மக்கள் மீது காவல்துறை தாக்குதலை நிறுத்து
கேரளத்திற்கு பொருள் போக்குவரத்தைத் தடை செய்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வலியுறுத்தல்
முல்லைப் பெரியாறு அணை உரிமை காக்க 21.12.2011 அன்று கூடலூர் பகுதியில் கட்சி சார்பற்றுப் பேரணியாகச் சென்ற உழவர்களையும், பொதுமக்களையும் தமிழகக் காவல்துறை கண்மூடித்தனமாக தடியடி நடத்தி காயப்படுத்தியுள்ளது. கண்ணீர் புகை வீசியுள்ளது. காவல்துறையின் இத்தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். ஐ.ஜி இராஜேஷ் தாஸ் ஆணைப்படி தமிழகக் காவல்துறை தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது அப்பகுதியில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் உச்சமாக டிசம்பர் 21 அன்று மக்கள் மீது கொடுந்தாக்குதல் நடந்துள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கதக்கது
மலையாள இனவெறியோடு நடந்து கொள்ளும் கேரள அரசின் தமிழின பகைக்கு எதிராக தேனி மாவட்டத்து தமிழ் மக்கள் கொந்தளித்து போய் கடந்து இரண்டு வாரங்களாக தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மக்களிடையே பதட்டம் நீடித்து வருகிறது. இச்சூழலை பொறுப்போடு கையாள வேண்டிய காவல்துறை அதிகாரிகள் இதையே காரணமாக வைத்து அப்பாவி தமிழ் மக்கள் மீது போர் தொடுப்பது போல் கொடுந்தாக்குதல் நடத்துவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.கேரளத்தின் அடாவடிக்கு ஊக்கம் கொடுப்பதாக அமைகிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை துச்சமாக மதித்து கேரள அரசு திட்டமிட்ட முறையில் அணையின் வலுகுறித்து பீதியைக் கிளப்பி மலையாள இனவெறியை தீவிரப்படுத்தியது. தமிழினத்திற்கு எதிரான பகையுணர்ச்சியை கிளப்பியது. கேரளத்தில் உள்ள தமிழர்களும் அவர்களது நிறுவனங்களும் மலையாள வெறியர்களால் தொடர்ந்து தாக்கப்பட்டன. கேரளத்திற்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்ட தமிழர்கள் தாக்கப்பட்டனர்; இழிவுப்படுத்தப்பட்டனர். தமிழகத்தில் இருந்து பணியாற்றச் சென்ற உழைக்கும் தமிழ்ப் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர். இந்த அட்டூழியங்கள் அனைத்திலும் மலையாள இனவெறியர்களோடு கேரளக் காவல் துறையும் சேர்ந்து கொண்டது. கேரளத்திலிருந்து தமிழர்கள் பலர் குடும்பம் குடும்பமாக உள்நாட்டு அகதிகளாக தமிழ்நாட்டுக்கு புலம் பெயர்ந்தார்கள்.
கேரள அரசும் அனைத்து கட்சியினரும் முல்லைப் பெரியாறு அணையை எப்படியும் இடித்துவிடுவது என்பதில் முனைப்பாக உள்ளனர்.அதற்கு இசைய அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என சூழ்ச்சி திட்டம் வகுத்து செயல்படுகிறார்கள். அவ்வாறு 120 அடியாக நீர்மட்டம் குறைக்கப்படுமானால் கிட்டத்தட்ட முல்லைப் பெரியாறு அணை இல்லாதது போன்ற நிலைதான் ஏற்படும். அணையை ஒட்டியுள்ள தேனி மாவட்டப் பகுதிகளில் கூட ஒருபோக சாகுபடிக்கே திண்டாட்டமாகிவிடும், கொடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படும்.
அரசமைப்பு சட்டபடி உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துமாறு கேரள அரசை வலியுறுத்தும் கடமை இந்திய அரசுக்கு இருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புபடி முல்லைபெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க ஒத்துழைக்க வேண்டும் என அரசமைப்பு விதி 355ன் கீழ் இந்திய அரசு கேரளாவிற்கு தாக்கீது அனுப்பிருக்க வேண்டும். அவ்வாறான தனது சட்டக் கடமையை செய்யாதது மட்டுமின்றி கேரளாவின் சட்டமீறல் அனைத்திற்கும் இந்திய அரசு துணை போகிறது.
இந்தியப் பிரதமரின் நேரடி பொறுப்பில் உள்ள தேசிய பேரிடர் மேலான்மை ஆணையம் தற்போது ஒரு வல்லுநர் குழுவை நியமித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை மற்றும் அதன் கீழே உள்ள இடங்களில் நிலநடுக்கத்தாலோ, வெள்ள பெருக்காலோ அல்லது இவை இரண்டாலோ ஆபத்து நேர வாய்ப்புண்டா எனக் கண்டறிந்து அதற்கான பாதுகாப்பு செயல் திட்டத்தை உருவாக்குவதுதான் இவ்வல்லுநர் குழுவின் பணி என்று இந்திய அரசின் அறிவிக்கை தெரிவிக்கிறது. இவ்வல்லுநர் குழுவில் ரூர்க்கி ஐ.ஐ.டியின் நிலநடுக்க பொறியியல் துறை பேராசிரியர் டி.கே.பால் என்பவரும் இடம் பெற்றுள்ளார். இவர் முல்லைப் பெரியாறு பிரச்சினைத் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசின் சார்பில் சாட்சியம் கூற அவ்வரசால் முன்மொழியப்பட்டு நிதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டவர். இப்போது இந்திய அரசு நியமித்துள்ள வல்லுநர் குழுவில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அரசின் இந்நடவடிக்கை அதன் தமிழினப் பகை உள்நோக்கத்தை கேரளாவிற்குச் சாதகமான அதன் ஒருதலைச் சார்பை மேலும் தெளிவாக்குகிறது. உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு சிக்கல் தொடர்பாக ஐவர் குழுவை நியமித்து விசாரித்து வரும் நிலையில் அதற்கு புறம்பாக இன்னொரு வல்லுநர் குழுவை இந்திய அரசு நியமித்தது அப்பட்டமான சட்டமீறலாகும்.
கேரள அரசின் அடாவடியைக் கண்டித்தும் இந்திய அரசின் ஒருதலைச் சார்பை எதிர்த்தும் அவ்வப்போது கண்டனக்கடிதங்களை தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வெளியிட்டு வருகிறார். தற்போது தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சார்ப்பில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டதிற்கும் இந்தியப் பிரதமருக்கு கண்டனக் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் இதற்கு மேல் கேராளாவின் அடாவடியை முறியடிப்பதற்கும் இந்திய அரசின் கேரளச் சார்ப்பை எதிர்ப்பதற்கும் உருப்படியான பதில் நடவடிக்கை எதையும் ஜெயலலிதா செய்யவில்லை. மலையாள வெறியர்களால் தமிழர்கள் தாக்கப்படுவதை எதிர்த்தும் தமிழக அரசு உருப்படியான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் தங்கள் வாழ்வாதாரத்தையும் மானத்தையும் காத்துக்கொள்ள தமிழ்மக்கள் தற்காப்புப் போராட்டத்தில் வேறு வழியின்றி இறங்கியுள்ளனர். அரசுகள் தங்கள் உரிமையை பாதுகாத்து தரா என்ற நிலையில் மக்களுக்கு வேறு எந்த வழியும் இல்லை.கேரளத்திற்கு எதிராக பொருளியல் தடை விதிக்கக் கோரி இலட்சக்கணக்கில் கட்சி சார்பற்று வீதியில் திரளும் தமிழர்களின் கோரிக்கைகளை செவிமடுப்பதற்கு மாறாக அவர்களைத் தமிழக காவல்துறை மூலமாக தடிகொண்டு தாக்குவது கொடுமையிலும் கொடுமையாகும்.
கூடலூரில் தமிழர்களுக்கு எதிராக தமிழகக் காவல்துறையினர் நடத்திய காட்டுமிராண்டி தாக்குதலை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்ப்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். இத்தாக்குதலுக்கு உத்தரவிட்ட இராஜேஷ் தாஸ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மக்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்தவேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
கேரளத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கருத்தில் கொண்டும், கேரள எல்லையில் உள்ள தமிழக மாவட்டங்களில் நிலவும் கொந்தளிப்பைக் கணக்கில் கொண்டும், முல்லைப் பெரியாறு அணை உரிமைப் பாதுகாப்பைக் கருதியும் குறைந்தது ஒரு மாதத்திற்கு கேரளத்திற்குச் செல்லும் தமிழகப் பாதைகள் அனைத்தையும் மூடி, பொருள் போக்குவரத்தைத் தடை செய்து தமிழக அரசு ஆணையிட வேண்டும் எனக் கோருகிறேன். இதனால் தமிழ்நாட்டு உழவர்களும் உற்பத்தியாளர்களும், வணிகர்களும் பாதிக்கப்படாத வகையில் அவர்களது அரிசி, காய்கறி, பழங்கள், முட்டை, இறைச்சி உள்ளிட்ட உற்பத்திப் பொருள்களுக்கு இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தித்தர தமிழக அரசு பொறுப்பேற்று போர்கால நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
கி.வெங்கட்ராமன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
Post a Comment