வினா-விடை
பெ. மணியரசன்
“இந்தித் திணிப்பிற்கு எதிரான மொழிப்போர் தமிழ்நாட்டில் மீண்டும் வராமல் தடுக்கும் பொறுப்பு பாசக ஆட்சிக்கே இருக்கிறது. எனவே, இந்தியைத் திணிக்காதீர்கள். தமிழர்களைத் தூண்டிவிடாதீர்கள்” என்று திமுகவினரும் இதர திராவிடத்தாரும் எச்சரிக்கின்றனர். இது ஒரு முன்னேற்றம்தானே? ======================================================
உரிமைக் காப்பிற்காகவும் மீட்பிற்காகவும் இதுவரை தமிழ்நாட்டளவிலோ, ஏதோ ஒரு பகுதி அளவிலோ தீர்வுகாணும் வரை, மக்கள்திரள் போரை திமுக தனது வரலாற்றில் எப்பொழுதாவது நடத்தியதுண்டா? மு.க. ஸ்டாலின், உதயநிதி எல்லாம் “மீண்டும் மொழிப்போர் மூளும்” என்று முழங்குவது வெறும் புருடா என்று இந்திய ஆட்சியாளர்களுக்கும் தெரியும்; மேலிருந்து கீழ்வரை உள்ள தி.மு.க. அணியினருக்கும் தெரியும்.
தி.மு.க. 1949-இல் தொடங்கப்பட்டதிலிருந்து தமிழ்நாடு அளவில் பற்றிஎரியும் மக்கள்திரள் போராட்டம் ஏதாவது நடத்தியதுண்டா? விரல்விடச் சொல்லுங்கள்!
1965 மாணவர்கள் மொழிப்போராட்டத்தைக் காவல்துறையினரை ஏவி 400 பேர்க்கு மேல் சுட்டுக் கொன்றது காங்கிரசு ஆட்சி! அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் இராசேந்திரனை சுட்டுக் கொன்று, அதன்பிறகு அங்கங்கே மக்களைச் சுட்டுக் கொன்றது காங்கிரசு ஆட்சி! உடனே போராட்டத்தைக் கைவிடுங்ககள் என்று, போராட்டக் குழு மாணவர் தலைவர்களிடம் தி.மு.க. தலைவர் அண்ணா வலியுறுத்தினார். மாணவர் தலைவர்கள் மறுத்துப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். அதன்பிறகு அந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை திமுக ஆதரிக்கவில்லை என்று அறிவித்தார்.
தி.மு.க. வின் குருநாதர் ஈவெராவோ, இந்திப் போராட்டம் நடத்தும் காலிகளைச் சுட்டுத் தள்ளுங்கள். போலீஸ் கையில் துப்பாக்கி பூப்பறிக்கவா இருக்கிறது என்று கேட்டு அறிக்கை வெளியிட்டார். வன்முறையில் ஈடுபடும் மாணவர்களைக் கொல்ல பெட்ரோல், தீப்பெட்டி, கத்தி ஆகியவற்றை வைத்துக் கொள்ளுங்கள். நான் சொல்லும் தேதியிலிருந்து இந்தக் கருவிகளைப் பயன்படுத்துங்கள் என்றார் ஈ.வெ.ரா.
திராவிடத்தின் வரலாறு இது!
ஒன்றைக் கவனியுங்கள். கட்சி வேறுபாடின்றி தமிழர்கள் அனைவரும் இந்தியை எதிர்த்து, தமிழ்நாடு முழுவதும் போராட்டம் தொடங்கி நடத்த வேண்டும். நாம் நடத்தப் போகும் நான்காவது மொழிப் போர் இந்தியை நிரந்தரமாக விரட்ட வேண்டும்; தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க வேண்டும் என்று ஒரு வேண்டுகோளாவது மக்களை நோக்கி தி.மு.க. மற்றும் திராவிடத் தலைவர்கள் வைத்துள்ளார்களா? இல்லை!
ஆனால், தமிழ் உரிமை காப்பு – மீட்பு இலட்சியங்களில் உண்மையான அக்கறை கொண்டோர் அனைவரும் இணைந்து இந்தியை நிரந்தரமாக விரட்டி அப்பதற்கான தமிழ்நாடு தழுவிய - தொடர் மக்கள்திரள் போராட்டம் நடத்த முன்வர வெண்டும். அதற்கான ஊக்க மூட்டும் கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இதற்கான பங்களிப்புகள் வழங்க ஒத்த கருத்துள்ள தமிழ் அமைப்புகளையும் உணர்வாளர்களையும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் அழைக்கிறது.
..... ..... .....
இந்திய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மூன்று மொழி கற்பது கட்டாயம் தேவை. இந்தியைக் கற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் இவற்றுடன் தெலுங்கு-கன்னடம்-மலையாளம் உள்ளிட்ட ஏதாவதொரு மொழியை மூன்றாவது மொழியாகக் கற்க வேண்டும் என்கிறார். இது ஓரளவு சனநாயகத்தன்மை உள்ளதாகத் தெரிகிறதே? ஏற்றுக் கொண்டால் என்ன?
அப்படி ஏதாவதொரு மூன்றாவது மொழியைக் கற்க வேண்டிய தேவை என்ன? மூன்றாவது மொழியாக ஓர் அயல் மொழியைக் கற்க வேண்டிய கட்டாயம் வந்து, அதைப் படிக்க முன்வந்தால், தமிழர்கள் தங்கள் பிள்ளைகளை இயல்பாக இந்தியைத்தான் ஏற்றுப் படிக்க வைப்பார்கள்; தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஏற்க மாட்டார்கள் என்ற முழு நம்பிக்கையுடன் தர்மேந்திர பிரதான் ஏதாவதொரு தென்னிந்திய மொழியை – அதிலும் தி.மு.க. நேசிக்கும் திராவிட மொழிகளில் ஒன்றை, மூன்றாவது மொழியாகக் கற்றுக் கொள்ளலாம் என்று வஞ்சகவலை விரிக்கிறார். அறுக்கப்போகும் ஆட்டுக் கிடாய்க்கு தழையைத் தின்னக் கொடுத்து அழைத்துக் கொண்டு போவது போன்ற சூழ்சிசி இது!
மூன்று மொழிகளை ஏன் கட்டாயமாக்க வேண்டும்? தாய்மொழி, தமிழ் - தொடர்பிற்கு ஆங்கிலம்! ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டதால் அப்போதிருந்து இந்தியா முழுவதும் கல்விச் சாலைகளில் ஆங்கிலத்தை மொழிப்பாடமாக - பயிற்று மொழியாகப் படித்துப் பழகி உள்ளார்கள்!
எல்லாவற்றுக்கும் மேலாக இன்னொன்றைத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவை ஆள்பவர்கள், ஆரிய பிராமண - ஆரிய வைசிய - இந்தி இன ஏகாதிபத்தியவாதிகள்!. எனவே ஆளுவோர் தங்கள் மொழிகளான சமற்கிருதம், இந்தி இரண்டையும் இந்தி பேசாத மாநிலங்களில் திணிக்கிறார்கள்! தமிழ் இன இறையாண்மை மீட்பு – அதன் வழியில் தன்னாட்சி முதலிய அரசியல் உரிமைகள் கிடைக்கும்வரை - ஆரிய - பிராமண, ஆரிய-வைசிய, இந்திஇன ஏபாதிபத்தியக் கட்சிகளான பா.ச.க. வும் , காங்கிரசும்- இதைப்போன்ற இந்திக் கட்சிகளும் தமிழ்நாட்டில் சமற்கிருதம், இந்தி இரண்டையும் திணித்துக் கொண்டே இருப்பார்கள். இந்த ஏகாதிபத்திய ஆற்றல்கள் நம்மிடம் அனைத்து வகையான வரிகளையும் வசூலித்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால், ஒரு ரூபாய் வசூலித்துக்கொண்டு, அதில் 29 காசை மட்டும் திருப்பித்தரும் புதுதில்லி ஏகாதிபத்தியவாதிகள், தமிழ்நாட்டுக்கு “மானியம்” தரும் வள்ளல்களாகத் தங்களை வர்ணித்துக் கொள்வார்கள். இந்த அநீதியை எதிர்த்துப் போராடவோ, மாற்றியமைக்கவோ தில்லிக்குக் கங்காணி வேலை பார்த்து பணம் – பதவி பார்க்கும் கட்சிகள் முன்வருவதில்லை.
எனவே, அயல்மொழி ஆதிக்கத்திலிருந்து தமிழ்மொழியைக் காக்க வேண்டுமானால், அயலாரிடமிருந்து தமிழ் இனத்தைக் காக்க வேண்டும். தமிழர் தாயகமாகத் தமிழ்நாட்டைக் காக்க வேண்டும். தமிழ்மொழி அழிவுக்கும் தமிழ்நாட்டில் இந்தி மொழி வளர்ச்சிக்கும் இடம் கொடுத்தால், இப்போதுள்ள தமிழ்நாடும் தமிழர் தாயகமாக மிஞ்சாது. அதன்பிறகு தமிழ் இனம், ஆரிய – பிராமண, ஆரிய - வைசிய இந்தி இன ஆதிக்கத்தில் சிக்கி, தேய்ந்து, அடிமைக் கூட்டமாய்ச் சீரழியும்.
இத் தீங்குகள் நேராமல் தடுக்க, கட்சி வேறுபாடின்றி, இனம், மொழி, தாயக உரிமைக் காப்பில்- தமிழ்த்தேசியக் காப்பில் களமிறங்கி, இந்தித் திணிப்பை முறியடிக்க மக்கள்திரள் எழுச்சிப் போராட்டங்களை நாம் நடத்த வேண்டும்.
ஒவ்வொரு தமிழரும் – ஆணும் பெண்ணும், இன, மொழி, தாயகக் காப்புப் போராட்டங்களுக்கு அணியமாவோம்; இந்தித் திணிப்பை முறியடிப்போம்!
......... .... ..............
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================
Post a Comment