உடனடிச்செய்திகள்

Wednesday, February 27, 2013

சேலத்தில் கெயில் நிறுவன அலுவலகம் முற்றுகைப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது!




தமிழ்நாட்டின் கோவை மாவட்டம் தொடங்கி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருட்டிணகரி ஆகிய ஏழு மாவட்டங்களிலும் சற்றொப்ப 325 கி.மீட்டர் நீளத்திற்கு, இந்திய அரசின் கெயல் நிறுவனம் எரிவாயுக் குழாய் பதிக்கும் பணியை, தமிழகக் காவல்படையின் உறுதுணையுடன் செய்து வருகின்றது.

இத்திட்டத்தைக் கைவிடக் கோரி, நேற்று(26.02.2013) சேலத்திலுள்ள கெயில் நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த விவசாயிகள் வாழ்வாதாரப் பாதுகாப்புக் குழு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, நேற்று காலை நடைபெற்ற முற்றுகைப்போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான பல்வேறு அரசியல் கட்சி, அமைப்புகளைச் சேர்ந்த உழவர்களும், உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.

ம.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கணேசமூர்த்தி தலைமையேற்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கச் செயலாளர் தோழர் பி.சண்முகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில் துணைச் செயலாளர் தோழர் சி.மகேந்திரன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்புகளின் தலைவர்களும் தோழர்களும் இதில் பங்கேற்றனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் குழ.பால்ராசு, நா.வைகறை, அ.ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் ஈரோடு வெ.இளங்கோவன், சேலம் தோழர் பிந்துசாரன், கோவை தோழர் ஸ்டீபன் உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றுக் கைதாகினர்.

கைதான 1000க்கும் மேற்பட்டோரை, மண்டபங்களில் தங்க வைத்து மாலை விடுதலை செய்தனர் காவல்துறையினர்.






(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT