உடனடிச்செய்திகள்

Wednesday, November 11, 2020

ஒற்றை அதிகார பாசிசத்தை இந்தியாவின் உள்மோதல்கள் உடைக்கும் - ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!



ஒற்றை அதிகார பாசிசத்தை
இந்தியாவின் உள்மோதல்கள் உடைக்கும்

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!

பல தேசங்களைக் கொண்ட இந்தியாவை ஒரே தேசம் என்று கூறுவது; பல மொழிகளைக் கொண்ட இந்தியாவை இந்திமொழி இந்தியாவாக மாற்றுவது; பல மதங்களைக் கொண்ட இந்தியாவை இந்துத்துவா நாடாகத் திரிப்பது; இப்படி எத்தனையோ ஆரியத்துவா மாய்மாலங்கள்!
ஒரே தேசம், ஒரே பண்பாடு, ஒரே இனம், ஒரே மதம் என்று பேசும் பாசகவினரே நடைமுறையில் இம்முழக்கங்களை ஏற்கவில்லை.
பாசக அரசியலின் மண்ணின் மக்கள் சட்டம்
------------------------------------------------------------
இந்தி மாநிலமான அரியானாவில் பாசகவின் மாநில அரசு, மண்ணின் மக்களுக்கே வேலை சட்டமுன் வடிவை (மசோதாவை) சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. அரியானாவில் தனியார் துறையில் 50 ஆயிரம் ரூபாய் வரை மாதச் சம்பளம் உள்ள வேலைகளில் 75 விழுக்காடு வேலைகளை அரியான மக்களுக்கே வழங்க வேண்டும். அண்டையில் உள்ள இந்தி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கோ தொலைவில் உள்ள வேற்று மொழி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கோ 25 விழுக்காட்டிற்குள்தான் தனியார் தொழிற்சாலைகளும் பட்டறைகளும் நிறுவனங்களும் வேலை தரவேண்டும் என்கிறது பாசக அரசின் சட்ட முன்வடிவு.
அரியான பாசக முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் ஒரே தேசம், ஒரே இந்துத்துவா கொள்கையை நடைமுறையில் ஏற்கவில்லையே ஏன்?
மத்தியப் பிரதேச பாசக முதலமைச்சர் சிவராஜ்சிங் செளகான், மண்ணின் மக்களுக்கே வேலை என்று கடந்த ஆகத்து மாதம் (2020) முழங்கினார். அதற்கான சட்ட ஏற்பாடுகளையும் செய்துள்ளார். ஒரே இந்துத்துவா தேசத்தில் ஏன் இந்த மாநிலத் தன்னலம்?
“ஊருக்குத் தானடி உபதேசம்; அது உனக்கும் எனக்கும் இல்லையடி” என்ற கதையாக அல்லவா இருக்கிறது பாசகவின் பாரதத் தேசியம்!
குசராத்தில் காங்கிரசு ஆட்சி 1995இல் மண்ணின் மக்களுக்கே மாநில அரசு, தனியார் துறை, நடுவண் அரசு மூன்றிலும் வேலை என்று அரசாணை வெளியிட்டது. இன்று இந்தியத் தலைமை அமைச்சராக இருந்து கொண்டு, ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை, ஒரே பண்பாடு என்று உரக்க ஓசை எழுப்பும் மோடி குசராத்தின் முதலமைச்சராக இருந்த போது, காங்கிரசு போட்ட 1995-ஆம் ஆண்டின் மண்ணின் மக்களுக்கே வேலை ஆணையைத் தானே செயல்படுத்தினார். இப்போதுள்ள குசராத் பாசக அரசும் அதைத்தானே செயல்படுத்துகிறது.
இந்தியத் தேசியம் பேசும் காங்கிரசார் தங்கள் ஆட்சியில் கர்நாடகம், குசராத் போன்ற மாநிலங்களில் மண்ணின் மக்களுக்கே வேலை என்ற சட்டத்தை ஏன் இயற்றினார்கள்?
இந்துத்துவா பேசும் சிவசேனைக் கட்சி - பாசகவின் பங்காளிக் கட்சி ஆட்சி, மராட்டியத்தின் வேலை மண்ணின் மக்களுக்கே என்கிறதே, அது எப்படி?
அது அப்படித்தான்; இந்தியா என்பது பல தேசங்களைக் கொண்ட ஒரு துணைக் கண்டம்! பல இனங்கள், பல மொழிகள் – அவற்றிற்கான தேசங்கள் இங்கு இருக்கின்றன. ஆரியத்துவா வாதிகள் – மோகன் பகவத் – மோடி அணியினர் ஒரு தேசம் என்று மேலும் மேலும் அமுக்கினால் பாசகவும் புட்டுக்கொள்ளும்; இந்தியாவும் புட்டுக்கொள்ளும்! இதுதான் இந்தியாவின் உள் முரண்பாடு!
உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் உட்பட வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மத்தியப் பிரதேச வேலைகளைக் கைப்பற்றிக் கொள்கிறார்கள். இதைத் தடுக்க அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் மண்ணின் மக்கள் வேலை ஒதுக்கீட்டுச் சட்டம் கொண்டுவரப் போவதாக 2020 ஆகத்து மாதம் அறிவித்தார். அத்துடன் இன்னொன்றையும் கூறினார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்களுக்கு நிரந்தர குடிமக்கள் பட்டியல் ஒன்று பதிவு செய்து வைத்துக் கொண்டு, அப்பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவரப் போவதாகவும் கூறினார்.
இதற்குப் பெயர் இந்தியத் தேசியமா? இதற்குப் பெயர் இந்துத்துவா தேசியமா? இரண்டுமில்லை. மத்தியப்பிரதேசத் தேசியம் என்று வேண்டுமானால், சொல்லலாம்!
ஏற்கெனவே, பஞ்சாப், சம்மு காசுமீர், வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றில் ஆயுதந் தாங்கிய அமைப்புகள் தனிநாடு கேட்டுக் கொண்டுள்ளன!
மோகன் பகவத்-மோடி அணியினர் நிலைநாட்ட முயலும் இந்துத்துவா பாசிசம் என்கின்ற ஆரியத்துவா பாசிசம் ஒரு வேளை முழுமைப்பட்டாலும் அது எத்தனை ஆண்டுகள் நீடிக்கும்? உள் முரண்பாடுகளால் அந்தப் பாசிசம் விரைவில் உடைந்து விழும்!
உச்சநீதிமன்றம்
-----------------------
இந்திய அதிகார மையத்தின் உச்சங்களில் ஒன்று உச்சநீதிமன்றம். அதில் மிகப் பெரும்பாலோர் ஒரே உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். உச்ச நீதிமன்ற-உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவியில் இட ஒதுக்கீடு இல்லை.
கடந்த 12.01.2018 அன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகிய நால்வரும் நீதிமன்ற வேலை நாளில், உச்சநீதிமன்ற வளாகத்தில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் நடுநிலையற்ற பக்கச் சார்பான செயல்பாட்டைக் கண்டித்து செய்தியாளர்களுக்குச் செவ்வி கொடுத்தார்கள். தலைமை நீதிபதிக்கு அந்நால்வரும் கொடுத்த விமர்சனக் கடித நகலையும் செய்தியாளர்களுக்குக் கொடுத்தார்கள்.
இப்பொழுது ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் செகன் மோகன் ரெட்டி, உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா, தனது அரசுக்கு எதிராகச் செயல்படுகிறார் என்றும் ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதிகள், தனது அரசுக்கு எதிராகத் தீர்ப்புகள் கொடுக்கத் தூண்டுகிறார் என்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பொப்டேவுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். அந்த மனு நகலை செய்தியாளர்களுக்கும் கொடுத்துவிட்டார்.
உச்சநீதிமன்றத்தை செகன் மோகன் ரெட்டி அவமதித்துவிட்டார் – அவர்மீது அவமதிப்பு வழக்குப் போட வேண்டும் என்று பாசகவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அசுவினிகுமார் உபாத்யாய் என்பவர் இந்திய அரசின் சட்டத் தலைவர் (அட்டர்னி ஜெனரல்) கே.கே வேணுகோபாலுக்கு மடல் எழுதினார். ஆனால் கே.கே வேணுகோபால் அவமதிப்பு வழக்குப் போடமுடியாது என்று மறுத்துவிட்டார். உச்சநீதிமன்றத்தை அசுவினிகுமார் நேரடியாக அணுகிக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார்.
அண்மையில் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், நாடறிந்த மனித உரிமைச் செயல்பாட்டாளருமான பிரசாந்த் பூசன் அவர்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பொப்டேவை விமர்சித்து, சுட்டுரை வெளியிட்டார் என்பதற்காக அவர்மீது உச்சநீதி மன்றம் தானே முன்வந்து ஆகத்து மாதம் (2020) அவமதிப்பு வழக்குத் தொடுத்தது.
அவ்வழக்கில் சட்டத்தலைவர் கே.கே.வேணுகோபால் கருத்தைக் கேட்ட போது, இந்த விமர்சனத்திற்காக அவமதிப்பு வழக்கு போடக் கூடாது என்று உறுதியாக மறுத்துவிட்டார்.
நீதிபதி அருண்மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, பிரசாந்த் பூசன் மன்னிப்புக் கேட்டால் வழக்கை முடித்து வைப்பதாகக் கூறியது. பிரசாந்த் பூசன் மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்டார். நீதிபதிகள், “பிரசாந்த் பூசன் ஒரு ரூபாய் தண்டத்தொகை கட்ட வேண்டும்” என்று தீர்ப்பளித்தனர். அந்த 1 ரூபாயைக் கட்டினார் பூசன்!
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பொப்டேயை விமர்சித்த வழக்கு இது. இந்திய அரசின் சட்டத்தலைவர் கே.கே.வேணுகோபால், இந்த அவமதிப்பு வழக்கை ஆதரிக்க உறுதியாக மறுத்துவிட்டார்.
இப்போது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பொப்டேக்கும் மராட்டிய சட்டப் பேரவைத் தலைவர்க்குமான மோதல் ஒன்று உருவாகியுள்ளது.
“ரிபப்ளிக்” என்ற ஆங்கிலத் தொலைக்காட்சியின் முதலாளியாகவும் அதன் தலைமைப் பொறுப்பிலும் இருக்கும் அருணாப் கோசுவாமி ஆரியத்துவா தீவிரவாதி, ஆர்எஸ்எஸ் – பாசகவின் ஊடக டமாரம் அவர். அவர் நெறியாள்கை அரம்பத் தனமாக இருக்கும். அவர் மராட்டிய சட்டப் பேரவையில் நடந்த நிகழ்வொன்றைக் கண்டித்துக் காட்டுக் கூச்சல் போட்டு ரிபப்ளிக் தொலைக்காட்சியில் விளாசியுள்ளார். மராட்டிய சட்டப்பேரவைத் தலைவர் அதன் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். அந்த நடவடிக்கைக்குத் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனுச்செய்துள்ளார் அருணாப்.
சட்டப்பேரவை நடவடிக்கைக்கு எதிராக வழக்குப்போட்டது “உரிமை மீறல்” என்று கூறி சட்டப் பேரவைத் தலைவர், அருணாப்பின் செயலை உரிமைமீறல் குழுவின் ஆய்வுக்கு அனுப்பிவிட்டார். இச்செய்தியை அருணாப் உச்சநீதிமன்றத்திற்கு மனுவாகத் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பொப்டே நீதிமன்றத்தில் கொதித்துக் கொந்தளித்துள்ளார்.
மராட்டிய சட்டப் பேரவைச் செயலருக்கு எதிராக பொப்டே கொட்டிய சொற்கள் இதோ:
“யார் இந்த அதிகாரி? அவருக்கு (சட்டப்பேரவை செயலருக்கு) இப்படிப்பட்ட துணிச்சல் எங்கிருந்து வந்தது?”
“இந்த நீதிமன்றத்திற்கு வந்ததற்காக அவரை (அருணாப்பை) எப்படி மிரட்ட முடியும்?”
“அந்தச் செயலரின் அறிவிப்பு, நீதித்துறை நிர்வாகத்தில் கொடூரமாகக் குறுக்கிடும் செயலாகும்?”
உடனே, மராட்டியப் பேரவைச் செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்திட வேண்டும் என்று கூறியுள்ளார் பொப்டே!
அப்படி சட்டப்பேரவைச் செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை-உச்சநீதிமன்றம் தானே முன்வந்து தொடுத்தால் மராட்டிய சிவசேனை-காங்கிரசு கூட்டணி ஆட்சி அதை எதிர் கொள்ள என்ன செய்யுமோ! மராட்டிய அரசுக்கும் – உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்குமான மோதல் இது!
இந்திய அரசு - மாநில அரசு சட்ட மோதல்
-------------------------------------------------------
வேளாண்மையிலிருந்து உழவர்களை வெளியேற்றிவிட்டு, நிலங்களையும், உணவுப் பொருள் வணிகத்தையும் பன்னாட்டுப் பெருங்குழுமங்களிடம் ஒப்படைக்கும் உத்தியுடன் மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது மோகன் பகவத் – மோடி அரசு. இச்சட்டங்களை எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடக்கின்றன.
சில மாநில அரசுகள், இச்சட்டங்கள் தங்கள் மாநிலங்களில் செயல்பட முடியாதவாறு மாற்று வேளாண் சட்ட முன்வடிவுகளை இயற்றியுள்ளன. இராசஸ்தான், பஞ்சாப், சட்டீஸ்கட் மற்றும் வேறு சில மாநிலங்களும் இவ்வாறு மாற்றுச் சட்ட முன்வடிவுகளை நிறைவேற்றியுள்ளன. இவை ஆளுநரின் அல்லது குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று சட்டங்கள் ஆகுமா என்ற வினா எழலாம்.
இங்கு கவனிக்க வேண்டியது, இந்திய அரசு எதேச்சாதிகாரமாக நிறைவேற்றும் மக்கள் பகைச் சட்டங்களை எதிர்க்கட்சி மாநில அரசுகள் கண்டனம் செய்து விட்டு, அச்சட்டங்கள் தங்கள் மாநிலங்களில் செயல்பட அனுமதித்த பழைய போக்கு இனி தொடராது என்பதுதான். மோடி அரசு சில சட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாதவாறு எதிர்க் கட்சி மாநில அரசுகள் முட்டுக்கட்டை போடும்; சட்ட மோதல்களைக் கடைபிடிக்கும்.
நடுவண் புலனாய்வு அமைப்பிற்கு எதிர்ப்பு
------------------------------------------------------------
இந்திய அரசின் நடுவண் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) தங்கள் மாநிலங்களில் தானே முன்வந்து வழக்குப் பதிவு செய்து, புலனாய்வு செய்யும் அனுமதியை சில மாநில அரசுகள் நீக்கிவிட்டன. பஞ்சாப், இராசஸ்தான், சட்டீஸ்கட், தெலங்கானா, கேரளம், ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் இவ்வாறு நடுவண் புலனாய்வு அமைப்பிற்கு அனுமதி மறுத்துள்ளன.
பாசகவின் மாநில அரசுகள், மற்ற மாநில அரசுகள் எடுக்கும் மண்ணின் மக்கள் உரிமைச் சட்ட ஏற்பாடுகள், மாநிலச் சார்பு நிலைபாடுகள் - எதிர்க்கட்சி மாநில அரசுகள் இந்திய அரசின் எதேச்சாதிகாரத்திற்கு எதிராக எடுக்கும் செயல்பாடுகள் - உச்சநீதிமன்றத்திற்குள் ஏற்படும் உள் முரண்பாடுகள் போன்றவை எல்லாம் மோகன் பகவத்-மோடி அரசின் பாசிசப் பயணத்தைத் தடுத்து நிறுத்தி விடுமா? வேகத் தடைகள் போடுகின்றன; பாசிசம் முழுமையடையாமல் தடுத்துவிடும் என்று கருத முடியாது. முழு பாசிசத்தை நோக்கி முழுமூச்சுடன் செல்கிறது மோடி அரசு. இந்தியப் பாசிசம் என்பது ஆரியத்துவம். அதன் அரசியல் கட்சி பாசக!
பாசிசம் முழுமை அடைந்து விட்டால் தேர்தல்கள் நடக்காது. எதிர்க்கட்சிகள், சனநாயக உரிமை இயக்கங்கள், தமிழ்த்தேசிய அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தேசிய இனங்களின் அமைப்புகள் அனைத்தும் தடைசெய்யப்படலாம்.
ஆனால் இவ்வாறான பாசிச ஆட்சி இந்தியாவில் நீண்டகாலம் தொடர முடியாது; குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்துவிடும்! ஏனெனில் இந்தியா செர்மனியோ, இத்தாலியோ அல்ல! செர்மனியில் ஒரே தேசிய இனம், ஒரே பொது மொழி, ஒரே கிறித்துவ மதம்! செர்மானிய இனவெறியைக் கிளப்பி பாசிசத்தை வளர்க்க இந்த ஒருமைநிலை இட்லருக்கு உதவியாக இருந்தது. இந்தியாவில் பல இனங்கள், பல மொழிகள், பல மதங்கள்! பிரித்தானிய வணிக வேட்டையாடிகளின் பீரங்கிகள் வன்முறையால் இணைப்பதற்கு முன் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தனித்தனியே இருந்த நாடுகள் இந்தியாவில் இருக்கின்றன. இந்தியா என்ற நிர்வாகக் கட்டமைப்பை வெள்ளையர்கள் உருவாக்கி இருநூற்றமைம்பது ஆண்டுகளுக்குள்தான் ஆகிறது.
முந்நூறு, நானூறு ஆண்டுகளாகப் படையெடுப்புகளால் ஒன்றிணைக்கப்பட்டிருந்த ஐரோப்பிய நாடுகள். பின்பு தனித்தனியாய்ப் பிரிந்து தனி அரசுகள் அமைத்துக் கொண்ட வரலாறுகள் இருக்கின்றன.
இந்திரா காந்தி 1975-1976-இல் தீவிரமாக செயல்படுத்திய நெருக்கடி நிலை என்ற எதேச்சாதிகார ஆட்சி - சனநாயகப் பறிப்பு – நீண்ட காலம் நீடிக்க முடியவில்லை. 1977-இல் முடிவுக்கு வந்தது.
எனவே பாசக பாசிசத்தை எதிர்த்து வெல்வது எளிது. ஆனால் சில ஆண்டுகள் அதன் அடக்குமுறைகளை எதிர்கொள்ள வேண்டும்! அதற்குரிய ஈகங்களைச் செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டின் அவலம்
-------------------------------
தமிழ்நாட்டின் நிலை என்ன? பாசக பாசிசத்திற்கு ஆதரவாக அஇஅதிமுக! ஒரு வேளை பாசகவை விட்டு அது விலகி விட்டால் திமுக பாசக பக்கம் போய் விடுமோ என்ற ஐயம்! பாசகவோடு கலைஞர் கருணாநிதி காலத்தில் 1999 - இல் திமுக கூட்டணி சேர்ந்து ஐந்து ஆண்டுகள் நடுவண் ஆட்சியில் இருந்தது.
1975-1976 இந்திரா காந்தியின் நெருக்கடி நிலையை முழுக்க முழுக்க ஆதரித்தது எம்ஜியார் தலைமையிலான அஇஅதிமுக. 1977 மக்களவைத் தேர்தலில், சர்வாதிகார இந்திரா காந்தியையும் அவரது காங்கிரசையும் தோற்கடித்தனர் வடநாட்டு மக்கள். தமிழ்நாட்டில் அஇஅதிமுக - காங்கிரசு கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
தமிழ்நாட்டில் திமுக-அதிமுக என்ற இருமுனை முகாம் அரசியல் நிரந்தரம் என்பது போல் தோற்றங் கொண்டுள்ளது. இந்த இருபெரும் சந்தர்ப்பவாதக் கட்சிகளுடன் சிறிய சந்தர்ப்பவாதக் கட்சிகள் கூட்டணி சேர்ந்து கொள்கின்றன.
பாசிச எதிர்ப்பு, தமிழர் உரிமை மீட்பு என்று பேசிக்கொண்டு, வாக்குச் சாவடிக்கு வழிகாட்டுவதாக மட்டும் செயல்பட்டால். தமிழ்த்தேசிய அமைப்புகளும் திமுக,அதிமுக போல் சந்தர்ப்பவாத அமைப்புகளாக மாறிவிடும்!
தமிழ்நாட்டில் பாசக பாசிச எதிர்ப்பு என்ற ஒற்றை முழக்கம் – உரிய பயன்தராது. ஒன்றை எதிர்க்கும் போது – அதற்கு சரியான மாற்றாக இன்னொன்றை முன்வைக்க வேண்டும். பொய்யை எதிர்க்கும் போது உண்மையை மாற்றாக வைக்க வேண்டும். இருட்டை நீக்க வேண்டுமானால் வெளிச்சம் வேண்டும்.
பாசிச எதிர்ப்பு என்று திமுக அணியை முன்வைத்தால் – இவர்களின் சனநாயகம் எப்படிப்பட்டது என்று தெரியாதா? வரம்புக்குட்பட்ட அதிகாரத்தில் இவர்கள் செய்த சர்வாதிகாரம் தெரியாதா? இவர்கள் பாசிசத்திற்குக் கீழடங்கிப் போக மாட்டார்களா?
பாசக பாசிசத்தை முறியடிக்க ஓர் அனைத்திந்தியக் கட்சியின் தலைமையில் சனநாயகக் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. தேசிய இனங்களின் பாசிச எதிர்ப்புப் போக்கில் சமத்துவ அடிப்படையில் கூட்டணி அமையலாம் அல்லது தனித்தனியே போராட்டங்கள் நடக்கலாம். இவ்வாறான போராட்டங்களும் வெற்றி ஈட்டும்.
பாசிசத்தை வீழ்த்தும் போது புதிய தமிழ்நாடு புதிய உள்ளடக்கத்தோடு எழவேண்டும்.
பாசக பாசிசத்தை வீழ்த்துவதற்கு அதற்கு மாற்று சனநாயகமாக – மாற்று அரசியலாக இலட்சியத் தமிழ்த்தேசியம் விளங்க வேண்டும்.
பதவி, பணம், விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத இலட்சியப் போராளிகள் – பாசிச எதிர்ப்பு சனநாயகப் போராட்டத்திற்கு – மக்களிடையே விழிப்புணர்வு ஊட்ட வேண்டும். உணர்வாளர்களை அணிதிரட்ட வேண்டும்.
“நானும் வரலாற்று நாயகன்தான் – வரலாற்று நாயகிதான்” என்ற தன்மன ஏற்பு ஒவ்வொரு தமிழர்க்கும் வேண்டும்.
“அடிச்சுவடும் அடையாளமும் இன்றி நான் மறைந்து போக மாட்டேன்” என்ற உறுதி ஒவ்வொருவர்க்கும் வேண்டும்.
கொள்கைத் தெளிவும் மன உறுதியும் இருந்தால் நம்மால் பாசிசத்தை வீழ்த்த முடியும்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam



Sunday, November 8, 2020

"திராவிடம்தான் படிக்க வைத்ததா?" - “தம்பி” வலையொலிக்கு... ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

"திராவிடம்தான் படிக்க வைத்ததா?"


“தம்பி” வலையொலிக்கு...

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Saturday, November 7, 2020

“பா.ச.க.வோடு அ.தி.மு.க. சேர்ந்தால் இந்த சாபம் எடப்பாடியை விடாது.!” “ழகரம்” ஊடகத்துக்கு...ஐயா பெ. மணியரசன் அவர்களின் பேட்டி!

“பா.ச.க.வோடு அ.தி.மு.க. சேர்ந்தால்

இந்த சாபம் எடப்பாடியை விடாது.!”


“ழகரம்” ஊடகத்துக்கு...


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

ஐயா பெ. மணியரசன்  அவர்களின் பேட்டி!




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

"முடிவுக்கு வந்துவிட்டது திராவிடம்!" “தம்பி” ஊடகத்துக்கு...- ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

"முடிவுக்கு வந்துவிட்டது திராவிடம்!"


“தம்பி” ஊடகத்துக்கு...


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Thursday, November 5, 2020

"திராவிடவாதிகள் சாதியை ஒழித்தார்களா, வளர்த்தார்களா?" “ராவணா” ஊடகத்துக்கு...- ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

"திராவிடவாதிகள் சாதியை ஒழித்தார்களா,  வளர்த்தார்களா?"



“ராவணா” ஊடகத்துக்கு...


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Wednesday, November 4, 2020

"தமிழ்நாடு நாளிலும் திராவிடக் குழப்பமா?" “ராவணா” ஊடகத்துக்கு...ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

"தமிழ்நாடு நாளிலும் திராவிடக் குழப்பமா?"


“ராவணா” ஊடகத்துக்கு...


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

உச்ச நீதிமன்றம் இடித்துரைத்து விட்டது! தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும்! தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!




உச்ச நீதிமன்றம் இடித்துரைத்து விட்டது!

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால்
ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்வது குறித்து தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அடாவடியாகக் காலதாமதம் செய்து வருவதை உச்ச நீதிமன்றம் இடித்துரைத்திருக்கிறது.
பேரறிவாளன் மனுவை விசாரித்து வரும் நீதிபதிகள் நாகேசுவரராவ், ஏமந்த்குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு 03.11.2020 அன்று இக்கருத்தை வெளியிட்டிருக்கிறது.
அரசமைப்புச் சட்டப் பிரிவு 142 வழங்கும் சிறப்பதிகாரத்தைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றம் தானே நேரடியாக வாழ்நாள் சிறையாளிகளையோ, மரண தண்டனை சிறையாளிகளையோ முன் விடுதலை செய்யலாம் என்றாலும், இப்போது அந்த சிறப்பதிகாரத்தை தாங்கள் பயன்படுத்த விரும்பவில்லை என்றும், இதுதொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் சட்ட நிலைமைகளையும் எடுத்துக்காட்டி, தமிழ்நாடு அரசு ஆளுநரை வலியுறுத்தலாம் என்று அறிவுறுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக பேரறிவாளன் தரப்பில் எடுத்துக்காட்டப்பட்ட நிலோபர் நிஷா வழக்குத் தீர்ப்பை வழிகாட்டுதலாகக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் விளக்கியது.
தமிழ்நாடு உள்துறை செயலாளர் (சிறைத்துறை) - எதிர் - நிலோபர் நிஷா வழக்கில், 2020 சனவரி 23 அன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் நேரடியாக பல வாழ்நாள் சிறையாளிகளுக்கு முன்விடுதலை அளித்து ஆணையிட்டது. அதேபோல், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் வழக்கிலும் அரசமைப்பு உறுப்பு 142-இன் கீழ் முன்விடுதலை ஆணையிட முடியும் என்றாலும், இந்தக் கட்டத்தில் அவ்வாறு தாங்கள் தலையிட விரும்பவில்லை என்று கூறிய நீதிபதிகள், தமிழ்நாடு ஆளுநர் கூறுவதுபோல் இராசீவ்காந்தி கொலை தொடர்பான பன்னாட்டு சதியை விசாரிக்கும் பல்நோக்கு விசாரணைக் கண்காணிப்பு முகமை (Multi Discplinary Monitoring Agency – MDMA) அறிக்கைக்குக் காத்திருக்க வேண்டியதில்லை என்றும் தெளிவுபடக் கூறினார்கள்.
ஏனென்றால், இராசீவ் கொலை தொடர்பாக பல நாட்டு அரசுகளின் உயர்மட்ட அளவில் நடந்துள்ள சதியை விசாரிப்பதே பல்நோக்கு விசாரணைக் கண்காணிப்பு முகமையின் பணியாகும். ஏற்கெனவே தண்டிக்கப்பட்டு நீண்டகாலம் சிறையிலிருக்கிற பேரறிவாளன் உள்ளிட்டோர் சிக்கலுக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என உச்ச நீதிமன்றம் உறுதியாகத் தெளிவுபடுத்திவிட்டது.
இந்நிலையில், ஆளுநர் கடந்த இரண்டாண்டுகளாக இந்தக் கோப்பின் மீது முடிவெடுக்காமல் இருப்பது மனநிறைவு அளிக்கவில்லை எனவும் நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டனர்.
எனவே, தமிழ்நாடு ஆளுநர் புரோகித், 2018 செப்டம்பர் 9ஆம் நாள் தமிழ்நாடு அமைச்சரவை அளித்துள்ள பரிந்துரையை அப்படியே ஏற்று அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன் கீழ் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்துகளின் அடிப்படையில், ஆளுநரை வலியுறுத்தி, பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், இரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர் விடுதலையை மீண்டும் வலியுறுத்த வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


Tuesday, November 3, 2020

“மனு நூலை எரிக்கலாமா, வேண்டாமா?” “ழகரம்” ஊடகத்துக்கு... - ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

“மனு நூலை எரிக்கலாமா, வேண்டாமா?”


“ழகரம்” ஊடகத்துக்கு...


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Monday, November 2, 2020

“தமிழ்நாடு நாளா? அடக்குமுறை நாளா?” - ஐயா பெ. மணியரசன் உரை!

“தமிழ்நாடு நாளா? 

அடக்குமுறை நாளா?”


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

ஐயா பெ. மணியரசன் உரை!




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Sunday, November 1, 2020

தமிழ்நாடு நாளில் புளியங்குடி காவல்துறையின் அடாவடிக்கு.. - தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!


தமிழ்நாடு நாளில்
புளியங்குடி காவல்துறையின் அடாவடிக்கு..
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!

இன்று (01.11.2020) தமிழ்நாடு நாளில் தமிழர் தாயகம் காக்க வெளி மாநிலத்தவருக்கு எதிரான ஒத்துழையாமைப் போராட்டத்தை அறிவித்து, துண்டறிக்கைப் பரப்புரையை தமிழ்த்தேசியப் பேரியக்கம் தமிழ்நாடு முழுவதும் நடத்தியது.

இதை தென்காசி மாவட்டம் – கடையத்தில் நடத்துவதற்கு தனது சொந்த ஊரான புளியங்குடியிலிருந்து பேருந்தில் புறப்பட்டுச் சென்ற தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க. பாண்டியன் அவர்களை, பயங்கரவாதியை பிடிப்பது போல தென்காசி பேருந்து நிலையத்தில் சூழ்ந்து கொண்டு கடையம் பேருந்தில் ஏறவிடாமல் புளியங்குடிக்கே வலுக்கட்டாயமாக காவல்துறையினர் திருப்பி அனுப்பினர்.

அதேநேரத்தில், தோழர் பாண்டியனின் துணைவியார் ஒரு திருமணம் தொடர்பாக வெளியூர் சென்றிருந்த நிலையில், பூட்டியிருந்த அவரது வீட்டில் வெளியில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து, புளியங்குடி காவல் நிலைய ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ் தலைமையில் நான்கைந்து காவலர்கள் அத்துமீறி அவர் வீடு புகுந்து, வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒத்துழையாமைப் பரப்புரைத் துண்டறிக்கைகளை அள்ளிச் சென்றிருக்கிறார்கள். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஆளில்லாத வீட்டில் ஏன் நுழைகிறீர்கள் என்று கேட்டதற்கு, உங்களையும் கைது செய்து ஜீப்பில் ஏற்றுவேன் என்று ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ் மிரட்டியிருக்கிறார்.

வெளிப்படையாக அறிவித்துவிட்டு, அமைதியான முறையில் ஒத்துழையாமைப் பரப்புரை செய்யும் சட்டவழிப்பட்ட தடுத்து நிறுத்தியது மட்டுமல்லாமல், எந்த நீதிமன்ற ஆணையும் இல்லாமல் அத்துமீறி தோழர் க. பாண்டியன் வீடுபுகுந்த காவல்துறையை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழ்நாடு அரசுக் காவல்துறை அப்பட்டமான சட்டமீறலில் ஈடுபட்ட ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ் மீதும், அவரோடு சென்ற காவலர்கள் மீதும் சட்டநடவடிக்கை எடுத்து, மனித உரிமையையும், சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாக்க முன்வர வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசு, ஒருபக்கம் மொழிவழி தேசிய இன மாநிலமாகத் தமிழ்நாடு உருவான நவம்பர் 1-ஐ தமிழ்நாடு நாள் என அறிவித்துவிட்டு, மறுபுறம் தமிழர் தாயகத்தைப் பாதுகாக்க அரசமைப்புச்சட்டம் வழங்கியிருக்கிற கருத்துரிமைப்படி பரப்புரை செய்ய முயன்றவர்கள் மீது இவ்வாறான அடக்குமுறைகளையும், அச்சுறுத்தும் நடவடிக்கைகளையும் ஏவிவிட்டிருப்பது தமிழ்நாடு அரசின் இரட்டை வேடத்தை எடுத்துக் காட்டுகிறது.

தமிழ்நாடு அரசு அளிக்கும் துணிச்சலில்தான் அலெக்ஸ்ராஜ் போன்ற கீழ்நிலை அதிகாரிகள் இவ்வளவு அத்துமீறி அப்பட்டமான சட்டமீறலில் ஈடுபடுகிறார்களோ என்ற ஐயம் எழுகிறது. அப்பட்டமான இச்சட்டமீறலை தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டிப்பதோடு, இதில் தொடர்புடையோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT