உடனடிச்செய்திகள்

Wednesday, May 30, 2012

தமிழகத்தில் பெட்ரோல் விலை குறைய, தமிழக பெட்ரோலியத்தை தமிழகத்திற்கே வழங்க வேண்டும் - பெ.மணியரசன் பேச்சு!

"தமிழகத்தில் பெட்ரோல் விலை குறைய,

தமிழக பெட்ரோலியத்தை தமிழகத்திற்கே வழங்க வேண்டும்"

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேச்சு!

 

"தமிழகத்தில் பெட்ரோல் விலை குறைய, தமிழக பெட்ரோலியத்தை தமிழகத்திற்கே வழங்க வேண்டும்" என தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில கலந்து கொண்டு பேசிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் தெரிவித்தார்.

 

பெட்ரோல் விலையை வரலாறு காணாத அளவிற்கு உயர்த்திய இந்திய அரசைக் கண்டித்தும், தமிழகத்தில் கிடைக்கும் பெட்ரோலிய வளங்களை தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழகத் தலைநகர் சென்னையிலும், பல்வேறு முக்கிய நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

 

தஞ்சை ஜூப்பிடர் திரையரங்கம் அருகில், நேற்று(29.05.2012) மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் தோழர் பெ.மணியரசன், "இந்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் பெரும் நட்டத்தில் இயங்குவதாக இந்தியப் பிரதமரும், நிதியமைச்சரும் சொல்கிறார்கள். ஒருவேளை, அவர்கள் சொல்வது போல் நட்டம் ஏற்பட்டிருந்தால் அதற்கு காரணமானவர்கள் இந்திய ஆட்சியாளர்களே! பன்னாட்டுச் சந்தையில் பெட்ரோலியத்தின் விலை உயர்ந்துவிட்டது என்று கூறுகிறார்கள். இப்படிப்பட்ட நெருக்கடி இருக்கும்போது, பெரு முதலாளிகளான ரிலையன்சு மற்றும் எஸ்ஸார் குழுமங்கள் மும்பை ஆழ்கடலிலும், விசாகப்பட்டினம் கடலிலும், கல்கத்தா கடலிலும் எடுக்கும் பெட்ரோலியம் முழுவதையும் அந்நிறுவனங்கள் வெளிநாடுகளில் விற்க இந்திய அரசு அனுமதிப்பது ஏன்?

 

குசராத்தி சேட்டு நிறுவனங்களான ரிலையன்சும், எஸ்ஸாரும் ஆட்சியாளர்களுக்குக் கொடுக்கும் இலஞ்சம் தான் இதற்குக் காரணமா? இனியும் அந்நிறுவனங்கள், பெட்ரோலியத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யாமல் தடை செய்து அதை இந்திய மக்களின் பயன்பாட்டுக்கு திருப்பிவிட வேண்டும்.

 

ஓபெக் நாடுகள் நிர்ணயித்துள்ள விலையைவிட குறைவான விலையில், தரமான பெட்ரோலியத்தை ஈரான் நாடு வழங்கி வந்தது. அமெரிக்க வல்லரசின் நெருக்குதல்களுக்கு அடிபணிந்து ஈரான் நாட்டிலிருது இறக்குமதி செய்யும் பெட்ரோலியத்தை இந்திய அரசு சரிபாதியாக குறைத்துவிட்டது. இப்படிப்பட்ட இந்திய அரசின் கொள்கைகள் தான் பெட்ரோல் விலை உயர்வுக்குக் காரணமே தவிர, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது உண்மை காரணமல்ல.

 

ஈரானிலிருந்து இந்தியாவுக்கு தரை வழியாக குழாய்கள் மூலம் சமையல் எரிவளி மலிவான விலையில் கிடைக்க, ஒப்பந்தம் போடப்பட்டு வேலைகள் தொடங்கப்பட்டன. அதையும் அமெரிக்காவின் பேச்சைக் கேட்டுக் கொண்டு மன்மோகன் அரசு நிறுத்திவிட்டது. இந்தியாவின் பிரதமராக இருக்கும் மன்மோகன் சிங் அமெரிக்க வல்லரசின் முகவராக செயல்படுவதால் தான் சமையல் எரிவாயு, எரிவளிக்கு அதிக விலை கொடுக்க வேண்டிய நிலையில் இந்திய மக்கள் இருக்கிறார்கள்.

 

தமிழ்நாட்டில், தமிழக மக்களின் தேவையில் 80 விழுக்காட்டை நிறைவு செய்யும் அளவிற்கு குத்தாலம், நரிமணம் போன்ற இடங்களில் ஏராளமான சமையல் எரிவளி கிடைக்கிறது. இந்த நிலையில், தமிழக மக்கள் எரிவளி உருலைகளுக்கு எதற்காக அதிக விலை கொடுக்க வேண்டும்? இனிமேல் ஓராண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு 4 எரிவளி உருலை மட்டுமே மானிய விலையில் கொடுக்கப்படும் என்றும், அதற்கு மேல் வாங்கினால் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டும் என்றும் இந்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏராளமாக எரிவளியை உற்பத்திச் செய்யும் தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் மீது செயற்கையாக உயர்த்தப்பட்ட அதிக விலையை ஏன் சுமக்க வேண்டும்?

 

தமிழ்நாட்டில் நரிமணம், கோவில் களப்பால், அடியக்க மங்களம், புவனகிரி, கமலாபுரம் ஆகிய இடங்களில் உள்ள 28 எண்ணெய் கிணறுகளில் ஒரு மாதத்திற்கு 40,000 கிலோ லிட்டர் பெட்ரோலும், 1,20,000 கிலோ லிட்டர் டீசலும் கிடைக்கிறது. இது தமிழகத் தேவையில் மூன்றில் ஒரு பகுதியாகும். தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் இந்த பெட்ரோல், டீசலும், வெளிநாட்டில் வாங்கப்படும் எண்ணெய்க்குரிய அதே விலையில் கணக்கிடப்பட்டு, விலை உயர்த்தப்படுகிறது. இந்த மோசடி விலையை தமிழக மக்கள் ஏன் சுமக்க வேண்டும்? அதனால் தான் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தமிழ்நாட்டில் கிடைக்கும் பெட்ரோலியம் மற்றும் எரிவளி முழுவதையும் அந்த உற்பத்தி நிறுவனங்களோடு, தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்துகிறது.

 

தமிழக முதலமைச்சர் செயலலிதா அவர்கள், பொத்தாம் பொதுவில் விலை உயர்வைக் கண்டித்தால் மட்டும் போதாது. தமிழகத்தில் உற்பத்தியாகும் பெட்ரோலியம் முழுவதையும், தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்த வேண்டும். நடுவண் அரசின் அதிகாரக் குவியலை பொத்தாம் பொதுவில் எதிர்க்காமல், கோட்பாட்டு வகையில் கோரிக்கைகளை வைத்து எதிர்க்க வேண்டும். கடுமையான மின்வெட்டு நிலவும்போது, நெய்வேலி மின்சாரம் முழுவதையும் கேட்காமல் பொத்தாம் பொதுவில் மத்தியத் தொகுப்பிலிருந்து 1000 மெகாவாட் கேட்கிறார் செயல்லிதா. தமிழக மக்களுக்கு தங்கள் மண்ணில் கிடைக்கும் பெட்ரோலியமும், தங்கள் மண்ணில் உற்பத்தியாகும் மின்சாரமும் தங்களுக்கே கிடைக்க வேண்ட்டும் என்ற உணர்ச்சியை ஊட்டி மக்களை வீதிக்கு அழைத்தால் தான் இந்திய அரசு பணியும். தமிழகத்திற்கு உரியதைக் கொடுக்கும். இத்திசையில் செயலலிதா செயல்பட வேண்டும்.

 

தி.மு.க. தலைவர் கருணாநிதி தில்லி ஆட்சியில் பங்கு வகித்துக் கொண்டு பெட்ரோல் விலை உயர்வை எதிர்ப்பதாக சொல்வது, அதற்கு ஆர்ப்பாட்டம் நடத்துவத மக்களை ஏமாற்றும் நாடகமாகும். கூட்டணி அமைச்சரவையில் இருக்கின்ற தி.மு.க. அங்கேயே இந்த விலை உயர்வை தடுக்கப் போராடியிருக்க வேண்டும்.

 

தமிழ்த் தேசியம் என்ற சித்தாந்தம் சிக்கல்களை சொல்லி வெறும் விமர்சனம் மட்டும் செய்யாது. சிக்கல்களுக்கான தீர்வுகளையும் அவற்றிற்குரிய மாற்றுத் திட்டங்களையும் முன் வைக்கிறது. அந்த அடிப்படையில் தான் ரிலையன்சு, எஸ்ஸ்ர் குழுமங்களின் பெட்ரோலிய ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் கிடைக்கும் பெட்ரோலியம், எரிவளி முழுவதையும் தமிழ்நாட்டிற்கே வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறது. இக்கோரிக்கைகளை தமிழகத்தில் உள்ள ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும், தமிழ் மக்களும் முன் வைக்க வேண்டும். இந்த அடிப்படையில் மக்கள் எழுச்சியை உண்டாக்கினால் இந்த சிக்கல்களுக்கத் தீர்வு கிடைக்கும்"  என பேசினார்.

 

ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு தலைமையேற்றார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், தஞ்சை நகரச் செயலாளர் தோழர் இராசு.முனியாண்டி, துணைச் செயலாளர் தோழர் தமிழ்ச்செல்வன், ஒன்றியச் செயலாளர் தோழர் க.காமராசர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ.கருணாநிதி உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.

 

சிதம்பரம்
சிதம்பரம் நகரம் தெற்கு சன்னதியில் 29.5.2012 அன்று மாலை 5 மணியளவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் தலைமையேற்றார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை, தமிழக இளைஞர் முன்னணி நகர அமைப்பாளர் தோழர் ஆ.குபேரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். த.தே.பொ.க. முன்னணித் தோழர்கள் ம.கோ.தேவராசன், முருகவேள், சுகன்ராஜ், த.இ.மு. பொறுப்பாளர்கள் தோழர் பிரபாகரன், தே.அரவிந்தன் உள்ளிட்ட திரளான தோழர்கள் இதில் கலந்து கொண்டனர்.


திருச்சி
திருச்சி தொடர்வண்டி நிலையச் சந்திப்பில் (காதி கிராப்ட் அருகில்) நேற்று(29.5.2012) மாலை 5 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் கவித்துவன் தலைமையேற்றார். மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி, பாவலர் முவ.பரணர், தோழர் நிலவழகன்(த.ஓ.வி.இ.) ஆகியோர் கண்டன உரையாற்றினர். த.தே.பொ.க. தோழர் வே.க.இலட்சுமணன் நன்றி நவின்றார்.


ஓசூர்
ஓசூர் இராம் நகரில் நேற்று(29.5.2012) காலை 10 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஆர்ப்பாட்டதிற்கு த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் நடவரசன் தலைமையேற்றார். த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் இரமேசு, தோழர் சுப்பிரமணியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து வைத்து சிறப்புரையாற்றினார்.

 

பாபநாசம்
பாபநாசம் மேலவிதியில் நேற்று(29.5.2012) மாலை 5 மணியளவில், தமிழக இளைஞர் முன்னணி தேவராயன்பேட்டை கிளை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக இளைஞர் முன்னணி கிளைச் செயலாளர் தோழர் இரா.பிரபாகரன் தலைமையேற்றார். த.இ.மு. துணைச் செயலாளர் தோழர் ரெ.புண்ணியமூர்த்தி முன்னிலை வகித்தார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி குடந்தை நகரச் செயலாளர் தோழர் விடுதலைச்சுடர், த.இ.மு. குடந்தை நகரச் செயலாளர் தோழர் செந்தமிழன், தோழர் வளவன்(த.தே.பொ.க.) ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து, த.இ.மு. தஞ்சை மாவட்டச் செயளாலர் வழக்கறிஞர் மா.சிவராசு உரையாற்றினார்.

 

கிருட்டிணகிரி

கிருட்டிணகிரி ரவுண்டானா அருகில் இன்று(30.05.2012) மாலை 5.30 நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக இளைஞர் முன்னணி அமைப்பாளர் தோழர் ஈஸ்வரன் தலைமையேற்றார். த.இ.மு. ஓசூர் நகர அமைப்பாளர் தோழர் சுப்பிரமணியன், த.தே.பொ.க. ஓசூர் நகரச் செயலாளர் தோழர் இரமேசு ஆகியோர் கண்டன உரையாற்றினர். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து வைத்து சிறப்புரையாற்றினார்.

 

சென்னை
சென்னையில், இன்று(30.05.2012) மாலை 5.30 மணியளவில் நுங்கம்பாக்கம் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்திற்கு எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் தலைமையேற்றுப் பேசினார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, த.தே.பொ.க. தாம்பரம் கிளைச் செயலாளர் தோழர் தமிழ்க்கனல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை ஒருங்கிணைப்பாளர் தோழர் அருண்சோரி, தமிழர் உலகம் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் பொறியாளர் சி.பா.அருட்கண்ணனார், எழுத்தாளர் பொன்னுசாமி உள்ளிட்ட தோழர்கள் இதில் பங்கேற்றனர்.

 

தலைமைச் செயலகம்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

இடம்: சென்னை-17



போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT