உடனடிச்செய்திகள்

Saturday, February 15, 2025

திருமுருகன் காந்தியின் “திராவிட”த் திரிபுவாதங்கள்! [ பகுதி – 4 ] க.அருணபாரதி

 


திருமுருகன் காந்தியின் “திராவிட”த் திரிபுவாதங்கள்!
[ பகுதி – 4 ]
க. அருணபாரதி

துணைப் பொதுச் செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
==================================
(சற்று உடல்நலக் குறைவு காரணமாக இத்தொடரின் நான்காம் பகுதி. தாமதமாக வந்துள்ளது. அனைவரும் பொருத்தருள்க!)
”ஈழப்படுகொலையில் இந்திய ஆரிய அரசை அம்பலப்படுத்தாமல், தமிழ்நாட்டின் அதிகாரவர்க்க ஒட்டுண்ணிகளை மட்டுமே அடையாளப்படுத்தி, இந்திய ஆளும் வர்க்கத்தின் பக்கம் மக்கள் கவனம் சென்றுவிடாமல் தடுத்துக்கொண்டிருப்பதாக” தமிழ்த்தேசியப் பேரியக்கத்தை நோக்கி மே பதினேழு இயக்கம் கேள்வி எழுப்புகிறது.
“இறையாண்மையுள்ள தமிழ்த்தேசக் குடியரசே எமது இலக்கு!” என 1990 – தமிழ்த்தேசியத் தன்னுரிமை மாநாடு தொடங்கி, இப்போது வரை முழங்கி வருபவர் நாங்கள்! “ஆரிய இந்தியமே தமிழினத்தின் முதன்மைப் பகை! இன்றைய இந்திய அரசமைப்புச் சட்டமே தமிழினத்தை ஒடுக்கும் முதன்மைக் கருவி” எனத் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்! இவையெல்லாம் நன்கு தெரிந்தும்கூட, “இந்தியாவை எப்போது அம்பலப்படுத்த போகிறீர்கள்” என்று எங்களை நோக்கிக் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறது மே பதினேழு இயக்கம்!
அடுத்து, ”தமிழ்நாட்டு மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் மைய அதிகாரமே முதன்மை எதிரியாக மக்களை உணர வைக்காமல், மாநிலங்களை மட்டுமே குறிவைப்பது அடக்குமுறைக்கு உள்ளாகாமல் தப்பிக்கும் யுக்தி” என்று மே பதினேழு இயக்கத்தின் தோழர் கொண்டல்சாமி சுட்டிக்காட்டுகிறாராம்!
அதாவது, ஆரிய இந்தியத்தை விட்டுவிட்டு, திராவிட ஆட்சியாளர்களை மட்டுமே குறிவைப்பதால்தான், தமிழ்த்தேசியப் பேரியக்கம் எந்த அடக்குமுறைக்கும் ஆளாகாமல் தப்பித்துக் கொள்கிறதாம்! இது மே பதினேழு தோழர்களின் “சொந்தக் கற்பனை”! தமிழ்த்தேசியப் பேரியக்கம் எந்த அடக்குமுறைக்கும் ஆளாகவில்லை என தோழர் கொண்டல்சாமி, எதை வைத்து முடிவுக்கு வந்தார் என்றும் தெரியவில்லை!
ஐயா பெ. மணியரசன் தொடங்கி, பேரியக்கத்தின் முன்னணிச் செயல்பாட்டாளர்கள் பலரும் இன்றைக்கும் பல்வேறு வழக்குகளுக்காக தமிழ்நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களுக்கு அலைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதோ இந்த நேரத்திலும்கூட, ஐயா மணியரசன் அவர்களின் வீடு தேடி வந்து கதிராமங்கலம் போராட்ட வழக்குக்காக 20.02.2025 அன்று அவரை நீதிமன்றத்தில் நேர்நிற்கக் கூறி, காவல்துறையினர் அழைப்பாணை கொடுத்துவிட்டுச் செல்கிறார்கள். ஓசூரில், தமிழர்க்கு வேலை கோரி டாட்டா ஆலையை முற்றுகையிட்டப் போராட்ட வழக்கில், இப்போது 54 தோழர்களை கிருட்டிணகிரி மாவட்ட ஓசூர் நீதிமன்றத்தில் நேர் நிறுத்த வேண்டுமெனக் கூறு அச்சுறுத்தி வருகிறது தமிழ்நாடு காவல்துறை!
கடந்த 1994இல் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் - சென்னையில் நடைபெற்ற தமிழீழ விடுதலைப் போராளி திலீபன் நினைவேந்தல் கூட்டத்தில் பேசியதற்காக போடப்பட்ட வழக்கில், சற்றொப்ப 30 ஆண்டுகள் கழித்து, கடந்த நவம்பரில் (07.11.2024) தான் ஐயா மணியரசன் அவர்கள் விடுதலை செய்யப்பட்டார். தமிழீழ இனப்படுகொலையைக் கண்டித்துப் பேசியதற்காக 2008இல் போடப்பட்ட வழக்கு, அதற்கு மறுநாளே (08.11.2024) சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வந்தபோது, அதிலும் ஐயா மணியரசன் நேர்நின்றார்.
இவை மட்டுமா? 2015இல் ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட போது, அதனைக் கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிக்காக கூட ஐயா மணியரசன் அவர்கள் மீது வழக்குப் போட்டது காவல்துறை! 2017இல் “தமிழர் இறையாண்மை” என தம் நூலில் எழுதியதற்காக சென்னை நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை ஒரு வழக்குப் போட்டுள்ளது. 2019 நவம்பரில் வெளியான - பாபர் மசூதி இடிப்பு குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை விமர்சித்தார் எனக்கூறி, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66(A) (மின்னணு ஊடகம் மூலம் மக்கதை் தவறாக வழி நடத்துதல்), 72 (இரகசிய தன்மையையும், தனிநபர் உரிமையையும் மீறியது), பிரிவு 72(A) (சட்ட வழிப்பட்ட ஒப்பந்தத்தை மீறி தனிநபர் குறித்தத் தகவல்களை வெளியிடுவது) ஆகியவற்றின் கீழும், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 228 (நீதிபதிகளின் மீது வேண்டுமென்றே அவமதிப்பான கருத்துகளை வெளியிட்டு நீதி முறைமையில் குறுக்கிடுதல்), 504 (பொது அமைதியை சீர்குலைக்க பொய்யான தகவல்களைப் பரப்புவது), 505 (2) (பல்வேறு மத - இன சமூகங்களிடையேப் பகைமையை - வெறுப்பை அல்லது தவறானக் கருத்துகளை உருவாக்குவது), பிரிவு 12 (நீதிமன்ற அவமதிப்பு) ஆகிய பிரிவுகளின் கீழும் ஐயா மணியரசன் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. 66(A) பிரிவை உச்ச நீதிமன்றமே நீக்கி விட்ட நிலையிலும்கூட, அப்பிரிவின் கீழ் தமிழ்நாடு காவல்துறை வழக்குப் போட்டது.
இவையன்றி, காவிரி உரிமைக்காக – மேக்கேத்தாட்டு முற்றுகைப் போராட்ட வழக்கு, ஐ.பி.எல். போட்டிகளை எதிர்த்துப் போராடியதன் காரணமாக போடப்பட்ட வழக்குகள், டெல்டா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட காவிரி உரிமைக்கான தொடர்வண்டி மறியல், வரி அலுவலக முற்றுகை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களுக்காகப் போடப்பட்ட வழக்குகள், ஐயா மணியரசன் அவர்கள் மீதும், போராடிய தோழர்கள் மீதும் காவல்துறை பதிந்துள்ளது. பல வழக்குகளில் தோழர்கள் சிறையில் அடைக்கப் பட்டார்கள். 2009க்குப் பிறகான இச்செயல்பாடுகளில் ஒரு சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.
தமிழ் நகைத் தொழிலாளிகளின் வயிற்றலடிக்கும் மலையாள ஆலூக்காஸ் நிறுவனத்தை முற்றுகையிட்டதற்காக 2011 மார்ச்சு மாதம், 124 பேரியக்கத் தோழர்களைக் கைது செய்து திருச்சி நடுவண் சிறையில் அடைத்தது காவல்துறை! அதே ஆண்டு (2011) திசம்பரில் (07.12.2011), முல்லைப் பெரியாறு சிக்கலையொட்டி கேரளாவில் அப்பாவித் தமிழர்கள் மீது மலையாள இனவெறியர்கள் நடத்திய தாக்குதல்களுக்கு எதிர்வினையாக, தமிழ்நாட்டில் இயங்கி வரும் மலையாள தொழில் நிறுவனங்களை முற்றுகையிட்ட தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் மீது கொடும் வழக்குகளைப் போட்டு சிறையில் அடைத்தது அ.தி.மு.க. ஆட்சிக் காவல்துறை! சென்னையில் அப்போது ஆலூக்காசை முற்றுகையிட்டுக் கைதாகி புழல் நடுவண் சிறையில் இருந்த என் (அருணபாரதி) மீது, இன்னொரு வழக்கு இருந்தால்தான் குண்டர் சட்டம் போட முடியும் என்ற நிலையில், புதிதாக ஒரு பொய் வழக்கு சேர்க்கப்பட்டது. பொய்யான வழக்குகள் போட்டு தோழர்களை சிறையில் முடக்க தமிழ்நாடு அரசு முயற்சித்த நிலையில், அதனை எதிர்த்து முதலமைச்சருக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தந்தி கொடுத்து இந்த அநீதியைத் தடுத்து நிறுத்தும் இயக்கத்தை முன்னெடுத்தது த.தே.பே.!
மலையாள நிறுவனங்களுக்கு எதிரான த.தே.பே.வின் அதிரடிப் போராட்டங்களுக்குப் பிறகுதான், கேரளாவில் தமிழர்கள் மீதான தாக்குல்கள் நிறுத்தப்பட்டன. தமிழ்நாட்டிலுள்ள மலையாள நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு அளியுங்கள், நாங்கள் கேரளாவிற்கு வரும் தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறோம் எனக் கூறி, அன்றைய கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி தமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதாவுக்கு 18.12.2011 அன்று கடிதம் எழுதினார்.
இதேபோல், தமிழ்நாட்டிலுள்ள தங்கள் கன்னட மக்களும், நிறுவனங்களும் தாக்கப்படுவார்களோ என்ற அச்சத்தை 1991இல் கர்நாடகத்தில் காவிரிக் கலவரத்தின் போது கன்னடர்களிடம் நாம் ஏற்படுத்தி இருந்தால், கர்நாடகத்தில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் கன்னட வெறியர்களால் தாக்கப்பட்டு, தமிழ்நாட்டிற்கு ஏதிலியராக ஓடி வந்திருக்க மாட்டார்கள். தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை ஆகியிருக்க மாட்டார்கள். 1991இல் தமிழர் இன எழுச்சியை உரியவாறு ஏற்படுத்தாததால்தான், நமக்கு இந்த பேரிழப்பு என்ற படிப்பினையோடுதான், 2011இல் மலையாள நிறுவனங்களுக்கு எதிரானப் போராட்டத்தை முன்னெடுத்தது தமிழ்த்தேசியப் பேரியக்கம்!
த.தே.பே.வின் இந்தப் போராட்ட அதிர்வலைகளுக்குப் பிறகுதான், தமிழின உணர்வு பெற்ற இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்போடு, கேரளா எல்லை நோக்கி மாபெரும் மக்கள் பேரணியை நடத்தினர்.
இதுபோல், ஏராளமான போராட்டங்களை அடுத்தடுத்து பட்டியலிடவுள்ளோம். இவை ஒருபுறமிருக்க, இந்திய அரசின் ஒடுக்குமுறையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகத்தான் திராவிடத்தை நாம் எதிர்ப்பதுபோலப் பேசும் மே பதினேழு இயக்கம், அதே அரச ஒடுக்குமுறைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகத்தான் நீங்கள், திராவிடத்துக்கும், தி.மு.க.வுக்கும் துணை நிற்கிறீர்கள் என்று நாங்கள் குற்றம் சாட்டினால் ஏற்பீர்களா? அவ்வாறு நாங்கள் கொச்சைப்படுத்திக் கூறப் போவதும் இல்லை! அது சரியான அரசியல் பண்பாடும் அல்ல என்பவர்கள் நாங்கள்!
( தொடரும் )
==============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==============================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===============================


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT