மயிலாடுதுறை முட்டம் கிராமத்தில்
கள்ளச் சாராயம் மற்றும் மது விற்பனை
தட்டிக்கேட்ட இளைஞர்கள் இரண்டு பேர் படுகொலை!
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே உள்ள முட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ் (25) மற்றும் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த ஹரிசக்தி (20) தனியார் கல்லூரியில் இளங்கலை தகவல் தொழில்நுட்பம் (பி.டெக்) படித்து வருகிறார். இவர்கள் அங்கு நடைபெறும் சாராய விற்பனையை தட்டிக் கேட்டதால் கடந்த 14.02.2025 அன்று இரவு இருவரும் படுகொலை செய்யப்பட்டனர். இச் செய்தி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
முட்டம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவேந்தன், தங்கத்துரை, ராஜ்குமார், முனிசாமி, மஞ்சள், கார்த்திகா மற்றும் சஞ்சய் என அனைவரும் கடந்த சில ஆண்டுகளாக பாண்டிச்சேரி - காரைக்காலில் இருந்து சாராய மதுப்பாட்டில்கள் கடத்திவந்து வீட்டில் மறைத்து வைத்து விற்பனை செய்து வந்தனர். இது தொடர்பாக கிராமத்தினர் பல முறை பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதனால் ஊருக்குள் எப்போதும் சண்டையும் பிரச்சினையாகவுமே இருந்துள்ளது.
ஊரில் யார் தட்டிக் கேட்டாலும் உடனே மூன்று பேரும் சேர்ந்து, கேட்டவர் வீட்டிற்கே சென்று பெண்களிடம் சண்டையிட்டு பிரச்சினை செய்வார்கள். இதுபோல் பலமுறை நடந்துள்ளது. காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் யார் புகார் கொடுத்தவர் என்ற தகவலை காவல் துறையினர் சாராய வியாபாரிகளிடம் தெரிவித்து விடுவர். புகார் கொடுத்தவர் வீட்டிற்கே வந்து சாராயம் விற்பவர்கள் பிரச்சினை செய்வார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து சாராய விற்பனை செய்பவரின் பக்கத்து வீட்டு பெண் சாராய விற்பனையைத் தட்டிக் கேட்டார். உடனே அந்தப் பெண்ணை கடுமையாக தாக்கி உள்ளனர். பல மாதங்கள் அந்தப் பெண் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது கூட, காவல்துறை முறையான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. சில நேரங்களில் கண்துடைப்பிற்காக மது விற்பவர்கள் மீது சிறையிலிருந்து எளிதாக வெளியேவரும் வகையில் வழக்கை பதிவு செய்து கைது செய்வர்.
இதேபோல், கொலை நடப்பதற்கு சில நாள்களுக்கு முன்பு ராஜ்குமாரை கைது செய்து 75 மதுப்பாட்டிலையும் பறிமுதல் செய்தது காவல்துறை. அடுத்த நாளே மூவேந்தன் சாராயம் விற்று இருக்கிறார். அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் இதைத் தட்டிக் கேட்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.
இதை காவல் துறையினர் மூவேந்தனிடம் சொல்லி விட்டனர். இந்த நிலையில் 14.02.2025 அன்று ராஜ்குமார் சிறையில் இருந்து பிணையில் வெளியே வர மூவரும் சேர்ந்து தினேஷை தீர்த்துக்கட்டும் திட்டத்துடன் ஊருக்குள் வந்துள்ளனர். அப்போது தெருவில் பேசிக்கொண்டு நின்ற தினேஷ், ஹரிஷ், ஹரிசக்தி, அஜய் ஆகியோரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் தினேஷ் மற்றும் அஜய் லேசான காயத்துடன் அலறியடித்துக் கொண்டு தப்பி ஓடினர். ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி நிகழ்விடத்திலேயே இறந்து விட்டனர்.
குடும்ப முன் விரோதமாகத்தான் இந்தப் படுகொலை நடந்தாக காவல்துறை சொல்வது முற்றிலும் பொய். சாராய விற்பனையைத் தட்டிக் கேட்டதால் தான் இந்தப் படுகொலை நடந்துள்ளது என்பது வெளிப்படை. இதில் அப்பாவிகள் பலியானது தான் பெருஞ் சோகம். சாராய விற்பனையைத் தடுத்து முறையாக நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த இரட்டைப் படுகொலை நடந்திருக்காது. இதற்கு காவல்துறையே முழு பொறுப்பு.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து கிராமங்கள், நகரங்களில் தலைவிரித்தாடும் கஞ்சா, மது மற்றும் போதைப் பொருள் விற்பனை 24 மணிநேரம் தங்கு தடையின்றி காவல்துறை உதவியுடன் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் மாணவர்கள் தொடங்கி பெண்கள் - முதியவர்கள் வரை போதை பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர். இதனால் குற்றங்களும் கொலைகளும் ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் தொடர்ந்து நடந்து வருகிறது.
- தற்போது மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய மற்றவர்களையும் விரைந்து கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
- படுகொலை செய்யப்பட்ட இளைஞர்கள் இருவர் குடும்பத்திற்கும் ரூ. 10 இலட்சம் வழங்க வேண்டும். வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
- தமிழ்நாடு அரசு மது உற்பத்தி ஆலைகள், டாஸ்மாக் மதுக் கடைகளை இழுத்து மூட வேண்டும். முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்!
- தமிழ்நாடு முழுவதும் சட்டம் விரோதமாக நடைபெறும் கஞ்சா, மது மற்றும் போதைப் பொருள்கள் விற்பனையை கடுமையான ஒடுக்க வேண்டும்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமை செயற்குழுப் உறுப்பினர் க. விடுதலைச்சுடர், பொதுக்குழுக் உறுப்பினர் க. தீந்தமிழன் தமிழ்த்தேசியர் - சமூக ஆர்வலர் மயிலாடுதுறை பேராசிரியர் இரா. முரளி ஆகியோர் முட்டம் கிராமத்திற்கு நேரில் சென்று படுகொலையான குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்.
க.தீந்தமிழன்
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================
Post a Comment