உடனடிச்செய்திகள்

Wednesday, November 4, 2020

உச்ச நீதிமன்றம் இடித்துரைத்து விட்டது! தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும்! தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!




உச்ச நீதிமன்றம் இடித்துரைத்து விட்டது!

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால்
ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்வது குறித்து தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அடாவடியாகக் காலதாமதம் செய்து வருவதை உச்ச நீதிமன்றம் இடித்துரைத்திருக்கிறது.
பேரறிவாளன் மனுவை விசாரித்து வரும் நீதிபதிகள் நாகேசுவரராவ், ஏமந்த்குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு 03.11.2020 அன்று இக்கருத்தை வெளியிட்டிருக்கிறது.
அரசமைப்புச் சட்டப் பிரிவு 142 வழங்கும் சிறப்பதிகாரத்தைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றம் தானே நேரடியாக வாழ்நாள் சிறையாளிகளையோ, மரண தண்டனை சிறையாளிகளையோ முன் விடுதலை செய்யலாம் என்றாலும், இப்போது அந்த சிறப்பதிகாரத்தை தாங்கள் பயன்படுத்த விரும்பவில்லை என்றும், இதுதொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் சட்ட நிலைமைகளையும் எடுத்துக்காட்டி, தமிழ்நாடு அரசு ஆளுநரை வலியுறுத்தலாம் என்று அறிவுறுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக பேரறிவாளன் தரப்பில் எடுத்துக்காட்டப்பட்ட நிலோபர் நிஷா வழக்குத் தீர்ப்பை வழிகாட்டுதலாகக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் விளக்கியது.
தமிழ்நாடு உள்துறை செயலாளர் (சிறைத்துறை) - எதிர் - நிலோபர் நிஷா வழக்கில், 2020 சனவரி 23 அன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் நேரடியாக பல வாழ்நாள் சிறையாளிகளுக்கு முன்விடுதலை அளித்து ஆணையிட்டது. அதேபோல், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் வழக்கிலும் அரசமைப்பு உறுப்பு 142-இன் கீழ் முன்விடுதலை ஆணையிட முடியும் என்றாலும், இந்தக் கட்டத்தில் அவ்வாறு தாங்கள் தலையிட விரும்பவில்லை என்று கூறிய நீதிபதிகள், தமிழ்நாடு ஆளுநர் கூறுவதுபோல் இராசீவ்காந்தி கொலை தொடர்பான பன்னாட்டு சதியை விசாரிக்கும் பல்நோக்கு விசாரணைக் கண்காணிப்பு முகமை (Multi Discplinary Monitoring Agency – MDMA) அறிக்கைக்குக் காத்திருக்க வேண்டியதில்லை என்றும் தெளிவுபடக் கூறினார்கள்.
ஏனென்றால், இராசீவ் கொலை தொடர்பாக பல நாட்டு அரசுகளின் உயர்மட்ட அளவில் நடந்துள்ள சதியை விசாரிப்பதே பல்நோக்கு விசாரணைக் கண்காணிப்பு முகமையின் பணியாகும். ஏற்கெனவே தண்டிக்கப்பட்டு நீண்டகாலம் சிறையிலிருக்கிற பேரறிவாளன் உள்ளிட்டோர் சிக்கலுக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என உச்ச நீதிமன்றம் உறுதியாகத் தெளிவுபடுத்திவிட்டது.
இந்நிலையில், ஆளுநர் கடந்த இரண்டாண்டுகளாக இந்தக் கோப்பின் மீது முடிவெடுக்காமல் இருப்பது மனநிறைவு அளிக்கவில்லை எனவும் நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டனர்.
எனவே, தமிழ்நாடு ஆளுநர் புரோகித், 2018 செப்டம்பர் 9ஆம் நாள் தமிழ்நாடு அமைச்சரவை அளித்துள்ள பரிந்துரையை அப்படியே ஏற்று அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன் கீழ் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்துகளின் அடிப்படையில், ஆளுநரை வலியுறுத்தி, பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், இரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர் விடுதலையை மீண்டும் வலியுறுத்த வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT