உடனடிச்செய்திகள்

Wednesday, December 14, 2011

மேலும்..கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு
த.தே.பொ.க. நடத்திய எழுச்சி மிகு சிறப்பு மாநாடு

தமிழர் உயிருக்கு உலை வைக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு என்ற முழக்கத்தை முன்வைத்து மதுரையில் 11.12.2011 ஞாயிறு மாலை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்திய சிறப்பு மாநாடு அனைவரும் பாராட்டும் எழுச்சி மிகு நிகழ்ச்சியாக அமைந்தது.

தஞ்சை காவிரித் தப்பாட்டக் குழுவின் கலைநயமிக்க தப்பாட்டத்தோடு மதுரை கே.கே நகர் சோகோ அறக்கட்டளையின் நீதிபதி வீ.ஆர்.கிருஷ்ணய்யர் மண்டபத்தில் மாநாடு தொடங்கியது. தொடக்கம் முதலே அரங்கம் நிறைந்து வெளியிலும் திரளானோர் அமர்ந்து கேட்ட நிகழ்வாக சிறப்புற்றது. இதற்கு வசதியாக வெளியில் தொலைக்காட்சியின் வழியாக அரங்க நிகழ்வுகள் காட்டப்பட்டன.

மாநாட்டிற்கு த.தே.பொ.க தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன் தலைமை தாங்கினார். கட்சியின் மதுரைச் செயலாளர் தோழர் ரெ.இராசு வரவேற்புரை ஆற்றினார்.
மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றிய அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு.ப.உதயகுமார் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம் கடந்த 25 ஆண்டு காலமாக எவ்வாறு வளர்ந்தது என்பதை நிரல்பட விளக்கினார். பன்னாட்டு முதலாளிகளுக்கும் வல்லரசுகளின் நலன்களுக்கும் மட்டுமே இந்திய அரசு சேவை செய்கிறது எனக் குற்றம் சாட்டினார்.
தாமிரபரணி மக்கள் பன்பாட்டு இயக்கம் சார்பில் வழக்குரைஞர் மா.பிரிட்டோ அடுத்து உரையாற்றினார் “வால் ஸ்டிரீட் போராட்டத்திற்கு நிகரான போராட்டமாக இடிந்தகரை மக்கள் போராட்டம் விளங்குகிறது.” என மதிப்பிட்டார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு மருத்துவர் இரா.இரமேஷ் அடுக்கடுக்கான அறிவியல் ஆதாரங்களை முன்வைத்து கூடங்குளம் நில அமைப்பு அணு உலைக்கு ஏற்றதல்ல; விபத்துகள் நேர வாய்ப்புகள் அதிகம் என விளக்கினார்.
அவருக்கே உரிய நகைச்சுவை நடையில் தர்க்கங்களை அடுக்கி உரையாற்றிய முனைவர்.த.செயராமன் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியே என நிறுவினார்.
மகளிர் ஆய ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா இடிந்தகரை போராட்டத்தில் உழைக்கும் பெண்கள் வகிக்கும் முன்னணிப் பாத்திரத்தை எடுத்துரைத்தார்.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் முல்லைப் பெரியாறு அணை உரிமைப் போராட்டம், மூன்று தமிழர் உயிர்காப்பு இயக்கம், மீனவர் பாதுகாப்பு போராட்டம் ஆகிய அனைத்தும் தமிழ்த் தேசியம் என்ற மைய கருத்தியல் தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டால் தான் உறுதியான வெற்றி கிடைக்கும் என விளக்கவுரை ஆற்றினார் த.தே.போ.க பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன்.


கூடங்குளம் அணு உலையை இழுத்து மூட வேண்டும் என்ற தீர்மானத்தை தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்துவும், நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழக அரசு கேட்டுப் பெற வேண்டும் என்ற தீர்மானத்தை த.இ.மு பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறையும், முல்லைப் பெரியாறு அணை உரிமை மறுக்கும் கேரளத்திற்கு பொருளாதாரத் தடை விதிப்போம் என்ற தீர்மானத்தை கட்சியின் த.செ.கு.உறுப்பினர் பா.தமிழரசனும், முல்லைப் பெரியாறு உரிமைக்குப் போராடிய தமிழின உணர்வாளர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானத்தை மகளிர் ஆய மையக் குழு உறுப்பின தோழர் இளமதியும், தேவாரத்தில் நியூட்ரினோ நிறுவனத்தை இந்திய அரசு தொடங்கக்கூடாது எனக்கோரும் தீர்மானத்தை பொதுக் குழு உறுப்பினர் தோழர் மு.தமிழ்மணியும் முன்மொழிய வலுத்த கையொலியோடு மாநாடு தீர்மானங்களை நிறைவேற்றியது.
மாநாடு நிறைவுரையாற்றிய த.தே.பொ.க தலைவர் தோழர் பெ.மணியரசன் “கூடங்குளம் அணு உலையை வலுக்கட்டாயமாக இந்திய அரசு திறக்க முனைந்தால் இரத்தக் களரி ஏற்படும். அணு உலையை திறக்க நினைத்தால் தமிழகத்தின் அனைத்து நகரங்களும் போராட்ட களங்களாக மாற்றப்பட வேண்டும். அங்கங்கு இயங்கும் இந்திய அரசு நிறுவனங்கள் முடக்கப்பட வேண்டும்.” என போர் முழக்கம் செய்தார்.
நிறைவில் சித்திரை தானி ஓட்டுநர் சங்க செயலாளர் தோழர்.பா.இராசேந்திரன் நன்றி நவின்றார்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான ஆவேச முழக்கங்களோடு இரவு 11 மணி அளவில் மாநாடு நிறைவடைந்தது



தீர்மானங்கள்
தீர்மானம் 1
கூடங்குளம் அணுமின் நிலையத்தை இழுத்து மூடுக
இரஷ்ய நாட்டுக் கூட்டு முயற்சியில் கூடங்குளத்தில் நிறுவப்படும் அணுமின் நிலையம் எல்லா வகையிலும் ஆபத்தானது. தமிழ் மக்கள் உயிருக்கு உலை வைக்கக் கூடியது. எனவே இந்திய அரசு கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக மூட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

அணு உலைகள் இயங்கும்போது இயல்பாக வெளிப்படும் கதிரியக்கத் தனிமங்கள் காற்றிலும் நீரிலும் தாவரங்களிலும் கலந்து தலைமுறை தலைமுறையாகக் கொடிய நோய்களை ஏற்படுத்தக் கூடியது. இரத்தப் புற்றுநோய், கருச்சிதைவு, பிறவி ஊனங்கள் உள்ளிட்ட கொடிய விளைவுகள் அணு உலை கதிரியக்கத்தால் விளையும் என்பதை மருத்துவ ஆய்வுகளும் செர்னோபில், ஹிரோசிமா, புகுசிமா அனுபவங்களும் எடுத்துக் காட்டுகின்றன.
கூடங்குளத்தில் நிறுவப்படும் வி.வி.இ.ஆர்.1000 என்ற வகை அணு உலையானது அது இயங்கத் தொடங்கி இரண்டு ஆண்டுகளிலேயே சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்றும் அவ்வுலைகளில் 32 வகையான குறைபாடுகள் உள்ளன என்றும் இரஷ்ய அரசு நியமித்த ஆய்வுக் குழுவே 2011 சூன் மாதத்தில் அறிக்கை அளித்துள்ளது.
கூடங்குளம் அணு உலை நிறுவப்பட்டுள்ள இடம் பல அகவை உள்ள பாறைப் படிவங்களின் சந்திப்பு இடம் என்றும், அப்பகுதியின் கீழ் எரிமலைப் பாறைகள் உள்ளன என்றும் நிலவியல் ஆய்வுகள் கூறுகின்றன. அடிக்கடி நெல்லை மாவட்டத்தில் குறிப்பாகக் கூடங்குளம் பகுதியில் தொடர்ந்து ஏற்படும் நில அதிர்வுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. நில அதிர்வு ஏற்பட்டு அணு உலையில் சிறு கீறல் விழுந்தாலும் அதன் வழியாக வெளிப்படும் கதிரியக்கம் பேரழிவை உண்டாக்கும்.
பெருமளவில் கடல்நீர் வேகமாக உறிஞ்சப்படுவதாலும் மிகை வெப்பநீர் கடலுக்குள் மீண்டும் விடப்படுவதாலும் பெருமளவு கடல் உயிரிகள் வளம் குறிப்பாக மீன் வளம் பெருமளவு பாதிக்கப்படும் பல இலட்சம் மீனவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி விடும்
புனல் மின்சாரம், அனல் மின்சாரம், கதிரவன் மின்சாரம் போன்றவற்றை விட அணு மின்சாரம் கூடுதல் செலவு பிடிக்கக் கூடியது.
எனவே எப்படிப் பார்த்தாலும் கூடங்குளம் அணு உலையை ஏற்கவே முடியாது.
கூடங்குளம் அணு உலையை அத்திட்டத்தின் தொடக்கக் காலத்திலிருந்தே தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி எதிர்த்துப் போராடுகிறது.
இன்று இடிந்த கரையில் மையம் கொண்டு மீனவர்களும் உழைப்பாளர்களும் பல்லாயிரக்கணக்கில் ஒன்று கூடி நடத்திவரும் தொடர் போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்திய அரசின் நயவஞ்சக முயற்சிகள் அனைத்தையும் முறியடித்து மக்கள் நடத்தும் இத்தொடர் போராட்டத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி உறுதியாக ஆதரிக்கிறது. போராடும் மக்களை வாழ்த்துகிறது.
இந்திய அரசு கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடும் வரை உயிர் ஈகம் செய்தாவது உறுதியாகப் போராடி அந்த அணு உலையை மூடச் செய்வோம் என இம்மாநாடு உறுதியேற்கிறது.
தீர்மானம் 2
தமிழக அரசே நெய்வேலி மின்சாரம் முழுவதையும்
தமிழகத்திற்கே கேட்டுப் பெறு

நெய்வேலி மின்சார நிலையத்திலிருந்து உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கு வழங்கப்படுவதில்லை. தமிழ் மண்ணின் நிலக்கரியைப் பயன்படுத்தி நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் கர்நாடகாவுக்கு நாள்தோறும் 11 கோடி யூனிட் அனுப்பப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையை இடிக்கத் துடிக்கும் கேரளாவிற்கு இங்கிருந்து நாள்தோறும் 9 கோடி யூனிட் மின்சாரம் செல்கிறது. ஆந்திராவுக்கு 6 கோடி யூனிட் மின்சாரம் போகிறது.
இம்மின்சாரம் தமிழகத்திற்கே திருப்பப்பட்டால் தமிழ்நாட்டில் மின்சாரப் பற்றாக்குறையே வராது. தமிழகத்தின் மின் பற்றாக்குறை ஒரு நாளைக்கு 22 கோடி யூனிட்தான். ஆனால் அண்டை மாநிலங்களுக்கு அன்றாடம் அனுப்பப்படுவதோ 26 கோடி யூனிட் மின்சாரம்.
தமிழ் மண்ணின் மின்சாரத்தைப் பறித்து அண்டை மாநிலங்களுக்குக் கொடுத்துவிட்டு இந்திய அரசு தமிழ்நாட்டில் செயற்கையாக மின் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. அறிவிக்கப்பட்ட மின்வெட்டு 2 மணி நேரம் என்றாலும் நாள்தோறும் 5 மணி நேரம் வரை மின்சாரம் வெட்டப்படுகிறது. தமிழகத்தில் சிறு தொழில்கள், வேளாண்மை ஆகியவை முடக்கப்படுகின்றன.
மறுபுறம் இம்மின்பற்றாக்குறையையே காரணமாகக் காட்டி கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் தமிழகத்தில் திணிக்கிறது இந்திய அரசு.
இந்திய அரசின் இச்சதித் திட்டத்தை விழிப்புடன் இருந்து தமிழக அரசு எதிர்க்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது. தமிழகத்திற்கு உரிமையான நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கு வழங்குமாறு இந்திய அரசைத் தமிழக அரசு வற்புறுத்த வேண்டும். அம்மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே பெற வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு கோருகிறது.
தீர்மானம் 3
முல்லைப் பெரியாறு அணை உரிமையை மீட்கும் வரை
கேரளத்திற்கு எதிரான பொருளாதாரத் தடை விதிப்போம்

முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளது என்றும் முதல் கட்டமாக அதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்றும் சிற்றணையில் செய்ய வெண்டிய சிறு சிறு செப்பனிடும் பணிகளைச் செய்து முடித்தபின் முழு கொள்ளளவான 152 அடி வரை தமிழகம் தண்ணீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் 2006 பிப்27 அன்று தீர்ப்பளித்தது.
மண்ணியல் வல்லுநர்கள் நீரியல் வல்லுநர்கள் ஆகியோரைக் கொண்ட குழுக்கள் அமைத்து கள ஆய்வு செய்ய வைத்து அவற்றின் பரிந்துரை அடிப்படையிலேயே உச்சநீதி மன்றம் இத்தீர்ப்பை வழங்கியது. கேரள அரசு இத்தீர்ப்பு தன்னைக் கட்டுப்படுத்தாது என்று கூறி புதிய சட்டத்திருத்தம் கொண்டு வந்து மேற்படி தீர்ப்பை செயல்படுத்தவிடாமல் தமிழகத்தைத் தடுத்து வருகிறது. இதை எதிர்த்துத் தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் 27.03.2006 அன்று வழக்குத் தொடுத்தது.
உச்சநீதிமன்றம் நீதிபதி ஆனந்த் தலைமையில் வல்லுனர் குழு அமைத்து கள ஆய்வு செய்ய ஆணையிட்டது. அக்குழு தனது பரிந்துரையை 2012 சனவரியில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தையோ இந்திய அரசமைப்புச் சட்டத்தையோ சட்டை செய்யாமல் கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையை உடைக்க மலையாள மக்களுக்கு இனவெறியூட்டி தமிழர்களுக்கு எதிரான போராட்டத்தை நடத்தி வருகிறது. அங்குள்ள ஆளும் காங்கிரசு கட்சி, எதிர்க்கட்சியான மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, பாரதிய சனதாக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் முல்லைப்பெரியாறு அணைச் சிக்கலில் தமிழினத்திற்கு எதிரான மலையாள இனவெறிச் சிக்கலாக மாற்றியுள்ளனர். எதிரும் புதிருமான இக்கட்சிகள் அனைத்தும் தமிழகத்திற்கு எதிரான பகை உணர்ச்சி என்னும் ஒரு புள்ளியில் இணைந்து செயல்படுகின்றன.
கேரளத்தில் வாழும் அப்பாவித் தமிழர்களைத் தாக்குவது அவர்கள் நடத்தும் கடைகளைச் சூறையாடுவது ஐயப்பன் கோயிலுக்குப் போகும் தமிழ்நாட்டு பக்தர்களைத் தாக்குவது தேனி மாவட்டத்திலிருந்து கூலி வேலைக்குச் செல்லும் நூற்றுக்கணக்காக தமிழ்ப் பெண்களைச் சிறைப்பிடித்து மானபங்கப்படுத்துவது தமிழக ஊர்திகளைத் தாக்குவது போன்ற அட்டூழியங்களை மலையாள இனவெறியர்கள் செய்துவருகிறார்கள்.
இந்த இன இழிவுகளையும் பேரவலங்களையும் சொல்லி நாம் சோகத்தைப் பகிர்ந்து கொள்வது மட்டும் போதாது. இந்த அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால் மலையாளிகளுக்கு தமிழகத்தில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணை உரிமையை ஏற்கும் வரை கேரளத்திற்கு எதிரான பொருளாதார தடையை எல்லாப் பாதைகளிலும் செயல்படுத்த வேண்டும். முற்றிலுமாக தமிழகத்திலிருந்து கேரளம் செல்லும் பொருள் போக்குவரத்தை நிறுத்த வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணையை உடைப்பதற்காக நயவஞ்சக நோக்கோடு புதிய அணை கட்டித் தருவதாக ஏமாற்று வாக்குறுதி தருகிறார்கள் மலையாள அரசியல்வாதிகள். அடுத்ததாக, முல்லைப் பெரியாறு அணை நீர் தேக்க உயரத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
நீதி மன்றத்திற்கு வெளியே முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலைப் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்று ஆசை வார்த்தை காட்டுகிறார்கள்.
தமிழ்நாட்டை ஏமாற்றுவதற்கு கேரள ஆட்சியாளர்கள் செய்யும் இந்த சாகசங்களுக்குப் பலியாகாமல் அவற்றை ஏற்க மறுத்துவரும் தமிழக அரசின் தற்போதைய நிலைப்பாடு வரவேற்கத்தக்கது.
தமிழக அரசு இந்நிலைப்பாட்டைத் தொடர்வதுடன் கேரள சூழ்ச்சிகளை முறியடிக்க தமிழக மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஊட்டி ஒருமித்த திசையில் தமிழக மக்களைத் திரட்டிக் கொள்ள உரிய முயற்சிகளைச் செய்ய வேண்டும்.
கேரளத்திற்கு எதிரான தொடர் “பொருளாதார தடையை அணை உரிமையை மீட்கும் வரை மக்கள் செயல்படுத்த தமிழக அரசு உறுதுணை புரிய வேண்டும் என்றும், மக்களின் முயற்சிகளுக்க தடை போடக் கூடாது என்றும் இம்மாநாடு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.
முல்லைப் பெரியாறு உரிமையை முழுமையாக மீட்கும் வரை தமிழக மக்கள் ஒருங்கிணைந்து உறுதியாகப் போராட வேண்டும் என்றும் ம லையாள இனவெறிக்கத் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் தமிழக மக்களை உரிமையோடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 4
முல்லைப் பெரியாறு அணை உரிமைப் போராட்டத்தில் போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறு
கேரளத்தில் தமிழ் மக்கள் மலையாள இனவெறியர்களால் தாக்கப்படுவது கண்டும் தமிழர் நிறுவனங்கள் சூறையாடுவதைக் கண்டும் ஐயப்பன் கோயில் பக்தர்களைத் தாக்குவது கண்டும் தமிழ்ப் பெண்கள் சிறைப்பிடிக்கப்பட்ட மானபங்கப் படுத்தப்படுவதை அறிந்தும் உணர்ச்சிக் கொந்தளிப்பு ஏற்பட்டு அதற்கு பதிலடியாக தமிழத்தில் உள்ள மலையாளிகளை வெளியேற வலியுறுத்தியும் மலையாள நிறுவனங்களை மூடக் கோரியும் த.தே.பொ.க. தோழர்களும் இன உணர்வாளர்களும் போராட்டங்கள் நடத்தினார்கள். அதற்காக அவர்கள் மீது பிணையில் வரமுடியாத கடும் பிரிவுகளில் சென்னை போன்ற இடங்களில் பொய் வழக்குப் பதிவு செய்து அவர்களைச் சிறையில் அடைத்துள்ளது தமிழகக் காவல்துறை. சிறையில் உள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் இப்போராட்டம் தொடர்பாக போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டுமென்றும் இம்மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
தீர்மானம்: 5

தேவாரத்தில் நியூட்ரினோ நிறுவனத்தைத் தொடங்காதே!
தேவராத்தில் நியூட்ரினோ நிலையம் நிறுவ இந்திய அரசு முயன்று வருகிறது. அணு உலையைப் போலவே நியூட்ரினோ நிறுவனமும் உயிருக்கு ஆபத்தானது. கதிரியக்கத்தையும், நில அதிர்வுகளையும் நியூட்ரினோ ஆலை வெளிப்படுத்தும் மலை வளத்தையும், நீர் ஆதாரங்களையும் நாசப்படுத்தும்.
எனவே இந்திய அரசு நியூட்ரினோ திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

செய்தி வெளியீட்டுப் பிரிவு :
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT