இன்று (01.11.2020) தமிழ்நாடு நாளில் தமிழர் தாயகம் காக்க வெளி மாநிலத்தவருக்கு எதிரான ஒத்துழையாமைப் போராட்டத்தை அறிவித்து, துண்டறிக்கைப் பரப்புரையை தமிழ்த்தேசியப் பேரியக்கம் தமிழ்நாடு முழுவதும் நடத்தியது.
இதை தென்காசி மாவட்டம் – கடையத்தில் நடத்துவதற்கு தனது சொந்த ஊரான புளியங்குடியிலிருந்து பேருந்தில் புறப்பட்டுச் சென்ற தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க. பாண்டியன் அவர்களை, பயங்கரவாதியை பிடிப்பது போல தென்காசி பேருந்து நிலையத்தில் சூழ்ந்து கொண்டு கடையம் பேருந்தில் ஏறவிடாமல் புளியங்குடிக்கே வலுக்கட்டாயமாக காவல்துறையினர் திருப்பி அனுப்பினர்.
அதேநேரத்தில், தோழர் பாண்டியனின் துணைவியார் ஒரு திருமணம் தொடர்பாக வெளியூர் சென்றிருந்த நிலையில், பூட்டியிருந்த அவரது வீட்டில் வெளியில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து, புளியங்குடி காவல் நிலைய ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ் தலைமையில் நான்கைந்து காவலர்கள் அத்துமீறி அவர் வீடு புகுந்து, வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒத்துழையாமைப் பரப்புரைத் துண்டறிக்கைகளை அள்ளிச் சென்றிருக்கிறார்கள். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஆளில்லாத வீட்டில் ஏன் நுழைகிறீர்கள் என்று கேட்டதற்கு, உங்களையும் கைது செய்து ஜீப்பில் ஏற்றுவேன் என்று ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ் மிரட்டியிருக்கிறார்.
வெளிப்படையாக அறிவித்துவிட்டு, அமைதியான முறையில் ஒத்துழையாமைப் பரப்புரை செய்யும் சட்டவழிப்பட்ட தடுத்து நிறுத்தியது மட்டுமல்லாமல், எந்த நீதிமன்ற ஆணையும் இல்லாமல் அத்துமீறி தோழர் க. பாண்டியன் வீடுபுகுந்த காவல்துறையை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழ்நாடு அரசுக் காவல்துறை அப்பட்டமான சட்டமீறலில் ஈடுபட்ட ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ் மீதும், அவரோடு சென்ற காவலர்கள் மீதும் சட்டநடவடிக்கை எடுத்து, மனித உரிமையையும், சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாக்க முன்வர வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசு, ஒருபக்கம் மொழிவழி தேசிய இன மாநிலமாகத் தமிழ்நாடு உருவான நவம்பர் 1-ஐ தமிழ்நாடு நாள் என அறிவித்துவிட்டு, மறுபுறம் தமிழர் தாயகத்தைப் பாதுகாக்க அரசமைப்புச்சட்டம் வழங்கியிருக்கிற கருத்துரிமைப்படி பரப்புரை செய்ய முயன்றவர்கள் மீது இவ்வாறான அடக்குமுறைகளையும், அச்சுறுத்தும் நடவடிக்கைகளையும் ஏவிவிட்டிருப்பது தமிழ்நாடு அரசின் இரட்டை வேடத்தை எடுத்துக் காட்டுகிறது.
தமிழ்நாடு அரசு அளிக்கும் துணிச்சலில்தான் அலெக்ஸ்ராஜ் போன்ற கீழ்நிலை அதிகாரிகள் இவ்வளவு அத்துமீறி அப்பட்டமான சட்டமீறலில் ஈடுபடுகிறார்களோ என்ற ஐயம் எழுகிறது. அப்பட்டமான இச்சட்டமீறலை தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டிப்பதோடு, இதில் தொடர்புடையோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.
Post a Comment