"முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் மூன்று உறுதிகளும்"
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் கட்டுரை
முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டு நினைவேந்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்நினைவேந்தலுடன் மூன்று உறுதியேற்புகளை நாம் ஏற்க வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் எழுதியுள்ளார்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மே 15-30 இதழில் இது குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரையின் முழுவடிவம்:
முள்ளி வாய்க்கால்
குருதி வெள்ளத்தில்
மூழ்கி மடிந்த மானிடமே!
உங்கள் முன்னால்
முகமிழந்து நிற்கின்றன சொற்கள்!
மறுவாழ்வு கேட்டு மண்டியிடுகின்றன
புத்தம், பொதுவுடைமை, காந்தியம்
சனநாயகம், முற்போக்கு,
பாட்டாளி வர்க்க சர்வதேசியம்
அத்தனை சொற்களும்
அவமானப்பட்டுக் கிடக்கின்றன
அழிந்த பின்னர் நீங்களோ
அழியா வரம் பெற்றுவிட்டீர்கள்
மடிந்த பின்னர்தான் உங்களுக்கு
மரியாதை தந்தது உலகம்!
உலகத்தின் கண்முன் ‡நீங்கள்
மனிதர்களாய்ப் பிறந்தது குற்றமில்லை
தமிழர்களாய்ப் பிறந்தது குற்றம்
சொந்த தேசமும் சொந்த அரசும்
இல்லாத இனம் அனாதைதானே!
எந்தத் தொழிலை, எந்த வணிகத்தை
என்ன அரசியல் பலனை
இந்த இனம் உலக நாடுகளுக்கு
வழங்கப் போகிறது?
பலன் கருதா மனித பாசம்
பாரினில் உண்டோ?
உங்கள் ஊர்களில்
தெங்கின் நீர்போல்
தூயநீர் சுரக்கும் கிணறுகள் உண்டு
பெட்ரோல் கிணறுகள் உண்டோ?
மண்ணுக்கடியில் தங்கமும் வெள்ளியும்
மறைந்து கிடக்கின்றனவா?
மனிதம் பெட்ரோலைவிட மலிவானது
உலோகங்களைவிடத் துச்சமானது
உலகப் பார்வை இன்று இதுதான்!
இந்தியப் பார்வை இதையும் விஞ்சியது
எப்போதும் எங்கள் எதிரிகள்
தமிழர்களே என்பது இந்தியப் பார்வை!
எப்போதும் இந்தியாவே தமிழரின்
இனப் பகை என்ற இப்பார்வை
எத்தனைத் தமிழரிடம் இருக்கிறது?
இப்பார்வைத் தமிழகத் தலைவர்களில்
எத்தனைப் பேருக்கு இருக்கிறது?
ஈழத் தமிழர்கள் எத்தனை பேரிடம்
இப்பார்வை இருக்கிறது?
ஈழத் தமிழர்களின்
அரசியல் தலைவர்களிடம்
இப்பார்வை இருக்கிறதா?
இவையயல்லாம் இன்று
விடைதேடும் வினாக்கள்!
முள்ளி வாய்க்கால் ஈகியருக்கு வீரவணக்கம்
திதி, திவசம் போன்ற சடங்கன்று!
கடந்த காலம் பற்றிய திறனாய்வு
நிகழ்காலம் குறித்த கணிப்பு
எதிர்காலம் பற்றிய இலக்கு
இம்மூன்றும் மலர்களாகட்டும்
அம்மலர்கள் கொண்டு வணங்குவோம்!
தமிழ் ஈழம்
உலகத்தின் மிகச்சிறந்த தேசிய விடுதலை இயக்கம் தமிழீழ விடுதலைப்புலிகள். அது, தமிழ் இனத்தின் பெருமைமிக்க அடையாளம். தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் மிகச்சிறந்த தலைமை ஆளுமை! விடுதலைப் புலிகள் உலகின் பிற ஆயுதப்புரட்சியாளர்கள் பின்பற்றத்தக்க வீரர்கள்; தமிழீழ மக்கள் தேச விடுதலைக்கு எந்த விலையும் கொடுக்கும் முன் மாதிரி மக்கள்.
இவ்வளவு இருந்தும் நமக்கு ஒரு தோல்வி; அது தற்காலிகமானதுதான். இதிலிருந்து நாம் புதிய படிப்பினைகள் கற்றுக் கொள்ள வேண்டும். புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ அறிவாளர்கள் பலர் தன் திற னாய்வு செய்து வருகிறார்கள். குறிப்பாகத் தமிழ் நெட் இணையதளத்தில் சிறந்த திறனாய்வுகள் எழுதி வருகிறார்கள்.
எந்தத் திறனாய்வும் மேலே நாம் குறிப்பிட்டுள்ள சிறப்புகளை உள்ளது உள்ளபடி ஏற்றுக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தமிழீழத் தேசியத் தலைவரின் பக்கம் நின்றுகொண்டு செய்யப் பட வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளின் அடுத்தக்கட்ட நகர்வுகள் என்ற உணர்வோடும் உறவோடும் அத்திறனாய்வு களைச் செய்யவேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளைப் புறக்கணித்து விட்டுச் செய்யும் எந்தத் திறனாய்வும் அவதூறுகளாகவே அமையும்.
ஆயுதப்போர் முறையின் வடிவம், அரசியல் துறை உத்திகள், பன்னாட்டு அரசியல் நகர்வுகளுக்கு ஈடுகொடுத்தல் முதலிய முகாமையான துறைகளில் மறு ஆய்வுகள் ‡ புதிய அணுகுமுறைகள் தேவைப்படுகின்றன.
குறிப்பாக, நாம் ஏற்கெனவே தமிழர் கண்ணோட்டத்தில் எழுதியிருந்தபடி, இந்தியா - இந்திய ஆளும் வர்க்கம் ஆகியவைபற்றி புதிய வரையறுப்பும், அதற்கேற்ற அணுகுமுறையும் ஈழ விடுதலை அமைப்பிற்குத் தேவை. இந்தியா பகை சக்தியாகவே இன்றும் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். அந்தக் கசப்பான உண்மையை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப செயல்புரியவேண்டும்.
இந்தியா பற்றியும், இந்தியாவின் ஆளும் வர்க்கம் பற்றியும் சரியான வரையறுப்பு வந்து விட்டால் ‡அதற்கேற்ப தமிழ்நாட்டை ‡தமிழக மக்களை ஈழ விடுதலை இயக்கம் அணுக வேண்டும்.
ஈழத்தில் இப்பொழுதுள்ள நிலைமை என்ன? நடந்து முடிந்தது நான்காவது போர்; ஐந்தாவது போர் வருமென்று, ஈழ விடுதலைக் கருத்து டைய பலரும் கூறி வருகின்றனர். உண்மையில் ஐந்தாவது போரை சிங்கள அரசு நடத்திக் கொண்டுள்ளது. எதிர்த் தரப்பு போராடாத நிலையில், தான் மட்டுமே தமிழ் மக்கள் மீது ஐந்தாவது போரை இராசபட்சே கும்பல் நடத்திக்கொண்டுள்ளது.
விடுதலைப்புலிகள் புதைத்த கண்ணிவெடிகளை அகற்றும் பணி இன்னும் முடியவில்லை; மேலும் அதிக காலம் ஆகும். எனவே, எல்லா இடங்க ளுக்கும் தமிழ் மக்கள் தாராள மாகச் செல்ல அனுமதிக்க முடியாது; வெளிநாட்டி னரையும், ஊடகர்களையும் ஈழத்தில் எல்லா இடங்க ளுக்கும் அனுமதிக்க முடியாது; காரணம் கண்ணி வெடி அகற்றப்படாமல் இருப்பதால் அங்கு போகின்றவர்களின் உயி ருக்கு ஆபத்து என்று இலங்கை ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள்.
உண்மையில் அங்கு நடப்பது என்ன? இலட்சக்கணக்கில் கொல்லப்பட்ட தமிழர்களின் மண்டை ஓடுகள், அங்கங்கே குவியல் குவியலாய்ப் புதையுண்டும் அரைகுறையாகப் புதையுண்டும் கிடக்கின்றன. மண்டை ஓடுகள் எளிதில் அழிந்து விடாது. கம்பூச்சியாவில் படையாட்களையும், குண்டர்களையும் ஏவி, போல் பாட் இலட்சக்கணக்கான மக்களைக் கொன்றான். அவன் சிறைப்பிடிக்கப்பட்ட பின் குவியல் குவியலான மண்டை ஓடுகளைத் திரட்டி, படம் பிடித்து உலகிற்குக் காட்டியது கம்பூச்சிய அரசு. கம்யூனிஸ்ட் போர்வையில் உலவிய போல்பாட் என்ற இரத்த வெறியனின் உண்மை முகம் வெளியில் தெரியவந்தது. அந்தக் கயவனைக் காறித்துப் பியது உலகம். அது போன்ற தொரு இக்கட்டில் மாட்டி, தான் அம்பலமாகி விடக் கூடாது என்பதற்காக இராசபட்சே எச்சரிக்கையாக இருக் றான்.
எனவே குவியல் குவியலாய்க் கிடக்கும் தமிழர்களின் மண்டை ஓடுகளைப் புதைக்கக் கூடாது என்று கருதி அவற்றைநொறுக்கித் தூளாக்கி சாலை போடுகிறான் இராசபட்சே. அதற்குத்தான் இவ்வளவு காலதாமதம் ஏற்படுகிறது.
இராசபட்சே கும்பல் அமர்த்திய 'கற்றுக்கொண்ட பாடங்களுக்கும், இணக் கத்திற்குமான ஆணையத் திடம்' சாட்சியம் அளித்த மன்னார் ஆயர், போரின் முடிவில் 1,46,679 தமிழர்கள் பற்றி எந்தத் தகவலும் இல்லை என்றார். இந்த எண்ணிக்கை இலங்கை அரசு அதிகாரிகள் வெளியிட்ட அலுவல் வழிப் பட்டத் தகவல்களிலிருந்து பெற்றேன் என்றார். இது கற்றுக்கொண்ட பாடம் (LLRC) என்ற அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
பிரித்தானிய வெளியுறவுத் துறையின் ஒரு பிரிவாக உள்ள காமன்வெல்த் அலுவலகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் பல அவலங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. போருக்குப் பிறகு வடக்கு, கிழக்கு தமிழ் மாநிலங்களில் 90 ஆயிரம் தமிழ்ப் பெண்கள் விதவைகளாக உள்ளனர் என் கிறது அவ்வறிக்கை. தமிழர் பகுதிகளில் ஏராளமான ஆண்கள் கொல்லப்பட்டு விட்டதால், குடும்பங்களில் ஆண்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
தமிழர் பகுதிகளில் ஆயிரக் கணக்கில் இலங்கை இராணுவ வீரர்கள் தங்கியுள்ளனர். சமூக அடிப்படையிலும், "வேறு வகையிலும்" இது தமிழ்ச் சமூகத்தினருக்குப் பெரும் அச் சுறுத்தலாக உள்ளது என்கிறது அவ்வறிக்கை.
தமிழர்களின் வீடுகளையும், விளை நிலங்களையும் சிங்க ளர்கள் கைப்பற்றிக் கொண் டார்கள். விடுதலைப்புலிகள் என்று போலியாக ஐயமெழுப்பி அப்பாவி இளைஞர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்று கொடுஞ்சித்திர வதைக்குள்ளாக்கிக் கொன்று வீசிகின்றனர் என்கிறது அவ்வறிக்கை.
போருக்குப் பிறகு விசாரணைக் கென்று காவல் துறையினரால் அழைத்துச் செல்லப் பட்டவர்கள் வீடு திரும்புவதில்லை. அதுபற்றி புகார் கொடுத்தால் அதைக் காவல் துறை வாங்குவ தில்லை. தப்பித்தவறி வாங்கினால் அப்புகார் மனு மீது எந்த விசாரணையும் நடத்துவ தில்லை.
தமிழர்கள் மீது ஏவப்படும் இந்தக் கொடூர வன்முறை, கொலை ஆகியவை குறித்து சிங்கள மனித உரிமையாளர் யாராவது கேள்வி கேட்டால், அவர்களும் காணாமல் போகி றார்கள். அவ்வாறு எழுதும் சிங்கள இதழாளர் வீடுகளில் எறி குண்டுகள் வீசப்படு கின்றன.
இவ்வளவு கொடிய செய்திகளையும் கொண்ட அறிக்கையை 30.04.2012 அன்று இலண்டனில் வெளியிட்டவர் பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் ஹேக். தமிழர்களின் சிவநெறிக் கோவில்கள் புத்த விகாரைகளாக மாற்றப்படுகின்றன. தமிழில் உள்ள ஊர்ப்பெயர்கள் சிங்களத்தில் மாற்றப்படுகின்றன. போதைப் பழக்கத்திலும், விபச்சாரத்திலும் தமிழர்களை ஈடுபடுத்த பெரும் முயற்சி எடுக்கிறது சிங்கள அரசு. இலங்கை அரசு, தமிழர்கள் மீது நடத்தும் ஐந்தாம் கட்டப்போர் என்று மேற்கண்டவைகளைத்தான் நாம் குறிப்பிடுகிறோம்.
இத்தனைக் கொடூரங்களுக்கும் இடையே ஈழ விடுதலைப் போராட்டத்தை மீண்டும் புத்துயிர் பெறச்செய்ய அங்கே முயற்சிகள் நடக்கின்றன. புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் மிகவும் சுறுசுறுப்பாக ஈழ விடுதலை இயக்கத்தைப் புத்துருவாக்கம் செய்யச் செயல்படுகிறார்கள்.
தமிழீழ விடுதலைக்காக உயிர் துறந்த 40 ஆயிரம் விடுதலைப்புலிகள், இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் ஆகியோரின் ஈகம் வீண்போகாது. மீண்டும் விடுதலைச்சுடர் எரியும்; வெளிச்சம் வரும்; ஈழம் விடுதலை பெறும். ஈழத் தமிழர்கள், தமிழகம் குறித்து கவனம் கொள்ளவேண்டிய ஒரு செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழகத் தமிழர்கள் தமிழீழ விடுதலைக்கு ஆதரவு தர வேண்டிய, அதற்காகப் போராட வேண்டிய ஒரு மக்கள் சக்தி என்ற அளவில் மட்டும் புரிதல் இருக்கக் கூடாது. அவர்களின் உரிமைப் போராட்டங்களை ஈழத் தமிழர்களும் ஆதரிக்கக் கடமைப் பட்டவர்கள். தமிழகத்தின் ஏழு கோடித் தமிழர்கள் இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசை நிறுவ வேண்டியவர்கள். அதுதான் அவர்களின் முதன்மை இலக்காக இருக்கவேண்டும். அதற்கான எழுச்சியின் ஒரு பகுதியாக ஈழவிடுதலை ஆதரவு மாறும்போதுதான், தீர்மானகரமாக ஈழ விடுதலைக்குத் தமிழகத் தமிழர்களால் பங்கு செலுத்த முடியும். அவ்வாறில்லாமல் ஈழ ஆதரவாளர்கள் என்ற நிலையில் மட்டும் தமிழகத் தமிழர்கள் இருந்தால் 2009 பேரழிவின்போது, அடையாளப் போராட்டங்களோடு வரம்பிட்டு நின்ற நிலைதான் மீண்டும் தமிழகத்தில் இருக்கும் என்பதை ஈழத் தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டுத் தமிழர்கள்
ஈழ விடுதலை ஆதரவு என்பது தமிழ்நாட்டில் பல வண்ணங்கள் கொண்டுள்ளது. பல உள்நோக்கங்கள் கொண்டுள்ளது. கருணாநிதி மற்றும் செயலலிதா போன்ற கபட வேடதாரிகளை மனதில் வைத்து இவ்வாறு குறிப்பிடவில்லை. ஈழ விடுதலைக்காக ஈகம் செய்த பலரையும் மனதில் நிறுத்தியே இவ்வாறு குறிப்பிடுகிறோம்.
தமிழ்நாட்டின் அடிமை நிலையைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் அல்லது புரிந்துகொண்டாலும் வெளிப்படுத்த விரும்பாதவர்கள் ஈழ விடுதலையைப் புரிந்து கொண்டார்கள் என்று சொல்வதில் தர்க்கம் இல்லை.
எல்லா நிலையிலும் இந்தியாவின் காலனியாக வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் விடுதலையை இலட்சியமாக்கிட மறுப்பவர்கள், ஈழ விடுதலைக்கு எந்த அளவு போராட முன்வருவர்?
தன்னையே அறிந்து கொள்ளாத ஒருவர் பிறரை அறிந்து கொள்ளத் தகுதியானவரா? தன்னைச் சுற்றியுள்ள தமிழ் மக்கள், உரிமைகள் இழந்து, உயிரிழந்து அடிமைச் சேற்றில் உழல்வது கண்டு ஆத்திரப்படாதவர்கள், அடுத்த நாட்டு அடிமைச் சேற்றில் துன்புறும் தமிழ் மக்கள் விடுதலைக்காக உறுதியாக போராடுவார்களா?
தமிழ்நாட்டுத் தமிழர்களின் உரிமைப் பறிப்பிற்கும், உயிர்ப் பறிப்பிற்கும் முதன்மைக் காரணமாக உள்ள இந்திய ஏகாதிபத்தியத்தை வெறுக்காதவர்கள், ஈழத்தமிழர்களை இனப் பேரழிவு செய்த போரில் பங்காளியாகப் பணியாற்றிய இந்திய அரசை, முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னும் வெறுக்காதவர்கள் ‡அதனைப் பகை சக்தியாகக் கருதாதவர்கள், இனியும் ஈழ விடுதலைக்கு உருப்படியாக உதவிட முடியுமா?
இந்திய அரசின், தேர்தல் மூலம் பதவிகளை அடையக் காத்திருப்போர், அதற்காக இந்திய ஆளும் வர்க்கக் கட்சிகளோடு கூட்டணி சேர அணியமாய் உள்ளோர், இனி உருவாகும் ஈழ விடுதலை எழுச்சிக்குக் காத்திரமான பாத்திரம் வகிக்க முடியுமா?
தமிழக சட்டமன்றப் பதவிகளோ, இந்திய நாடாளுமன்றப் பதவிகளோ இந்திய ஏகாதிபத்தியத்தின் கீழ் செயல் புரியும் கங்காணிப் பதவிகள் என்று கண்டுகொள்ளாத ஈழ விடுதலை ஆதரவு உணர்வாளர்களால் எதிர்காலத்தில் என்ன சாதிக்க முடியும்?
"தமிழ்நாட்டில் எங்கள் கட்சியை வலுப்படுத்துங்கள், நாங்கள் ஈழத்தை வென்று தருகிறோம்" என்று முழங்குவது, அப்பட்டமான ஆள்மாறாட்ட மோசடி இல்லையா? இதை அடையாளம் காணத் தெரியாத தமிழின உணர்வாளர்கள், இலட்சம் பேர் திரண்டாலும் அவர்களால் எதைச் சாதிக்க முடியும்? அது வெறும் மனித மந்தைதானே; போர்க் குணமுள்ள மக்கள் சக்தி அல்லவே!
இவ்வாறான மனித மந்தைகளுக்குப் புதிது புதிதாக மேய்ப்பர்கள் அவதரித்துக் கொண்டே இருப்பார்கள்! இந்த மேய்ப்பர்கள், புரட்சியாளர் பிரபாகரனைத் தங்களின் அரசியல் பிரதிநிதி போல் சித்தரித்து அவமதிக்கிறார்கள். விடுதலைப்புலிகளின் வீரத்தை வர்ணித்தும், ஈழத் தமிழர்களின் சோகத்தை வர்ணித்தும் தங்களுக்கான ரசிகர்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்.
இவர்களால் உருவாக்கப்பட்ட ரசிகர்கள், பார்வையாளர் மாடத்தில் உட்கார்ந்து மட்டைப் பந்தை ரசிக்கும் ரசிகர்களைப்போல் அவ்வப்போது உணர்வுகளை வெளிப் படுத்துகிறார்கள். ஆட்டத்தின் வெற்றி தோல்விக்கேற்ப களிப்பதும், கவலைப்படுவதும் மட்டைப் பந்து ரசிகர்களின் குணமாகும். ஈழ விடுதலைப்போரையும் அவ்வாறே ரசிக்கும் நிலையில் இன உணர்வாளர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் தமிழ் நாட்டின் உரிமைகளை மீட்க, உயிர்களைக் காப்பாற்ற, தாயகத்தைத் தமிழர்க்குரியதாகத் தக்கவைக்க களமிறங்க மறுக்கிறார்கள். பார்வையாளர் மாடமே அவர்களுக்குச் சுகமாக இருக்கிறது.
2009‡இல் நடந்த இன அழிப்புப் போரை, ஏழு கோடித் தமிழகத் தமிழர்களால் தடுக்க முடியாமல் போனது ஏன்? த.தே.பொ.க. உள்ளிட்ட உண்மையான தமிழின அமைப்புகளும் தமிழின உணர்வாளர்களும் தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டு விடை காண வேண்டிய வினா இது.
தன் மண்ணின் அடிமைத் தளை அறுக்கப் போராடாத இனம், தன் பங்காளி மண்ணின் அடிமைத் தளையை அறுக்கக் களம் காணாது.
தன் மண்ணின் அடிமைத் தனத்தை அறிந்துகொள்ள முடியாத இனம், தன் பங்காளியின் மண் விடுதலைக்கு சமர்க்களம் காணும் சக்தி அற்றது. அடையாளப் போராட்டம் நடத்தி ஆறுதல் அடையும்.
முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் இவ்வேளையில், மூன்று உறுதி மொழிகளை ஏற்போம்.
1. இந்திய அரசு, தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் பொதுப் பகைவன் என்பதைப் புரிந்து கொள்வோம்.
2. தமிழ்நாட்டு விடுதலைக் களத்தில் ஊன்றி நின்று ஈழ விடுதலைக்குத் துணை புரிவோம்.
3. உலகம் போற்றும் புரட்சியாளன், தேசிய விடுதலைப் போராளி பிரபாகரன் பெயரைப் போதைப் பொருள் போல் தமிழ்நாட்டு அரசியலில் பயன்படுத்துவதை தடுத்து நிறுத்துவோம்.
தமிழீழ விடுதலைக்காக உயிர் ஈகம் செய்த ஈழத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் வீரவணக்கம்!
இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.
Post a Comment