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசியதாவது:

அணுஉலைகள் நிறுவும் போது கடைபிடிக்க வேண்டிய கட்டாய விதிமுறைகள் உலக அளவில் வகுக்கப்பட்டுள்ளன. அதில், நில ஆய்வு அறிக்கை(Site evaluation report) என்பது மிக முக்கியமானது. கூடங்குளத்தில் அப்படியொரு ஆய்வு நடத்தப்பட்டதா என்றும், அவ்வறிக்கையை வழங்குங்கள் என்றும் போராட்டக் குழுவினரும், அறிவியலாளர்களும் கேட்டதற்கு தர மறுக்கிறார்கள். இதிலிருந்தே, ஏதோ ஒரு அபாயத்தை அரசு மறைக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது.

அதே போல், பாதுகாப்பு அறிக்கை(Safety analysis report)யும் மிக முக்கியமானது. பேரிடர் ஏற்பட்டால் எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அணுஉலையை சுற்றி வாழ்கின்ற மக்களுக்க பயிற்சி அளிப்பது கட்டாய விதிமுறை. அதை முறையாக செய்யாமல் நக்கனேரி என்ற கிராமத்தில் மட்டும், அதிகாரிகள் காலை 9.30 மணிக்கு வந்து 11 மணிக்குள் பயிற்சி என்ற பெயரில் நாடகம் நடத்திவிட்டு சென்றுவிட்டனர். இது ஓரு போலித்தனமான பயற்சியாகும். இந்த போலி பயிற்சி நாடகத்தை நடத்தியவர்கள் முதல்வர் செயலலதாவின்  கீழ் பணியாற்றும் மாவட்ட ஆட்சியரும், காவல்துறை அதிகாரிகளும். இதிலிருந்து,  முதலமைச்சர் செயலலிதா இந்திய அரசின் மோசடி வேலைகளுக்கு ஒத்துழைக்கிறார் எகத் தெரியவருகிறது.

மனிதப் பேரழிவை உண்டாக்கக் கூடிய அணுஉலையை கூடங்குளத்தில் நிறுவுவதில் மன்மோகன் சிங்கும், செயலலிதாவும் கூட்டுக் களவாணிகளாக செயல்படுகிறர்ர்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது.

குறைந்தபட்சம் உலக நாடுகள் ஏற்கிற, பாதுகாப்பு நிபந்தனைகளை கடைபிடிக்கும்படி கூட தில்லி அரசை செயலலிதா வலியுறுத்த விரும்பவில்லை. மராட்டியத்தில், செய்தாப்பூரில் அணுமின் நிலையம் கட்டுவதை எதிர்த்துப் பெரும் போராட்டம் நடந்தது. அங்கு நடந்த மக்கள் போராட்டத்தின் உணர்வுகளை மதித்து, மராட்டியத்தில் நடைபெறும் காங்கிரசு ஆட்சி மறைமுகமாக இந்திய அரசை வலியுறுத்தி, செய்தாப்பூர் அணுமின் திட்டத்தை நிறுத்தச் செய்து விட்டது. மேற்கு வங்கத்தில், அரிப்பூரில் தொடங்க இருந்த அணுமின் திட்டத்தை அம்மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி தடுத்த நிறுத்திவிட்டார்.

மராட்டியத்தன் காங்கிரசு முதலமைச்சரைப் போலவோ, மேற்கு வங்க திரிணாமூல் முதலமைச்சர் போலவோ, தமிழக முதலமைச்சர் செயலலிதா அணுஉலை எதிர்ப்புப்  போராட்டத்தில் மக்கள் பக்கம் இருக்கவில்லை. இந்திய அரசின் பக்கம் தான் இருக்கிறார்.

ஆனால், இந்திய அரசை எதிர்ப்பது போல் அவ்வப்போது வேறு பிரச்சினைகளில் காட்டிக் கொள்கிறார். ஒரு கோட்பாட்டு வழிப்பட்ட இந்திய அரசின் அதிகாரக் குவியலையும், எதேச்சதிகாரத்தையும் எதிர்க்கும் கொள்கை செயலலிதாவிடம் இல்லை. அப்படியொரு கோட்பாட்டு அடிப்படையிலான கொள்கை இருந்தால், தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டை நீக்க நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டிற்கு வழங்கும்படி வலியுறுத்தியிருப்பார். அதைக் கேட்காமல் பொத்தாம் பொதுவில், மத்தியத் தொகுப்பிலிருந்து 1000 மெகா வாட் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மனிதப் பேரழிவை உண்டாக்கும் கூடங்குளம் அணுமின் திட்டத்தை கைவிட வலியுறுத்துவதற்கு மாறாக, கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டிற்கு வழங்கக்  கேட்டுக் கொண்டிருக்கிறார்.

செயலலிதாவின் கோரிக்கையை பார்த்து, கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 500 மெகா வாட் மின்சாரம் கேரளத்திற்கு வேண்டும் என்கிறார். விபத்தில் செத்துக் கிடக்கும் மனிதனின், கழுத்திலும் காதிலும், கையிலும் நகைகளை பறிக்கப் போட்டிப் போடும் திருடர்களைப் போல தமிழக – கேரள முதல்வர்கள் கூடங்குளம் அணு மின்சாரத்தைக் கேட்கிறார்கள்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடும் நமது போராட்டத்திற்கு ஓய்வில்லை. இந்த அணுஉலைகளை மூடும் வரை தொடர்ந்து போராடுவோம். இயற்கையிலும், சமூகத்திலும், புதிய முரண்பாடுகள் தோன்றும் போது, புதிய சிக்கல்கள் எழும் போது இப்பொழுது சீராக நடந்து கொண்டிருக்கும் இடிந்தகரைப் போராட்டம் ஒரு சூறாவளி என புதியப் பாய்ச்சல் பெறும். அப்போது அந்தச் சூறாவளி கூடங்குளம் அணுமின் திட்டத்தை நிரந்தரமாகத் தகர்த்தெறியும். அவ்வெற்றிக் கிடைக்கும் வரை நாம் போராடுவோம் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பிலர் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடன் தோளோடு தோள் நிற்போம் என உறுதியேற்கிறோம்என்று பேசினார்.

மாநாட்டில், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. வேல்முருகன், ஆதித்தமிழர் பேரவைத் தலைவர் தோழா இரா.அதியமான், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, மருத்துவர் வீ.புகழேந்தி, இயக்குநர் புகழேந்தி தங்கராசு, திரு. சுந்தர்ராசன்(பூவுலகின் நண்பர்கள்), தோழர் தியாகு உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும் உணர்வாளர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் அ.ஆனந்தன், தோழர் கோ.மாரிமுத்து, தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, மதுரை கிளைச் செயலாளர் தோழர் ரெ.இராசு, திருச்சி செயலாளர் தோழர் கவித்துவன், குறும்பூர் செயலாளர் தோழர் தமிழ்மணி, திருச்செந்தூர் செயலாளர் தோழர் தமிழ்த்தேசியன், தோழர் ம.இலட்சுமி(மகளிர் ஆயம்) உள்ளிட்ட தோழர்கள் இதில் கலந்து கொண்டனர்.

கூடங்குளம் அணு உலைகளைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள் எதையும் அறியத் தராது, மக்களுக்கு உயிர்காக்கும் பேரிடர் பயிற்சி தராது, கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை மீறி, பற்ற வைப்பு உள்ள அணு உலை அழுத்தக் கலனைப் பொருத்தி, தமிழ் மக்களின் உயிரை துச்சமென நினைத்து செயலாற்றும் இந்திய அரசைக் கண்டித்தும், அணுசக்தித் துறையை, இந்த விதி மீறல்கள் குறித்து மௌனம் காக்கும் தமிழக அரசைக் கண்டித்தும், தமிழகத்தின் சமூக, அரசியல் இயக்கங்கள், கூடங்குளம், கல்பாக்கம் பிரச்சனைகளை முன்னிறுத்தி, தமிழ் மக்கள் நலன் காத்திட தங்கள் இயக்கங்கள் சார்பாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப் போகிறோம் என்பதை விவாதித்து அறிவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தும் தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

நிறைவில், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தோழா புஷ்பராயன் நன்றி கூறினார்.






செங்கல்பட்டு ‘சிறப்பு முகாம்’முற்றுகை போராட்டம் !


செங்கல்பட்டு சிறப்பு முகாம்முற்றுகை போராட்டம் !

செங்கல்பட்டு பூந்தமல்லி பகுதிகளில் சிறப்பு முகாம்என்ற பெயரில், வழக்கு முடிந்த பின்னரும் கூட சிறைபடுத்தி வைத்திருக்கும் தமிழீழத் தமிழர்களை, தமிழக அரசு ஏற்கெனவே அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று (30.06.2012) காலை பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்ட செங்கல்பட்டு சிறப்பு முகாம்முற்றுகை போராட்டம் நடைபெற்றது.


செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் திரண்ட தோழர்கள் சிறப்பு முகாமை நோக்கி முழக்கங்களுடன் சென்றனர். தோழர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.


முற்றுகைப் போராட்டத்தை இயக்குநர் புகழேந்தி ஒருகிணைத்தார், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பேராசிரியர் தீரன், தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு. அதியமான், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், பெரியார் தி.க. காஞ்சிமாவட்ட செயலாளர் டேவிட்பெரியார், திரவிட இயக்கத் தமிழர் பேரவை சிங்கவராயன், தமிழக பெண்கள் செயற்களம் ஒருகிணைப்பாளர் வழக்கறிஞர் கயல்விழி, தோழர் தியாகு உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், உணர்வாளர்களும் இதில் திரளாக பங்கேற்றனர்.




தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, தாம்பரம் கிளை செயலாளர் தோழர் தமிழ்க்கனல், குன்றத்தூர் தமிழக இளைஞர் முன்னணி அமைப்பாளர் தோழர் சரவணன், கிளைச் செயலாளர் தோழர் சியாம், தோழர் தமிழ்ச்சமரன் உள்ளிட்ட தோழர்கள் இதில் கலந்து கொண்டனர்.


விடுதலை செய்” “விடுதலை செய்” “ஈழத் தமிழர்களை” “விடுதலை செய்என்பன போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


(செய்தி த.தே.பொ.க. செய்திப் பிரிவு, படங்கள்: மா.பாலா)


Friday, June 29, 2012


“இணைப்பு மொழி என்ற கோட்பாடு உலகத்தில் எங்குமில்லை, இந்தியாவைத் தவிர
தோழர் பெ.மணியரசன் பேச்சு!


“இணைப்பு மொழி என்ற கோட்பாடு உலகத்தில் எங்குமில்லை, இந்தியாவைத் தவிர”  என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசினார்.

மணிவாசகர் பதிப்பகத்தின் நிறுவனர் பேராசிரியர் ச.மெய்யப்பன் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை தலைநகர்த் தமிழ்ச் சங்கம் சென்னை வண்டலூரில்  நேற்று(28.06.2012) மாலை நடத்தியது.

சென்னை வண்டலூர் தலைநகர்த் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது, 10ஆம் வகுப்பு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு நடைபெற்றது. தலைநகர்த் தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் முகிலை இராச பாண்டியன் நிகழ்வுக்குத் தலைமையேற்றார். சங்கத்தின் நிறுவனரும், பொதுச் செயலாளருமான புலவர் த.சுந்தரராசன் வரவேற்புரையாற்றினார். தலைநகர்த் தமிழ்ச் சங்க அறக்கட்டளைச்  செயலாளர் பாவலர் ம.கணபதி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தலைநகர்த் தமிழ் சங்கத் துணைத் தலைவர் புலவர் வெற்றியழகன், தலைமை நிலையச் செயலாளர் புலவர் புஞ்சைத் தமிழரசன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர். கவிஞர் கு.ப.இளங்கண்ணன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

கவிதை உறவு இதழாசிரியர் கவிஞர் ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்கள் மாணவர்களுக்குப் பரிசளித்து, சிறப்புரையாற்றினார்.

நிறைவில் உரையாற்றிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், பேசியதாவது:

பதிப்புச் செம்மல் பேராசிரியர் மெய்யப்பன் அவர்கள், மெய்யான தமிழ்ப் பற்றாளர். தமிழ் வளர்ச்சிக்குப் பல்வேறு வகைகளிலும் துணை நின்றவர். நாங்கள் நடத்தி வரும் தமிழர் கண்ணோட்டம் இதழில் தோழர் எஸ்.வி.இராசதுரை, இந்து-இந்தி-இந்தியா என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை எழுதி வந்தார். அதனை நூலாக வெளியிடவேண்டுமென்று நாங்கள் மெய்யப்பனாரை அணுகிய போது அதை வெளியிட்டுத் தந்தார்.

கடற்கரையிலிருந்த கண்ணகி சிலை அகற்றப்பட்ட போது அச்சிலையின் மாதிரி வடிவத்தை செய்து வந்து நாங்கள் தோழமை அமைப்புகளோடு சேர்ந்து அதே இடத்தில் அச்சிலையை வைக்கப் போனோம். அப்போது கைது செய்யப்பட்டோம். அதன்பிறகு, பூம்புகாரிலிருந்து மதுரை வரை ஊர்திப் பரப்புரை நடத்தி கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க வலியுறுத்தினோம். அப்பொழுது, மக்களிடம் வழங்குவதற்காக நான் எழுதிய கண்ணகி சிலையும் கலை இலக்கியப் பார்வையும் என்ற நூலை அச்சிட்டுத் தருமாறு மெய்யப்பனாரை வேண்டினோம். அவர் 2000 படிகள் அச்சிட்டு அன்பளிப்பாக எங்களிடம் வழங்கினார். சிதம்பரத்தில், அவரை நிறுவனத் தலைவராகக் கொண்டு இயங்கிய “தமிழ்க்காப்பணி“யில் அவருடன் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களும் சேர்ந்து செயல்பட்டனர். அவருடைய சாவு இவ்வளவு விரைவில் நடைபெறுமென நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

தமிழ் இனத்தில் பிறந்ததற்காக ஒவ்வொரு ஆணும், பெண்ணும் மகிழ்ச்சி அடைய வேண்டும். பெருமிதம் கொள்ள வேண்டும். உலகின் முதல் மொழி தமிழ். உலகின் முதல் செம்மொழியும் தமிழே. நம்முடைய தமிழ்ச் சமூகம் அறிவியல் சமூகமாக இருந்திருக்கிறது. உலகத்தைக் கடவுள் படைத்தார் எனக் கூறினால் தொல்காப்பியத்தின்படி அது இலக்கணப் பிழையாகும். உலகம் இருக்கிறது என்பதே தொல்காப்பியர் கருத்து.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் போன்ற நிலங்களில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள், என்ன வகை சாமிகளை கும்பிட்டார்கள், என்ற நடப்புகளை தொல்காப்பியர் கூறினாரே  தவிர இந்த உலகத்தைக் கடவுள் படைத்தார் என்று கூறவில்லை. அதே போல், மொழியைக் கடவுள் படைத்தார் என்ற கருத்தும் தமிழர்களுக்குக் கிடையாது. தமிழ் மொழியைக் கடவுளாக்கி, தமிழ் வாழ்த்துப் பாடுவது பண்டைக் காலத்தில் நமது மரபில்லை. தமிழ் எழுத்தின் ஓசை ஒவ்வொன்றும் உடல் உறுப்பில் எங்கிருந்து பிறக்கிறது, எப்படி உடல் உறுப்புகள் செயல்படுகின்றன என்பவற்றை மட்டுமே தொல்காப்பியர் கூறினார்.

ஐரோப்பாவில் 13ஆம் நூற்றாண்டில் பிலாலஜி(Philology) என்ற மொழியியல் தோன்றும் வரை, மொழியைக் கடவுள் படைத்தார் என்றே மேலை நாடுகளில் கூறிவந்தனர். சுந்தரம் பிள்ளை அவர்கள் 19ஆம் நூற்றாண்டில் புதிதாகத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியது வடமொழியின் ஆதிக்கத்தை எதிர்க்கின்ற ஒரு போராட்டம் என்ற அளவில் தான்.

இப்படிப்பட்ட, அறிவு மரபுக்கு சொந்தமானவர்கள் நாம் என்பதில் தமிழர்கள் பெருமிதம் கொள்ள வேண்டும். இந்த மொழியைப் புறக்கணித்து விட்டு, ஆங்கிலத்தை வீட்டு மொழியாக்கிக் கொள்ள வேண்டும், ஆங்கிலத்திலேயே மனைவியிடம் பேச வேண்டும், வேலைக்காரியிடம் பேச வேண்டும் என்றும், தமிழ் ஒரு மூடநம்பிக்கை மொழி என்றும் முற்போக்குக் கருத்துகள் சிலவற்றை வலியுறுத்திய தலைவர்கள் தமிழ்நாட்டில் கூறிவந்தார்கள்.

இதனால், பாதிக்கப்பட்டத் தமிழர்களில் ஒரு சாரார் தமிழர்களின் இலக்கியச் செழுமையையும், அறிவியல் மரபையும் புறக்கணித்தனர். நம் தாய் மொழியை இழிவாகக் கருதும் மனநோய்க்கு ஆளானார்கள். இந்த மனப்போக்கு இன்று எங்கே கொண்டு வந்து  விட்டுள்ளது? அம்மாவை மம்மி என்றும், அப்பாவை டாடி என்றும் அழைக்கும் அவலத்திற்கு கொண்டு வந்துள்ளது. அம்மாவை மம்மி என்று அழைப்பதை அருவருக்க வேண்டும். அசிங்கமாகக் கருத வேண்டும்.

அன்னை தந்த பாலொழுகும், குழந்தை வாய் தேனொழுக, அம்மா என்று சொன்னதுவும் தமிழன்றோஎன்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கூறினார். நம்முடைய வேரிலிருந்து நாம் வளர வேண்டும். அப்படி வளர்ந்தால் தான் நாம் செழிக்க முடியும். வளர முடியும். அடுத்த மரத்தின் நிழலில் வளரும் செடி, வளர்ச்சியடையாது. நாம் யாராக இருக்கிறோமோ அதிலிருந்தே நாம் வளர வேண்டும். நம் வேரை நறுக்கிவிட்டல்ல. பிடுங்கி எறிந்துவிட்டல்ல.

ஆங்கிலம் படித்தால் தான் வேலை கிடைக்கும், இந்தி படித்தால் தான் வேலை கிடைக்கும் என்று சொல்கிறார்கள். இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் தான் பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் தான் அதிகமானோர் பொறியியல் பட்டம் பெறுகிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் வேலையில்லாமல் துன்புறுகிறார்கள். பலர், மாதம் 4000, 5000த்துக்கு தனியார் நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள். இந்தி மாநிலங்களைச் சேர்ந்த வடவர்கள் அங்கே வேலையில்லாமல், அன்றாடம் ஆயிரக்கணக்கில் தமிழ்நாட்டில் புகுந்து உயர்சம்பள வேலையிலிருந்து, அத்துக்கூலி வேலை வரை கைப்பற்றி விடுகிறார்கள். தன் சொந்த மக்களுக்கு வேலை தராத இந்தி, தமிழ் மக்களுக்கு வேலை தந்து விடுமா?

எந்த மொழியாக இருந்தாலும், ஒரு மொழி வேலை தந்து விடாது. சமூக அமைப்பு தான் வேலை தரும். தமிழர்கள் மீது ஆங்கில ஆதிக்கத்தை நீடிக்கச் செய்வதற்கும், இந்தித் திணிப்பை ஞாயப்படுத்துவதற்கும் இந்த மொழிகளைப் படித்தால் வேலை கிடைக்கும் என்று  கவர்ச்சி வலை வீசுகிறார்கள்.

இந்தியாவுக்கு ஒரு இணைப்பு மொழி வேண்டும் என்கிறார்கள். காங்கிரசுக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், பா.ச.க. போன்றவை இந்தி மொழியை இணைப்பு மொழியாக்க வேண்டும் என்கிறார்கள். அதற்காக அவர்கள் மும்மொழிக் கொள்கையை முன்வைக்கிறார்கள். தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக வைக்க வேண்டும் என்று கோரி இருமொழிக் கொள்கை என்று பேசுகிறார்கள்.

மும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை, இருமொழிக் கொள்கை ஏமாற்றுக் கொள்கை, ஒருமொழிக் கொள்கையே உரிமைக் கொள்கை என்ற முழக்கத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும், தலைநகர்த் தமிழ்ச் சங்கமும் நீண்டகாலமாக முழங்கி வருகின்றன. மும்மொழிக் கொள்கையானாலும், இருமொழிக் கொள்கையானாலும், அயல்மொழி ஆதிக்கத்தை நிலைநிறுத்தி தமிழை அடிமை நிலைக்குத் தள்ளுவதாகும்.

இணைப்பு மொழி என்ற ஒரு கோட்பாடு உலகத்தில் எங்குமில்லை. சின்னஞ்சிறு சுவிட்சர்லாந்தில் 4 மொழிகள் இருக்கின்றன. அங்கு இணைப்பு மொழி எதுவும் கிடையாது. 4 மொழிகளும் ஆட்சி மொழிகளே. 4 மொழிகளும் கல்வி மொழிகளே.  வளர்ச்சி அடைந்த 15 மொழிகளைக் கொண்டிருந்த சோவியத் ஒன்றியத்தில் இரசிய மொழியை இணைப்பு மொழியாக்க வேண்டும் என்று இரசியக் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு சாரார் கோரினர். இரசிய மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட இலெனின் அக்கருத்தை எதிர்த்தார். ஒரு மொழியை இணைப்பு மொழியாக்கிவிட்டால், அது மற்ற மொழிகள் மீது ஆதிக்கம் செலுத்தும் என்று இலெனின் கூறி இரசிய மொழியை இணைப்பு மொழியாக்க மறுத்துவிட்டார். அது மட்டுமின்றி, இணைப்பு மொழி என்ற ஒரு கோட்பாட்டையே எதிர்த்தார் இலெனின்.

இன்றைக்கும் கூட, ஜெர்மனி, பிரான்சு போன்ற நாடுகளில், பள்ளிப் படிப்பில் ஆங்கிலமும், ஒரு மொழிப் பாடமாக இருக்கிறது. ஆனால், அந்நாடுகளில் ஆங்கிலத்தில் கடைத்தெருவிலோ, அலுவலகங்களிலோ பேசுவதை கவுரவக் குறைவாக கருதுகிறார்கள்.

எனவே, மெய்யப்பனார் நினைவைப் போற்றும் இந்நாளில், அதுவும் தலைநகர்த் தமிழ்ச் சங்கத்தில் நடக்கும் இவ்விழாவில் ஒருமொழிக் கொள்கையை ஏற்று, நம் தமிழ் மொழியே கல்வி மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் விரிவடையச் செய்ய நாம் உறுதியேற்போம். இணைப்பு மொழி என்ற மாயக் கோட்பாட்டைப் புறந்தள்ளுவோம்.

இணைப்பு மொழி இல்லையென்றால் பல மொழிகள் பேசும் நாட்டில் மக்களிடையே இணைப்பு ஏற்படாது என்று இரசியாவில் கம்யூனிஸ்டுகளில் ஒரு சாரார் கூறிவந்தனர். அக்கருத்தை மறுத்த இலெனின், இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒருமொழி பேசும் ஓரின மக்கள், வேறு மொழி பேசும் தேசங்களோடும் மக்களோடும் வணிகம் உள்ளிட்ட பல்வேறு தொடர்புகளை வைத்திருந்தார்கள் என்றார்.

எனவே, நாமும் ஒருமொழிக் கொள்கைக்கு உறுதியாகக் குரல் கொடுப்போம். போராடுவோம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று பேசினார்.



நிறைவில், தலைநகர்த் தமிழ்ச் சங்கப் பொருளாளர் வழக்கறிஞர் ஞா.சிறீதரன் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்வில் தமிழ் உணர்வாளர்களும், அறிஞர் பெருமக்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர். 

(செய்தி – த.தே.பொ.க. செய்திப் பிரிவு, படங்கள்: மா.பாலா)

Friday, June 22, 2012

“ஈழத்தமிழர்களை விடுதலை செய்!” – செங்கல்பட்டில் உணர்வாளர்கள் முழக்கம்!


“ஈழத்தமிழர்களை விடுதலை செய்! செங்கல்பட்டில் உணர்வாளர்கள் முழக்கம்!

செங்கல்பட்டு - பூந்தமல்லி பகுதிகளில் 'சிறப்பு முகாம்' என்ற பெயரில், வழக்கு முடிந்த பின்னரும் கூட சிறைபடுத்தி வைத்திருக்கும் தமிழீழத் தமிழர்களை, தமிழக அரசு ஏற்கெனவே அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி செங்கல்பட்டில் இன்று(22.06.2012) காலை பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கடந்த மாதம் தங்களை விடுவிக்கக் கோரி செங்கல்பட்டு முகாம் சிறைவாசிகளான ஈழத்தமிழர்கள் சாகும் வரையிலான உண்ணாப்போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தை பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்த தமிழக அரசு, இம்மாதம் 15.06.2012  அன்று சிறைவாசிகளை படிப்படியாக விடுதலை செய்வதாக ஒத்துக் கொண்டது. ஆனால், 15.06.2012 அன்று கடந்த பின்னரும் கூட யாரும் விடுதலை செய்யப்படவில்லை.

தமது வாக்குறுதியைக் கைவிட்ட தமிழக அரசைக் கண்டித்து, தற்போது மீண்டும் செங்கல்பட்டு முகாம் சிறைவாசிகள் உண்ணாப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். தற்போது,  சாகும் வரையிலான உண்ணாப்போராட்டம் நடத்திய ஐவர் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஈழத்தமிழர்களை இம்முகாமிலிருந்து விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தியும், தமிழக அரசு தமது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தியும் சென்னையில் தமிழ் அமைப்புகளும், உணர்வாளர்களும் ஒன்று கூடி தமிழக முதல்வருக்கு 19.06.2012 அன்று பல நூற்றுக்கணக்கில் அவசரத் தந்திகளை அனுப்பும் போராட்டத்தை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து, இன்று காலை இதே கோரிக்கையை வலியுறுத்தி செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை செய்! விடுதலை செய்! ஈழத்தமிழ் அகதிகளை வாக்குறுதிக்கேற்ப விடுதலை செய்! தமிழக அரசே விடுதலை செய் என்பன உள்ளிட்ட முழக்கங்களை தோழர்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் தலைமையேற்றார். ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் திரு. வன்னியரசு, மனித நேய மக்கள் கட்சி காஞ்சி மாவட்டச் செயலாளர் தோழர் ஷாஜகான், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு. அதியமான் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், தமிழகத்தில் செயல்படுகின்ற ஈழத்தமிழர் சிறப்பு முகாம்கள் தமிழினத்தின் அவமானச் சின்னமாக கருதப்பட வேண்டும். எங்கோ இருக்கும் ஆஸ்திரேலியா போன்ற அயல்நாடுகள் எல்லாம் ஈழத்தமிழர்களை சக மனிதனாக அங்கீகரித்து அவர்களுக்கு குடியுரிமை அளித்து வாழ்க்கை அளிக்கிறது. ஆனால், எங்கிருந்தோ வருகின்ற மார்வாடி, குசராத்தி சேட்டுகள் உள்ளிட்ட வடநாட்டுக்காரர்களுக்கும் மலையாளிகளுக்கும் குடியுரிமை அளிக்கும் இந்திய அரசு, ஈழத்தமிழர்களுக்கு இங்கு ஏன் குடியுரிமை வழங்க மறுக்கிறது? தமிழ்நாட்டுத்  தமிழர்கள் இனஉணர்வுடன் ஒன்று சேர்ந்து போராடாமல் இருந்ததும் இதற்குக் காரணம். உண்ணாப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும், ஈழஅகதிகளின் உயிருக்கு ஏதேனும் கேடு நேர்ந்தால் அதன்பின் சடங்குப் போராட்டங்கள் நடைபெறாது. தமிழ்த் தேசிய விடுதலைக்கானப் போராட்டத்தின் தொடக்கமாக அது அமையும் என்று தெரிவித்தார்.

நிறைவில், தீர்மானம் முன்மொழிந்து பேசிய இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், இப்போராட்டம் முதலில் முற்றுகைப் போராட்டமாகத் தான் அறிவிக்கப்பட்டது. எனினும், தமிழக முதல்வருக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கிப் பார்ப்போம் என்ற அடிப்படையில் தற்போது ஆர்ப்பாட்டமாக நடக்கிறது. இவ்வாய்ப்பையும் அவர் தவற விட்டால்,  நாங்கள் செங்கல்பட்டு சிறப்பு முகாமை கூட்டம் கூட்டமாகச் சென்று முற்றுகையிடுவோம். அப்போது எங்கள் உணர்வுகளை நீங்கள் கட்டுப்படுத்த முடியாதுஎன ஆவேசமாகப் பேசினார். பெ.தி.க. இளைஞரணிச் செயலாளர் தோழர் டேவிட் பெரியார் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன், செங்கல்பட்டு அரசுப் பொது மருத்துவமனையில், உடல்நிலை மோசமடைந்ததன் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த தமிழீழ அகதிகள் திரு. செல்வராஜ், சதீஷ்குமார், மதன், பராபரன், செல்வம் ஆகியோரை தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேசினர்.





(செய்தி – த.தே.பொ.க. செய்திப் பிரிவு, புகைப்படங்கள்: அருணபாரதி)

Wednesday, June 20, 2012

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் எதேச்சாதிகாரத்திற்கு பெ.மணியரசன் கண்டனம்!


அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் எதேச்சாதிகாரத்திற்குத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

காலஞ்சென்ற மூத்த இதழாளர் சின்னக்குத்தூசி அவர்களின் 78வது பிறந்த நாளையொட்டி அவர் பெயரில் நிறுவப்பட்டுள்ள விருதுகள் வழங்கும் விழா 15.06.2012 அன்று சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் நடைபெற இருந்தது. கடைசி நேரத்தில் அதிகாரிகள் அதற்கு அனுமதி மறுத்து விட்டனர். இது சட்டப் புறம்பான செயலாகும்.

முன்கூட்டியே முறைப்படி பணம்கட்டி ரசீதும் பெற்றுள்ள நிலையில் நிகழ்ச்சி நாளன்று அனுமதி மறுத்து நூலக ஆணைக்குழு அதிகாரிகள் கடிதம் கொடுத்துள்ளார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உடனடியாக அன்றே உயர்நீதி மன்றத்தை அணுகி, திட்டமிட்டபடி கூட்டம் நடத்த நீதிமன்ற ஆணை பெற்றுள்ளார்கள். நீதிமன்ற ஆணை கிடைத்த பிறகும் நூலக ஆணைக்குழு அனுமதி தர மறுத்து வேறோரு கூட்டம் அரசு சார்பில் நடத்துவது போல் ஒரு போலி ஏற்பாடு செய்துள்ளார்கள். உயர்நீதிமன்ற ஆணை நகலை கொடுக்கச் சென்ற போது அரங்கம் மற்றும் நூலக ஆணைக்குழு அலுவலகத்தைப் பூட்டிவிட்டு அதிகாரிகள் வெளியேறி விட்டார்கள்.

சின்னக்குத்தூசி விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்தவர்கள் நூலக வளாகத்தில் கார்கள் நிறுத்தும் இடத்தில் கூட்டத்தை நடத்தி விருதுகளை வழங்கியுள்ளார்கள். அக்கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் இரா.நல்லக்கண்ணு, நக்கீரன் ஆசிரியர் கோபால், பேராசிரியர் சரஸ்வதி, திருச்சி செல்வேந்திரன் ஆகியேர் பேசியுள்ளனர்.
மூத்த இதழாளர் சின்னக்குத்தூசி மிகவும் பிரபலமான அரசியல் கட்டுரையாளர் ஆவார். பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த இளம் இதழாளர்களுக்கு விவரங்கள் சொல்லிக் கொடுத்து அவர்கள் வளர்ச்சியில் அக்கறை காட்டியவர். அவர் தி.மு.க. சார்பாளர். எனவே அ.இ.அ.தி.மு.க. பற்றியும் அதன் தலைவர் செயலலிதா பற்றியும் அரசியல் விமர்சனங்கள் பல செய்தவர். இதன் காரணமாக அ.இ.அ.தி.மு.க. அரசு, எழுத்தாளர் சின்னக்குத்தூசி மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு இவ்விழாவை தடுத்து நிறுத்தி சீர்குலைத்துள்ளது. சட்டத்திற்குப் புறம்பாக அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளது. உயர்நீதிமன்றத்தை அவமதித்துள்ளது.

அ.இ.அ.தி.மு.க. ஆட்சி தனது விருப்பு வெறுப்புக்கு ஏற்ப அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது இது முதல் தடவையன்று. ஏற்கெனவே பல நிகழ்வுகளில் இவ்வாறு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, மக்களின் சனநாயக உரிமைகளைப் பறித்துள்ளது.
எடுத்துக்காட்டாக, கூடங்குளத்தில் இன்று வரை 144 தடை ஆணையை அ.இ.அ.தி.மு.க. ஆட்சி நீட்டித்து வருகிறது. 

மனிதப்பேரழிவை உருவாக்கக் கூடிய கூடங்குளம் அணுவுலைகளை மூடக் கோரி சனநாயக வழியில் பரப்புரை நடத்தியதற்காகத் தோழர்கள் முகிலன், வன்னியரசு, சதிசு ஆகியோர் மீது பொய் வழக்குப் புனைந்து சிறையில் அடைத்தது அ.தி.மு.க. ஆட்சி. அவ்வழக்கில் அவர்களுக்குப் பிணை கிடைத்த போது சிறைக்குள் இருந்த அவர்கள் மீது அடுத்தடுத்து புதிய வழக்குகளைப் போட்டு பிணையில் வரமுடியாத நிலையை உருவாக்கியது.
சென்னிமலையில் வேளாண்மைக்கு மும்முனை மின்சாரம் தொடர்ந்து வழங்காததைக் கண்டித்து அமைச்சர் ஒருவருக்குக் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தியதற்காக தோழர் கி.வே.பொன்னையன் மீது அடுக்கடுக்காகப் பொய்வழக்குகளை மீண்டும் மீண்டும் போட்டு பிணையில் வரமுடியாதபடி சிறையில் அடைத்து வைத்தனர். கூடங்குளம் அணுவுலையை அமைதிவழியில் எதிர்த்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மீது பல நூறு வழக்குகள் பதிவு செய்யபட்டன.

சனநாயக முறைப்படி வெளிப்படுத்தப்படும் கருத்துகளையும், சனநாயகப் போராட்டங்களையும் சகித்துக் கொள்ளாத செயலலிதா ஆட்சி, தொடந்து பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. அதற்காக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது. மாற்றுக் கருத்துகளை அனுமதிப்பதும் மக்களுக்காகப் போராடுவதை அனுமதிப்பதும் சனநாயகத்தின் உயிர்க்கூறுகளாகும்.

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் பழிவாங்கும் நடவடிக்கைகளையும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் எதேச்சாதிகாரத்தையும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வன்மையாகக் கண்டிகிறது. சமுகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் சனநாயக வாய்ப்பை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

இவ்வாறு தனது அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT