உடனடிச்செய்திகள்

Monday, May 28, 2012

தமிழக பெட்ரோலிய வளங்களை தமிழகத்திற்கே சொந்தமாக்கு! - நாளை தமிழகமெங்கும் த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம்!

தமிழக பெட்ரோலிய வளங்களை தமிழகத்திற்கே சொந்தமாக்கு!

நாளை தமிழகமெங்கும் த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம்!

 

தமிழகத்தில் பெட்ரோல் விலை உயர்வைத் தடுக்க, தமிழகத்தின் பெட்ரோலிய வளங்களை, தமிழகத்திற்கே சொந்தமாக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகமெங்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது.

 

இது குறித்து, அறிக்கை வெளியிட்ட தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், "இனி பெட்ரோல், டீசல் விலை மாதந்தோறும் உயர்த்தப்பட்டாலும் வியப்பதற்கில்லை என்று எண்ணும் அளவிற்கு, இந்த ஆண்டிலேயே இரண்டாவது முறையாக இப்போது பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளது இந்திய அரசு.

 

இம்முறை அறிவிக்கப்பட்டுள்ள லிட்டருக்கு ரூ.7.54 என்பது அண்மைக் காலவரலாறு காணத செங்குத்தான விலைப்பாய்ச்சலாகும். இந்த விலை உயர்விலும் இந்தியாவில் எங்குமில்லாத அளவுக்கு தமிழ்நாட்டிற்கு கூடுதல் விலைஉயர்வு அறிவிக்கப் பட்டுள்ளது. தில்லிக்கு பெட்ரோல் விலையர்வு லிட்டருக்கு ரூ. 7.54 என்றால் தமிழ்நாட்டிற்கு ரூ.7.98!

 

அடிமைத் தமிழ்த் தேசத்திற்கு இந்திய ஏகாதிபத்தியம் அளிக்கும் கூடுதல் பரிசு இது! இந்த பெட்ரோல் விலைஉயர்வு பொதுவாக தவிர்த்திருக்கக்கூடியது என்பது ஒரு புறமிருக்க இவ்வளவு கடும் விலை உயர்வை தமிழ்நாடு சுமக்க வேண்டிய அவசியமே இல்லை. இந்திய ஏகாதிபத்தியத்தின் கீழ் கட்டுண்டுக் கிடப்பதால் எண்ணெய் வளம் மிக்கத் தமிழ்நாடு இவ்விலை உயர்வை சுமக்க வேண்டியுள்ளது.

 

தமிழ்நாட்டில் காவிரிப்படுகையில் அமைந்துள்ள நரிமணம், அடியக்கமங்கலம், புவனகிரி, கோயில்களப்பால் உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 28 எண்ணெய், எரிவாயு கிணறுகள் இருக்கின்றன. இவற்றிலிருந்து ஆண்டுதோறும் 40 ஆயிரம் கிலோ லிட்டர் பெட்ரோலும், 1.20 இலட்சம் கிலோ லிட்டர் டீசலும் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் பெட்ரோல் நுகர்வு ஆண்டுக்கு 1.20 இலட்சம் கிலோ லிட்டர் ஆகும் டீசல் நுகர்வு ஆண்டுக்கு 3.60 இலட்சம் கிலோ லிட்டர் ஆகும்.

 

அதாவது தமிழகத்தின் பெட்ரோல், டீசல் தேவையில் மூன்றில் ஒரு பங்கு தமிழகத்திலேயே கிடைக்கிறது. குறைந்தபட்சம் இலாபம் உட்பட அதன் அடிப்படை விலை அதிகம் போனால் லிட்டருக்கு 39 ரூபாய்தான்.

 

மீதமுள்ள மூன்றில் இரண்டுபங்கு தேவைக்கு தமிழகம் இங்கிருந்து ஈட்டும் அயல் செலாவணியிலிருந்து வெளிநாட்டில் கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ளலாம் என நிதி சுதந்திரத்தை இந்திய அரசு வழங்குமேயானால் இப்போது சர்வதேச சந்தையில் இறங்குமுகமாக உள்ள விலையில் தமிழகம் வாங்கிக் கொள்ள முடியும்.

 

இவ்வாறு தமிழ்நாட்டு பெட்ரோலிய எண்ணெய் தமிழகத்திற்கே சொந்தம் என்ற உரிமையும், அயல்நாட்டுச் சந்தையில் தமிழகமே பெட்ரோலியத்தை நேரடியாக இறக்குமதி செய்துகொள்ளும் உரிமையும் வழங்கப்பட்டால் தமிழ்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோலை சுமார் 50 ரூபாய் விலையில் தாராளமாக வழங்கலாம். டீசலையும் இது போல் குறைந்த விலையில் வழங்கலாம்.

 

தமிழ்நாட்டின் எரிவளித் (எரிவாயு) தேவையில் சுமார் 80 விழுக்காடு தமிழ்நாட்டிலேயே கிடைக்கிறது. தமிழ்நாட்டில் கிடைக்கும் இயற்கை எரிவளி தமிழக அரசுக்கே சொந்தம் என்ற நிலை ஏற்பட்டால் இப்பொதுள்ள விலையை விட மலிவான விலையில் இயற்கை எரிவளி உருளை (சிலிண்டர்) குடும்பங்களுக்கு வழங்கமுடியும்" என தெரிவித்தார்.

 

மேலும், பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்தும் தமிழக பெட்ரோலிய வளங்களை தமிழகத்திற்கே சொந்தமாக்க வேண்டுமென வலியுறுத்தியும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வரும் 29.5.2012 செவ்வாய் அன்று சென்னையிலும், தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தார்.

 

அதன்படி நாளை(29.05.2012) மற்றும் நாளை மறுநாள்(30.05.2012) தமிழகமெங்கும் த.தே.பொ.க.வினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்துகின்றனர். தஞ்சையில் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் தலைவர் தோழர் பெ.மணியரசன் கண்டன உரையாற்றுகிறார்.

 

தஞ்சை

தஞ்சை நகரம் ஜீப்பிட்டர் திரையரங்கம் எதிரில் நாளை(29.5.2012) மாலை 5.30 மணியளவில் நடைபெறும்  ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க.தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் குழ.பால்ராசு தலைமையேற்கிறார். கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தோழமை அமைப்புத் தலைவர்கள் கண்டன உரையாற்றுகின்றனர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் உரையாற்றுகிறார்.

 

சிதம்பரம்

சிதம்பரம் நகரம் தெற்கு சன்னதியில் 29.5.2012அன்று  மாலை 5 மணியளவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டதிற்கு, த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் தலைமையேற்றார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகரை கண்டன உரையாற்றுகிறார்.

 

திருச்சி

திருச்சி தொடர்வண்டி நிலையச் சந்திப்பில் (காதி கிராப்ட் அருகில்) நாளை(29.5.2012) மாலை 5  மணியளவில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் கவித்துவன் தலைமையேற்கிறார். மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி கண்டன உரையாற்றுகிறார்.

 

பாபநாசம்

பாபநாசம் மேலவிதியில் நாளை(29.5.2012) மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக இளைஞர் முன்னணி கிளைச் செயலாளர் தோழர் இரா.பிரபாகரன் தலைமையேற்கிறார். த.இ.மு. மாவட்டச் செயளாலர் தோழர் மா.செ.சிவராசு கண்டன உரையாற்றுகிறார்.

 

ஓசூர்

ஓசூர் இராம் நகரில் நாளை(29.5.2012) மாலை 5 மணியளவில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்குஆர்ப்பாட்டதிற்கு த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் நடவரசன் தலைமையேற்கிறார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து சிறப்புரையாற்றுகிறார்.

 

சென்னை

சென்னையில், 30.05.2012 அன்று மாலை 5 மணியளவில் சைதை பனகல் மாளிகை முன் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் தலைமையேற்கிறார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, த.தே.பொ.க. தாம்பரம் கிளைச் செயலாளர் தோழர் தமிழ்க்கனல் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர்.

 

மேற்கண்ட ஆர்ப்பாட்டங்களில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களும், தமிழ் உணர்வாளர்களும் பொது மக்களும் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளுக்கு வலுசேர்க்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

 

 

- தலைமைச் செயலகம்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

இடம்: சென்னை


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT