தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன்
கம்பத்திலிருந்து முதல்வருக்குக் கோரிக்கை:
கேரள அரசும் கேரளத்தின் அனைத்துக் கட்சிகளும் மலையாளிகளிடம் இனவெறியைத் தூண்டிவிட்டு அங்கு வசிக்கும் தமிழர்களையும் அங்கு செல்லும் தமிழகத் தமிழர்களையும் மலையாளிகள் கடுமையாகத் தாக்கினார்கள். கூலி வேலைக்குச் சென்ற பெண்களை சிறைப்பிடித்து மானபங்கப்படுத்தினார்கள். தமிழகத்திலிருந்து சென்ற ஐயப்ப பக்தர்களைத் தாக்கினார்கள்.
முல்லைப்பெரியாறு அணையை உடைக்க காங்கிரசு, பா.ஜ.க. கட்சியினர், அணைக்குள் சென்று தமிழகப் பொதுப்பணித்துறையை அலுவலகங்களைத் தாக்கினார்கள். மலையாளிகளின் இந்த இனவெறி அட்டுழியங்களை மேலும் தூண்டி விடும் வகையில் சி.பி.எம். தலைவர் அச்சுதானந்தம் உண்ணாப்போராட்டம் இருந்தார்.
இவற்றின் எதிர் விளைவாக தமிழ்நாட்டில் தமிழர்கள் தற்காப்புப் போராட்டம் நடத்த வேண்டி வந்தது. இன்று(12. 12. 2011) நான் இயக்கத்தோழர்களுடன் கம்பம் பகுதிக்குச் சென்றேன். இப்போது அங்கு போராடும் மக்களோடு இருந்து இந்த அறிக்கையைக் கொடுக்கிறேன். 30 ஆயிரத்திற்கு மேறபட்ட மக்கள் கம்பம் மெட்டு வழியாக கேரளா எல்லை நோக்கிப் போனார்கள். அவர்களை காவல் துறையினர் கடுமையாக தடியடி நடத்தி படுகாயப்படுத்தி விரட்டியடித்தார்கள். பெண்கள் சிறுவர்கள் உட்பட படுகாயம் பட்டுள்ளார்கள் இதனால் ஆத்திரமடைந்த மக்கள், கம்பம் நகரத்தில் சாலை மறியல் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
சின்னமனூர், உத்தமப்பாளையம் ஆகிய இடங்களிலும் மக்கள் சாலை மறியல் செய்கிறார்கள். அவர்களை இரும்பு தொப்பி அணிந்த காவலர்கள் அவர்களை களைப்பதும் மீண்டும் அவர்கள் போராடுவதும் நடந்து கொண்டிருக்கிறது. காவல் துறைக்கும் மக்களுக்குமான மோதல் வ்ருவதற்கான சூழல் நிலவுகிறது.
மக்களுக்கும் காவல் துறைக்கும் மோதல் வராமல் தடுக்க முதல்வர் செயலலிதா தலையிட்டு ஓர் அறிவிப்பை வெளியிட வேண்டும். கேரளாவிற்கு தமிழ்நாட்டிலிருந்து எந்த பொருளையும் அனுப்பக்கூடாது என்பதுதான் போராட்டக்காரர் களின் கோரிக்கை. தமிழக முதல்வர் முன் வந்து தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்குச் செல்லும் 13 பாதைகளையும் ஒரு வாரத்திற்கு அடைத்துள்ளோம் என்ற அறிவிப்பை அரசு சார்பில் கொடுக்க வேண்டும் அந்த ஒருவாரகால அவகாசகத்துக்குள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முயலவேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
Post a Comment